Mar 16, 2015

கலர் சைக்காலஜி

நண்பர் ஒருவர் மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று காலையில் சந்திரா லே-அவுட்டுக்குச் செல்வதாகச் சொன்னார். பிரபா அருண்குமாரின் வீடு அங்குதான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட பெண். பிற அலுவலக நண்பர்கள் நேராக பிரபாவின் வீட்டுக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அங்கு யாரையும் தெரியாது. இருந்தாலும் சேர்ந்து கொண்டேன். பதினோரு மணிக்கு விஜயநகரில் ஒரு மன நல மருத்துவரைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தேன். இரண்டும் ஓரளவுக்கு பக்கம் பக்கமான பகுதிகள்தான். நண்பருக்கும் பிரபாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட பிறகு அலுவலகத்தில் அவரைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். 

என்ன காரணத்தினால் கொலை செய்யப்பட்டார் என்பதையெல்லாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. நகைகள் எதுவும் திருடப்படவில்லை. பர்ஸ் அவரிடமேதான் இருந்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் மொபைல் ஃபோனை மட்டும் கொன்றவன் தூக்கிச் சென்றுவிட்டானாம். இதை வைத்து ஆளாளுக்கு ஒரு கதையை உருவாக்கிக் கொள்ளலாம். அப்படியான கதைகளைத்தான் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். 

நாங்கள் போய்ச் சேர்ந்த போது கூட்டம் அலை மோதியது. மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் என ஏகப்பட்ட பேர் வருவதாகச் சொல்லப்பட்டதால் திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தலைகளாகத் தெரிந்தார்கள். அவ்வளவு கூட்டத்துக்குள் சென்று வர வேண்டியதில்லை என்று நினைத்துக் கொண்டேன். நண்பர் அவருடைய அலுவலகத் தோழர்களுடன் சேர்ந்து கொண்டார். ‘நான் வெளியவே நிற்கிறேன். நீங்க மெதுவா வாங்க நேரம் ஆச்சுன்னா நான் கிளம்பிடுறேன்’ என்று சொல்லியிருந்தேன். சரி என்று சொல்லிவிட்டு அந்தக் குழாமோடு ஐக்கியமாகிவிட்டார்.

பிரபா கடைசியாக அருண்குமாருடன் ஃபோனில் பேசிக் கொண்டு வந்திருக்கிறார். அடையாளம் தெரியாத ஒருவன் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டான். ‘நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்னை விட்டுவிடு’ என்று சொன்னாராம். அவள் சொன்னது எனக்கு காதில் விழுந்தது என்று அருண்குமார் சொல்லியிருக்கிறார். ‘என்னை வெட்டிட்டான்’- இதுதான் அருண்குமாரிடம் பிரபா கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.

பிரபாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஒன்பது வயது. அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்னைப் போல வேடிக்கை பார்க்க வந்தவர்களாகத்தான் தெரிந்தார்கள். ஆஸ்திரேலிய காவல்துறை  ‘இது கொலைக்காகவோ அல்லது நிறவெறியின் காரணமாகவோ நடத்தப்பட்ட கொலை இல்லை’என்று சொல்லியிருக்கிறது. அப்படியென்றால் வேறு என்ன காரணங்கள் என்று யோசிக்கலாம்தான். யோசித்து என்ன ஆகப் போகிறது? 

ஒருவேளை இது நிறவெறியின் காரணமாகவே கூட நடத்தப்பட்டிருக்கலாம். வெளியில் தெரிந்தால் தனது நாட்டின் பெயர் கெட்டுவிடும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கருதக் கூடும் அல்லது சைக்கோத்தனமாக யாராவது கொன்றுவிட்டுப் போயிருக்கலாம் அல்லது இவை எதுவுமேயில்லாமல் பிரபாவுக்குத் தெரிந்த யாரோ கூட இந்தக் கொலையைச் செய்திருக்கலாம். வெளியில் நின்ற ஆட்டோக்காரரிடம் வாய் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் சலிப்புடன் பேசினார். அவரும் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர். ஏதாவது சவாரி கிடைக்குமா என்று காத்திருந்தார்.

‘என்னை விஜயநகரில் விட்டுவிடுங்கள்’ என்றேன். அவர் பெங்களூரின் கதைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். பெரும்பாலும் தெரிந்த கதைகள்தான். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட சம்பவத்தின் சாயலோடுதான் இருக்கின்றன. ஒரே வித்தியாசம்- சம்பவம் நடைபெறும் இடமும் பாத்திரங்களின் பெயர்களும் மட்டும்தான் மாறுகின்றன. கள்ளக்காதலில் ஆரம்பித்து விபத்து வரைக்கும் எல்லாமுமே நமக்குத் தெரிந்த கதைகளாகவே இருப்பது நம் வாழ்க்கைய அசுவராஸியமாக்கிக் கொண்டிருக்கிறது. எதைக் கேள்விப்பட்டாலும் ‘அட அதே மாதிரிதாங்க எங்க ஊர்ல’ என்று நாமும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏதாவது கதையை ஆரம்பித்தால் ‘மைசூர்லதானே?’ என்கிறார்கள். இல்லை என்றால் ‘அப்படியா...மைசூரிலும் அப்படியொண்ணு நடந்துச்சு’ என்று சப்பையாக்கிவிடுகிறார்கள்.

விஜயநகரில் மனநல மருத்துவரைப் பார்க்கச் செல்ல வேண்டியிருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? முத்திவிட்டது என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். இதுவரைக்கும் இயல்பாகத்தான் இருக்கிறேன் அல்லது இயல்பாக இருப்பது போல நடித்துச் சமாளித்துவிடுகிறேன் என்பதால் பிரச்சினை எதுவும் இல்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்ட மருத்துவர். ‘அவரை நீ கண்டிப்பா பார்க்கணும்’ என்று ஒரு நண்பர் சொல்லியிருந்தார். நண்பருக்கு எனது சேஷ்டைகள் வித்தியாசமாகத் தெரிந்தனவோ என்னவோ!

அந்த மருத்துவர் கலர் சைக்காலஜி பற்றி நிறையப் பேசினார். குழந்தை, குடும்பம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென ‘உனக்கு என்ன கலர் பிடிக்கும்?’ என்றார்.

‘ப்ளூ’

‘எதனால பிடிக்கும்?’ - கொக்கிக் கேள்வி போட்டார்.

‘இதுக்கெல்லாம் ரீஸன் சொல்ல முடியுமா சார்?’ என்றேன்.

‘முடியும்...அதுதான் கலர் சைக்காலஜி....ஒரு நாட்டுக்கே பிடித்தமான கலர் என்று இருக்கும்..சர்வே எடுத்தால் ஏகப்பட்ட பேர் அந்த நிறத்தைச் சொல்லுவாங்க...ஃபேஸ்புக் ஏன் நீலக்கலர்ல இருக்கு? ட்விட்டர் ஏன் கிட்டத்தட்ட அதே கலர்?’ - இது அவர்.

‘ப்ளூ ப்ளஸண்ட்டான கலர்’

‘அது எப்படி ப்ளஸண்ட்டுன்னு சொல்ல முடியுமா?’

‘அதுவும் முடியாது சார்’

‘இதெல்லாம் ஒரு மனப்பிரமை இல்லையா?...பிடிச்ச மாதிரி இருக்கும்...ஆனா ஏன்னு காரணம் தெரியாது’

‘யெஸ் யெஸ்..கரெக்ட்தான் சார்’ 

‘அப்படியெல்லாம் மனப்பிரம்மைன்னு முடிச்சுட முடியாது....ஒவ்வொரு கலரையும் நம் ஆழ் மனதோடு பிணைக்கக் கூடிய ஒரு விஷயம் இருக்கிறது...அந்த அடிப்படையில்தான் கலர் சைக்காலஜி இருக்கிறது’ முன்னால் போனால் கடிக்கிறார். பின்னால் போனால் உதைக்கிறார். அவர் பேசுவார் நாம் கேட்கலாம் என்று வந்தால் கேள்வி கேட்டு சிக்க வைக்கிறார். என்னதான் செய்வது?

‘உன் குழந்தைக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு கேளு...அவன் சொல்லுற நிறத்தை வெச்சு அவனோட மனநிலையை கணிக்க முடியும்...’

‘ஒரு உதாரணம் சொல்லுங்க சார்...நான் அவன்கிட்ட கேட்கிறேன்..’ பவ்யமாகத்தான் கேட்டேன்.

‘கூகிள் இருக்கே யூஸ் செய்ய மாட்டியா?...இதெல்லாம் நம் சுய தேடலின் மூலமாகக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்...லட்டு மாதிரி அடுத்தவங்க கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது’

உருப்படியான விஷயங்களைத்தான் பேசுகிறார். ஆனால் இந்தளவுக்கு வாரிவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. 

‘கூகிள் இல்லாமல் இருக்க முடியுமா? எனக்குத் தெரிந்ததெல்லாம் பிகர் சைக்காலஜியின் மறுபெயர்தான் கலர் சைக்காலஜி’ என்று சொல்லியிருக்கலாம்தான். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவார்.

கலர் சைக்காலஜி பற்றி அவர் பேசுவார் என்று ஏற்கனவே தெரியும். தெரிந்துதான் சென்றிருந்தேன். எம்.பி.ஏ படிப்புகளில் இதைப் பாடமாக வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் மார்கெட்டிங்கில்தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் இதை மிக எளிதாக பயன்படுத்த முடியும். மனைவி, அம்மா, அப்பா, குழந்தைகள் உள்ளிட்டவர்கள் நம்மை உடல்ரீதியாகத் தாக்கமாட்டார்கள். எமோஷனலாகத்தான் அடி போடுவார்கள். அப்படியான எமோஷனல் எதிராளிகளை சதிராடுவதற்கு கலர் சைக்காலஜி பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். சண்டை வரும் போது அதிகமாக கண்ணில் படக் கூடிய நிறம் எது? சந்தோஷமாக இருக்கும் போது எந்த நிறம் கண்களில் படுகிறது என்பதையெல்லாம் கவனித்து வைத்திருக்க வேண்டும். ஏதாவது எசகுபிசகாக நடக்கும் சமயங்களில் எதிராளி உணராதபடிக்கு நிறத்தை மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும். இந்த மாற்றம் உடனடியாக சண்டையை நிறுத்திவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்திவிடுமாம்.

சண்டையை நிறுத்த உதவுகிறதோ இல்லையோ நிறங்களைப் பற்றி தெரிந்து கொள்வது சுவாரஸியமான விஷயம் அல்லவா? 

‘கடைசியாக நிறத்தைப் பற்றி எப்பொழுது யோசித்துப் பார்த்தாய்?’ என்று கேட்டார். அப்படி எதுவுமே உடனடியாக ஞாபகம் வரவில்லை. 

‘ஒரு பொண்ணு வெள்ளை சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும் போட்டுட்டு பிங்க் கலர் ரே வண்டியில் சர்ருன்னு போனா சார்...அப்போ நினைச்சேன்’ என்றேன். படு பொருத்தமான நிறக் கலவை அது. அநேகமாக இதைச் சொன்னவுடன் கடுப்பாகியிருப்பார் என்று நினைக்கிறேன். தாத்தா வயதுடைய ஆட்களிடம் பேசும் போது ஓரளவுக்காவது வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். ம்ஹூம்.

பேச்சை முடித்துக் கொள்கிற தொனியில் ‘துக்க நிகழ்ச்சிகளுக்கு ஏன் கறுப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள், வெள்ளை ஏன் சமாதானத்தைக் குறிக்கிறது, மஞ்சள் பத்திரிக்கை, பச்சை பச்சையா பேசுறான், சிவப்பு விளக்கு’- இப்படி நிறங்களுடன் சம்பந்தப்பட்ட சிலவற்றைச் சொல்லி அடுத்த முறை வரும் போது பதில்களோடு வரச் சொல்லியிருக்கிறார். 

இதையெல்லாவெற்றையும் விட ‘பெண்களுக்கு ஏன் பிங்க் நிறம் பிடிக்கிறது?’ என்று கேள்வி கேட்க வேண்டும். ஆனால் ‘உன் வயசுக்கும் லட்சணத்துக்கும் இதெல்லாம் தேவையா?’ என்று அவர் கேட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆனால் சண்டையில் கிழியாத சட்டை எங்கேயிருக்கிறது? கண்டுபிடித்துவிடுவேன்.