Dec 29, 2014

சொல்லட்டுமா?

மன்னார்குடியிலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறாராம். இப்பொழுது அடுத்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பதிப்பாளர் காசு கேட்கிறார் என்றார். பாவமாகத்தான் இருந்தது. என்னிடம் எதற்கு சொல்கிறார் என்று குழப்பமாக இருந்தது. ‘நிசப்தம் மூலமாக ஏதாச்சும் ஹெல்ப் செய்ய முடியுமா?’ என்றார். கவிதைகளைப் பற்றி ஏதாவது எழுதச் சொல்கிறார் என்றுதான் ஒரு வினாடி நினைத்தேன். இருந்தாலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ‘என்ன மாதிரியான உதவி?’ என்று கேட்டேன்.  ‘அறக்கட்டளையின் மூலமாக பணம் சேர்த்துக் கொடுங்கள்’ என்றார்.  ஒரு பெரிய உருண்டையொன்று வயிற்றுக்குள் உருளத் தொடங்கியது. அவரை நக்கலடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. இப்படி அப்பாவித்தனமான வேண்டுகோள்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஏமாற்றும் நோக்கிலும் முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு மின்சாதனங்கள் வாங்க வேண்டும் என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒட்டன்சத்திரத்திலிருந்து பேசுவதாகச் சொன்னார். நண்பர்களைப் பிடித்து விசாரித்துப் பார்த்தால் அப்படியொரு விடுதியே அந்த ஊரில் இல்லை. நல்லவேளையாக அவரே திரும்பவும் அழைத்தார்.  ‘தெளிவான முகவரியைக் கொடுங்கள் நானே வருகிறேன்’ என்றேன். ‘இதோ இப்போ எஸ்.எம்.எஸ் அனுப்புகிறேன்’ என்றவர்தான், அதன் பிறகு சத்தமே இல்லை.

இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இல்லை. இப்படியான காய்ச்சல்கள் வரும் என்று தெரிந்த விஷயம்தான்.  ஆனால் இரண்டு விஷயங்களைத் தெளிவாக்கிவிட வேண்டும் போலிருக்கிறது.

மருத்துவம், கல்வி- இந்த இரண்டிலும்தான் கவனம் செலுத்துவதாகத் திட்டமிருக்கிறது.  இதைத் தவிர வேறு உதவிகளையும் செய்யலாம்.  ஆனால் அந்த உதவியினால் உதவி பெறுபவரைத் தாண்டி மற்றவர்களுக்கு என்ன நன்மை விளையும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. 

இன்னொரு விஷயம்- ஒட்டன்சத்திரம் மாதிரியான விவகாரங்கள். விசாரிக்காமல் ஒரு பைசாவைக் கூட அனுப்பி வைக்க முடியாது என்பதால் தயவு செய்து மகளுக்கு மருத்துவச் செலவு, அநாதை விடுதிக்கு உதவி, மகனுக்குத் திருமணச் செலவு என்று பொய் சொல்லி உதவி கேட்க வேண்டாம்.  இந்தக் காலத்தில் விசாரிப்பது பெரிய காரியமாகவே தெரியவில்லை. எந்தக் குக்கிராமமாக இருந்தாலும் தகவலைச் சேர்த்துவிட முடிகிறது- கொஞ்சம் நேரத்தை வீணடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

போகட்டும். 

இன்றைய தேதிக்கு நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.4,22,353 இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஏழெட்டு நண்பர்கள் சேர்ந்து ரூ.1,15,000 அனுப்பி வைத்திருந்தார்கள். அது போக நிறையப் பேர் அனுப்பியிருந்தார்கள். டிசம்பர் நான்காம் தேதி வரை பணம் அனுப்பியவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் ரசீதுகளை அனுப்பி வைத்துவிடுகிறேன். ஏற்கனவே சிலருக்கு அனுப்பியிருக்கிறேன். மற்றவர்களுக்கு வரிசையாக அனுப்ப வேண்டும்.

பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் செயலில் கோவை நண்பர்கள் இரண்டு பேர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படி யாராவது முன்வருவது நல்லதுதான். திருப்பூர் மாவட்டம் துலுக்கமுத்தூர் பள்ளியிலிருந்து முதலில் ஆரம்பிக்கலாம். இந்த வாரம் அவர்கள் இரண்டு பேரும் அங்கு செல்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு பள்ளியாக ஜனவரி மாதத்திற்குள் நான்கு அல்லது ஐந்து பள்ளிகளுக்கு கொடுத்துவிடுவதாகத் திட்டம். இதுவே தாமதம்தான். ஆனால் தாமதத்தை தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது. வரவு செலவுக் கணக்கை பார்ப்பதிலிருந்து பள்ளிகளை விசாரிப்பது. அவர்களிடமிருந்து பட்டியலை வாங்கி விளையாட்டுச்சாமான கடையுடன் தொடர்பு கொள்வது என கொஞ்சம் மண்டை காய்கிறது. ஆனால் சோர்ந்துவிடவில்லை. 

இதையெல்லாம் தாண்டி புது நிறுவனத்தில் ஒவ்வொருநாளும்  ஒன்பது மணிநேரமாவது அலுவலகத்திற்குள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக எழுதுவதை நிறுத்திவிட முடியுமா?  எல்லாவற்றையும் விட முக்கியமாக வீட்டையும் பார்த்தாக வேண்டும். மனைவியும் மகனும் விடுமுறைக்காக ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இதை எழுத ஆரம்பிக்கும் போது அழைத்திருந்தாள்.  ‘ஒரு போஸ்ட் எழுதிட்டு இருக்கேன்...அரை மணி நேரம் கழித்து அழைக்கட்டுமா’ என்று சாந்தமாகத்தான் கேட்டேன். அரை மணி நேரம் கழித்து அழைத்து திட்டிவிட்டு வைத்துவிட்டாள்.  மதுரை மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொண்ட போது  ‘மத்ததெல்லாம் நான் பார்த்துகிறேன்...இவளை மட்டும் நீ பார்த்துக்க’ என்றுதான் கேட்டிருந்தேன். மீனாட்சி சதிகாரி.

கடைசியாக ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்-

இன்று அலுவலகத்தில் சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து முடித்தபிறகு மேலாளரிடம் சென்றேன். தமிழர்தான்.  ‘வாங்க எல்லோரிடமும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என்றவர் நிறுத்தி ‘எழுத்தாளர்ன்னு சொல்லட்டுமா?’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. ‘அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும்?’ என்றேன். என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை யூகித்துவிடலாம். இனிமேல் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாம் வல்ல கருப்பராயன்தான் காக்க வேண்டும்.