Dec 6, 2014

இருக்காதே பின்னே?

மதுரை சென்றிருந்தேன். விடிவதற்கு முன்பாகவே ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் யார் வீட்டுக் கதவைத் தட்டுவது? சில நண்பர்கள் எந்த நேரமாக இருந்தாலும் வரச் சொல்லியிருந்தார்கள். அது சரிப்பட்டு வராது. ஒரு தங்கும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி ‘அண்ணே மூணு மணி நேரந்தாண்ணே...குளிச்சுட்டு போய்ட்டே இருப்பேண்ணே’ என்று மதுரை வழக்கை முயற்சி செய்து பார்த்தால் ‘எப்படி இருந்தாலும் ஒரே காசுதாணுங்ண்ணா..மொத்தமா கொடுக்கோணுங்ண்ணா’ என்று அவர் கொங்குத் தமிழில் பதில் சொல்லி பல்ப் கொடுத்துவிட்டார். 

சரி. இது பயண அனுபவக்கட்டுரை இல்லை. 


முகேஷ் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான பணவிடையை கொடுத்தாகிவிட்டது. இன்னமும் கூட கொடுத்திருக்கலாம்தான். ஆனால் முகேஷ் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்த ராஜலிங்கம் தனது உறவினர்கள் மூலமாக இன்னமும் தேவைப்படும் பணத்தை புரட்ட இருப்பதாகவும் மிச்சமிருக்கும் பணத்தை வேறு யாருக்காவது கொடுத்து உதவலாம் என்று சொன்னார். அதுவும் சரியானதாகத்தான் பட்டது. நம் கண்களில்படாத எவ்வளவு குடும்பங்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனவோ?

வெள்ளிக்கிழமையன்று ஒரு லட்சத்திற்கு மட்டும் DD எடுத்துக் கொண்டேன். ஏற்கனவே சொல்லியிருந்தபடி திரு. ராதாகிருஷ்ணன் இன்று காலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருடன் சித்திரவீதிக்காரனும் இணைந்திருந்தார். சாந்தா மேடம் தனது கணவருடன் வந்திருந்தார். அவர்கள்தான் முகேஷின் மனைவியிடம் பணவிடையைக் கையளித்தார்கள். 

பெரியவர்கள் வந்து சேர்வதற்கு முன்பாகவே முகேஷையும் அவரது மனைவியையும் வார்டில் சந்தித்துவிட்டு வந்திருந்தேன். அதற்கு முன்பாக Billing section க்குச் சென்று DD சரியான தகவல்களுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டேன். அவர்கள் சரியாக இருக்கிறது என்று சொன்னவுடன் சற்று நிம்மதியாக இருந்தது. முகேஷின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். மூத்தவள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு ஒரு குட்டித் தம்பி. 

முகேஷூக்கு இருபது வருடங்களாக சர்க்கரை நோய். கூடவே ப்ரஷரும் இருக்கிறது. அதனால் இதயப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. முற்றிய நிலையில்தான் இருதய பிரச்சினையைக் கண்டறிந்திருக்கிறார்கள். அரசாங்க மருத்துவமனை உட்பட வேறு சில மருத்துவமனைகளிலும் விசாரித்திருக்கிறார்கள். ஆனால் நேரம் கைவசம் இல்லை என்பதால் அப்பல்லோவில் சேர்த்துவிட்டார்கள். இதற்கு முன்பு அவர் வேலை செய்த நிறுவனத்தில் மூன்று நான்கு மாதங்களாக சம்பளம் வரவில்லையாம். மூன்று வாரங்களுக்கு முன்புதான் அரிசி வியாபாரம் ஆரம்பித்திருக்கிறார். ஆர்டர்கள் பிடிப்பதற்குள்ளாகவே இதெல்லாம் நடந்துவிட்டது.

அப்பல்லோவில் ஏதாவது சலுகை பெற முடியுமா என்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. யாருக்கேனும் மதுரை அப்பல்லோவில் நல்ல தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

முகேஷ் மிகவும் பயப்படுகிறார் போலிருக்கிறது. அவரது மனைவி அதைவிட வாடிக் கிடந்தார். என்ன செய்வார் பாவம்? பிரியாவுக்கு உடன்பிறந்தவர்கள், அப்பா என்று யாரும் இல்லை. முகேஷின் குடும்பத்திலும் அப்படித்தான். ஒத்தாசைக்குக் கூட வலுவான ஆள் இல்லை. அதனால் ஒற்றை மனுஷியாக போராடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுதுதான் மகளுக்கு ஏழு வயதாகிறது. வாழ்க்கையின் தொடக்கம் இதுதான். இப்பொழுதே பெரிய அடி. 

இந்த ஒரு லட்சம் ரூபாய் பெரிய தொகை இல்லைதான். ஆனால் அந்த எளிய குடும்பத்திற்கு காலத்தினாற் செய்த நன்றி. 

ஊருக்குத் திரும்பும் போது ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்து திரு.சுந்தரகிருஷ்ணன் என்பவர் சந்தித்தார். அவரை நேரில் பார்க்கும் வரையிலும் சின்னப்பையனாக இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தலையெல்லாம் நரை. வாடகை வீட்டில்தான் இருக்கிறார். ‘இன்றுதான் பென்ஷன் வாங்கினேன். என் பங்காக வைத்துக் கொள்ளுங்கள்’என்று பணத்தைக் கொடுத்தார். ‘வைங்க சார்..தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். 

இந்த உதவுகிற மனம் இருக்கிறது அல்லவா? அந்த மனம் அமைக்கப் பெற்றவர்களால்தான் இந்த சிறு உதவியும் சாத்தியமாகியிருக்கிறது. உதவுகிறவர்கள்தான் தெய்வங்கள். இதில் மிகைப்படுத்தல் எதுவும் இல்லை- மனப்பூர்வமாகத்தான் சொல்கிறேன். எதற்காக அடுத்தவர்களுக்காக செலவு செய்ய வேண்டும்? ஆனால் செய்கிறார்களே. யாரென்றே தெரியாதவருக்கு எந்த யோசனையும் இல்லாமல் உதவுகிறார்கள். 

முந்தின நாள் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. ஒரு தகர டப்பா பேருந்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தூக்கிப் போட்டே இடுப்பைக் கழட்டியிருந்தது.  அத்தனை பயணக்களைப்பிலும் மதுரையிலிருந்து திரும்பும் போது ஒரு வினாடி கூட கண்ணசரவில்லை. அப்படியானதொரு நெகிழ்ச்சி எனக்கு.

வீடு வந்து சேவதற்குள் “Thank you Brother, No words to say. Thank you so much" என்று பிரியா மெசேஜ் அனுப்பியிருந்தார். 

“Fund is mobilized through Nisaptham. Readers are deserved for all your Thanks. Its God's grace that they are trusting me and I am acting as a catalyst. Take care. God bless you” என்று திருப்பி பதில் அனுப்பியிருந்தேன். இந்த ஒவ்வொரு எழுத்துமே மனதின் அடி ஆழத்திலிருந்து வந்த எழுத்துக்கள்தான். 

உண்மையிலேயே என்னிடம் வார்த்தைகள் இல்லை. இவ்வளவு அற்புத மனிதர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்? இருவருக்குமிடையில் பாலமாக இருக்க வாய்ப்பளித்திருக்கும் கடவுளுக்கு நானெல்லாம் எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.