Mar 31, 2015

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்காவது வருடம் முடியப் போகிறது.  ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்றார்கள். வானம் பிளந்து பூ வாளி சொரியும் என்றார்கள். வாயைப் பிளந்து கொண்டு இரட்டை இலைக்குக் குத்தித் தள்ளினார்கள். நானும்தான். என்ன மாறியிருக்கிறது?

எதுவுமே மாறவில்லை.  மோசமாகியிருக்கிறது.

அமைச்சர்கள் யாராவது வாயைத் திறந்து பேசுகிறார்களா? அமைச்சர்களின் பெயரில் ஒரு அறிக்கையாவது வருகிறதா? பக்கத்து மாநிலம்தான் கர்நாடகா. அமைச்சர்கள் பிளந்து கட்டுகிறார்கள். மேகதூது பிரச்சினை என்றால் ஒவ்வொரு அமைச்சரும் தங்களது கருத்தைச் சொல்கிறார்கள். மாநிலத்தில் ஏதேனும் அக்கப்போர் என்றால் வெளிப்படையாக தீர்வுகளை முன்வைக்கிறார்கள். தங்களது துறை குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது அங்கலாய்ப்பாக இருக்கிறது. 

தமிழகத்தில் ஏன் அந்தச் சூழல் இல்லை? எதனால் இவ்வளவும் சோகமும் அமைதியும் கமுக்கமும்? அத்தனை இடங்களிலும் இனம்புரியாத பயம் விரவியிருக்கிறது. யாருமே வெளிப்படையாக பேசுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் எதுவும் நடப்பதில்லை. ஆளும் வர்க்கத்தினர் செய்தியாளர்களைச் சந்திக்கவே பயப்படுகிறார்கள். ஆளும் வர்க்கம் மட்டுமில்லை ஊடகங்களும் கூட பயந்தபடியேதான் அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட விவகாரங்களிலிருந்து நாசூக்காக நழுவிக் கொள்கின்றன. தாலி, பர்தா, தலாக் என்று பொங்கல் வைக்கும் ஒரு ஜால்ரா சேனலாவது தமிழகத்தின் கடந்த நான்காண்டு நடந்த ஆட்சி பற்றி ஒரு விரிவான விவாதம் நடத்தட்டும். செய்யமாட்டார்கள். விளம்பரம் போய்விடும். தொழில் நடத்த முடியாது. 

தமிழகத்தில் வருமானம் இல்லாததற்கும் உலக பொருளாதார மந்த நிலைதான் காரணம் என்று ஓபிஎஸ் கூச்சமே இல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் நட்டமடைந்த நிறுவனங்கள் எத்தனை என்று பட்டியல் எடுத்துப் பார்க்கலாம். நமக்கே நிலைமை தெரியும். பெரும்பாலான நிறுவனங்கள் கொழித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏன் வருவாய் இல்லையென்றால் தொழில்கள் நாறிக் கிடக்கின்றன. மின்சாரத் தட்டுப்பாடு பாதிப் பேரை தின்று ஏப்பம் விட்டது. பணப்புழக்கம் வெகுவாக குறைந்திருந்தது. தொழில் நடத்தும் சூழல் இல்லாததால் இருக்கிற பணத்தை பதுக்கி வைக்கிறார்கள். விலைவாசி, தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காதது போன்ற பிரச்சினைகளால் திணறுகிறார்கள். சூழலை நாம் கெடுத்து நாசக்கேடாக்கிவிட்டு உலகப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது என்று சிர்ப்பூட்டிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை குறு தொழில்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மூடப்பட்டிருக்கின்றன என்கிற கணக்கு இருக்கிறதா? நடுத்தரத் தொழில்களை விட்டுவிட்டவர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்? திருப்பூரிலும், சிவகாசியிலும் மட்டும் கணக்கெடுத்தாலும் கூட போதும். தொழில் செய்பவர்கள் கதறுகிறார்கள். அப்படியொரு கணக்கு இருந்தாலும் வெளியிட மாட்டோம். ஏனென்றால் நாம்தான் முதல் மாநிலம் என்று மார் தட்டிக் கொள்கிறோமே. தமிழகத்தை எதில் முதல் மாநிலம் என்று சொல்வது? டாஸ்மாக் வருமானம் முப்பதாயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது. அதுதான் ஆகப்பெரிய சாதனை. குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதுதான் பெருமைப் படத்தக்க நிகழ்வு.

சமீபத்தில் தமிழக முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்றவொரு குறிப்பைப் பார்க்க நேர்ந்தது. அம்மா வாழ்க, புரட்சித்தலைவி சரணம் உள்ளிட்ட கோஷங்களைத் தாண்டி உள்ளே சென்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க 1.5 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். அடேயப்பா. எவ்வளவு பெரிய தொகை இது? தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எத்தனை லட்சங்களில் இருப்பார்கள்? பொறியியல் படித்தவிட்டு குப்புறப்படுத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே சில பல லட்சங்கள் தேறுவார்கள். பட்டப்படிப்பு முடித்தவன், டிப்ளமோ தேறாதவன், பத்தாம் வகுப்போடு நின்று கொண்டவர்கள், பள்ளிக்கூடமே போகாதவர்கள் என்ற பட்டியல் எடுத்தால் எவ்வளவு பேர் தேறுவார்கள்? 

எல்லோரும் ‘வறுமை நிறம் சிவப்பு’ கமலஹாசன் மாதிரி சாக்கடையில் கிடக்கும் ஆப்பிளை பொறுக்கித் தின்று கொண்டிருப்பவர்கள் இல்லைதான். ஆனால் எவ்வளவு மனிதவளம் இந்த மாநிலத்தில் வீணடிக்கப்படுகிறது என்கிற கணக்கு வழக்கு அரசிடம் இருக்கிறதா? சத்தியமாக இருக்காது. ஏன் அதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இந்த அரசாங்கம் எடுத்துக் கொள்வதில்லை? ஒரு தலைமுறையே வீணாகிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் திசை மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாமானியனுக்குக் கூட தெரிந்த விஷயம். ஆனால் அரசாங்கம் கண்டு கொள்வதேயில்லை.

அரசுப்பள்ளிகளில் நூறு சதவீதம் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது என்று அறிவித்திருக்கிறார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் சந்தோஷம்தான். ஆனால் எத்தனை பள்ளிகளில் முறையான ஆய்வகங்கள் இருக்கின்றன என்பது பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை. எத்தனை பள்ளிகளில் நூலகங்கள் இயங்குகின்றன என்று கடைசியாக அரசாங்கம் எப்பொழுது கணக்கெடுத்திருக்கும்? பள்ளிகளில் இருக்கும் நூலங்கள் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற நூலகங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஏதேனும் கவனமிருக்கிறதா? வெறும் பள்ளிக்கூடங்களைக் கட்டுவதும் நிதி ஒதுக்குவது மட்டுமே அரசாங்கத்தின் வேலை என்று நினைத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த மாநிலத்தின் மனிதவளம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் அடுத்த தலைமுறை எப்படி வளர வேண்டும் என்பது குறித்தும் முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் துளியாவது தொலைநோக்கு பார்வை இருக்கிறதா?

எதற்காக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம்? விரலசைவுக்குக் கட்டுப்பட்டு அத்தனை முடிவுகளும் ஒரே ஆள் எடுப்பதற்கா? அமைச்சர்களுக்கு அடிப்படையான அறிவு இருக்கும் அதனால் முதலமைச்சருக்கு முடிவெடுப்பதில் உதவுவார்கள் என்பதற்காகத்தானே இப்படியொரு அரசாங்க அமைப்பே இருக்கிறது? இதெல்லாம் தேவையில்லையென்றால் இன்னோவா காரும், கூட இரண்டு ஜீப்பும், அரசாங்க பங்களாவும் எதற்கு? 

மேகதூது அணை கட்டுவதைத் தடுப்பதற்கு எல்லாவிதமான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் நதிநீர் இணைப்புக்கென இருநூறு கோடிகளை ஒதுக்கியது குறித்து விரிவான தகவல்களை எப்பொழுது வெளியிடுவார்கள்? ஒதுக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? வருடாவருடம் அறிவிக்கிறார்கள். ஆனால் என்ன ரிசல்ட்? ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கென ஒதுக்கப்படும் பதினோராயிரம் கோடி ரூபாயை ஐந்து வருடங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இந்நேரம் அந்தத் தொகைக்கான அவசியமே இருந்திருக்காது. நெல்லுக்கிறைத்த நீர்தான் புல்லுக்கு பாய வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலான திட்டங்களில் உல்டாவாகத்தானே நடக்கிறது?

அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வாக்கு அரசியல்தான்.

இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ஆயிரத்து நூறு கோடி ரூபாய். இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய். யார் வீட்டுப் பணம்? அள்ளிக் கொடுக்க வேண்டியதுதான். கொடுத்துவிட்டு போகட்டும். உருப்படியான ஆட்களுக்குக் கொடுக்கலாம் அல்லவா? கண்களில் படுபவர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கிறார்கள். வாங்கிக் கொள்வதற்கு யாருக்குமே தயக்கம் இல்லை. எங்கள் அம்மா வாங்கி வைத்துக் கொள்ளப்போவதாகச் சொன்னார். எதிர்த்தால் ஒரே வரியில் அடக்குகிறார். ‘ஊரே வாங்குது...நாம மட்டும் ஏன் விடணும்?’. எவ்வளவு கேவலமான மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

இப்பொழுதெல்லாம் அரசு ஊழியர், பணக்காரர், பெரும்புள்ளி என்கிற எந்தப் பாகுபாடும் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பாகக் கூட இலவசப் பொருட்களை வாங்குவது தங்களது பெருமைக்கு இழுக்கு என்று பேசிக் கொண்டிருந்தவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். இப்பொழுது லட்சணம் பல்லிளிக்கிறது. அத்தனை பேரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இந்த வருடம் இரண்டாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் அடுத்த வருடம் இன்னுமொரு ஐந்நூறு கோடி சேர்த்து ஒதுக்க வேண்டும். 

இலவசமே கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வளர்ச்சி சார்ந்த பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் அரசாங்கம் பம்முகிறது. உருப்படியான ஒரு வளர்ச்சித் திட்டம் இல்லை. சட்டசபையை நடத்துவதற்குக் கூட இவ்வளவு பதறுகிறார்கள். நாம் என்ன பேசி என்ன பிரயோஜனம்? இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கிறது. நிலைமை மாறும் என்றெல்லாம் நினைக்கவில்லை. இப்படியேதான் இருப்பார்கள். அடுத்த வருடம் மே மாதம் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் கொடுப்பதா ஆறாயிரம் கொடுப்பதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும். வீட்டில் நான்கு வாக்குகள் இருந்தால் ஒரு மாதச் சம்பளம் கிடைத்த மாதிரிதான். இந்த லட்சணத்தில் ‘தமிழகத்தில் யார் அடுத்த முதல்வர் ஆவார்?’ என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் கன்னடக்காரன் கேட்கிறான். கெட்ட கோபம் வந்துவிட்டது. ஆனால் பற்களைக் கடித்துக் கொண்டு ‘கடவுளே அடுத்த முதல்வர் யார்ன்னு வேணும்ன்னா கேட்டுத் தொலையறான்...இப்போ யார் முதல்வர்ன்னு கேட்டுடாம பார்த்துக்கோ’ என்று வேண்டிக் கொண்டேன். நல்லவேளை கேட்காமல் விட்டான். கேட்டிருந்தால் என்ன பதிலைச் சொல்வது?