Apr 1, 2015

எல்லாமே மிக்ஸ்தான்

இப்பொழுதெல்லாம் மாலை ஏழு மணியானால் பசி கண்களைச் சுழட்டச் செய்துவிடுகிறது. மதியம் துக்கினியூண்டுதான் சாப்பிடுகிறேன். அதனால்தான் வயிற்றுக்குள் இந்தப் பட்டாம்பூச்சி விளைவு. யாராவது கடுப்பேற்றினால் கோபம் வந்துவிடுகிறது. அப்படித்தான் நேற்றொரு சம்பவம். அலுவலகம் முடித்து வரும் போது சிக்னலில் சிக்கிக் கொண்டேன். பின்புறமாக- பைக்கின் பின்புறமாகத்தான் - ஒரு மலை மாடு மாதிரி ஒரு பெண் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தாள். சிவப்பு விளக்கு எரிகிறது. நகர்வதற்கும் வாய்ப்பில்லை. ஆனால் அவள் ஒலியெழுப்பியது எனக்காகத்தான். 

திரும்பிப் பார்த்த போது முன்னால் நகரச் சொன்னாள். ‘முப்பது வினாடிதான்...பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இப்படி வெள்ளைக் கோட்டைத் தாண்டி நின்று ஒரு முறை போக்குவரத்துக் காவலரிடம் தண்டம் கட்டியிருக்கிறேன். அதையெல்லாம் அவள் கேட்கவேயில்லை. முறைத்துப் பார்த்தாள். வழக்கமாக ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்த பெண்களாக இருந்தால் வழி கொடுத்துவிடுவேன். நேற்று அதற்கும் வழியில்லாமல் அல்லக்கிடையில் ஒரு ஆட்டோக்காரன் இடத்தை மறைத்து நின்றிருந்தான். அப்படி இப்படி முட்டி என்னைத் தாண்டியவள் ‘சூத்தியா கி...’ என்று ஏதோ ஹிந்தியில் திட்டிச் சென்றாள். இரண்டாவது வார்த்தை புரியவில்லை. ஆனால் இந்த முதல் வார்த்தையே வசை போலிருந்தது. அவள் பின்னாலேயே சென்று ‘வொய் ஆர் யூ அப்யூஸிங்’ என்றேன். அடுத்த வினாடி அதே சூத்தியாவை அதே தொனியில் சொல்லிவிட்டு ஒரு வழிப்பாதையில் முறுக்கிக் கொண்டு சென்றுவிட்டாள். ஒருவழிப்பாதையில் பெண்ணொருத்தியைத் துரத்திச் செல்லுமளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. திரும்பி வந்து கூகிளில் தேடிப்பார்த்தேன். மிகக் கொச்சையான வசை அது. ஒரு வழிப்பாதையென்றாலும் கூட துரத்திச் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றியது.

தீபிகா படுகோனின் ‘My Choice' வீடியோவை பார்த்தீர்களா? முந்தாநாள் ராத்திரி எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த போது சப்தமேயில்லாமல் படத்தை மட்டும் பார்த்தேன். அதுவும் கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால் தீபிகா உள்ளாடையைக் கழட்டுகிற மாதிரியான காட்சி இருந்ததால் இதற்கு சப்தம் தேவையில்லை என்று குருட்டுக்கணக்கு போட்டுவிட்டேன். சப்தம் இல்லையென்றால் இது ஒரு சாதாரணப் படம். அசட்டையாக இருந்த போது ‘ஆகா இதுவல்லவோ பெண்ணியப்புரட்சி’ என்று ஆளாளுக்கு பூஜை நடத்தினார்கள் என்பதால் மீண்டும் ஒரு முறை நேற்று சப்தத்தோடு பார்க்க வேண்டியதாகிவிட்டது. பயங்கரமான புரட்சிதான். 

எல்லாமே என்னுடைய விருப்பம்தான் என்கிறார். திருமணம் செய்து கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும் அவரது விருப்பம்தான். ஆனால் திருமணத்துக்கு பிறகும் கூட வெளியில் எவனோடு போவதும் சொல்வது எப்படி அவரது விருப்பமாக இருக்க முடியும்? அப்படித்தான் அதில் இருக்கிறது. இதையெல்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்படி அவ்வப்போது யாராவது வந்து தங்களது உரிமையைப் பேசுவதற்குக் கூட உள்ளாடையைக் கழட்டிக் காட்டுவார்கள். நாமும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

பெண்களுக்கு சுதந்திரமே இல்லை என்று பெருமொத்தமாகச் சொல்வதெல்லாம் புரட்டு வாதம். இந்தியாவை குறுக்கும் நெடுக்கும் நீள்வெட்டுமாகப் பிரித்தால் ஆயிரக்கணக்கான வகைப்பாட்டுகளுக்குள் பெண்களை கொண்டு வர முடியும். எல்லோருக்கும் ஒரேவிதமான பிரச்சினைதானா? பொட்டு வைப்பதும், சைஸ் ஜீரோவாகச் சுற்றுவதும், ஆடையில்லாமல் திரிவதும்தான் இங்கு அத்தனை பெண்களுக்குமான பிரச்சினைகள் போலிருக்கிறது. அப்படித்தான் வீடியோக்காரர்கள் மாதிரியானவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நகரத்து இளம்பெண்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்திலும் வாய்ப்புகளில் பத்தில் ஒரு பங்கு கிடைக்காத பெண்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் பெண்களுக்கான பிரச்சினை என்று இவர்கள் தூக்கி நிறுத்துவதும் பேசுவதும் வேறு எதை எதையோதான்.

இதையெல்லாம் பேசினால் யாராவது திட்டுவார்கள். சரி விடுங்கள்.

சமீபத்தில் ஒரு உறவினர் அழைத்திருந்தார். கோவைக்கு அருகில் நிகழ்ந்த மரணச் செய்தியைச் சொல்வதற்கான அழைப்பு அது. ஒரு பெண் தனது குழந்தைகளோடு சேர்ந்து தற்கொலை செய்து கொண்டாள். அந்தப் பெண்மணியை சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. ‘என்ன பிரச்சினை’ என்றேன். அவருக்கும் சரியாகத் தெரியவில்லை. குடும்பத் தகராறு போலிருக்கிறது என்றார். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் உறவுக்காரர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். குழந்தைகளையும் இவளையும் மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். மனதைக் கல்லாக்கிக் கொண்டவள் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் நெடுநெடுவென சென்றிருக்கிறாள். ஒரு குழந்தை இடுப்பிலும் இன்னொரு குழந்தையைக் கையிலும் பிடித்து நடந்திருக்கிறாள். ஒரே வினாடிதான். மூன்று பேரும் கசகசவென்று ஆகிவிட்டார்கள். கேட்கக் கூட முடியவில்லை. எவ்வளவு பிரச்சினைகள் இருந்திருந்தால் இவ்வளவு கொடுமையான முடிவை எடுத்திருப்பாள்? அவளுக்கு என்ன பிரச்சினை இருந்திருக்கும்? ஏன் குழந்தைகளையும் சேர்த்து இவ்வளவு குரூரமாகக் கொன்றாள்? எவ்வளவோ விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன. 

சில நாட்களுக்கு முன்பாக சிமோகா செய்தி ஒன்று. அந்தப் பெண்மணி அரசு ஊழியை. அலுவலகத்தில் உயரதிகாரியின் அலம்பல் தாங்க முடியாமல் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாள். அலுவலகம் முடிந்து வேகமாக வந்தவள் கொல்லைப்புறமாகச் சென்று கெரசினை ஊற்றி பற்ற வைத்திருக்கிறாள். ஐந்து வயதுக் குழந்தை அம்மா எரிவதை பார்த்தபடியே இருந்திருக்கிறது. வேலைக்கு போக வேண்டாம் என்று தடுப்பதிலிருந்து படிக்க வைக்கத் தயங்குவது வரை எவ்வளவோ பிரச்சினைகள் பெண்களுக்கு இருக்கின்றன. ஒன்றரைக் குடம் தண்ணீருக்காக வெகுதூரம் நடக்கிறார்கள். கிணற்றுக்குள் இறங்குகிறார்கள். குடிகாரக் கணவனிலிருந்து அடிக்கும் வளர்ந்த பிள்ளைகள் வரை எவ்வளோ அழிச்சாட்டியங்களைச் சமாளிக்கிறார்கள். பாலியல் அத்து மீறல்கள், சுரண்டல்கள் என ஆயிரம் சிக்கல்கள். குடும்பத்தை ஒற்றையாளாகச் சுமக்கும் கோடிக்கணக்கான பெண்கள் இந்த நாட்டில் உண்டு. அடுத்த ஆண்களிடம் முகம் பார்த்து பேசுவதற்குக் கூட தயங்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இதே பெண்களுக்குள்தான் முகம் தெரியாதவனைப் பார்த்து சூத்தியா என்று திட்டிக் கொண்டு போகிற தெனாவெட்டானவர்களும் இருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் ஒற்றைப்படையாகவே பார்த்துப் பழகிவிட்டது மனம். ஒன்று அப்படி. இல்லையென்றால் இப்படி. அப்படியெல்லாம் இல்லை. இங்கு எல்லாமே மிக்ஸ்தான். இல்லையா?