Dec 8, 2014

ஒரு எப்.ஐ.ஆர் கிடைக்குமா?

நம் ஊரில் சிரமமான காரியங்கள் என்று ஐந்து காரியங்களைப் பட்டியலிட்டால் அதில் போலீஸாரிடம் எப்.ஐ.ஆர் வாங்குவது முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் போலிருக்கிறது. வியாழக்கிழமை ஊரில் ஒரு பிரச்சினை. திருட்டுதான். வெகு நாட்களுக்கு முன்பு ஜல்லி கிரஷர் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. கருங்கல்லை ஜல்லிகளாக உடைத்து சாலைப் பணிக்கும், கான்க்ரீட் அமைப்பதற்கும் விற்பார்கள். சில வருடங்களாக பாறைகள் கிடைப்பதில்லை என்பது போன்ற காரணங்களால் கிரஷரைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் கிரஷரில் பயன்படுத்திய இரும்புச் சாமான்கள் எல்லாம் அப்படியேதான் கிடந்தன- மோட்டார்கள் உட்பட. 

சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல கிராமத்தில் திருட மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அவ்வப்போது யாரோ வந்து ஆட்டையைப் போட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். அப்பொழுதாவது விழித்திருக்கலாம். ம்ஹூம். வியாழக்கிழமையன்று இரண்டு பேருக்கு மூக்கு வியர்த்திருக்கிறது. டாஸ்மாக்கில் சரக்கை ஏற்றிக் கொண்டு வந்து கிரஷருக்குள் புகுந்துவிட்டார்கள். அது சற்று ஒதுக்குப்புறமான காடு. ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த முறை திருட வந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன் சரியில்லை போலிருக்கிறது. கிரஷர்காரர் அந்தப்பக்கமாக வந்துவிட்டார். வழக்கமாக திருட வருபவர்கள் ஆயுதத்துடன் தானே வர வேண்டும்? அந்த விதியையும் மீறிவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கூட பெங்களூரில் ஒருவன் திருட வந்திருக்கிறான். கீழ் வீட்டில் ‘ட்யூஷன் சொல்லித் தரப்படும்’ என்ற அட்டையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். மேல் வீட்டில்தான் வீட்டு ஓனர் குடியிருக்கிறார். வந்தவன் ஓனரிடம் விசாரித்திருக்கிறான். ‘அவங்க இல்லையே ரெண்டு நாள் ஆகும்’ என்று சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டார். திரும்பிச் செல்வது போல நடித்தவன் அடுத்த இருபதாவது நிமிடத்தில் வந்து வீட்டுக் கதவைத் திறக்க முயற்சித்திருக்கிறான். என்னமோ சத்தம் கேட்கிறதே என கீழே வந்த வீட்டு ஓனரிடம் கத்தியைக் காட்டியிருக்கிறான். வீட்டு ஓனர் அப்படியே பின்னால் சென்றுவிட்டார். இனி திறக்க முயன்றால் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்தவன் தப்பித்துவிட்டான். ஆயுதம் அவனை எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறது.

ஆனால் இந்தக் கத்தி டெக்னிக் கூட இல்லாமல் கிரஷருக்குத் திருட வந்திருக்கிறார்கள். குடி கண்ணை மறைக்கும் என்று பெரியவர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது. மப்பு கண்ணை மறைத்துவிட்டது. எந்தத் திட்டமிடலும் இல்லை. மோட்டாரைக் கழட்டி வண்டி மீது வைக்கும் போது யதேச்சையாகச் அந்த வழியாக வந்த கிரஷர்காரர் பார்த்துவிட்டார். ஓடி வந்து எட்டி உதைத்திருக்கிறார். பைக்கோடு கீழே விழுந்தவர்கள் ஓட்டம் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால் கிரஷர்காரர் ஒருவர்தான். இரண்டு பேரும் சேர்ந்து தாக்கியிருந்தால் தப்பித்திருக்க முடியும். போதையில் அதைக் கூட யோசிக்கவில்லை. ஓடியிருக்கிறார்கள். சுற்றிலும் பொட்டல்காடுதான். இரண்டு மூன்று சோளக்காடுகள் உண்டு. ஆனால் இப்பொழுதுதான் செல்போன் இருக்கிறதே? கிரஷர்காரர் கூட்டம் சேர்த்துவிட்டார். ஆளாளுக்கு ‘திருடன் சிக்கிட்டாண்டோய்’ என்று தகவல் கொடுக்க கிட்டத்தட்ட இருநூறு பேர் சேர்ந்துவிட்டார்கள். இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்துவிட்டார்கள். அப்புறம் என்ன. வீட்டில் மனைவி மீதான கோபம் தோட்டத்தில் ஆள்காரன் மீதான கோபம் என்று எங்கெங்கோ இருந்த கோபத்தையெல்லாம் இவர்கள் இரண்டு பேர் மீதும் இறக்கியிருக்கிறார்கள். இத்தனை அடியிலும் அவர்கள் வாயையே திறக்கவில்லை. பழைய திருட்டையெல்லாம் எந்தவிதத்திலும் விசாரிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தில் என்ன ட்விஸ்ட் என்றால் அடி வாங்கியவர்கள் இரண்டு பேரும் ஒரு சாதி. ஆதிக்க சாதிதான். அடி கொடுத்தவர்களில் பலரும் வேறொரு சாதி. அவர்களும் ஆதிக்க சாதிதான். அடி வாங்கிக் கொண்டிருந்தவர்களின் ஆட்கள் தகவலை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய்விட்டார்கள். அதற்குள் தகவல் எம்.எல்.ஏக்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் போய் போலீஸ்காரர்கள் தடுக்க வந்துவிட்டார்கள். 

‘நீங்க எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்?’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். இருநூற்றைம்பது பேர் இருந்த கூட்டத்தில் இப்படியெல்லாம் அதிகாரம் செய்தால் வேலைக்கு ஆகுமா? 

‘இப்படித்தான் அன்னைக்கு கோழி திருடனை புடிச்சுக் கொடுத்தோம்..பத்தே நாள்ல புது வண்டில பறக்குறான்..என்னய்யா பண்ணுனீங்க? உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது..ஐஜியை வரச் சொல்லுங்க’ என்று எகிறியிருக்கிறார்கள்.

‘என்னது ஐஜியா?’ என்று ஷாக்கான போலீஸ்காரர்கள் ‘கோழித் திருட்டுக்கெல்லாம் ஐஜி வர மாட்டாருங்க’ என்று புரிய வைப்பதற்குள் மண்டை காய்ந்திருக்கிறார்கள். இவர்களும் விடாமல் சாலை மறியல் என்று நடுச்சாலையில் அமர்ந்துவிட்டார்கள். அந்தச் சாலையில் கால் மணி நேரத்துக்கு ஒரு பேருந்து போனாலே பெரிய விஷயம். சைக்கிள், பைக் காரர்கள் எல்லாம் காட்டுக்குள் புகுந்து சாதாரணமாக மறியலை boycott செய்துவிடலாம். ஆனாலும் இருநூற்றைம்பது பேர் சேர்ந்ததால் சன் டிவியிலிருந்து கேமிராவை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். செய்திச் சேனலில் ப்ளாஷ் நியூஸ் ஓடியிருக்கிறது. டிஎஸ்பி கிளம்பி வந்துவிட்டார்.

டிஎஸ்பியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். ‘டாக்டர்கிட்ட ரிப்போர்ட் வாங்கி அடிச்சவங்க மேல எப்.ஐ.ஆர் போடுங்க’ என்று சொன்னாராம். ஏற்கனவே கடுப்பிலிருந்த கூட்டத்தினர் கெட்டவார்த்தையில் ஏசத் தொடங்கியிருக்கிறார்கள். ‘பண்ணிடுவியா...எங்க அரஸ்ட் பண்ணி பாரு பார்க்கலாம்’ என்றெல்லாம் தொடையைத் தட்டி கத்தியிருக்கிறார்கள். இந்த பன்ச் டயலாக் சினிமாக்கள் எல்லோரையும் கெடுத்து வைத்திருக்கின்றன. ‘அவனுக திருடினானுக....புடிச்சிருக்கோம்..அவங்க கண்ணு முன்னாடி எங்களை அரஸ்ட் பண்ணுறேன்னு பேசற...அவனுகளுக்கு என்னய்யா பயம் இருக்கும்?’ என்று கத்தத் தொடங்க டிஎஸ்பிக்கு வேறு வழியில்லை. அடி வாங்கியதில் அவர்களது முகங்கள் கிழிந்து தொங்கியிருக்கின்றன. ‘அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துவிடுங்கள்..நாளைக்கு எப்.ஐ.ஆர் போடலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அட்மிட் செய்துவிட்டார்கள்.

அடித்தவர்களுக்கும் பயம் இருக்கத்தானே செய்யும்? இவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா? அதனால் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகள் என்று இவர்களும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை எப்.ஐ.ஆர் கைக்கு வந்து சேரவில்லையாம். அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வசாதாரணமாக ஏடிஎம்மில் திருடுகிறார்கள். நடு ரோட்டில் வெட்டிக் கொல்கிறார்கள். பட்டப்பகலில் வழிப்பறி செய்கிறார்கள். என்ன காரணம்? எவ்வளவுதான் பெரிய குற்றம் என்றாலும் பதினைந்தாவது நாளில் வெளியில் வந்துவிடலாம் என்கிற திமிர்தானே? காவல்துறையில் நம்மைக் காப்பாற்றிவிடுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்புதானே? இதையெல்லாம் சரி செய்தாலே ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரோடும் சிறப்போடும் இருக்கிறது’ என்று அறிக்கை விட வேண்டிய அவசியம் இருக்காது.

இப்படியான சிக்கல்கள் எல்லா ஊர்களிலுமே இருக்கின்றன. ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குள் மூச்சு அடைத்துவிடும். ஏன் பிரபலங்கள் நேரடியாக கமிஷனர் அலுவலகத்துக்குச் செல்கிறார்கள் என்றால் இதுவும் கூட காரணமாக இருக்கக் கூடும். காவல் நிலையங்களில் முடிந்தவரைக்கும் தட்டிக்கழிக்கிறார்கள். காசு கேட்கிறார்கள். உயிரிழப்பு ஏற்படாத விபத்துக்களை ஏன் பதிவு செய்வதேயில்லை? விபத்து கூட போகட்டும். தெரியாமல் செய்வது என்று விட்டுவிடலாம். திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏன் பெரும்பாலான காவலர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்? எல்லோருக்குமே தெரிந்த காரணங்கள்தான். கமிஷன் வரக் கூடும் அல்லது பதிவு செய்யப்படும் வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி ஏதோ ஒரு காரணம். சில்லரைக் காரணம்.