Mar 9, 2015

சர்க்கரை நோயும் உணவுக் கட்டுப்பாடும்

இரண்டு மாதங்களாக கடும் பத்தியம். பத்தியம் என்றால் அரிசி மற்றும் கோதுமையை மட்டும் அறவே தொடுவதில்லை. காய்கறிகள், தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டேன். காலையில் மட்டும் அரிசியைத் தவிர்க்க வழியில்லை.  இரண்டு இட்லிகள். மதியத்துக்கு திணை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் என்று எனக்கென தனியாக சமையல் செய்து கொடுத்தார்கள். முன்பு அரிசி சாதம் எடுத்துக் கொண்ட அளவுக்கு பொரியல் அல்லது காய்கறிகளை எடுத்துக் கொள்வதும், முன்பு பொரியல் கொண்டு வந்த அளவுக்கு மேற்சொன்ன தானிய உணவை எடுத்துக் கொள்வதும் வாடிக்கையாகியிருந்தது. உல்டா.

அது மட்டுமில்லாமல் காலையில் எழுந்தவுடன் கொள்ளு வேக வைத்த தண்ணீரையோ அல்லது வறுத்து பொடியாக்கப்பட்ட வெந்தயம் கலந்த தண்ணீரையோ குடித்துவிடுவேன். மதியவாக்கில் கொய்யாக் காய் ஒன்றும் இரவு நேரத்தில் கம்பு அல்லது ராகி தோசை ஒன்றுடன் ஒரு காரட் அல்லது வெள்ளரிக்காய் என்பது உணவுப்பழக்கமாக மாறியிருந்தது. காபி, டீ எப்பொழுதுமே குடிப்பதில்லை என்பதால் அது பற்றிய கேள்வியே இல்லை.

இரண்டு மாதங்கள்தான். உடல் படு வேகமாக இளைக்கத் தொடங்கியிருந்தது. முன்பும் ஒல்லியாகத்தான் இருந்தேன். ஆனால் இடுப்புப் பகுதியில் சற்று ஊளைச் சதை இருக்கும். இப்பொழுது அதுவும் வற்றிப் போனது. வீட்டில் இருப்பவர்கள் அலறத் தொடங்கினார்கள். உண்மையில் நான் மிக ஆரோக்கியமாகத்தான் இருந்தேன். எந்தவிதமான களைப்பும் இல்லை. முன்பைவிடவும் மூளையும் உடலும் படு சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் வருகிறவர்கள் போகிறவர்கள் கேட்கும் கேள்விகளைச் சமாளிப்பதுதான் பெரிய சிரமமாக இருந்தது. ஆனால் இப்படியொரு உணவுக் கட்டுப்பாட்டை ஏன் எடுத்துக் கொண்டேன் என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா?

நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக உடலில் இருக்கும் கொழுப்பு அளவை பரிசோதிக்கச் சென்றிருந்தேன். பரிசோதனைக்கான காரணம் மறந்துவிட்டது ஆனால் அளவுகள் திருப்திகரமானதாக இல்லை. அப்பொழுது பெரிதாக கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போலவேதான் உணவுப்பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நினைத்த நேரம் பிரியாணி. நினைத்த நேரம் சாக்லேட். நன்றாக உண்டவுடன் தூக்கம் என்று கட்டுப்பாடில்லாத வாழ்க்கை. பொதுவாக தென்னிந்தியர்கள்- குறிப்பாக தமிழர்களின் தற்போதைய உணவுப்பழக்கம் படு மோசமானது. மிக எளிதில் சீரணமாகி அப்படியே கொழுப்பாக உடலில் தங்கக் கூடியதான உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறோம். உடலில் சேரும் கொழுப்பை கரைப்பதற்கான எத்தனிப்பும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. அரிசியை பெருமளவில் சேர்த்துக் கொள்வது, எண்ணெய்யை அதிகமாகப் பயன்படுத்துவது, அதீதமான மசாலாக்கள் என்று சர்க்கரை, கொழுப்பு என பலவிதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் உணவுப்பழக்கம் நம்முடையது. இதெல்லாம் தவிர கேஎப்சி, பீட்ஸா போன்ற துரித உணவுப்பழக்கமும் நம்மை சீரழித்து வருகின்றன. இந்தியாவைத்தான் தெற்காசியாவில் சர்க்கரை நோய்க்கான epic centre என்கிறார்கள். 

இப்படியானதொரு வாழ்க்கை முறைக்குத்தான் நானும் இரையாகிக் கொண்டிருந்தேன் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அம்மாவுக்கு சர்க்கரை வியாதியுண்டு என்பதால் சற்று பயமாகத்தான் இருக்கும். ஆனால் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன். எழுத்தாளர் சுஜாதா தேசிகன் சர்க்கரை நோய் பற்றி அதிகமாக பேசுவார். அவருக்கு என் மீது அக்கறையுண்டு. தேசிகனுக்கும் வெகுகாலமாகவே சர்க்கரை நோய் தொந்தரவு இருந்தது. எனக்குத் தெரிந்து பத்து வருடங்களாகவாவது இருந்திருக்கும். மாத்திரைகளால் கட்டுக்குள் வைத்திருந்தவர் கடந்த ஆறேழு மாதங்களாக மாத்திரைகளைத் தொடுவதேயில்லை. உணவு முறையிலேயே கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். நம்புவதற்கு கஷ்டம்தான். ஆனால் அவர் இது குறித்து விரிவாக எழுதுவார் என நம்புகிறேன். இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால் அவர் நம்புவதில்லை. ‘சாப்பாட்டிலேயே சர்க்கரையைக் குறைப்பது நடக்கிற காரியமா?’ என்று ஒரே வாக்கியத்தில் என்னை அடக்கிக் கொண்டிருந்தார். ‘சரி அவர் பிடிக்கிற முயலுக்குத்தான் மூன்று கால்’ என்று விட்டுவிடுவேன். 

தேசிகனிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் இன்னொரு முறை ரத்த்தத்தைப் பரிசோதித்துவிடலாம் என்று தோன்றியது.

டிசம்பர் இறுதியில் பரிசோதனைக்குக் கொடுத்திருந்தேன். சர்க்கரை அளவும் கொழுப்பும் உடலில் தாறுமாறாக இருந்தன. இப்படியே விட்டால் விளைவுகள் விபரீதமாகிவிடக் கூடும் என்ற நினைப்பு வந்தது. எதற்கும் ஒரு மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று ஆலோசனைக்குச் சென்றிருந்தேன். ‘உணவுக்கட்டுப்பாட்டால் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா?’ என்றதற்கு ‘எதுக்கும் மாத்திரை எடுத்துக் கொள்வதுதான் நல்லது’ என்றார். ‘இது என்னடா வம்பா போச்சு’ என அருள்மோகனிடம் தொலைபேசியில் பேசினேன். எனது பள்ளித் தோழன். இப்பொழுது மருத்துவர். ‘இரண்டு மாசம் முயற்சி செஞ்சு பாரு...கட்டுக்குள் வரலைன்னா மாத்திரைதான்’ என்றான். அருள் சொன்னது நல்ல ஐடியாவாகத்தான் தெரிந்தது. இரண்டு மாதத்தில் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தேசிகனிடம் உணவுப்பழக்கம் குறித்தான அறிவுரை கேட்டேன். அவர் சொன்ன விஷயம்தான் அரிசியைக் கைவிடுவது. அப்படி ஆரம்பித்ததுதான் முதல் பத்தியில் சொன்ன உணவுப் பழக்கம்.

பெரிய உடற்பயிற்சியெதுவும் இல்லை. எப்படியும் அரை மணி நேரம் நடப்பதற்காக ஒதுக்கியிருந்தேன். இந்தப் பழக்கங்களைக் கடைபிடித்தவாறே இரண்டு மாதங்களை ஓட்டியாகிவிட்டது. அவ்வப்போது கையும் வாயும் கட்டுப்பாட்டை மீறின என்பதுதான் உண்மை. ஆனால் அப்படியான சமயங்களில் பெரிதாக மனதை வருத்திக் கொள்ளவில்லை. வழக்கமாக சாப்பிடுவதைக் காட்டிலும் அந்த தின்பண்டங்களின் அளவைக் குறைத்திருந்தேன். இந்தக் காரணங்களினால்தான் உடல் வற்றல். அடுத்தவர்களின் கேள்விகள். இத்யாதி இத்யாதி.

இரண்டு மாதங்களாகிவிட்டதால் சனிக்கிழமையன்று மீண்டும் ரத்தப் பரிசோதனைக்குக் கொடுத்திருந்தேன். அளவுகள் பெருமளவு குறைந்திருக்கின்றன. இனி இவ்வளவு தீவிரமான உணவுக்கட்டுப்பாடு தேவையில்லையென்றாலும் உடற்பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொண்டு ஓரளவுக்கு கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தையே தொடர்வதுதான் நல்லது என நினைக்கிறேன். இதை எழுதுவதற்கு ஒரு அவசியமிருக்கிறது. உடல் நம் பேச்சை சற்று கேட்க மறுக்கும் சமயத்தில் பரிசோதனைகளைச் செய்துவிடுவது நல்லது. முடிவுகளில் வித்தியாசமாக ஏதேனும் தெரிந்தால் உணவுப்பழக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது. ஒருவேளை என்னுடைய சோம்பேறித்தனத்தினால் இந்த அளவுகள் திரும்பவும் மாறக் கூடும். ஆனால் கவனமாக இருந்தால் ஆரம்பத்திலேயே கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. அதே நம்பிக்கையை இன்னும் சிலருக்கு உருவாக்க முடியும் என்றுதான் எழுதியிருக்கிறேன்.

தும்பைவிட்டு ஏன் வாலைப் பிடிக்க வேண்டும்? 

டிசம்பர் 25 ஆம் நாள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள்:


மார்ச் 7 ஆம் நாள் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள்:


ஆரம்ப நிலை என்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன. ஆனால் பத்து வருடங்களாக பாதிக்கப்பட்டவர்களும் கூட மருந்து மாத்திரைகளைக் கைவிட்டுவிட முடியும் என்பதற்கும் தேசிகன் உதாரணம். மருந்துகளைத் தொடர்ந்தபடியே உணவுக் கட்டுப்பாட்டை கைபிடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரைகளைக் கைவிட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.