Dec 12, 2014

வாத்தியார்கள் சரியில்லையா?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை என்கிற புரிதல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்று கூட ஒருவர் ‘வாத்தியார்கள் சீட்டு நடத்துறாங்க...பார்ட் டைம் பிஸினஸ் செய்யறாங்க...இல்லையா?’ என்றார். அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியாது. ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள். இரவு முழுவதும் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு செம்மண் புழுதியோடு வகுப்பறையில் தூங்குவதும், மாணவர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்திக் கொள்வதுமாக அழிச்சாட்டியம் செய்தார்கள். ஆனால் கடந்த பதினைந்து, இருபது வருடங்களுக்குள்ளாக பணியில் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் நேர்மையாகவும் அர்ப்பணிப்புணர்வோடும் வேலை செய்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். 

மாதம் ஒரு தொகையை தங்கள் சம்பளத்திலிருந்து கொடுத்து பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவதிலிருந்து, மாணவர்களுக்காக அதிகம் நேரம் ஒதுக்குவது வரை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து தீவிர பயிற்சியளிக்கிறார்கள். Activity based learning வந்த பிறகு அதற்கான பொருட்களைத் தயாரிப்பதிலிருந்து படங்கள் வரைவது வரை மண்டை காய்கிறார்கள். ஆசிரியர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். பிரச்சினையெல்லாம் மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும்தான். இவர்களோடு அரசாங்கத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவனை ஆசிரியர் மிரட்டினால் கூட்டம் சேர்த்துவிடுகிறார்கள். அவன் எக்கேடு கெட்டாலும் தொலையட்டும் வெளியிலிருந்து பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களை அறிவுறுத்துகிறார்கள். ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும்?

மாணவர்களே ஆசிரியர்களை அறைகிறார்கள். பஞ்சாயத்து செய்ய பள்ளிகளுக்குள் அரசியல்வாதிகளை அழைத்து வருகிறார்கள். சாதிக்காரர்கள் கால் வைக்கிறார்கள். மதத் தலைவர்கள் உள்ளே வருகிறார்கள்.

அப்புறம் எப்படி அரசுப்பள்ளிகள் உருப்படும்?

கடந்த மாதத்தில் ஒரு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரிடம் பேசிக் கொண்டிருந்த போது புலம்பினார். ‘பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தில் நாங்க இருபத்தியிரண்டு பேர் உறுப்பினர்களாக இருக்கிறோம். ஆளுக்கு மாதம் நூறு ரூபாய் போட்டால் கூட வருடம் ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிடும். ஆனால் ஒரு பயல் தர மாட்டேங்கிறான்’ என்று அழாத குறை. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்தான் உதவுவதில்லை. ஆனால் அதே பள்ளியின் ஆசிரியர்கள் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேலாக புரட்டிவிட்டார்கள். ஆசிரியர்களுக்கு என்ன வெகு தேவையா?  ஆனால் தங்களது சம்பளத்திலிருந்து ஒதுக்கி பள்ளிக்குத் தந்திருக்கிறார்கள். 

ஆசிரியர்கள் இப்படி அர்ப்பணிப்புணர்வோடு இருந்தாலும் அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களால் மாணவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. அடிப்பது உதைப்பதெல்லாம் இரண்டாம் பட்சம். வகுப்பறையை விட்டு வெளியே போகச் சொல்ல முடிவதில்லை.  சர்வசாதாரணமாக மாணவர்களே ஆசிரியரை எதிர்த்துப் பேசுகிறார்கள். ஒரு அக்கா கிராமப்பள்ளி ஆசிரியை. ‘பசங்க எப்படி முறைப்பாங்க தெரியுமா? நமக்கே பயமா இருக்கும்’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். 

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் எந்தவிதமான வசதியுமற்றவர்களின் பிள்ளைகள்தான் படிக்கிறார்கள். கொஞ்சம் வசதியிருந்தாலும் பக்கத்தில் இருக்கும் நகரத்திலிருக்கும் ஏதாவதொரு பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் ‘இந்தப் பள்ளியில் கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லை’. 

எப்படி இருக்கும்? 

வகுப்பறையில் மாணவர்கள் என்ன சேட்டை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் ஆசிரியர்கள் கேட்கக் கூடாது. மீறி மிரட்டினால் பெற்றவர்கள் ஆட்களைக் கூட்டி வருவார்கள். அப்படி வந்தால் முதல் கோரிக்கை ‘ஆசிரியரை சஸ்பெண்ட் செய்’ அல்லது ‘டிஸ்மிஸ் செய்’ வருகிற கல்வி அதிகாரிகள் குறைந்தபட்சம் அவர்களை இடமாற்றம் செய்து மக்களைச் சாந்தப்படுத்துவார்கள்.

இப்படி மாணவர்களும், பெற்றோர்களும், அரசாங்கமும் சேர்ந்து ஆசிரியரின் கைகளையும் வாயையும் கட்டி வைத்துவிட்டு ‘ஆசிரியர்கள் சரியில்லை’ என்று சொல்வது அநியாயம் மட்டுமில்லை அக்கிரமமும் கூட.

அத்தனை ஆசிரியர்களும் உத்தமர்கள் என்று சொல்லவில்லை. துரதிர்ஷ்டவசமாக பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அதிகபட்ச புகார்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் அவை ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும் போது சொற்பம். 

இதையெல்லாம் பேசுவதால் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து நொறுக்கலாம் என்று அர்த்தமில்லை. ஆனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது சற்றேனும் பயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. கல்வித்துறை பெற்றோர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இவ்வளவு பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் பள்ளிகளை நொறுக்குவதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை.

எடுத்த உடனேயே கை நீட்டும் தைரியம் எந்த ஆசிரியருக்கும் இல்லை. சொல்லிப் பார்த்துவிட்டு தாங்க முடியாமல்தான் ஆசிரியர்கள் தண்டிக்கிறார்கள். ஆனாலும் ஆசிரியர்கள்தான் தண்டிக்கப்படுகிறார்கள். இப்படியே விட்டுவிட்டால் இன்னும் சில வருடங்களில் நிலைமை இன்னமும் சீரழிந்து போய்விடும். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே சரி செய்துவிட முடியும். முப்பது வருடங்களுக்கு முன்பாக ஆசிரியர்கள் அடித்தாலும் மிரட்டினாலும் அது மாணவர்களின் நல்லதுக்குத்தான் என்று ஒரு நினைப்பு இருந்தது. அதை மீண்டும் உருவாக்கித் தருவதுதான் கல்வித்துறையின் முக்கியமான வேலையாக இருக்க வேண்டும்.

இத்தனை நாட்கள் ஆசிரியர்கள் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்பொழுது அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பணியாற்றுவதற்கான சூழல்தான் சரியில்லை.