Dec 15, 2014

வாழையடி வாழை

வாழை என்ற தன்னார்வ அமைப்பு பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கக் கூடும். பெங்களூரிலும் சென்னையிலும் இரண்டு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்தான். சென்னையில் செயல்படும் குழுவுடன் அதிகம் பழகியதில்லை. பெங்களூர் ஆர்வலர்களை எங்கேயாவது அவ்வப்போது சந்தித்துவிட முடிகிறது. இந்த பெங்களூர் குழுவினர் தர்மபுரிக்கு பக்கத்தில் ஏரியூர் என்ற ஊரில் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். குவாரித் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப்பள்ளி. ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தக் குழுவிலிருந்து ஒருவர் Mentor ஆக நியமிக்கப்படுகிறார். அவர் அந்த வருடம் முழுவதும் அந்தக் குழந்தைக்கான முழுமையான வழிகாட்டியாகச் செயல்படுவார்.

எப்படி?

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள். சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் அந்த ஊரிலேயே ஒரு திருமண மண்டபத்தில் தங்கி அந்தக் குழந்தைகளுடன் விளையாடி, பாடம் சொல்லித் தந்து, ஓவியம் வரைதல் போன்ற ஏதேனும் திறமைகள் குழந்தைகளிடம் ஒளிந்திருந்தால் அதை வெளிக்கொண்டு வந்து - இப்படி அந்த வருடத்தில் அவர்களுக்கு எல்லாவிதமான exposure கிடைப்பதற்கும் பாடுபடுகிறார்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் இவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். தங்களைப் பற்றி எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை. எங்குமே விளம்பரம் செய்வதில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளை மேலே கொண்டு வருவதற்காக அவ்வளவு உண்மையாகச் சிரமப்படுகிறார்கள். இவர்களால் அந்த ஊரில் குழந்தைத் திருமணம் தடுக்கப்பட்டிருக்கிறது, பள்ளியை விட்டே நின்றுவிடப் போவதாக இருந்த மாணவி கல்லூரி வரை வந்திருக்கிறாள், எழுத்தே தெரியாத மாணவியொருத்தி மிகச் சிறப்பாக படிக்கத் துவங்கியிருக்கிறாள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். 

இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கலாம்தான். அந்தக் குழந்தைகளின் பின்னணி தெரிந்தால் பெரிய விஷயம்தான் என்று தோன்றும். குவாரியைத் தவிர வெளியுலகமே தெரியாத பெற்றவர்கள், பெற்றவர்கள் வெளியூரில் இருக்க தாங்களே சோறாக்கித் தின்னும் குழந்தைகள், பள்ளிக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும் யாருமே கேட்காத சூழல், தலைக்கு தேங்காய் எண்ணேய் வைப்பது பற்றிய கவலை கூட இல்லாமல் ஐந்தாம் வகுப்பைத் தாண்டிச் செல்லும் பெண்பிள்ளைகள், அகரம் கூட தெரியாமல் பள்ளியை விட்டு நிற்பதற்கான எத்தனிப்புகளில் இருப்பவர்கள் என விளிம்பு நிலைக் குழந்தைகள் அவர்கள். அவர்களுக்குத்தான் கை கொடுக்கிறார்கள். கையைக் கொடுத்து தூக்கிவிடுகிறார்கள்.

எவ்வளவு பெரிய மகத்தான பணி இது? 

இன்னொரு தலைமுறையும் குவாரியின் கல் உடைப்பில் சிக்கிக் கொள்வதிலிருந்து தடுத்து நிறுத்துகிறார்கள். எழுத்து வாசமே இல்லாத அந்த வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். அந்த அப்பாவிக் குழந்தைகளின் அக இருளைத் தங்களின் உழைப்பின் மூலமாக அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

வாழை அமைப்பினர் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூரில் ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். வாழை அறிமுகக் கூட்டம் என்று பெயர். தங்களின் அமைப்பு பற்றிய அறிமுகம் மட்டுமில்லாது அடுத்த ஆண்டு Mentor ஆகச் செயல்பட விரும்புவர்களை தங்களோடு இணைத்துக் கொள்ளும் கூட்டமாகவும் இருக்கும். எவ்வளவோ இளைஞர்கள் இது போன்று சமூகத்துக்காக தங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்புபவர்களாக இருக்கிறார்கள். அவர்களைத் தங்கள் பாதைக்கு அழைக்கும் கூட்டம் இது. 

கோயமுத்தூர்க்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். சுந்தர் என்று பெயர். டிசிஎஸ்ஸில் இருக்கிறார். துறுதுறுவென்றிருப்பார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நிறுவனத்திலிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு கிராமப்புற பள்ளி ஒன்றில் பாடம் சொல்லித் தரப் போகிறாராம். என்னைவிட ஜூனியர்.  ப்ரோமோஷன் கிடைக்காது. சம்பள உயர்வு வராது. ‘சுந்தர் இந்த சமயத்தில் போனீங்கன்னா வேலையில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி தடைபடாதா?’ என்றால் ‘பரவாயில்லை சார்..செய்யலாம்’ என்கிறார். இப்படியெல்லாம் கூட இந்தத் தலைமுறையில் ஆட்கள் இருக்கிறார்கள். 

இப்படியான எண்ணமுடையவர்களுக்கு வாழை சரியான அமைப்பு. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வார விடுமுறையை இந்த ஏழைக் குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டும். அவ்வளவுதான். மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் வாழையே பார்த்துக் கொள்ளும். Mentor ஆக வேண்டும் என்றில்லை. வாழையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள இயலாதவர்கள் சமூக ஆர்வமுடைய பெங்களூர் வாழ் நண்பர்களுக்குத் தெரியப்படுத்திவிடுங்கள். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த புண்ணியம் மறைமுகமாகவோ நேரடியாகவோ நிச்சயம் வந்து சேர்ந்துவிடும்.

இடம்: YWCA, Koramangala 6th Block (Near Koramangala Police Station)
நேரம்: டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை(மதியம் 2.00 மணியிலிருந்து 5.00 வரை)
தொடர்பு எண்: 95386 43411/96631 11993