Dec 15, 2014

இது எப்படியிருக்கு?

மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்திற்கான வேலை முடிந்துவிட்டது. அதாவது பிழை திருத்தம் பார்த்துக் கொடுத்துவிட்டேன். இனி அச்சுக்கு அனுப்புவது பதிப்பாளரின் வேலை. புதிய  பதிப்பகம். தனது பதிப்பகத்தின் வழியாக ஐந்து புத்தகங்களை வெளியிடுகிறார். அதில் ஒன்று சினிமா உலகின் பெருந்தலையின் புத்தகம். அதனால் திரைத் துறை பிரபலம் ஒருவரை வைத்து  ஐந்து புத்தகங்களுக்குமான வெளியீட்டு நிகழ்ச்சியை பதிப்பாளர் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். 

சென்ற ஆண்டு புத்தக வெளியீடு போலவே இந்த ஆண்டும் சிலவற்றை பின்பற்ற வேண்டும் என்றிருக்கிறேன்.  புத்தகத்தின் விலை நூறு ரூபாயைத் தாண்டக் கூடாது என்பது முதல்  விஷயம். மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு பக்கங்கள் வந்திருந்தன. இவ்வளவு பக்கங்களுடைய புத்தகத்தை நூறு ரூபாய்க்குக் கொடுத்தால் பதிப்பாளருக்குக் கஷ்டமாகிவிடும் என்பதால் சுமார் இருபது பக்கத்தைக் குறைத்துக் கொடுத்திருக்கிறேன்.

இரண்டாவதும் முக்கியமானதும் ஒன்றிருக்கிறது. அது வெளியீட்டு விழாவில் எந்த பிரபலம் கலந்து கொண்டாலும் சரி. புத்தகத்தை வெளியிடுவதும் வாங்கிக் கொள்வதும் நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் யாராவது இரண்டு பேர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறேன். நிசப்தம் இல்லையென்றால் இந்த சிறு வெளிச்சம் கூட என் மீது விழுந்திருக்காது என்று தெரியும். அதனால்தான்.

அட்டைப்படம் எப்படி இருக்கிறது? சசிக்குமாரின் நிழற்படத்தைக் கொண்டு சந்தோஷ் நாராயணன் வடிமைத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி. 


அது இருக்கட்டும்.

கடந்த ஆண்டு லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்  புத்தக விற்பனையில் ராயல்டியாகக் கிடைத்த பணத்தோடு எனது பணமும் கொஞ்ச சேர்த்து பள்ளிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்கும் திட்டத்திற்கு பயன்படுத்திக்  கொள்ளப்பட்டது. இப்படி பத்தாயிரம் ரூபாய் என் பங்கு. இன்னும் சில நண்பர்களின் நிதியுதவியோடு ஏழு கிராமப்புற பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது நினைவில் இருக்கக் கூடும்.

இந்த வருடமும் மசால் தோசை  புத்தகத்தின் வழியாக அப்படியான ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால் புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே Fund raising ஆக செய்துவிடலாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை முழுமையாக மூத்த எழுத்தாளருக்கு ஒதுக்கிவிடலாம் என்பதுதான் திட்டம்.

புத்தகத்தின் விலை நூறு ரூபாய். நூறு ரூபாய்க்கு மேலாக நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி. அது இந்தத் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படும். ஐந்தாயிரமாகவும் இருக்கலாம்,  ஐம்பதாயிரமாகவும் இருக்கலாம் அல்லது ஐம்பது ரூபாயாகவும் இருக்கலாம். உதாரணமாக நூறு பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால் நூறு புத்தகங்களுக்கான பணத்தை பதிப்பாளரிடம் கொடுத்துவிட்டு நூறு புத்தகங்களையும் வாங்கி நானே அனுப்பி வைத்துவிடுகிறேன். தபால் செலவு என்னுடையது. வெளிநாட்டு முகவரியாக இருந்தால் பாக்கெட்டில் பெரிய  பொத்தல் விழுந்துவிடும் என நினைக்கிறேன். அதற்கு மட்டும் ஏதாவது வழி காட்டிவிடுங்கள். உள்நாட்டு முகவரி கொடுத்தால் கோடி புண்ணியம்.

இப்படி திரட்டப்படும் நிதியை ஜனவரி முதல் வாரத்தில் கோவை ஞானி அவர்களுக்கு கொடுத்துவிடலாம். 

கோவை ஞானிக்கு எண்பது வயதாகிறது. நீரிழிவு நோயின் காரணமாக முழுமையாக கண்பார்வை இல்லை. அது பல ஆண்டுகளாவே இல்லைதான். ஆனாலும் எந்தக் காலத்திலும் அந்த மனிதர்  ஓய்ந்ததில்லை. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாகவே உதவியாளரின் உதவியோடு எழுதியும் வாசித்தும் வருகிறார். 

அவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம்.

பல்லாயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். தனது சேகரிப்பில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னால் இந்தப் புத்தகங்கள் கைவிடப்பட்ட அநாதைகளாகிவிடக் கூடாது என பயப்படுகிறார் போலிருக்கிறது. புத்தகங்களை எடுப்பதற்கு முன்பாக எந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டோம் என்று அவரிடம் சொல்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றிய விவரமும் அவருக்கு அத்துப்படியாகியிருக்கிறது- விலை உட்பட. 

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக கண் பார்வையற்றவர். ஆனால் இவ்வளவு புத்தகங்கள் பற்றிய இத்தனை விவரங்களை நினைவில் வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக  இருந்தது. இப்படியானதொரு உடல்நிலையிலும் இவ்வளவு தீவிரமான வாசகராகவும், சிந்தனையாளராகவும் இருப்பவரை இனி வாழ்நாளில் எப்பொழுதாவது பார்க்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. மிகைப்படுத்தி எதுவும் சொல்லவில்லை. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் இப்படிச் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். எழுத்துக்களின் நேசன் அவர். இருபத்தெட்டு திறனாய்வு நூல்கள் உள்ளிட்ட நாற்பத்தியெட்டு நூல்களை எழுதியிருக்கிறார். எழுத்துக்களால் மட்டுமே தன்னை நிரப்பிக் கொண்ட அந்த மனிதர் முதுமையின் விளிம்பில் நிற்கிறார்.

மருத்துவச் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அவருக்கு ஏதாவதொரு விதத்தில் உதவிட வேண்டும் எனத் தோன்றுகிறது. தனது உழைப்பையும் எழுத்தையும்  எந்தவிதத்திலும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத நல்ல மனிதர் அவர். இப்படி வெளிப்படையாக அறிவித்து பணம் திரட்டுவதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை. அதனால்தான்  பிற காரியங்களுக்குக் கேட்பது போல நேரடியாகக் கேட்காமல் புத்தகத்தின் வழியாக Fund Raising. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இதனால் ஏதோ ஒரு பெரிய  காரியத்தைச் செய்வதான எந்த நினைப்பும் இல்லை. பல்லாண்டு காலமாக தமிழின் சிந்தனைத் தளத்துக்கு ஓய்வில்லாமல் பணியாற்றிவிட்டு இன்று தள்ளாடும் ஒரு மரியாதைக்குரிய  மனிதருக்கு சிறு மரியாதையைச் செய்கிறோம். அவ்வளவுதான். அர்ப்பணிப்புணர்வோடு காலம் முழுவதும் எழுதியும் வாசித்தும் விமர்சித்தபடியும் இருந்தவரை எப்பொழுதும் திரும்பிப்  பார்ப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற திருப்தியை அவருக்கு உருவாக்க முடியுமானால் அதுவே பெரிய சந்தோஷம்தான். 

கோவை ஞானி பற்றி முழுமையாக கோவைஞானி என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகங்கள் வாங்க விரும்புவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டு மின்னஞ்சலில் முகவரியைத் தெரியப்படுத்தினால் ஜனவரி முதல் வாரத்தில்  புத்தகங்களை அனுப்பி வைத்துவிடுகிறேன். 

நன்றி.

vaamanikandan@gmail.com