Mar 10, 2015

அடுத்த ஆறு சிறுகதைகள்

எதற்காக நூறு சிறுகதைகளை வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானது. 

எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளையும் வாசித்து அது பற்றி உரையாடி முடிக்கும் போது தமிழில் சிறுகதையின் போக்கு பற்றிய முழுமையான பார்வையை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. வெறுமனே வாசிப்பதைவிடவும்  ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுகதையின் மொழிநடை, அந்தச் சிறுகதைகளின் கருப்பொருட்கள், எழுத்துலகில் இந்த எழுத்தாளர்களின் இடம் உள்ளிட்டவை பற்றிய நல்லதொரு புரிதலுக்கான திறப்பாக இந்தச் செயல்பாடு இருக்கும் என்பதுதான் முக்கியமான காரணம்.

எந்தப் பட்டியலை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி வந்த போது தயக்கமேயில்லாமல் எஸ்.ராவின் பட்டியல்தான் நினைவுக்கு வந்தது. தமிழில் எஸ்.ராவின் உழைப்பை எந்தவிதத்திலும் உதாசீனப்படுத்திவிட முடியாது. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரது பட்டியலில் அவரவருக்கு சில குறைகள் தென்பட்டாலும் பெருமொத்தமாக பார்க்கும் போது இந்தப் பட்டியல் மிக முக்கியமானது, தவிர்க்கவே முடியாதது. அதனால் இந்தப் பட்டியலில் இருக்கும் கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தில் பின் வரும் கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், பிச்சமூர்த்தி மற்றும் பி.எஸ்.ராமையா ஆகிய நான்கு எழுத்தாளர்களின் கதைகள் இவை. 

1. விடியுமா? - கு.ப.ராஜகோபாலன்
2. கனகாம்பரம்- கு.ப.ராஜகோபாலன்
4. ஞானப்பால்- பிச்சமூர்த்தி
5. பஞ்சத்து ஆண்டி- தி.ஜானகிராமன்
6. பாயசம்- தி.ஜானகிராமன்

இந்தக் கூட்டங்களில் வாசிப்புப் பழக்கமில்லாத சிலரும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் வாசிக்கத் தொடங்குவதற்கான களமாக இந்தக் கூட்டங்கள் செயல்படுமானால் அதுவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதுதான். 

இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது  அடுத்தவர்களைக் கலாய்த்தபடி நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு கொண்டு கலந்து கொள்ள வேண்டியதில்லை. அப்படி இருக்க சாத்தியமும் இல்லை. ஓரளவுக்கேனும் சக பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரியஸான விவாதங்களை நடத்துவதுதான் எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும். இறுக்கமில்லாமல் பார்த்துக் கொள்ளலாம்தான். ஆனால் அதே சமயம் மேம்போக்காக நடத்துவது இத்தகைய கூட்டங்களின் பயனை கேள்வி கேட்கச் செய்துவிடும்.

கடந்த முறை நடந்த கூட்டத்தில் பத்துக் கதைகளை எடுத்துக் கொண்டோம். அதில் இரண்டு மூன்று சிக்கல்கள் இருந்தன. நிறையப் பேரால் பத்து சிறுகதைகளையும் வாசித்திருக்க முடியவில்லை. அதனால் பிரச்சினை எதுவும் இல்லைதான். ஆனால் அவர்களுக்கு சற்று போரடித்திருக்கும். இன்னொரு சிக்கல்- நேரமின்மை. ஒரு கதையைப் பற்றி பேசுவதற்கு பதினைந்து நிமிடங்களாவது தேவைப்படுகிறது. பத்து சிறுகதைகளைப் பற்றியும் ஒரு மணி நேரத்தில் பேசுவது சாத்தியமில்லை என்பதால் குறைத்துக் கொள்வதுதான் நல்லது.

இது போன்ற காரணங்களினால் அடுத்த முறை ஐந்து அல்லது ஆறு கதைகளை மட்டும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளலாம். வாரம் ஒன்று அல்லது இரண்டு கதைகளை வாசித்தால் கூட போதும். ஒரு மாதத்தில் வாசித்துவிடலாம். கடைசி வாரத்தில் ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட்டு கதைகளைப் பற்றி பேசலாம்.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நிசப்தத்தில் பதிவு செய்வதும் சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகளை எழுதுவதும் இதே நோக்கங்களை மனதில் வைத்துத்தான். அத்தனை சிறுகதைகளையும் நான் வாசித்ததில்லை. இந்த நிகழ்வுக்காக வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசித்து புரிந்து கொள்வதை எழுதிவிட்டால் மற்றவர்களுக்கும் பயன்படும் என்று தோன்றுகிறது. கூட்டத்தில் இருபது அல்லது முப்பது பேர்கள்தான் கலந்து கொள்வார்கள். அவர்களைத் தாண்டிய மற்றவர்களுக்கும் இந்தக் கதைகளை வாசிக்கும் ஒரு வாய்ப்பு உருவாகும் என நம்புகிறேன். வாரம் ஒரு கதையைப் பற்றிய சுருக்கமான குறிப்பை எழுதினால் அதை நூலாகப் பிடித்துக் கொண்டு நூறு பேராவது கதையை வாசித்துவிடக் கூடும். வாசிக்கிறார்கள். நல்ல விஷயம்தானே?

இத்தகைய காரியங்களைச் செய்யும் போது consistency அவசியம். ‘எங்கப்பனும் கச்சேரிக்கு போறான்’ என்கிற கணக்கில் இரண்டொரு கூட்டங்களோடு அல்லது பத்து இருபது கதைகளோடு விட்டுவிடுவதால் பெரிய பலன் இருக்காது. எனவே தொடர்ந்து செயல்படலாம். தனிமனித முன்னிறுத்தல்கள், பஜனைகள் எதுவுமில்லாமல் விவாதங்களை முன்னெடுக்கலாம். இந்தக் கதைகள் குறித்தான விவாதங்கள் என்பது வெறும் பெங்களூரு நண்பர்களுக்கானது மட்டுமில்லை. ஓரளவு ஆர்வமுள்ள அத்தனை பேருக்குமானது. இணையத்தில் சிறுகதைகளை வாசிப்பது சிரமமாக இருந்தால் புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது அச்சு எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்கலாம். இது ஒன்றும் சலிப்பேற்றுகிற காரியமில்லை என்று முதல் பத்துக் கதைகளிலேயே தெரிந்துவிட்டது. ஒருவேளை உங்களை சலிப்படையச் செய்தால் சொல்லிவிடுங்கள். மற்றபடி, இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.