Mar 16, 2015

யாருமே இல்லாத மைதானங்கள்

இப்பொழுதெல்லாம் கல்வி ஆலோசகர்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் பேசுவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். ஐம்பதாயிரம் என்பது ஜெயப்பிரகாஷ் காந்தி மாதிரியானவர்களுக்கு. மற்றபடி, மூன்றாயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஒரு எழவும் இல்லை. அரைத்த மாவையே தண்ணீர் விட்டு அரைக்கிறார்கள்  கொஞ்சம் அரிசியைச் சேர்த்து அரைக்கிறார்கள் கொஞ்சம் பருப்பைச் சேர்த்து அரைக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ‘வாங்க படிக்கலாம்’ என்று பத்திரிக்கைகள் வேறு ஊர் ஊராக கூட்டம் போட்டு கும்மியடிக்கின்றன. ஒருவிதத்தில் இது நல்ல விஷயம்தான். எதுவுமே தெரியாத மாணவர்களுக்கு ஓரளவு வெளிச்சம் கிடைத்தமாதிரி இருக்கும். ஆனால் இதில் ஒரு பெரிய திருட்டு வேலையையும் செய்கிறார்கள். 

இத்தகைய வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை கவனித்தால் நிச்சயமாக சில தனியார் கல்லூரிகளின் பங்களிப்பு இருக்கும். இந்தக் கல்லூரிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு தொகையை கொடுத்துவிடுகின்றன. நிகழ்வுகளில் பேசுவதற்காக உள்ளூர் பிரமுகர்களையும் இந்தக் கல்லூரிகளே ஏற்பாடு செய்கின்றன. சாப்பாடு கொடுத்து செய்து போய் வர வாகனம் ஏற்பாடு செய்து கையில் கொஞ்சம் பணமும் கொடுக்கிறார்கள். போதாதா? முக்கால்வாசி பிரமுகர்கள் இந்தக் கல்லூரிகளை சிபாரிசு செய்கிறார்கள். அதுதானே கல்லூரிகளுக்குத் தேவை!

பெங்களூரில் ஒரு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. தனியார் கல்லூரி அது. ஒரு இளைஞன் பென்ஸ் காரில் வந்து இறங்கினான். அதே கல்லூரியில் படித்தவனாம். இருபத்தேழு வயதுதான் ஆகிறது என்றார்கள். என்ன செய்கிறான் என்று கேட்டால் மார்கெட்டிங் துறைத் தலைவர் என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது. வெகு எளிதான காரியத்தைச் செய்திருக்கிறான். இரண்டாம் வருடம் படிக்கும் போது கிட்டத்தட்ட நூறு மாணவர்களை இழுத்து வந்து சேர்க்க வைத்திருக்கிறான். மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியிருக்கிறது. வாயடைத்துப் போன கல்லூரி மேலாண்மை அவனையே மார்கெட்டிங் துறைத் தலைவராக நியமித்துவிட்டது. சம்பளம் போக கமிஷன் உண்டு. ஒவ்வொரு மாணவரைச் சேர்ப்பதற்கும் இவ்வளவு ரூபாய் என்று கல்லூரி நிர்வாகத்திடம் பேரம் பேசி வைத்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மாணவர்களை  சேர்த்துக் கொண்டிருக்கிறாராம். மூன்றே வருடங்களில் பென்ஸ் வாங்கிவிட்டார். 

இதே கூத்துதான் எல்லாப் பக்கமும் நடக்கிறது. ஆள் பிடிப்பதற்கென்றே மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று இயங்குகிறது. நேரடியான ஆட்களையும் களத்தில் இறக்குகிறார்கள். மேற்சொன்னபடி மறைமுகமாகவும் ஆட்களை இறக்குகிறார்கள். அதில்தான் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதாவதொருவிதத்தில் அழுத்தம் கொடுத்து அவசரப்படுத்தி மாணவர்களை இழுத்து வந்து தங்கள் கல்லூரிகளில் சேர்த்துவிடுவார்கள். 

ப்ளஸ் டூ முடித்துவிட்டு அடுத்தது என்ன படிக்க வேண்டும்? எதிர்பார்க்கும் பாடம் கிடைக்கவில்லையென்றால் வேறு எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது போன்ற கேள்விகளை இப்பொழுதிருந்து பட்டியலிடத் தொடங்கலாம்.

மருத்துவம் படிக்கும் முயற்சியில் இருப்பவர்கள் மருத்துவம் கிடைக்கவில்லையென்றால் எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது? பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் என்று நிறைய பாடங்கள் இருக்கின்றன. இவற்றின் மீது பெரியதாக ஆர்வம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில் வேறு எந்தப் பாடத்தை படிப்பது? மீன்வளம் (Tamilnadu Fisheries University), வனவியல் (Forest College and Research Institute) சார்ந்த படிப்புகள் இருக்கின்றன. வேளாண்மைக் கல்லூரியில் நிறையப் பாடங்கள் இருக்கின்றன. அக்ரி மட்டும் படிப்பில்லை. பட்டு வளர்ப்பிலிருந்து உணவு பதப்படுத்துதல் வரை நிறைய படிப்புகள் இருக்கின்றன.  இவற்றில் ஏதேனும் விருப்பமுள்ள பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். யோசித்துச் சேர வேண்டும். கொஞ்சம் துருவிப் பார்க்க வேண்டும். இந்தப் படிப்புகளைப் படித்தால் அடுத்த வாய்ப்புகள் என்ன என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம். மீன்வளம் சார்ந்த படிப்புகளைப் பற்றியெல்லாம் நம் ஊரில் பெரிய கவனம் இல்லை. இத்தகைய படிப்புகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடங்களில் எதிலுமே விருப்பமில்லை என்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. மனநலம்(சைக்காலஜி), உணவு பயிற்சியாளர் (டயட்டீசியன்) போன்று படித்து முடித்துவிட்டு அடுத்தவர்களுக்கு ஆலோசனையளிப்பவர்களுக்கான இளங்கலைப் படிப்புகளும் இருக்கின்றன. இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு முதுநிலை, முனைவர் பட்டங்களைக் கூட படிக்கலாம். டயட்டீசியனுக்கு இப்பொழுது ஒவ்வொரு பெரிய மருத்துவமனையிலும் வேலை வாய்ப்பிருக்கிறது. மனநல ஆலோசகர்களுக்கு கல்லூரிகள், பெரிய பள்ளிகள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. தில் இருந்தால் தனியாகக் கூட பயிற்சி செய்யலாம்.

அதே போல் உணவு பதப்படுத்துதலுக்கென்றும் இருக்கும் பட்டப்படிப்புக்கு பிரிட்டானியா, அமுல் போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் வரை வேலை வாய்ப்பிருக்கிறது. இதே துறையில் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவை இருக்கிறது. analyst வேலைகளும் இருக்கின்றன. சுயமாக ஒரு நிறுவனத்தைக் கூடத் தொடங்கலாம். ஆனால் நிறையப் பேருக்கு இந்தப் பாடத்தைப் பற்றித் தெரிவதில்லை. 

இப்படி கண்டுகொள்ளப்படாத படிப்புகளை கண்டுபிடிப்பதே பெரிய கலை. விசாரித்துப் பார்த்தால் இத்தகைய துறைகளில் வேலை வாய்ப்புகள் நிறைய இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆட்களே கிடைப்பதில்லை என்பார்கள். அப்படியான காலி இடங்களை மோப்பம் பிடித்து நாசூக்காக உள்ளே நுழைந்து விட முடியும். எல்லோரும் குதிக்கிறார்கள் என்று நாமும் அதே குட்டையில் குதித்து அத்தனை பேருடனும் போட்டியிட்டு தம் கட்டி தாவு தீர்ந்து வெற்றியடைவதற்கு பதிலாக யாருமே இல்லாத மைதானத்தில் இறங்கி நம் இஷ்டத்துக்கு கோல் போடுவதைத்தான் சிறந்த முடிவு என்று சொல்ல வேண்டும்.

ஆனால் ஒன்று - எந்தப் படிப்பாக இருந்தாலும் சிறந்த கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரிகள் மற்றும் படிப்புகளைப் பற்றிய தகவல்கள் எப்படியாவது கிடைத்துவிடுகின்றன. பெரும்பாலான கல்லூரிகளில் தனியான நுழைவுத் தேர்வுகள் இருக்கும். எழுதி இடம் பிடித்துவிடுவார்கள். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்குத்தான் விதவிதமான படிப்புகள் குறித்தான நிறைய தகவல்கள் கிடைப்பதில்லை. பொறியியல் மற்றும் மருத்துவம் தாண்டி அவர்கள் எதுவுமே யோசிப்பதில்லை. அவர்களுக்குத்தான் இந்தப் படிப்புகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. அவர்களைத்தான் இந்த புரோக்கர்களும் குறி வைத்து வளைக்கிறார்கள்.