Mar 2, 2015

என்ன செய்வான்?

பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். அவனைப் பார்த்தால் இதற்கு முன்பாக அடி வாங்கிய அனுபவம் இருப்பவனைப் போலத் தெரியவில்லை. அநேகமாக இதுதான் முதன்முறையாக இருக்க வேண்டும். அவனும் இன்னொருவனும் கோரமங்களா பக்கத்தில் பைக் திருட வந்திருக்கிறார்கள். பூட்டை நெம்பி உடைத்துவிட்டார்கள். இவன் பைக்கைத் தள்ளிக் கொண்டு நடந்திருக்கிறான். பார்த்துவிட்டார்கள். கூட வந்தவனுக்கு தப்பிப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. இவனை வளைத்துப் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவிட்டார்கள். இந்த ஊர்க்காரர்கள் தமிழ்நாட்டுக்காரர்களைப் போல முரட்டுத்தனமாக அடித்து பார்த்ததில்லை. ஆனால் நேற்று அடித்து நொறுக்கியிருந்தார்கள். முகம் உடைந்து ரத்தம் பீறிட்டிருந்தது. 

கோரமங்களாவில் ஒருவரைப் பார்க்க வேண்டிய வேலை இருந்தது. அதற்காக மாலை நேரத்தில் சென்றிருந்தேன். தேசிய விளையாட்டு கிராமத்திலிருந்து நீல்சந்திரா போகும் வழியில் குடிசைப்பகுதி இருக்கிறது. மாட்டியிருந்தவன் அந்த ஏரியாக்காரனாம். அதற்கு மேல் விவரங்கள் எதையும் அவன் கொடுத்திருக்கவில்லை. காவலர்கள் யாரையும் காணவில்லை. தகவல் கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ காவலர்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை. வெறும் பனியனோடு கட்டி வைக்கப்பட்டிருந்தான். யாரோ பெல்ட்டில் விளாசியிருந்தார்கள். உடல் முழுவதும் பட்டை பட்டையாக இருந்தது. இப்பொழுது இருசக்கர வாகனத் திருட்டுகள் சர்வசாதாரணமாகிவிட்டன. பல பகுதிகளில் வெளியில் நிறுத்தியிருக்கும் கார்களையும் லபக்கிவிடுகிறார்கள். செருப்பு, ஷூவெல்லாம் தனிக்கதை. வீடு புகுந்து திருடுதல் அவ்வப்போது கேள்விப்பட வேண்டியிருக்கிறது. நேக்காகத் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிவிட்டார்கள். அந்த மனிதர் இப்பொழுதுதான் கடை ஆரம்பித்திருந்தார். தொடங்கி ஒன்றரை மாதத்திற்குள் அள்ளிப் போய்விட்டார்கள். இன்னொருவர் தனது கடைக்கு முன்பாக பைக்கை பூட்டி நிறுத்தியிருக்கிறார். அரை மணி நேரத்தில் வீதி வீதியாகத் தேடத் துவங்கியிருந்தார்.

அடி வாங்கியவன் நடிக்கிறானா உண்மையாகவே அப்படிக் கிடக்கிறானா என்று தெரியவில்லை. சாகக் கிடந்தான். 

‘ஏனாயித்து சார்?’ - கூட்டத்திலிருந்த ஒருவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

பெரும்பாலும் ‘கொத்தில்லா’ என்று துண்டித்துவிடுவார்கள். அப்படித்தான் துண்டிக்க முயற்சித்தார். 

திருட்டா சார்? என்று எப்படிக் கன்னடத்தில் கேட்பது என்று தெரியவில்லை. அதனால் கேள்வியியிலேயே பதில் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன். ‘செயின் ஸ்நாச்சிங்கா சார்?’- அவர் பேச ஆரம்பித்துவிட்டார். மேற்சொன்ன அனைத்து விவரங்களையும் அவர்தான் கொடுத்தார். இவர்கள் திருடிக் கொண்டு போவதை பைக்காரரே பார்த்துவிட்டார். தள்ளிக் கொண்டு போனதால் பெரிய சிரமம் இருக்கவில்லை. அருகில் இருந்த இரண்டு மூன்று ஆட்களை அழைத்து வந்து அமுக்கிவிட்டார். மற்றவர்களும் சேர்ந்து கொண்டதால் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள். தப்பித்தவன் பாக்கியசாலி. இவன் பாவம்.

‘இந்தச் சேரி பையன்கள் இப்படித்தான்’ என்றார். அது வாஸ்தவம்தான். இப்படியான சில்லரைத் திருட்டுக்கள் பெரும்பாலானவற்றில் அவர்கள்தான் சிக்குகிறார்கள். அதுவும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். வண்ணாரப்பேட்டை, விவேக்நகர் என்று எந்தக் குடிசைப் பகுதிகளிலும் தமிழர்கள்தான் இருக்கிறார்கள். ‘இந்த பொறுக்கிப் பசங்க இப்படித்தான்’ என்று சொல்லிவிடுவது எளிதுதான்.  ஆனால் எதனால் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் மொத்தத் தவறையும் அவர்கள் மேல் சுமத்திவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.

இன்னமும் கூட குழாய்க்குள் குடித்தனம் நடத்துபவர்களை இதே நீல்சந்திராவில் பார்க்க முடியும். அந்த சிக்னல் ஓரமாக மூன்று நான்கு குழாய்கள் கிடக்கின்றன. அந்தக் குழாய்க்குள் ஸ்டவ் வைத்து சோறாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே குழாயில்தான் தூக்கம். குளியல், குலாவல் எல்லாமும். நிரந்தரமான வேலை எதுவும் இல்லை. பெண்கள் கூலி வேலைக்குச் செல்கிறார்கள்.  சிலர் பணக்கார வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். சில ஆண்கள் கட்டிட வேலைக்குச் செல்கிறார்கள். மார்கெட்டில் வேலையில் இருக்கிறார்கள். இப்படி ஏதாவதொரு வேலை. வேலை கூட எப்படியோ இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படையான வசதிகள் கூட இருப்பதில்லை. சாக்கடையில்தான் துணி துவைக்கிறார்கள். கொசுக்கடி, நோய் என்று நாம் திரும்பிப் பார்க்கவே விரும்பாத வாழ்க்கையைத்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் மனிதர்கள்தானே? ஆழ்மனதில் ஒரு ஆசை இருந்து கொண்டுதானே இருக்கும்? அவர்கள் இருக்கும் அதே குடிசைப்பகுதியில்தான் மெர்சிடிஸ் பென்ஸூம், ரேஞ்ச் ரோவரும் முறுக்கிக் கொண்டு ஓடுகின்றன. அதே தெருவில்தான் வண்ண வண்ண ஆடைகளை உடுத்திக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் கண் முன்னாலேயே விலையுயர்ந்த செல்போன்கள் சிணுங்குகின்றன. வசனம் ஒன்று இருக்கிறதல்லவா? Rich get richer; Poor get poorer என்று. ஒரு பக்கம் வசதி வாய்ப்புகள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. இன்னொருபக்கம் அதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு வர்க்கம் நீண்டு கொண்டேயிருக்கிறது. என்னதான் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஷூ அணிந்து கொள்கிறார்கள். நல்ல செல்போன் குறித்துக் கனவு காண்கிறார்கள். எதற்காக இப்படி வசதிக்கு மீறி ஆசைப்படுகிறார்கள்? மற்றவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்கிற உந்துதலின் விளைவுதானே அது? எந்த மனித மனம் ஆசைப்படாமலிருக்கிறது? ஆசைப்படுகிறார்கள். கை நீட்டுகிறார்கள். இப்படிச் சிக்கிக் கொள்கிறார்கள்.

இந்தக் குடும்பங்களில் பெரும்பாலான குழந்தைகள் உயர்நிலைப்பள்ளியைத் தாண்டுவதில்லை. மிக மிகச் சுமாரான பள்ளிகளில்தான் படிக்க வைத்தாக வேண்டும். ‘வந்தா வா..வராட்டி போ’ என்கிற பள்ளிகள் அவை. இந்த நகரத்தில் ஓரளவு நல்ல பள்ளியென்றாலும் ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள். பிறகு படிப்பை நிறுத்திவிட்டுச் சுற்றுகிறார்கள். சுவரேறிக் குதிக்கிறார்கள். அந்தச் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே முரட்டு குணம் வளர்கிறது. எதைப் பற்றியும் யோசிக்காத வெறியோடு வளர்கிறார்கள். கொலைகளில் கைக்கூலிகளாக இவர்கள்தான் இருக்கிறார்கள். சங்கிலிப் பறிப்பில் இவர்கள்தான் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். திருட்டுகளில் பங்கேற்கிறார்கள். அடுத்த தலைமுறை இவரக்ளைப் பின்பற்றுகிறது.

பைக் திருட்டுப் போகும் இடத்தில் இதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியாது. என்னுடைய பைக்காக இருந்தால் ‘அவனைக் கொல்லுங்க’ என்றுதான் கத்துவேன். ஆனால் பிரச்சினையின் அடிநாதம் வேறாக இருக்கிறது. ‘மிடில் க்ளாஸ், அப்பர் மிடில் க்ளாஸ் எல்லாம் இதைச் செய்ய மாட்டாங்க’ என்று பேசிவிடலாம். ‘லோயர் க்ளாஸ்தான் பிரச்சினை’ என்றும் கை நீட்டிவிடலாம். ஆனால் அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? பொருளாதார அடிப்படையிலான வர்க்க வேறுபாட்டின் வித்தியாசம் பெருமளவு மாறிக் கொண்டிருக்கும் போது இப்படியான விளைவுகள் பெருகிக் கொண்டேதான் இருக்கும். இதே பெங்களூரில் பல லட்சம் ரூபாய்களைச் சம்பளமாக வாங்குபவர்கள் இருக்கிறார்கள். எண்பது லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறார்கள். எல்.ஈ.டி டிவி வாங்குகிறார்கள். ஆப்பிள் ஐபோன் வாங்குகிறார்கள். அதே ஊரில்தான் இப்படித் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டு சீரழியும் தமிழர்களும் இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் இடையில் மெல்லிய கோடுதான் இருக்கிறது என்றெல்லாம் டயலாக் அடிக்க முடியாது. இடையில் இருப்பது மிகப்பெரிய சுவர். அந்தச் சுவரை அழிப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பதால் இன்னொரு பக்கத்திலிருப்பவர்கள் வீட்டுச் சுவர் ஏறிக் குதிக்கிறார்கள்.

காவலர்களின் வாகனம் வந்தது. கயிற்றை அவிழ்த்து ஏற்றிக் கொண்டார்கள். இன்னும் பதினைந்து நாட்களுக்கு சிறைச்சாலையில் அடைப்பார்கள். வெளியே வருபவன் அடுத்து என்ன செய்வான்? எல்லோருக்குமே தெரிந்த பதில்தான்.