Mar 1, 2015

பாதசாரியின் காசி

‘காசி’ தமிழில் வந்த மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்பார்கள். சற்றே பெரிய சிறுகதை. 

காசி திறமையானவன். ஆனால் சாமானிய மனிதர்கள் வாழும் தினசரி வாழ்க்கையில் விருப்பமில்லாதவன். அவனால் தினமும் சரியான நேரத்துக்கு எழுந்து சரியான நேரத்துக்கு குளித்து சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்று வர முடியாது. எந்த வேலையில் ஒட்டினாலும் சில நாட்கள்தான். விலகிவிடுவான். நிறையப் புத்தகங்களை வாசிப்பான். அதைப் பற்றி விவாதிப்பான். புரியாத கவிதைகளை  எழுதுவான். ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்கிறான்.

காசிக்கு அம்மா இல்லை. ஒரே அக்கா. அக்காவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. காசியின் அப்பா தனது வீட்டை இரண்டாகப் பிரித்து அக்காவுக்கு ஒரு பங்கை உயில் எழுதிவிட்டார். காசியின் அப்பாவும் பாவம்தான். வயதான மனிதர். இவனை நினைத்து அவருக்கு வருத்தம். அப்பாவுக்காக ஒன்றிரண்டு வேலைகளை காசி செய்கிறான். ஆனால் ஒத்து வருவதில்லை. அவருக்கு ஓய்வு பெற்ற போது கிடைத்த பணமும் கரைந்து கொண்டே வருகிறது. 

காசிக்கு ஆத்மார்த்தமான நண்பன் என்றால் குணாதான். இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவன். குணாவுக்கு காசி அளவுக்கு அறிவில்லை. ஆனால் லெளகீக வாழ்க்கையின் நீக்குப் போக்குத் தெரிந்தவன். காசியை என்ன செய்வது என்று அவனுக்கும் குழப்பம்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? காசி பைத்தியம் பிடித்தது போல நடிக்கிறான். தான் நடிப்பதாக குணாவிடம் சொல்கிறான். தனக்கு Fear of responsibilities and Freedom என்கிறான். புத்தகங்கள் படிப்பதன் விளைவு.

குணா தனக்குத் தெரிந்த சாமியார் ஒருவரிடம் காசியை அழைத்துச் செல்கிறான். சாமியாரின் மனைவி படி தாண்டிவிட்டாள். சாமியார் வீட்டைத் தாண்டி வந்து ஆசிரமம் அமைத்துவிட்டார். அந்தச் சாமியார் காசியிடம் ‘உனக்கு பெண் தேவை’ என்கிறார். அவனது பிரச்சினைகளுக்கு அதுதான் காரணம் சொல்லி தனது சிஷ்யையுடன் தங்கச் சொல்கிறார். காசி தனக்கு அவளைப் பார்த்தால் தங்கை மாதிரி தெரிகிறது என்று நிராகரித்துவிடுகிறான். ‘இனி அவனை இங்கே அழைத்து வர வேண்டாம்’ என சாமியார் குணாவிடம் சொல்கிறார். காசிக்கு மணமான பெண்களின் மீதுதான் விருப்பம். சிகரெட்டையும், சுய இன்பத்தையும் விடமுடியவில்லை என்கிறான்.

ஒரு கட்டத்தில் காசிக்கு திருமணமாகிறது. பணக்கார இடம். அவள் ஏற்கனவே திருமணமானவள்தான். கணவனை விட்டு விலகிவிட்டாள். அவளோடு மட்டும் காசிக்கு எப்படி ஒத்து வரும்? மாமனார் இவனை வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்கிறார். தொழிலை பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். காசி அவரது பெயரில் இருக்கும் ஸ்கூட்டரைக் கொண்டு போய் சுவரில் மோதுகிறான். அவருக்கு கோபம் வருமல்லவா? மனைவி இன்னொரு பிரச்சினை. இவனை முத்தமிடுவதற்கு அனுமதிப்பதில்லை. உதட்டின் அழகு போய்விடும் என்கிறாள். சீக்கிரமாகவே விவகாரத்து பெற்றுவிடுகிறார்கள். 

காசி ஒருவிதமாக மனநோய்க்குள்ளாகிறான். திருமணத்திற்கு முன்பிருந்தே அப்படித்தான். எல்லோரையும் போல வாழ முடியாத குழப்பம். குடும்பம், திருமணம், வேலை என்று எதுவுமே ஒத்து வருவதில்லை. முதலில் மனநோயாளி போல நடிக்கிறான். அதுவே சற்று அவனை பாதிக்கிறது. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை வரைக்கும் சென்று தப்பிக்கிறான். கதையின் தொடக்கமே இப்படித்தான் இருக்கும் ‘போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்து கொண்டு பிழைத்துவிட்டான்’.

அதென்ன தற்கொலை செய்து கொண்டு பிழைத்துவிட்டான்? ஒருவேளை குணாவும் காசியும் ஒன்றுதானா? தெரியவில்லை. நிறையப் பேச முடியும்.

இந்தக் கதையைப் பற்றி மேம்போக்காகச் சொல்லியிருக்கிறேன். சிறுகதைதானே? ஒவ்வொருவரும் முழுமையாகவே வாசித்துவிட முடியும். அழியாச்சுடர்கள் தளத்தில் இருக்கிறது.

காசியின் உளவியல் போக்கை மிகச் சிறப்பாக சித்திரமாக்கியிருக்கிறார் பாதசாரி விஸ்வநாதன். எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்திருக்கும் தமிழின் முக்கியமான சிறுகதைகளில் இந்தச் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கதையை அடுத்தவாரம் சனிக்கிழமையன்று பெங்களூரில் நடக்கும் நண்பர்கள் சந்திப்பில் விவாதிக்கப் போகிறோம். யார் பேசுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் யாராவது பேசியே தீர வேண்டும். இந்தக் கதை உருவாக்கும் பாதிப்பு என்ன? கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, காசியின் வாழ்வியல் மற்றும் மனோவியல் சிக்கல்கள், அதை குணா எதிர்கொள்ளும் விதம் எனக் கதையின் சிண்டுகளைப் பற்றி பேசலாம். இதே போன்ற பிரச்சினைகள் நமக்கும் இருக்கக் கூடும் அல்லது நமக்குத் தெரிந்த மனிதரிடம் இப்படியான பிரச்சினைகளைப் பார்த்திருக்க முடியும். இப்படி இந்தக் கதையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். நேர்மறையாகவே பேச வேண்டும் என்பதில்லை. இந்தக் கதையில் குறை என்று தெரிந்தாலும் கூட பேசலாம். இப்படி பேசுவது சிறுகதையின் அடுக்குகளைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு கதையை வெறும் ஒற்றைப்படையான பார்வையோடு மட்டும் பார்க்காமல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உதவும்.

கூட்டத்தில் பேசவிருக்கும் பத்து கதைகளைப் பற்றியும் இப்படியொரு சிறு அறிமுகத்தை தினமும் எழுதிவிடலாம் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து ஒன்றிரண்டு கதையாகப் படித்தாலும் கூட சனிக்கிழமைக்குள் பத்துக் கதைகளையும் வாசித்துவிடலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் ஒருவகையில் அறிமுகம் கொடுத்தது போலவோ அல்லது ஏற்கனவே வாசித்தவர்களுக்கு மறு நினைவூட்டலைச் செய்வது போலவோ இருக்கும் அல்லவா?