Mar 8, 2015

நச்சு நச்சுன்னு

பெங்களூரு தமிழ்ச்சங்கத்துக்கு இன்று காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். எனக்கு முன்பாகவே ஒரு அப்பாவி ஜீவன் காத்திருந்தார். அனந்த பத்மநாபன். பத்து மணி வரைக்கும் வேறு யாரையும் காணவில்லை. நானும் அவரும் அமர்ந்து பேசுவதற்கு தமிழ்ச்சஙகத்துக்கு ஐந்நூறு ரூபாய் வாடகையாகக் கொடுக்க வேண்டுமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. ஏதாவது டீக்கடைக்குத் தள்ளிச் சென்று பில்லையும் அவர் தலையில் கட்டிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பொய்த்துப் போனது. மணி வந்து சேர்ந்து கொண்டார். அதற்கப்புறம் ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்ச்சங்கத்தினர் எங்களுக்காக நான்காவது மாடியில் அறை ஒதுக்கித் தந்திருந்தார்கள். உண்மையிலேயே அற்புதமான இடம் அது. மேலே அமர்ந்து அல்சூர் ஏரியை அழகாக பார்க்க முடியும். 

மேடை என்ற அமைப்பெல்லாம் இல்லை. நாங்களாகவே நாற்காலிகளை வட்டமாக போட்டு அமர்ந்து கொண்டோம். கவிஞர் பா.வெங்கடேசனின் கவிதைத் தொகுப்பான நீளா பற்றி சர்வோத்தமனும், ந.பெரியசாமியும் கட்டுரை வாசித்தார்கள். பா.வெ மிக முக்கியமான எழுத்தாளர். அவரது முதல் தொகுப்பு 1992 ஆம் ஆண்டு வெளி வந்திருந்தது. அதன் பிறகு அவர் எழுதிக் குவிக்கவில்லை. ஆனால் அவரது புதினமான தாண்டவராயன் கதையும், குறுநாவல்களின் தொகுப்பான ராஜன் மகளும் முக்கியமான புத்தகங்கள். இந்த ஆண்டு அவரது கவிதைத் தொகுப்பு வெளி வந்திருக்கிறது. ஸ்ரீனிவாசனும் தர்மபுரி பேராசிரியர் கண்ணனும் பா.வெங்கடேசனின் கவிதைகளைப் பற்றி பேசினார்கள். கண்ணனைப் பற்றி தனியாகக் குறிப்பிட்டாக வேண்டும். அவருக்கு பார்வை இல்லை. நண்பர்கள் வாசிப்பதைக் காதால் கேட்டே தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையை வளர்த்துக் கொண்டவர். மிகப்பெரிய நாவல்களை எல்லாம் இப்படியே வாசித்திருக்கிறார். அவர் இந்தக் கூட்டத்துக்காக தர்மபுரியிலிருந்து வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் தீவிரமான வாசிப்புப் பழக்கமுடையவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். அதுதான் மிகவும் சந்தோஷமான நிகழ்வு. ‘ஏம்ப்பா படிச்சா பக்குவம் வருதுன்னு சொல்லுறீங்க...எழுத்தாளனே தற்கொலை செஞ்சுக்கிறானே?’ என்று பிரசாத் போட்டுத் தாக்கினார். ‘எழுத்தாளன் பக்குவமானவன்னு யாருங்க சொன்னது? இங்க எழுத்தாளன்னு சொல்லிக்கிற முக்கால்வாசிப்பேர் அடுத்தவன் புஸ்தகத்தை புரட்டிக் கூட பார்க்கிறதில்ல தெரியுமா?’ என்று திரும்பத் தாக்கியிருக்கலாம்தான் ஆனால் வம்பு செய்யக் கூடாது என்று அமைதியாக இருந்து கொண்டேன். பா.வெவும், நல்லதம்பியும், பாலசுந்தரமும் அவரோடு மல்லுக்கட்டினார்கள்.

கவிதைத் தொகுப்பு,  வாசிப்பு எதைக் கொடுக்கிறது, கவிதையை எப்படி புரிந்து கொள்வது உள்ளிட்டவற்றை ஒன்றரை மணி நேரம் பேசிய பிறகு ஒரு டீ ப்ரேக்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு சிறுகதைகளைப் பற்றி பேச்சு தொடங்கியது. கிர்த்திகா தரன், சுஜாதா செல்வராஜ்- நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்- பெண்களும் கலந்து கொண்டார்கள்- ஞாயிற்றுக்கிழமையதுவுமாக எந்தக் காரணத்தையும் சொல்லித் தவிர்க்காமல் அவர்கள் வந்திருந்தார்கள். மஹாராஜாவின் ரயில் வண்டி, காட்டிலே ஒரு மான் சிறுகதைகளைப் பற்றி பேசினார்கள். செந்தில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைக் குறித்து ஒரு கட்டுரை வாசித்தார். அதை புதுமைப்பித்தனின் சிறுகதைகள் குறித்தான கட்டுரை என்று சொல்ல முடியாது. வண்ணதாசன் தொடங்கி கோணங்கி வரை குறிப்பிட்டிருந்தார். சற்றே நீண்ட கட்டுரையென்பதால் எனது கவனம் அவ்வப்பொழுது சிதறிக் கொண்டிருந்தது. ஆனால் சிலர் தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். காஞ்சனை பற்றியும் பேச்சு தொடர்ந்தது.

பத்துக் கதைகளையும் முழுமையாகப் பேச முடியவில்லை. மணி ஒன்றைத் தொட்டதும் வலுக்கட்டாயமாகவே முடித்துக் கொண்டோம். அடுத்த முறை ஆறு சிறுகதைகளை மட்டும் பற்றிப் பேசலாம். அப்பொழுதுதான் விரிவாகவும் முழுமையாகவும் பேச முடியும்.

இந்த இரண்டு மணி நேரமும் போரடிக்கவில்லை என்பது முக்கியம். ஞானவெட்டியான், புருஷோத்தமன், திரு உட்பட சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் பேசினார்கள். கலந்து கொண்டவர்களில் பலரும் பேசினார்கள் என்பதால் வெவ்வேறு குரல்களையும் தொனியையும் கேட்டுக் கொண்டேயிருக்க முடிந்தது. இது கூட்டத்தை சலிப்பில்லாமல் வைத்துக் கொண்டது.

அருண் கார்த்திக் அடுத்த முறை நிழற்படக் கருவி எடுத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். வரலாறு முக்கியமல்லவா? விதவிதமாக போஸ் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

இப்படி பெங்களூரில்  இருபது பேர் வரைக்கும் கலந்து கொள்வது முக்கியமான விஷயம்தான். எஸ்.எம்.எஸ், ஃபோனில் அழைப்பது போன்றவை எதுவும் தேவையில்லை என்று நினைத்திருந்தேன். ஆர்வமிருப்பவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தது. பொய்க்கவில்லை. இனி தொடர்ந்து கூடப் போகிறோம். அடுத்த கூட்டம் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி காலை பத்து மணிக்கு. இத்தகைய கூட்டங்களால் பெரிய புரட்சி எதுவும் நடந்துவிடாது. ஆனால் வாசிப்பையும் சமகால நிகழ்வுகளையும் தொடர்ந்து விவாதிப்பதற்கு ஏதாவதொருவகையில் இந்தக் கூட்டங்கள் outlet ஆக இருக்கக் கூடும். அந்தவொரு நோக்கத்தில்தான் இதைத் தொடங்கியிருக்கிறோம். அந்தவிதத்தில் இன்றைய கூட்டம் மிகத் திருப்தியாக இருந்தது. மகேஸ்வரனை கூட்லு கேட்டில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது ‘பன்னிரெண்டு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு இப்போ ரெண்டு மணிக்கு வர்றீங்க’ என்றார்கள். மத்திய அமைச்சராலேயே முடியாத காரியமெல்லாம் நம்மிடம்தான் வருகிறது. ஃபோனை எடுத்தால் நச்சு நச்சு என்கிறார்கள். இதையெல்லாம் வீட்டில் இருப்பவர்களும் நம்புவதில்லை வெளியில் இருப்பவர்களும் நம்புவதில்லை. நானாக பில்ட்-அப் கொடுத்துக் கொண்டே திரிய வேண்டியதுதான். ஆனால் ஒன்று- குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுகிறேன் என்பதால் மிகச் சிலாக்கியமாகத் திரிகிறேன்.

ஆறு சிறுகதைகளைப் பற்றி விவாதிக்கலாம். அதைத்தவிர ஒரு நாவல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். 

1) விடியுமா- கு.ப.ராஜகோபாலன்
2) கனகாம்பரம்- கு.ப.ராஜகோபாலன்
3) நட்சத்திரக் குழந்தைகள்- பி.எஸ்.ராமையா
4) ஞானப்பால்- பிச்சமூர்த்தி
5) பஞ்சத்து ஆண்டி- தி.ஜானகிராமன்
6) பாயசம்- தி.ஜானகிராமன்