Dec 22, 2014

மதுரை வீரன்

“தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருந்திருக்கின்றன ஆனால் பெரும்பாலானவற்றை சுவடியிலிருந்து புத்தகங்களாகவே மாற்றவில்லை..அவையெல்லாம் அழிந்து போய்விட்டன” என்று நாஞ்சில் நாடன் ஒரு முறை பேசினார். அப்பொழுதிலிருந்து இத்தகைய புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாசிக்கிறேனோ இல்லையோ- அம்மானை, பள்ளு, தூது என்று எந்த வகையறாவில் கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ஏதாவதொரு காலத்தில் பயன்படும் அல்லவா?

அப்படி கிடைத்த ஒரு புத்தகம் மதுரை வீரன் அம்மானை. 

காசி மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. கழுத்தில் மாலை இருக்கிறது என்று வேதியர் சொல்கிறார். மாலை வடிவிலான அடையாளம் அது. இது மன்னனுக்கு ஆகாது என்று வனத்தில் விட்டுவிடுகிறார்கள். நாகபாம்பு காப்பாற்றி வந்த அந்தக் குழந்தையைச் சக்கிலியர் இனப் பெண் எடுத்து வீரையன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள். தைரியமானவவனாக வளர்கிறான். அவன் இளம்பருவத்தை அடையும் சமயத்தில் பட்டிணத்தை ஆளும் பொம்மண நாய்க்கன் என்பவனின் மகளான பொம்மி என்பவள் ருதுவாகிறாள். அவளது குடிசைக்கு பாதுக்காப்பளிக்க வீரையனின் தந்தை செல்கிறான். ஒரு நாள் மழை பெய்கிறது. தந்தைக்கு  பதிலாக வீரையனே செல்கிறான். பொம்மி மீது காமம் பொங்குகிறது.  ‘சக்கிலியப்பயலுக்கு தலைப்புழுவு ஆட்டுதோடா’ என்று முதலில் அவள் மறுக்கிறாள். பிறகு வீரையனின் தோள் அழகு, மார்பழகைப் பார்த்து மயங்கிவிடுகிறாள். கசமுசா  ஆகிவிடுகிறது.

தனது மகளை இன்னொருவன் கவர்ந்துவிட்டானே என்று நாய்க்கன் துள்ளுகிறான். நாய்க்கனின் ஆட்களோடு சண்டையிட்டு வென்ற வீரையன் பொம்மியைத் தூக்கிக் கொண்டு திருச்சிக்கு ஓடி வருகிறான். அங்கே அரசனிடம்  வேலைக்குச் சேர்கிறான். இந்தச் சமயத்தில்தான் மதுரையில் திருமலைநாய்க்கனுக்கு கள்ளர்களால் பிரச்சினை வருகிறது. நாய்க்கருக்கு உதவும் பொருட்டு திருச்சி மன்னன் வீரையனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே வீரையன் கள்ளர்களை அடக்குகிறான். பராக்கிரமனாகத் திரும்பு வீரைய்யன் திருமலைநாய்க்கருக்கு ஆலத்தி எடுக்கும் வெள்ளையம்மாள் என்கிற பெண்ணைப் பார்க்கிறான். அதிலிருந்து அவள் மீதும் வீரையனுக்கு ஆசை. அடைந்துவிடுகிறான். மன்னரின் ஆட்கள் வீரையனை மாறுகால் மாறுகை வாங்குகிறார்கள். அவன் இறந்த பிறகு திருமலைநாய்க்கர் மனம் வெதும்பி மீனாட்சியம்மனை வேண்டுகிறார். மதுரை வீரனும், பொம்மியும், வெள்ளையம்மாளும் கடவுளாகிறார்கள். 

மதுரை மீனாட்சியம்மனின் கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் மதுரை வீரனுக்கு தனியானதொரு சிறு சந்நிதி இருக்கிறது. பார்த்திருக்கலாம்.

மதுரை வீரன் அம்மானையை புரிந்து கொள்வதில் சிரமம் எதுவும் இல்லை. சாதாரணச் சொற்கள்தான். அதைப் பாடல் வடிவில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

பொம்மியரும் வீரையனும் புரவி தனியேறி
திருச்சினாப்பள்ளிக்குச் சீக்கிரமாய் போகையிலே
கோட்டைக் குறிகாரர் கொத்தளத்துச் சேவுகரும்
எந்த ஊர் என்று இதமாகத் தான் கேட்டார்

இப்படித்தான் வரிகள் இருக்கின்றன. நூற்றியாறு பக்கங்களில் இரண்டாயிரத்து இருநூறு பாடல்கள். ஒரே முசுவில் வாசித்தால் நான்கு மணி நேரத்திற்குள்ளாக முடித்துவிடலாம். 

இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு எம்.ஜி.ஆர் நடித்திருந்த மதுரைவீரன் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. 1956 ஆம் ஆண்டிலேயே வந்த படம் அது. யூடியூப்பில் இருக்கிறது. மூன்று  மணி நேரம் ஓடுகிறது. இந்த அம்மானைக்கும் படத்திற்கும் நிறைய இடங்களில் வித்தியாசங்களிருக்கின்றன. அம்மானையில் இரண்டு பெண்களின் மீதும் வீரையன்தான் காமுறுகிறான்.  ஆனால் படத்தில் எம்.ஜி.ஆர் பெண்கள் பின்னால் சுற்ற மாட்டார் அல்லவா? அதனால் பொம்மியும் வெள்ளையம்மாளும்தான் வீரையன் பின்னால் சுற்றுகிறார்கள். அம்மானையில்  வெள்ளையம்மாள் என்பவள் திருமலை நாய்க்கருக்கு ஆலத்தி சுற்றும் பெண்தான். ஆனால் படத்தில் நாய்க்கர் வெள்ளையம்மாளைக் காதலிக்கிறார். இப்படி சிறு சிறு வேறுபாடுகள் உண்டு.

மதுரைவீரனை ஏன் காசி மன்னனின் மகனாக சித்தரித்து கதை ஆரம்பிக்கிறது? அவனைக் கொன்றுவிட்டு ஏன் கடவுளாக மாற்றினார்கள்? மேல்சாதிப் பெண்ணை விரும்பினால் மதுரை வீரனின் முடிவுதான் உனக்கும் கிடைக்கும் என்பதை பின்வரும் தலைமுறைகளுக்குச் சொல்லாமல் சொல்கிறார்களா? என்பதிலிருந்து பல நூறாண்டுகளாக இருந்துவரும் சாதியக் கட்டமைப்புகள், காலங்காலமாக ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது செலுத்தும் ஒடுக்குமுறை வரை விவாதிக்கலாம். அவ்வளவு நுண்ணரசியல் மிகுந்த கதை இது.

முன்பொரு முறை எஸ்.வி.ராமகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘மதுரை வீரன் என்ற ஒரே படம் எம்.ஜி.ஆரை அருந்ததியர்களின் அசைக்க முடியாத தெய்வமாக்கிவிட்டது’  என்றார். உண்மைதான். அப்படியான ஹீரோயிஸமும், எமோஷனலும் கலந்த கதைதான் அது. காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இனம் தனது இனத்திலிருந்து ஒருவன் ஹீரோவோக மேலேறுவதை கைகொட்டி ரசிக்கிறது. பிறகு தங்களால் செய்ய முடியாததைச் செய்த தங்களின் இனநாயகனுக்கு எம்.ஜி.ஆரின் முகத்தை பொருத்தி அவரையே தங்களின் கடவுளாக மாற்றிக் கொள்கிறது. எம்.ஜி.ஆர் சதிலீலாவதியில் அறிமுகமானபோது அவரது வயது பத்தொன்பது. ராஜகுமாரியில் முதன்முதலில் கதாநாயனானபோது முப்பது வயது. இந்த பதினோரு வருடங்கள்தான் அநேகமாக அவருக்கு சிரமமான வருடங்களாக இருந்திருக்கக் கூடும். அதற்கு பிறகு அவரின் கதைத் தேர்வுகளும், பாத்திர அமைப்புகளும் அவரை தொடர்ந்து தலைவராக்கிக் கொண்டேயிருந்திருக்கிறது. இத்தகைய விஷயங்களில் எம்.ஜி.ஆரை அடித்துக் கொள்ளவே முடியாது.  இதெல்லாம் இனி வேறு எந்த நடிகருக்கும் அமைவதற்கும் வாய்ப்பேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் எப்படி தன்னை நடிகனிலிருந்து தலைவராக மாற்றிக் கொண்டார் என்பதை நுணுக்கமாக புரிந்து கொள்ள எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய “The Imgage Trap: M G  Ramachandran in Films and Politics" என்ற புத்தகத்தை வாசிக்கச் சொல்லி அவரது நண்பரொருவர் பரிந்துரைத்தார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை இந்தப் புத்தகம் வெளிவராமல் பார்த்துக் கொண்டார் என்று சொன்னார். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவரது வாரிசான ஜெயலலிதா தன்னைப் பற்றிய ஒரு புத்தகத்தை நிறுத்தி வைத்தார். அது வாஸந்தி எழுதிய “Jayalalitha: A portrait” என்ற புத்தகம். புத்தகம் வெளிவருவதற்கு ஒரு வாரம் முன்பாக புத்தகம் பற்றிய சிறு குறிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உடனடியாக நீதிமன்றத்தில் ஆணை பெற்று புத்தகத்தை தடை செய்துவிட்டார்கள். பதிப்பாளர்களும் இனி கோர்ட், கேஸ் என்று அலைமுடியாது என்று விட்டுவிட்டார்கள். அதோடு சரி. அந்தப் புத்தகம் இனி வெளி வரவே வராது என்றுதான் நினைக்கிறேன்.