Jan 14, 2015

அடுத்த வேலை

பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை அனுப்பியாகிவிட்டது. இது ஈரோடு மாவட்டத்தில் கோபிபாளையம் என்கிற சிற்றூரில் இருக்கும் பள்ளி ஒன்றிற்காக. தூய திரேசாள் முதல் நிலைப்பள்ளி. இருநூற்றைம்பது மாணவர்கள் படிக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையம் இல்லை- கோபிபாளையம். தூதஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கும் இந்தக் காசோலையை குமார் என்கிற நண்பர் பெற்றுக் கொள்வார். நம்பிக்கையான மனிதர். முனைவர் படிப்பை முடித்துவிட்டு ஜப்பானில் ஆராய்ச்சியாளராக இருந்தார். இனி ஐரோப்பிய தேசமொன்றுக்குச் செல்கிறார். இடைப்பட்ட காலத்தில் தன்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்று இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். காசோலை கிடைத்தவுடன் அவர் பள்ளியின் தலைமையாசிரியரை அழைத்துச் சென்று கோயமுத்தூரில் உள்ள ‘வேதா ஸ்போர்ட்ஸ்’ என்கிற விளையாட்டுச் சாதனக் கடையில் பள்ளிக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்வார்கள். 

ஏற்கனவே பள்ளியிலிருந்து அவர்களுக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை வாங்கி குமார் அனுப்பியிருந்தார். அந்தப் பட்டியலை மூன்று கடைகளுக்கு அனுப்பி விலைப்பட்டியல் கோரப்பட்டது. எதற்காக இந்த விலை கோரல், இந்தப் பொருட்கள் யாருக்கு பயன்படப் போகிறது உள்ளிட்ட காரணங்களும் கடைக்காரர்களுக்கு விளக்கப்பட்டது.  மூன்று கடைகளுமே கோவையில் உள்ள பெரிய கடைகள். அதில் ‘வேதா ஸ்போர்ட்ஸ்’என்ற கடையில் அதிகபட்ச தள்ளுபடியாக 22% தந்திருந்தார்கள். அவர்கள் அனுப்பியிருந்த விலைப்பட்டியலின் படி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகியிருந்தது. இன்னும் இரண்டாயிரத்து ஐந்நூறு சேர்த்து பத்தாயிரமாக காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பள்ளி தங்களுக்குத் தேவையான பொருட்களை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்வார்கள்.

வேதா ஸ்போர்ட்ஸ் கடையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் வழங்கிய தள்ளுபடி மட்டும் காரணமில்லை. அந்தக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் ஏற்கனவே கிராமங்களைத் தத்தெடுத்தல் போன்ற வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்று சொன்னார்கள். அமெரிக்காவில் இருக்கும் மணிவாசகம் என்பவரின் மூலமாக கிருஷ்ணகுமாரின் தொடர்பு கிடைத்தது. கிருஷ்ணகுமாரை அழைத்துப் பேசியதில் அவர் தன்னால் இயன்ற அளவு தனது பங்களிப்பையும் செய்வதாகச் சொன்னார். எனவே முதல் பள்ளிக்குத் தேவையானவற்றை அவரிடமே வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இது Pilot mode.

இந்த முதல் பள்ளியிலிருந்து கிடைக்கும் பின்னூட்டத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த பள்ளிகளுக்குத் தேவையான படிக்கு மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். இந்த பின்னூட்டம் என்பது பொருட்களின் தரம், மாணவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கியிருக்கிறோமா என்பதையெல்லாம் உள்ளடக்கியிரும்படி பார்த்துக் கொள்ளலாம். விளையாட்டுச்சாதனங்கள் வாங்குவதில் அவ்வளவாக அனுபவம் இல்லாததால் இப்படி ஒவ்வொரு படியாக வைக்க வேண்டியிருக்கிறது.

‘சைனா தயாரிப்பாக இருக்கும்... கவனமாக வாங்குங்கள்’ என்று கூடச் சொன்னார்கள். சீனத் தயாரிப்பை நிராகரிக்க வேண்டுமென்றால் அரை நிர்வாணமாகத்தான் சுற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆணி வாங்கினால் கூட ‘மேட் இன் சைனா’ என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே இந்தத் துறையில் அனுபவமிக்க தன்னார்வத்தோடு செய்ய வேண்டிய ஆட்களின் உதவி தேவையாக இருக்கிறது.

சுந்தரும், தினேஷும் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் இருக்கிறார்கள். எந்த உதவி கேட்டாலும் முடியாது என்று சொல்வதில்லை. ‘துலுக்கமுத்தூர் பள்ளிக்குச் சென்று வர முடியுமா?’ என்றாலும் சரி; கடைகளின் முகவரிகளை வாங்கிக் கொடுங்கள் என்றாலும் சரி- அலைந்து திரிகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் விளையாட்டுச் சாதனங்கள் குறித்த போதுமான அனுபவம் இல்லை. ஆபத்வாந்தவனாக கிருஷ்ணகுமார் கிடைத்திருக்கிறார். பார்க்கலாம்.

எல்லாமும் சரியாக அமையும்பட்சத்தில் இந்தத் திட்டத்தை அடுத்தடுத்து பத்துக்கும் மேலான பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். இயலுமென்றால் இன்னமும் கூடுதலான பள்ளிகளுக்குச் செய்யலாம்.

அடுத்த பத்து நாட்களில் சென்னையில் இருக்கும் ஒரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்குச் செய்யலாம். வேதா ஸ்போர்ட்ஸ் வெளியூர்களுக்கு பொருட்களை அனுப்பி வைப்பதில்லை என்பதால் சென்னையில் ஒரு கடையைக் கண்டுபிடித்தாக வேண்டும். சென்னையில் நல்ல கடையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. தரமான விளையாட்டுச் சாதனங்களைக் கொடுக்கும் கடைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். கடையின் உரிமையாளரோடு நேரடித் தொடர்பு இருந்தால் செளரியமாக இருக்கும். கடைக்காரர் இந்தச் செயல்பாட்டின் நோக்கத்தைத் புரிந்து உதவினால் நன்றாக இருக்கும். இலாபம் இல்லாமல் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. தரமான பொருட்களைக் குறைந்த இலாபத்தில் கொடுத்தால் சந்தோஷம்.

vaamanikandan@gmail.com