Jan 15, 2015

புதிர் எங்கே ஒளிந்திருக்கிறது?

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த சமயம். ப்ராஜக்ட் வேலைக்காக கடல் சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்யும் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன். மதியச் சாப்பாட்டுக்காக வெளியில் செல்ல வேண்டும். பன்னிரெண்டரை மணிக்கு வெளியே வந்தால் இரண்டு மணிக்குத் திரும்பச் சென்றால் போதும். அப்பொழுது செல்போன் புழக்கத்திற்கு வந்திருந்தது. ஆனால் என்னிடமில்லை. ஒரு மதிய வேளையில் உணவுக்காக வெளியே வந்த போது வெயில் கருக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சாலையில் போக்குவரத்து அவ்வளவு நெருக்கமாக இல்லையென்றாலும் வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். முதியவர் என்றால் கந்தல் துணியை ஒத்திருந்தார். வேஷ்டியும் சட்டையும்தான். பெரிதாக கவனிக்கவில்லை. உணவுக்குச் சென்றுவிட்டு ஒரு மணியளவில் திரும்ப வந்த போது அதே இடத்தில் படுத்திருந்தார். ஏதோ விபரீதம். ஆனாலும் அருகில் சென்று பார்க்கத் தயக்கமாக இருந்தது. நமக்கெதுக்கு வம்பு என்கிற தயக்கம்தான்.

எதற்கும் ஆம்புலன்ஸிடம் தகவல் தெரிவித்துவிடலாம் என்று திரும்பவும் உணவு விடுதிக்குச் சென்றேன். அங்கு ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைபேசி உண்டு. அதற்காகத்தான். இத்பொழுது போல 108 வசதி வந்திருக்கவில்லை. இரண்டு மூன்று இடங்களுக்கு ஃபோன் செய்ததாக ஞாபகமிருக்கிறது. முதலில் 100 க்கு அழைத்தேன். ஒரு பெண்மணிதான் எடுத்தார். அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்வதாகச் சொன்னார். அடுத்ததாக ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு ஃபோன் செய்துவிட்டு கடைக்காரரிடம் தகவல் சொன்னேன். அவர் பெண்மணி. உச் கொட்டினார். நேரம் இரண்டு மணி ஆகியிருந்தது. அவசர அவசரமாக நிறுவனத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகாக எனது கண்காணிப்பாளர் வந்து சேர்ந்தார். அவரிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு ‘வெளியே செல்லலாமா’ என்று கேட்டேன். அவரையும் அழைத்துக் கொண்டு போவதுதான் திட்டம். அப்பொழுது மணி மூன்றை நெருங்கியிருந்தது. அவருக்கு ஏதோ ஒரு வேலை. கொஞ்ச நேரம் கழித்துச் செல்லலாம் என்றார். அவர் சொன்ன கணக்கு பத்து நிமிடம். ஆனால் இழுத்துக் கொண்டே இருந்தது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. முக்கால் மணி நேரத்திற்கு பிறகாக  ‘மேடம் நான் போகட்டுமா’ என்றேன். தனது வேலையை மூடி வைத்துவிட்டு எழுந்து வந்தார். இதை முன்பே செய்திருக்கலாம் அல்லவா? என்று கேட்கத் தோன்றியது. அடங்கிக் கொண்டேன். மணி நான்கை நெருங்கியிருந்தது. வேகமாக நடந்து சென்றோம். 

பெரியவர் கிடந்த இடத்தில் நான்கு பேர் நின்றிருந்தார்கள். தாத்தா முடிந்திருந்தார். அவரது வேஷ்டியை அவிழ்த்து முகத்தை மூடியிருந்தார்கள். அவ்வளவுதான். சட்டைப்பையில் ஒரு பைசா கூட இல்லை. அருகில் நின்றவர்கள் காகிதம் கூட இல்லை என்றார்கள். எங்கிருந்து வந்திருக்கிறார்? எதற்காக இங்கேயே அமர்ந்திருந்தார்? என்ன பிரச்சினை? - ஒன்றுமே தெரியவில்லை. குடும்பம், உறவினர், நண்பர்கள் என்று யாரைப் பற்றியும் தெரியாது. யாருக்குமே தகவல் கொடுக்க முடியாது. அந்தக் கடைக்காரப் பெண்மணி வந்து சேர்ந்தார். ‘போலீஸூம் வரவில்லை; ஆம்புலன்ஸூம் வரவில்லை’ என்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று தோன்றியது. மீண்டும் ஒரு முறை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட போது ஒரு ஆண் பேசினார். மீண்டும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சொன்ன போது குறித்துக் கொண்டார். ‘நீங்கள் யார்?’ என்றார். தவறான முகவரியைக் கொடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

அந்தப் பெரியவரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்றெல்லாம் ஆதங்கப்படவில்லை. அவர் ஓர் அநாதைப் பிணமாக மாறாமல் தடுத்திருக்க முடியும். குறைந்தபட்சம் அவரது குடும்பம் பற்றிய தகவலைக் கேட்டிருக்கலாம். பன்னிரெண்டரை மணிக்கு அதே இடத்தில் அமர்ந்திருந்தவரைப் பார்த்துவிட்டுச் செல்கிறேன். இரண்டு மணி வாக்கில் படுத்திருக்கிறார். அதையும் பார்க்கிறேன். நான்கு மணிக்கு பிணமாகிவிட்டார். ஒரு மரணம் கண் முன்னால் நிகழ்ந்திருக்கிறது. 

ஒருவேளை யாராவது அவரைத் தேடி வந்தால் விவரங்களைச் சொல்வார்கள். இல்லையென்றால் அநாதைப் பிணமாகத்தானே புதைப்பார்கள்? அவருக்கு எழுபது வயதாவது இருக்கும். நிச்சயமாக குடும்பம் இருந்திருக்கும். குழந்தைகள், பேரக் குழந்தைகளையெல்லாம் பார்த்திருப்பார். ஏதோ பிரச்சினை போலிருக்கிறது. சாலைக்கு வந்துவிட்டார். வெயிலில் அமர்ந்திருந்த இரண்டு மணி நேரங்களும் அவருக்கு என்னவெல்லாம் ஞாபகம் வந்திருக்கும்? தனது பால்யத்தை நினைத்துப் பார்த்திருக்கக் கூடும். தனது மனைவியையோ அல்லது காதலியைப் பற்றியோ சிந்தித்திருக்கக் கூடும். தனது சண்டைகளைப் பற்றி யோசித்திருக்கக் கூடும். யாருமே இல்லாமல் சாகிறோமே என வருந்தியிருக்கக் கூடும். வேறு எதை நினைத்திருந்தாரோ.

எழுபதாண்டு காலம் வாழ்ந்த மனிதன் சென்னை வெயிலில் சாலையோரத்தில் கடைசியில் ஒரு வாய் தண்ணீர் கூட இல்லாமல் இறந்து போனதன் நேரடி சாட்சியமாகியிருந்தேன். அதன் பிறகு இரண்டு நாட்கள் அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ரம்பாவோ, மீரா ஜாஸ்மினோ அந்தப் பெரியவரை மறக்கச் செய்திருந்தார்கள்.

இன்று  உமா மகேஸ்வரன் என்றொரு நண்பர் சந்திக்க வந்திருந்தார். இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசியிருக்கிறோம். மிக மென்மையாக பேசுவார். காலையில் அழைத்து ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்றார். டெல் நிறுவனத்தில் சான்றிதழ்களை வாங்குவதற்காகக் காத்திருந்தேன். அங்கேயே வந்துவிட்டார். சில புத்தகங்களைப் பரிசளித்தார். ஐந்நூறு ரூபாய்க்கும் குறைவில்லாமல் இருக்கும். திடீரென்று யாராவது பரிசாகக் கொடுக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரிவதில்லை. அவருக்கு நிறையச் செலவுகள் இருக்கின்றன என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது இந்தச் செலவையும் எதற்குச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். 

அவர் அறக்கட்டளையின் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது இந்த பெரியவரைப் பற்றிய நினைவு வந்துவிட்டது. ஏதேனும் உதவி கோரி நம்மை அணுகுபவர்களுக்கு நாம் உதவியே தீர வேண்டும் என்று அவசியமில்லை. நாம் செய்யவில்லையென்றாலும் கூட இன்னொருவரை அவர்களால் அணுக முடியும். ஆனால் ஏதோ ஒரு நகராட்சியின் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்க்க வேண்டுமே! ரத்த பந்தம் ஒன்று தீர்க்கவே முடியாத நோயொன்றினால் உருகிக் கொண்டிருக்கும். ‘இனி அவ்வளவுதான்’ என்று மருத்துவர்கள் கைவிட்டிருப்பார்கள். ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கையில் அந்த வராண்டாவில் கிழிந்த துணியொன்றை விரித்துப் படுத்தபடியே அந்த பந்தம் இறந்து கொண்டிருப்பதை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு ஏதாவதொருவிதத்தில் உதவிட வேண்டும் என்று தோன்றியது. 

நம்முடைய ஒவ்வொரு செயலுக்குமே ஏதோவொரு நிகழ்வுதான் தூண்டுதலாக இருக்கும். ஆனால் எந்த நிகழ்வு எதைத் தூண்டும் என்பதில்தான் வாழ்க்கையின் புதிர் அடங்கியிருக்கிறது.