Dec 30, 2014

என்ன சமாதானம் சொல்வது?

நேற்று மாலை ஏழு மணி இருக்கும். கோரமங்களா வழியாகச் சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். தேசிய விளையாட்டு கிராமம்- National Games Village க்கு அருகாமையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதரை ஒரு கார் இழுத்துச் சென்று வீசியிருந்தது. சற்றேறக்குறைய நாற்பது வயது இருக்கும். உடல்வாகு அப்படித்தான் இருந்தது. தொலைபேசியை ஹெல்மெட்டுக்குள் செருகியபடி வந்திருக்கிறார். பேசிக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் அவர் மீது மட்டும் தவறு என்று சொல்ல முடியாது என்றார்கள். ஸ்போர்ட்ஸ் பைக்கில் வந்த எவனோ ஒருவன் வளைத்து நெளித்து ஓட்டியிருக்கிறான். இவருக்கு முன்பாக கட் அடித்தானாம். தடுமாறியவர் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் விழுந்திருக்கிறார். பைக் காரோடு சிக்கிக் கொண்டது. நூறு மீட்டர் கூட இழுத்திருக்காது. ஆனால் அவருடைய கெட்ட நேரமோ என்னவோ முகம் தரையில் உரசியிருக்கிறது. அநேகமாக அவரால் சுதாகரித்திருக்கக் கூட முடியாது. முடிந்துவிட்டது. முகம் தேய்ந்து விட்டதாம். ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு கதறியிருக்கிறார். உச்சஸ்தாயியில் உயர்ந்த கதறல் கதறல் அப்படியே அடங்கியிருக்கிறது. உயிர் போனதை உறுதி செய்த அடுத்த சில வினாடிகளில் ஒரு துணியை முகத்தின் மீது போட்டுவிட்டார்கள். துணியைத் தாண்டி வெகு தூரத்திற்கு ரத்தம் ஓடியிருந்தது.

முந்தின நாள்தான் குண்டுவெடிப்பில் இறந்து போன சென்னைப் பெண் பவானி என்பவரின் கடைசி நேர கதறல்களைப் பற்றி ஒரு ஆட்டோ டிரைவர் கன்னட சானல்களில் பேசிக் கொண்டிருந்தார். அரைகுறையாகப் புரிந்தது. குண்டு வெடித்த போது அவரது ஆட்டோ அதே சர்ச் சாலையில்தான் இருந்திருக்கிறது. ஏதோ பட்டாசு வெடித்திருக்கிறது என்றுதான் நினைத்தாராம். ஆட்கள் குறுக்கும்மறுக்குமாக ஓடிய போதுதான் புரிந்திருக்கிறது. ஆறேழு பேர் பவானியைத் தூக்கி வந்து வண்டியில் ஏற்றிக் விட்டு பின் ஸீட்டில் இரண்டு மூன்று பேரும் டிரைவருக்கு அருகில் பக்கத்துக்கு இரண்டு பேராகவும் அமர்ந்திருக்கிறார்கள். பெங்களூரில் மட்டுமில்லை எந்த ஊரிலுமே ஆட்டோக்காரனுக்கு வழி கொடுக்க மாட்டார்கள். அதுவும் ஏழெட்டு பேரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தால் தருவார்களா? ஆளாளுக்குத் திட்டியிருக்கிறார்கள். உள்ளே இருந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பெண் கதறிக் கொண்டிருந்தது தெரியும் என்றார். வாஸ்தவம்தான். முகம் கை கால்கள் என சகல இடத்திலும் ஆணிகளும் இரும்புத்துண்டுகளும் ஏறியிருக்கிறது. மனதுக்குள் தான் விட்டுவிட்டுச் செல்லப் போகிற குடும்பத்தின் நினைவு வந்திருக்கும். கணவனின் முகம் வந்துவிட்டு போயிருக்கும். எல்லாமும் சேர்ந்து கொஞ்சமாகவா வலித்திருக்கும்?

இந்த மனிதரின் சடலத்தைப் பார்த்த போது பவானியின் ஞாபகமும் வந்துவிட்டது.

இப்பொழுதெல்லாம் சாலை விபத்து சாதாரணச் செய்தி. பேருந்து பாலத்திலிருந்து விழுந்தது என்பதும் கார் குப்புற கவிழ்ந்தது என்பதும் அதிர்ச்சியே தருவதில்லை. ஊர் உலகத்தில் நடக்காத செய்தியா என்று தாண்டிவிடுகிறோம். இந்த ஊரில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் குறைந்தது ஒருவரிடமாவது திட்டு வாங்க வேண்டியிருக்கும். மூன்று வழிப்பாதையாக இருந்தாலும் இருந்தாலும் பறக்க வேண்டும். இல்லையென்றால் பின்னால் வந்து ஹார்ன் அடித்துக் கதறுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போதும் நாமும் வண்டியில் இருந்தால் மற்ற வண்டிகளின் வேகம் தெரியாது. இறங்கி நின்று பார்க்க வேண்டும். உர்ர், உர்ர் என்கிற சத்தம் மட்டும்தான் கேட்கும். அவ்வளவு வேகம்.

ஜெட்சன் என்றொரு நண்பர் இருக்கிறார். மலையாளி. எப்பொழுதும் கேரளாவுக்கு தனது காரிலேயே சென்றுவிடுவார். அம்மா, அப்பா, குழந்தை, மனைவி என ஐந்து பேரும் பயணிப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாக கரூர் தாண்டி வந்த போது ஒரு பைக்காரன் போக்குக் காட்டிவிட்டான். தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு கீழே உருண்டிருக்கிறது. தனது செல்போனில் காரின் படத்தைக் காட்டினார். நசுங்கிய டப்பா பரவாயில்லை என்று சொல்லலாம். ஐந்து பேரில் யாரோ ஒருவருக்கு அற்புதமான நேரம். ஒரு சேதாரம் இல்லை. குழந்தையை ஜெட்சனின் அம்மா கட்டிக் கொண்டு குனிந்துவிட்டார். அதனால் அவருக்கு மட்டும் முதுகில் ஒரு சிறு அடி. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றார். தம்பிரானோ வெறும் பூரானோ- காரோடு போனது.

மாவட்டச் செய்திகளில் ஒரு விபத்து செய்தியையாவது பார்க்கவில்லை என்றால் காதை வட்டம் போட்டு அறுத்துக் கொள்கிறேன் என்று சவால் விடலாம். அத்தனை விபத்துகள். நமக்கு வேண்டுமானால் அது யாரோ ஒருவரின் இறப்பு. ஒரு நிமிட செய்தி. ஒரு ‘ப்ச்’ உடன் முடித்துக் கொள்ளலாம். இறந்து போனவனின் குடும்பத்திற்கு? நிர்கதியாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் நகரங்களில் நடக்கும் விபத்துக்களையெல்லாம் பார்க்கும் போது கைகால் சிலிர்த்துவிடுகிறது. யாராவது இறந்து போனவரின் செல்போனை எடுத்து குடும்பத்துக்குத் தகவல் கொடுக்கிறார்கள்தான். ஆனால் அந்தக் குடும்பம் அதை எப்படி எதிர்கொள்ளும் என்று நினைக்கும் போதே கால்கள் நடுங்கத் தொடங்கிவிடுகிறது. 

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் யாரைப் போய் துணைக்கு அழைப்பது?  தனியாகத்தான் ஓடி வர வேண்டியிருக்கும். சோடியம் விளக்குகளின் சோகம் தோய்ந்த வெளிச்சத்தில் பதறியடித்துக் கொண்டு அல்லவா ஓடிவருவார்கள்? கால்கள் நிலத்திலேயே படாது. இங்கு பெரும்பாலானவர்கள் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்று தனிக்குடும்பமாகத்தான் வசிக்கிறார்கள். கணவன் இறந்து கிடப்பதைக் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண் குழந்தைகளை எங்கே விட்டுவிட்டு ஓடிவருவாள்? ஒருவேளை குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்தால் அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வாள்? எண்ணங்கள் எப்படியெல்லாம் அலைவுறும்? இறந்து கிடப்பது வேறு யாராவதாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டுதானே வருவாள்? அந்த ஒரு நிமிடமாவது துன்பத்தை எங்கேயாவது தள்ளிவிட முடியாதா என்று தவிக்கிற மனதை எப்படி சமாளிப்பாள்?

இந்த மனிதர் குறித்தும் தகவல் சொல்லிவிட்டார்கள் என்றார்கள். அவருடைய மனைவிதான் எடுத்துப் பேசினாராம். அவள் வந்து சேர்வதற்குள் 108 வந்திருந்தது. அவரை- அந்தப் பிணத்தை எடுத்து வண்டியில் ஏற்றினார்கள். செல்போன், பர்ஸையெல்லாம் எடுத்து 108 ஓட்டுநரிடம் கொடுத்தார்கள். ட்ராபிக் போலீஸார் கூட்டமாக இருந்தவர்களை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். காருடன் ஒட்டியிருந்த பைக் பிரிக்கப்படாமலே கிடந்தது.  இறந்து போனவருக்கு குழந்தைகள் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் வேண்டிக் கொண்டேன். ஆனால் எல்லா வேண்டுதல்களுக்கும் செவி சாய்க்கப்படுவதில்லை என்று பைக்கைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த ஆப்பிள்கள்களும், ஒரு கேக் பெட்டியும், பெரிய கோலா பாட்டிலும், ஒரு குழந்தைக்கான கைக்கடிகாரமும் சொல்லிக் கொண்டிருந்தன.