Dec 12, 2014

ரஜினி

ரஜினியின் படங்களுக்கு முதல் நாள் போகத் தொடங்கிய காலத்தில் அப்பாவின் வாயில் விழ வேண்டியிருந்தது. ‘சிவாஜி, கமல் படமெல்லாம் முதலில் பெஞ்ச் டிக்கெட் நிரம்பி அப்புறம்தான் தரை டிக்கெட் நிரம்பும். ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுக்கு முதலில் தரை டிக்கெட்தான் நிரம்பும்’ என்பார். அதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி மீதான தனது வெறுப்பை இந்த வசனத்தின் வழியாகக் காட்டிவிடுவார். அதாவது அவர்களின் ரசிகர்கள் தரை டிக்கெட்கள். லோ க்ளாஸ். 

அப்பாவுக்கும் ரஜினிக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். இப்பொழுதெல்லாம் அப்பா அப்படிப் பேசுவதில்லை. வயதாகிவிட்டது. ஆனால் எனது மகன் ‘லிங்காவுக்கு கூட்டிட்டு போறீங்களா?’ என்கிறான். ரஜினி இன்னமும் அதே மாஸ் ஹீரோவாகத்தான் இருக்கிறார்.

அப்பா அன்று உதிர்த்த அதே டயலாக்கை இன்று இணைய உலகின் அறிவுஜீவிகள் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ரஜினி ஒரு பக்கா வியாபாரிதான். இருபத்தைந்து வருடங்களாகவே படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அரசியல் டயலாக்கை பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார். நாமும் முதல் பத்து வருடங்களுக்கு ‘கட்சி ஆரம்பித்துவிடுவார்’  என்றோ ‘ஏதாவதொரு கட்சியில் சேர்ந்துவிடுவார்’ என்றோ வாயைத் திறந்தபடியே காத்திருந்துவிட்டு அடுத்த பத்து வருடங்களுக்கு ‘அநேகமாக இந்தப் படம் முடிந்தால் அரசியலுக்கு வந்துவிடுவார்’ என்று நம்பியிருந்துவிட்டு கடந்த சில வருடங்களாக இனி வாய்ப்பே இல்லை என்று தெரிந்தவுடன் ‘எங்களயே ஏமாத்திட்டியே’ என்று பாடத் தொடங்கிவிட்டோம்.

ஒரு சமூகம் விழித்துக் கொள்ள இருபத்தைந்து வருடங்கள் தேவைப்படுகிறது. இல்லையா?

ஆனால் இங்கு யார்தான் வியாபாரி இல்லை? சினிமாவிலிருந்து அரசியல்வாதி வரையிலும் ஒவ்வொருத்தனும் வியாபாரிதான். எழுத்தாளன் வியாபாரி இல்லையா? மீறிப் போனால் ஆயிரம் புத்தகங்கள் விற்க முடியும். அதற்கு எத்தனை அலட்டல்கள்? எத்தனை பல்டிகள்? மருத்துவர்கள் வியாபாரிகள் இல்லையா? கல்வித்தந்தைகள் வியாபாரிகள் இல்லையா? இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்தால் ஆம்வே என்கிறார்கள்; மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்கிறார்கள்; ஜெம் வியாபாரம்; ஈமுக்கோழி வியாபாரம்; நாட்டுக் கோழிப் பண்ணை என்று எந்த இடத்தில் எல்லாம் அடுத்தவனை ஏமாற்றி சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் கையை நீட்டிக் கொண்டுதானே இருக்கிறோம்? 

சினிமாக்காரன் என்ன சமூக சேவைக்காவா படம் எடுக்க வருகிறான்? கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறான். நம்மை ஏமாற்றத்தான் செய்வான். நமக்கு எங்கே புத்தி போனது? ‘நீ அரசியலுக்கு வந்தா வா வராட்டி போ’ என்று படத்தை மட்டும் பார்க்க வேண்டியதுதானே? நாம் மட்டும்தான் அரசியலையும் சினிமாவையும் இவ்வளவு குழப்பிக் கொள்கிறோம்.

ரஜினி ஒரு entertainer என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. இரண்டரை மணி நேரம் விசிலடித்துவிட்டு வர முடிகிறது. அவ்வளவுதான். அதற்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஏன் இவ்வளவு வெறுப்பு? ஒரு நடிகனை இவ்வளவு கொண்டாடுபவர்களும் நாமாகத்தான் இருக்கும். ஒரு நடிகன் மீது இவ்வளவு பொறாமைப்படுபவர்களும் நாமாகத்தான் இருக்கும்.  நமது ஏமாற்றங்களும் பொறாமையும் என்னவெல்லாம் செய்கிறது? ‘அறுபத்தைந்து வயதில் இவனுக்கு எதுக்கு இவ்வளவு கோடி சம்பளம்?’ ‘இரண்டு கதாநாயகிகள் தேவையா?’ ‘அடங்கவே மாட்டானா?’- தாறுமாறாக நம் மனம் யோசிக்கிறது. 

ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கமே இருந்ததில்லை. இருபத்தைந்து வருடங்களாக அப்படியேதான் இருக்கிறேன். கங்கை காவிரி இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பதாகச் சொன்னார். அரசியலுக்கு வருவீங்களா என்ற போதெல்லாம் குழப்பியடித்தார். பின்னால் வந்த விஜயகாந்த் எல்லாம் சரசரவென எதிர்கட்சித் தலைவர் ஆன போது ரஜினி கருணாநிதியிடமும் பம்மினார்; ஜெயலலிதாவிடமும் பம்மினார். சினிமாவில் பேசும் வீரவசனங்களுக்கு சம்பந்தமேயில்லாத முகத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட அவசர அவசரமாக இந்தப் படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? கோச்சடையானில் விட்ட காசை பிடித்துவிட வேண்டும் என்கிற வெறிதானே? 

எல்லாமும் தெரிகிறதுதான். அதனால் என்ன?

பாலகுமாரன் செய்கிற லீலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இன்னமும் அவரது எழுத்து மீதான மோகம் அப்படியேதான் இருக்கிறது. சாருவின் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் பிடிக்காதுதான். ஆனால் ராஸலீலாவையும், ஸீரோ டிகிரியையும் தவிர்த்துவிட்டு தமிழ் இலக்கியத்தின் படைப்புகளை பட்டியலிட முடியாது என உறுதியாக நம்புகிறேன். ரஜினியையும் அப்படித்தான் பார்க்கிறேன். அந்த மனிதனின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் இன்னமும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத entertainer அவராகத்தான் இருக்கிறார்.

இப்படியெல்லாம் ஏமாற்றுகிற மனிதரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அப்படி புறக்கணிப்பதாக இருந்தால் இந்த உலகின் முக்கால்வாசி மனிதர்களை புறக்கணிக்க வேண்டும்.

இரண்டு நாட்களாக ரஜினி என்ற பெயரை மட்டுமே வைத்துக் கத்திக் கொண்டிருக்கிறோம். சந்தடிசாக்கில் ஓ.பன்னீர்செல்வம் மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு வேறொரு செய்தி கிடைத்துவிடும். அதைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம். மின்கட்டண உயர்வு என்கிற விஷயத்தையே மறந்துவிடுவோம். 

ராஜபக்‌ஷே இந்தியா வந்துவிட்டுப் போகிறான். இருபத்து நான்கு தமிழக மீனவர்களை பங்களாதேஷ் கைது செய்திருக்கிறது. கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளைத் திறப்பதற்கு உதவுவதாக விளாடிமிர் புதின் அறிவிக்கிறார். டைம் இதழ் எபோலா நோய்க்கு எதிராக போராடுபவர்களை ‘Person of the year' ஆக அறிவித்திருக்கிறது. ஒரே வாரத்தில் ஏகப்பட்ட செய்திகள். எத்தனை விஷயங்களை விவாதித்தோம்? இதெல்லாம் நமக்கு அவசியமே இல்லை. அஞ்சான், கத்தி, என்னை அறிந்தால், லிங்கா என்று ஏதாவதொன்று நமக்கு வாகாக சிக்கிக் கொள்கிறது.

யாரையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வளவுதான் நம் சுரணை. 

ஒரு முறை குமுதம் அரசு கேள்வி பதிலில் ரஜினிக்கும் கமலுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தலைமுடியை மாற்றினால் அது கமல்; தலைமுடிக்கு ஏற்ப கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தால் அது ரஜினி என்று பதில் சொல்லியிருந்தார்கள். இந்த பதில் வந்து இருபது வருடங்களாவது இருக்கக் கூடும். இன்னமும் அவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். நாமும் அப்படியேதான் இருக்கிறோம்.

இந்த டெக்னாலஜி, இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பதெல்லாம் மேல் தோல்தான். நமது ஜீன் அப்படியேதான் இருக்கிறது.