Dec 24, 2014

அந்தக் கொலை வழக்கு என்னாச்சு?

பிரேமானந்தா வாயிலிருந்து லிங்கம் எடுத்தார் என்று தெரியும். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருந்தது என்பதும் தெரியும். ஆனால் என்ன குற்றச்சாட்டு, என்ன தீர்ப்பு என்று ஞாபகம் இருக்கிறதா? சரி பிரேமானந்தா வேண்டாம். வைஜெயந்தி மாலாவை எடுத்துக் கொள்ளலாம். 

அந்தக் காலத்தில் குழந்தை பெற்றவர்களும், திருமணமானவர்களும்தான் கதாநாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்களாம். பேரிளம் பெண்கள். இப்பொழுது மட்டும் என்ன? அனுஷ்காவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்கிறார்கள். யார் சொன்னது என்று கேட்பீர்களே! சினிமா வாழ்க்கையில் தோல்வியடைந்த இரண்டு நடிகைகளிடம் பேசிய போது சொன்னார்கள். இரண்டு பேரிடமும் தனித்தனியாகத்தான் பேசினேன். ‘அவளைப் பாரு ஒரு குழந்தை பெத்துட்டு கூட ஹீரோயின் ஆகிட்டா’ என்கிற ரீதியில் பேசினார்கள். ‘அவளுக்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றன; எங்களுக்கு இல்லை’ என்று இரண்டு பேரிடமிருந்தும் ஒரே மாதிரியான புலம்பல்தான். நாம் என்ன செய்ய முடியும்? கொண்டை இருப்பவள் அள்ளி முடிகிறாள். 

அது போகட்டும். 

வைஜெயந்தி மாலாதான் தமிழைப் பொறுத்தவரையில் மிக இளம் வயதிலேயே கதாநாயகி வேஷம் கட்டிய இளம் சிட்டு. அதனால்தானோ என்னவோ தாத்தாமார்கள் உருகிக் கிடந்திருக்கிறார்கள். அப்பொழுது வைஜெயந்தி மாலாவுக்கு பதினெட்டு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை. அவரது அம்மாவும் அப்பொழுது கதாநாயகிதான். வசுந்தரா என்று பெயர். அவர் சொந்தப்படம் எடுப்பதாகச் சொல்லிவிட்டு பம்பாய்க்குச் சென்றிருக்கிறார். மாலாவின் அப்பாவும், பாட்டியும்(அம்மாவின் அம்மா) வைஜெயந்தி மாலாவை தனியாக அழைத்துச் சென்றுவிட்டார்கள். பம்பாயிலிருந்து ஓடி வந்த மாலாவின் அம்மா ‘இவளோட அப்பனுக்கு அவளை பார்த்துக் கொள்ளும் தகுதியே இல்லை’ என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்குக்கு ‘வைஜெயந்திமாலா கார்டியன் வழக்கு’ என்று பெயர்.

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லிவிடுகிறேன். ஒரு புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். “கொலை கொலையாம் காரணமாம்” என்பதுதான் டைட்டில். கோமல். அன்பரசன் எழுதிய புத்தகம். விகடன் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். விகடன் பதிப்பகத்தைப் பற்றி முன்பொரு முறை நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. சில சுவாரசியமான சமையல் குறிப்புகள் கிடைத்தாலும் கூட “வெண்டைக்காய் சாம்பாரில் முப்பது வகைகள்” என்று டைட்டில் வைத்து வழுவழுப்பான காகிதத்தில் புத்தகமாக்கி அட்டகாசம் செய்துவிடுவார்கள் என்றார். இப்படி ஒரு கலக்கலான சப்ஜெக்டில் இருபத்தைந்து கட்டுரைகள் கிடைத்தால் விடுவார்கள்? 

எல்லாமே பிரபலமான வழக்குகள்தான். புத்தகத்தின் டைட்டிலில்தான் கொலை இருக்கிறதே தவிர அனைத்துமே கொலை வழக்குகள் என்று சொல்ல முடியாது. ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்ற வழக்கிலிருந்து டாக்டர் பிரகாஷ் ப்ளூ பிலிம் எடுத்துச் சிக்கிக் கொண்டது வரை பரவலான வழக்குகள். பிரேமானந்தா வழக்கு, தா.கிருட்டிணன் கொலை வழக்கு போன்ற வழக்குகளும் உண்டு. எல்லாமே ‘சுருக்’ ஊறுகாய்கள்.

கோமல் அன்பரசன் சிறுவயதிலேயே பத்திரிக்கையாளர் ஆகிவிட்டவராம். எழுத்து நடையிலேயே தெரிகிறது. பரபரவென்று படிக்க வைத்துவிடுகிறார். 

தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அம்மா இறந்தவுடன் அவரது அப்பா ஜே.கேவையும் அவரது அப்பாவையும் வளர்க்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஜே.கே அப்பொழுதே அறிவாளி. அன்னிபெசண்ட் அம்மையார் ஜே.கேவையும் அவரது தம்பியையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் ஜே.கேவின் தந்தையார் வழக்கு தொடர்ந்துவிட்டார். பிரம்மஞானசபையின் நிர்வாகியான லெட் பீட்டர் தனது மகன்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் சகோதரர்கள் அன்னிபெசண்ட்டிடமே வளர்வதாகச் சொல்லி இங்கிலாந்து சென்று படித்துவிட்டு ‘உலகின் ஆசானாக’ இந்தியா திரும்பினார் என்பது வரலாறு. 

அதே போல சிங்கம்பட்டி ஜமீன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மற்ற விவரங்கள் தெரியாது. அந்த ஜமீன் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு ஜமீன் நண்பனோடு தனது பள்ளியின் தலைமையாசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டார். அந்த தலைமையாசிரியரின் மனைவிக்கும் இந்த ஜமீன்களுக்கும் கசமுசா இருந்தது என்று பேசிக் கொண்டார்களாம். அப்போதைய ஜாம்பவான் வக்கீல்களை எல்லாம் வைத்துத்தான் வழக்கு நடத்தியிருக்கிறார்கள். வழக்கில் தப்பித்துவிட்டாலும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு பெரும் கடன் சுமை ஏறிவிட்டது. தங்களிடமிருந்து கிட்டத்தட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலங்களை ஆங்கிலேயருக்கு விற்று சமாளித்தார்களாம். அப்படியென்றால் வழக்கை நடத்துவதற்காக எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அப்படி விற்கப்பட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட எஸ்டேட்தான் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்.

இப்படி ஏகப்பட்ட சுவாரசியங்களால் இந்தப் புத்தகம் நிரம்பியிருக்கிறது. 

அருமையான புத்தகம்தான். ஆனால் இதை முழுமையான புத்தகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் வைத்து ஒரு முழுப் புத்தகமே எழுத முடியும். நாவரசு கொலையாகட்டும், இமானுவேல் சேகரன் கொலையாகட்டும்- மிகப்பெரிய பின்னணியுடைய சம்பவங்கள். இந்தப் புத்தகத்தில் ஏழெட்டு பக்கங்களில் முடிந்திருக்கின்றன என்பது குறைதான். ஆனால் அதைக் குறை என்று எப்படிச் சொல்ல முடியும்? மிகப் பிரபலமான இந்த வழக்குகளை குறுக்குவெட்டாக விளக்கிவிடுகிறார் அன்பரசன். வெண்மணி வழக்கு பற்றியோ அல்லது வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றியோ அறிந்து கொள்வதற்கான நுழைவாயிலாக இந்தப் புத்தகத்தை வைத்துக் கொள்ளலாம். ஆஷ் துரை பற்றியும் வாஞ்சிநாதன் பற்றியுமான நம் தேடலை இந்தப் புத்தகத்திலிருந்து நீட்சி செய்து கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் மிக சுவாரஸியமான வழக்கு என்றால் ஆளவந்தார் கொலை வழக்கைச் சொல்வேன். ஆளவந்தார் பெண்கள் விஷயத்தில் படு வீக். சென்னை பாரீஸ் கார்னரில் ஜெம் & கோ என்ற கடை நடத்தி வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருக்கு தேவகி என்ற மலையாளப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் லாட்ஜில் அறையெடுத்து தங்கி வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள். இதெல்லாம் நடந்தது 1950களில். அப்பவே அப்படி. தேவகிக்கு திருமணமான பிறகும் இந்த ஆள் வால் அல்லது வேறு எதையோ அவளது வீட்டிற்குள் நீட்டிக் கொண்டிருந்திருக்கிறார். தனது கடைக்கு வந்த தேவகியின் கணவரிடம் ‘சரியான பெண்ணைத்தான் கட்டியிருக்கிறீர்கள்’ என்று சொல்லி கண்ணில் தேவகியைப் பார்த்து ஏதோ சில்மிஷம் செய்திருக்கிறார். தேவகியின் கணவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டிற்குச் சென்றவுடன் அவள் நடந்ததை எல்லாம் ஒத்துக் கொண்டாள். விடுவானா? தேவகியிடம் பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பிய அவளது கணவர், ஆளவந்தாரை வீட்டிற்கு வரவழைத்து அடித்தே கொன்று தலையைத் தனியாக வெட்டியெடுத்து கடலில் வீசிவிட்டு நிர்வாணமான உடலை ஒரு ட்ரங்க் பெட்டியில் வைத்து தென் தமிழ்நாட்டுக்கு ரயிலில் அனுப்பி வைத்துவிட்டார். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் வழக்கு. கொலையாளியிலிருந்து பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் வரை எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். படித்துவிட்டு வெகுநேரம் ஆளவந்தார், தேவகி மற்றும் அவளது கணவரின் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

புத்தகம் வந்து சேர்ந்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக வாசித்துவிட முடிந்தது என்பதே இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம் என்று நினைக்கிறேன். அன்பரசனிடம் அவ்வளவு இலகுவான மொழி இருக்கிறது. வெண்ணையில் கீறிச் செல்லும் கதுமையான கத்தி போன்ற நடை அது. 

புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது.