Mar 10, 2015

நகரவாசிகளே இப்படித்தான்

TN 58 தமிழ்நாட்டில் எந்த ஊருக்கான பதிவு எண்? நேற்று ஒரு பிரச்சினையில் அந்த ஊர் வண்டி சிக்கிக் கொண்டது. விபத்து. யாருக்கும் அடிபடவில்லை எனினும் ஒரு புத்தம் புதிய கார் நாறிப் போய்விட்டது. 

வழக்கமாக அலுவலகம் விட்டுச் செல்லும் போது கோரமங்களா வழியாகச் செல்வேன். அந்தச் சாலை வளைந்து வளைந்து செல்லும். நிறையத் திருப்பங்கள் உண்டு. ஆனால் வாகன நெரிசல் குறைவாக இருக்கும். இரவு நேரமாகிவிட்டால் ஓசூர் சாலையில் சென்றுவிடுவேன். எந்த இடத்திலும் திரும்ப வேண்டியதில்லை. ஒரே சாலை. இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டை அடைந்துவிடலாம். நேற்று ஒன்பது மணிக்கு மேலாகத்தான் அலுவலகத்திலிருந்து கிளம்ப முடிந்தது. அதனால் ஓசூர் சாலை. அப்படியென்றாலும் செயிண்ட் ஜான்ஸ் சிக்னலில் வாகனங்கள் நெருக்கிக் கொண்டு நின்றிருந்தன. அந்த சிக்னல் மட்டும் எப்பொழுதுமே அப்படித்தான். வண்டிகளின் தள்ளுமுள்ளாகவே இருக்கும். அந்த இடத்தில்தான் விபத்து. 

ஹோண்டா சிட்டிக்காரன் வலது பக்கமாகத் திருப்பினானா அல்லது TN 58 வண்டிக்காரர் இடது பக்கமாகத் திருப்பினாரா என்று தெரியவில்லை. இரண்டும் முத்தமிட்டுக் கொண்டன. மென்மையான முத்தம் இல்லை. ஹோண்டா சிட்டியின் உதடுகளைப் பிடித்து குதறிவிட்ட முத்தம் அது. மகிழ்வுந்தின் முன்பக்கக் கதவு தகரமாகிவிட்டது. TN 58 வண்டி சரக்கு வேன். தமிழ்நாட்டில் இருந்து எதையோ ஏற்றி வந்திருப்பார்கள் போலிருக்கிறது. வண்டியில் உதவியாளர் யாரும் இல்லை. ஓட்டுநர் மட்டும்தான். இந்தக் காலத்தில் பெரும்பாலான வண்டிகளில் உதவியாளர்கள் இருப்பதில்லை. ஓட்டுநரே எல்லா வேலைகளையும் பார்த்துவிடுகிறார். 

இன்னமும் மகிழ்வுந்தின் இருக்கைகளில் சுற்றப்பட்டிருந்த ஞெகிழி தாள்கள் கூட பிரிக்கப்படவில்லை. வண்டிக்காரனுக்கு கோபம் வரத்தானே செய்யும்? கதவைத் திறக்க முடியாமல் திறந்து இறங்கியவன் ‘சுப் சுப்’ என்று ஹிந்தியில் கத்திக் கொண்டே வந்தான். சிக்னலில் இன்னமும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் சாலையின் மற்ற பக்கங்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து ஒலியெழுப்பி அந்த இடத்தை போர்க்களமாக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டு ஓட்டுநர் வயதானவர். ஐம்பதைத் தொட்டிருப்பார் என்று நினைக்கும்படியான தோற்றம். கொஞ்சம் இடம் கிடைத்தாலும் வண்டியைக் கிளப்பிச் சென்றுவிடலாம். ஆனால் இந்த நெரிசலில் அதெல்லாம் சாத்தியமில்லை. அதுவுமில்லாமல் மகிழ்வுந்தை குறுக்காக நிறுத்தியிருந்தான்.

ஏற்கனவே வீட்டிலிருந்து அழைத்து ‘வந்து சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டிருந்தார்கள். சரக்குந்து ஓட்டுநரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவருக்கு ஏதாவதொருவிதத்தில் ஆறுதலாக இருக்கலாம் என நானும் வண்டியை ஓரங்கட்டியிருந்தேன். தமிழ்நாட்டுக்காரர் அல்லவா? எப்படி ஹிந்தி தெரியும்? தமிழிலேயே பதில் சொல்ல முயன்றார். இதுவும் அவருக்குச் சிக்கலை அதிகரித்திருந்தது. வண்டியின் பதிவு எண் தமிழ்நாடு, ஹிந்தி தெரியவில்லை - எப்படியும் கன்னடமும் தெரியாது என்று முடிவு செய்திருப்பான் போலிருக்கிறது. ஹிந்தியில் கத்திக் கொண்டிருந்த மகிழ்வுந்துக்காரன் அப்பொழுதிருந்து கன்னடத்தில் பேசத் தொடங்கினான். சில ஆட்டோக்காரர்களும் சேர்ந்துவிட்டார்கள். உண்மையில் அந்த இரண்டு வண்டிக்காரர்களைத் தவிர வேறு யாருக்குமே யார் மீது தவறு என்று தெரியாது. ஆனால் அத்தனை பேரும் மகிழ்வுந்துக்காரனுக்குத்தான் ஆதரவாக பேசினார்கள். அதுவரை ஓட்டுநர் வண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்தார். 

ஒரு ஆட்டோக்காரன்தான் அவரைக் கீழே இறங்கச் சொன்னான். அவருக்கு தயக்கம்தான். மகிழ்வுந்துக்காரன் வண்டியின் கதவைத் திறந்து கீழே இழுத்தான். அவருக்கு வேறு வழியில்லை. இறங்கும் போதே ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டான். பிறகு இரண்டு மூன்று குத்துக்களும் விழுந்தன. அவருக்கு கதி கலங்கியிருக்கும். இரவு நேரம். மொழி தெரியாத நகரம். அடி வாங்கும் போது கலங்கித்தானே போகும்? எதையாவது பேசலாம் என்று குறுக்கே புகுந்து ‘சார் அடிக்காதீங்க’ என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவனது கோபம் என் மீது திரும்பியது போலத் தெரிந்தது. அடித்துவிடுவானோ என்று தயங்கினேன். ஆனால் அடிக்கவில்லை. 

‘இந்த வண்டியை எடுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை தெரியுமா? தேவடியா பையன் எப்படி இடிச்சிருக்கான் பாரு’ என்றான். வண்டிக்கு அடி மோசமாகத்தான் விழுந்திருந்தது.

ஓட்டுநரைப் பார்த்து ‘எந்த ஊருங்க?’ என்றேன். தமிழைக் கேட்டவுடன் அவருக்கு சற்று ஆசுவாசமாக இருந்திருக்கக் கூடும். ‘மதுரைங்க சார்...இந்த ஊருக்கு இப்போத்தான் வர்றேன்..இப்படி ஆகிடுச்சு...அந்த ஆளுதாங்க ரைட்ல மேல ஏறினாரு’ என்றார். அது ஆட்டோக்காரன் ஒருவனுக்கு புரிந்துவிட்டது. மகிழ்வுந்துக்காரனிடம் கன்னடத்தில் மாட்லாடினான். மீண்டும் கார்க்காரனுக்கு கோபம் பெருக்கெடுத்தது. அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகிவிட்டது. வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்கள். இரண்டு வண்டிகளும் ஓரங்கட்டப்பட்டன. தமிழ்நாட்டுக்காரருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

‘தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா?’ என்றேன்.

‘லாரி ஆபிஸ் மூடியிருப்பாங்க..லேண்ட்லைன் நெம்பர் இருக்கு..செல் நெம்பர் இல்லை’ என்றார். அது வேலைக்கு ஆகாது போலிருந்தது.

போக்குவரத்துக் காவலர்கள் வந்தார்கள். பிரச்சினைகளைக் குறித்துக் கொண்டார்கள். கார்க்காரன் அவர்களிடம் ஹிந்தியில் பேசினான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘கேஸ் புக் செஞ்சுட்டு அனுப்பிடுவாங்க’ என்றேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. காசு பறிப்பதில்தான் குறியாக இருந்த மாதிரி தெரிந்தது. வேன்காரர் மன்னிப்புக் கோரினார். அப்பொழுதுதான் அவரது உதட்டு ஓரமாக ரத்தம் கசிந்திருந்ததை கவனித்தேன். அறைந்ததில் பட்டிருக்கும் போலிருக்கிறது. அவரது குடும்பத்துக்குத் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்? ஏதோ ஒரு ஊரில் முகம் தெரியாத ஒருத்தன் உதடு கிழியுமளவுக்கு அறைந்திருக்கிறான். லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கை கஷ்ட ஜீவனம். 

ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒரு லாரியை மறித்து டிரைவரைக் கொன்றுவிட்டு வண்டியிலிருந்த சரக்கை திருடிச் சென்றுவிட்டார்கள். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் நடந்த சம்பவம் இது. இருபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு அழுகிப் போன உடலைத்தான் கண்டெடுத்திருக்கிறார்கள். கொல்வதற்கு முன்பாக எவ்வளவு கெஞ்சியிருப்பார்? இரவு முழுக்க வண்டி ஓட்டுகிறார்கள். உடல்வலி பின்னியெடுத்துவிடும். கொஞ்சம் அயர்ந்தாலும் வாழ்க்கையே முடிந்துவிடும். எவ்வளவு சிரமங்கள்? நகரத்துக்குள் நுழைந்தால் இப்படியான பிரச்சினைகள். போக்குவரத்துக் காவலர்களில் ஆரம்பித்து L போர்டு ஆசாமிகள் வரை ஆயிரம் தொந்தரவுகள். 

கன்னடக்காரனிடம் பேச முயன்றேன். ‘நீங்க ஷ்யூரிட்டி கொடுக்கறீங்களா? டிரைவிங் லைசன்ஸைக் கொடுங்க..அவரைப் போகச் சொல்லிவிடலாம்’ என்றார். அவன் பேசுகிற தொனி அடங்கச் செய்துவிட்டது. போக்குவரத்துக் காவலரிடம் பேசினேன். ‘ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கணும்ன்னு அவர் சொல்லுறாரு...ரெண்டு வண்டியையும் ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு போகணும்’ என்றார்கள். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. 

ஓட்டுநர் என்னிடம் ‘நீங்க கூடவே இருக்கீங்களா?’ என்றார். அது சாத்தியமில்லை. இந்த விவகாரம் முடிய எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை என்பது ஒரு பக்கம். வீட்டுக்குச் சென்று ஒரு அலுவலக மீட்டிங்கில் தொலைபேசி வழியாகக் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. பதினொரு மணிக்குள் வீட்டுக்குச் சென்றாக வேண்டும். ‘எனக்கு வேலை இருக்குது’ என்றேன். இந்த நேரத்தில் வேலை இருக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் நம்பிக்கை வரும்? அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ‘என் நெம்பர் தந்துட்டு போறேன்...ஏதாச்சும் தேவைப்பட்டா கூப்பிடுங்க’ என்று கொடுத்துவிட்டு வந்தேன்.

‘கை வெச்சுட்டான் தம்பி..அதான் சங்கடமா இருக்கு..தனியா போனா இன்னொரு தடவையும் அடிச்சாங்கன்னா எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை’ என்றார். அப்பொழுது அவரையும் மீறி அழுதுவிட்டார். அது அழுகை என்று சொல்ல முடியாது. இயலாமை. பசியாகக் கூட இருக்கலாம். வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இயக்குநருடனான முதல் தொலைபேசி உரையாடல். என்ன காரணம் சொன்னாலும் நன்றாக இருக்காது. பேர் கெட்டுவிடும்.

ஓட்டுநரிடம் எதுவும் சொல்லவில்லை. கிளம்பி வந்துவிட்டேன். தூங்கப் போகும் போது மணி இரண்டு ஆகிவிட்டது. அதுவரை அவர் அழைக்கவே இல்லை. பிரச்சினை எதுவும் இருக்காது என நினைக்கிறேன். அப்படியே இருந்திருந்தாலும் ‘கொஞ்ச நேரம் கூட வந்திருக்கலாம்ல...இந்த நகரத்துவாசிகள் இப்படித்தான் இருப்பார்கள்’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். தெரியவில்லை. ஆனால் அவரது கிழிந்த உதடும் கசிந்த ரத்தமும் சோடிய விளக்கில் மின்னியது இன்னமும் சலனமுறச் செய்கிறது.