Dec 21, 2014

ஏன் இப்படி?

மூன்று நாட்களாகத் தஞ்சாவூரில் சுற்றிக் கொண்டிருந்தேன். சுற்றிக் கொண்டிருந்தேன் என்றால் நாய் மாதிரி. வெள்ளிக்கிழமையன்று எப்படிச் சுற்றினேன் என்பதை மட்டும் சொன்னால் போதும். புரிந்துவிடும். ‘தாராசுரம் போய் பார்த்துட்டு வந்துடுங்க’ என்று கதிர்பாரதி சொல்லியிருந்தார். சோழர்களின் கட்டடக்கலைக்கு உதாரணமான மிகச் சிறந்த நான்கு கோவில்களில் அதுவும் ஒன்று. மிச்ச மூன்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தஞ்சை பிரகதீஸ்வரர், திருபுவனம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள். தாராசுரம் கும்பகோணம் பக்கத்தில் இருக்கிறது. காலை ஆறரை மணிக்கெல்லாம் கோவிலில் இருந்தேன். மழை தூறிக் கொண்டேயிருந்தது. தூங்கினால் சுகமாகத்தான் இருக்கும். ஆனால் இது போன்ற வாய்ப்புகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. ஐந்து மணிக்கு குளித்துவிட்டு நனைந்தபடியே பேருந்து பிடித்திருந்தேன். தாராசுரத்தில் பெரும்பாலும் பட்டு நெசவு செய்யும் செளராஷ்டிர மக்கள். ஒன்றரை மணி நேரங்கள் அந்தத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஐராவதேசுவரர் கோவிலுக்கு பின்புறமாகவே வீரபத்திரேஸ்வரர் கோவில் இருக்கிறது. ஆனால் அதைக் கோவில் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு சாதாரண ஒண்டிக்குடித்தன வீடு கூட சற்று மரியாதையாக இருக்கும். நாசக்கேடாகிக் கிடந்தது.

வீரபத்திரேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் தெப்பம் போல தண்ணீர் நின்றிருந்தது. மழை நீர். கொசுக்கள் முட்டை வைத்திருந்தன. புழுக்கள் நெண்டிக் கொண்டிருந்தன. அந்தக் கோவிலில்தான் ஒட்டக்கூத்தரின் சமாதி இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஒன்றையும் காணவில்லை. அந்தக் கோவிலில் ஒரு ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தார்கள். அதில் இருந்த எண்ணுக்கு அழைத்துக் கேட்டேன். ‘கோவிலின் பின்புறம் ஒரு கட்டிடம் இருக்கும் பாருங்கள்’. கட்டிடமெல்லாம் இல்லை. அது ஒரு செவ்வக வடிவிலான மேடை. அதுதான் சமாதி. அதன் அருகில் செல்ல வேண்டுமானால் முழங்கால் வரைக்குமான தண்ணீரில் நடக்க வேண்டும். ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? 

பேருந்துக்கு திரும்பும் போது ஜீன்ஸ் மீது நெண்டிக் கொண்டிருந்த சில புழுக்களைத் தட்டிவிட வேண்டியிருந்தது.

காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. மழையின் காரணமாகவோ என்னவோ பசி கண்களைத் திருகச் செய்தது. வரும் வழியில் ஒவ்வொரு ஊராக இறங்கி ஏறினேன். பாபநாசம், அய்யம்பேட்டை, சுந்தரபெருமாள் கோவில் என்று நான்கைந்து ஊர்கள். சுந்தரப்பெருமாள் கோவிலில் இறங்கியதற்கு முக்கியக் காரணம் மூப்பனாரின் வீட்டைப் பார்க்கலாம் என்பதுதான். அவரது சகோதரர் ஜி.ஆர்.மூப்பனாரின் வீடு அது. முகப்பிலேயே கருப்பைய மூப்பனாரின் படத்தை வைத்து மாலையிட்டிருந்தார்கள். உள்ளே செல்லவில்லை. சுந்தரப்பெருமாளை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். அய்யம்பேட்டை என்ற பெயரைக் கேட்டவுடன் ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’ என்ற பெயர்தான் ஞாபகத்துக்கு வந்தது. இறங்கிவிட்டேன். பாபநாசத்தில் கை கால் முறிந்தால் கட்டுப் போடுவார்களாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊரிலும் கொஞ்ச நேரம். 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜீவன் இருக்கிறது. இல்லையா? ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆன்மா. 

இந்த வாகனங்களும் நான்குவழிச் சாலைகளும் வந்த பிறகுதான் இதைப் பற்றியெல்லாம் நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. சென்ற தலைமுறை ஆட்களிடம் பேசினால் இந்த வித்தியாசத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஏதாவதொரு குக்கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் நம்மிடம் சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும். எதையாவது சொல்வார்கள். ஆனால் நமக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. ஒரு இடத்தில் ஏறி இன்னொரு இடத்தில் இறங்குகிறோம். அவ்வளவுதான். இந்த நான்கு வழிச் சாலைகள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கிருஷ்ணகிரியில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாகர்கோவிலில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஊரில் தூங்கினால் கண் விழிக்கும் போது நாம் இறங்க வேண்டிய ஊர் வந்துவிடுகிறது. பிறகு எதற்கு மற்ற ஊர்களைப் பற்றி யோசிக்கிறோம்?

நாம் இந்தத் தலைமுறையில் எவ்வளவோ இழந்து கொண்டிருக்கிறோம். அதில் இதுவும் ஒன்று- ஊர்களின் ஆன்மாவைச் சொல்கிறேன்.

ஒட்டக்கூத்தரின் சமாதியைத் தொடும் போது ஒரு வினாடி மயிர்க்கூச்செறிந்தது என்று சொன்னால் அதில் எந்த பில்ட்-அப்பும் இல்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நாலாயிரக் கோவையும், மூவர் உலாவும் எழுதிய புலவனின் உடல் புதைக்கப்பட்ட இடம் அது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவனது பெயர் நமக்குத் தெரிகிறது என்றால் தான் வாழ்ந்த காலத்தில் எவ்வளவு பெரிய புலவனாக அந்த ஊரில் நடந்திருப்பான்? மூன்று சோழப்பேரரசர்களின் காலத்தில் வாழ்ந்த புலவன். விக்கிரம சோழன் அவனது மகன் இரண்டாம் குலோத்துங்கன் அவனது மகன் இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று பேருடனும் பழகியிருக்கிறார். மூன்று பேரைப் பற்றியும்தான் மூவர் உலாவைப் பாடியிருக்கிறார்.  கம்பனைப் பற்றி பாடியிருக்கிறார்.  எவ்வளவோ சொல்லலாம். அந்த பெரும்புலவனின் சமாதிதான் புழு அண்டிக் கிடக்கிறது. 

இன்னும் எத்தனை வருடங்களுக்கு சமாதி இருக்கும் என்று தெரியாது. அவனது பாதங்களைத் தொட்டு வணங்கியாகிவிட்டது. வேறு என்னென்னவோ யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. இந்த யோசனைகளுக்காகத்தான் பயணங்களை விரும்புகிறேன். ரிசர்வேஷன் செய்யப்படாத பேருந்துகளில் நினைத்த இடத்தில் ஏறி இறங்கும் பயணங்களினால்தான் நிரம்பிக் கொண்டிருக்கிறேன். எத்தனை மனிதர்கள்? எத்தனை அனுபவங்கள்?

இந்தப் பசியும், உடல் வலியும், தூக்கம் தொலைத்த கண்களும், நடந்து நடந்து நடுங்கும் கால்களும் எவ்வளவு சுகமானது என்பதை வெகுசிலரால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். 

இலக்கில்லாமல் அலையும் பயணங்களை பெரும்பாலனவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. ‘அதனால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்கிறார்கள். நேற்றுக் கூட பேருந்தில் திரும்பி வரும் போது ‘உடம்பைக் கெடுத்துட்டு இப்படி அலையறதால என்ன கிடைக்குது?’ என்றார் ஒருவர். அவரிடம் என்ன பதிலைச் சொல்வது? சொல்லியெல்லாம் புரிய வைக்க முடியாது. சொன்னாலும் புரிந்து கொள்கிற மனநிலை பாதிப்பேருக்குக் கிடையாது. ‘ஃபேனைப் போட்டுட்டு டிவி பார்த்துட்டு காலை நீட்டி சொகமா படுத்துட்டிருக்கேன்’ என்றார். வாழ்க வளமுடன் என்று நினைத்துக் கொண்டேன். 

அப்பொழுது ஒட்டக் கூத்தர் எழுதிய தக்கயாகப் பரணியின் பிரதிகளை மடியில் வைத்திருந்தேன். அந்தப்பாடலின் பாட்டுடைத்தலைவன் வீரபத்திரன். ஒட்டக்கூத்தரின் சமாதிக்கு முன்பாக ஒரு சிறு கோவில் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் வீரபத்திரரேதான். அந்தப் பாடலும் இருக்கிறது. பாட்டுடைத் தலைவனையும் பார்த்துவிட்டு பாடியவரையும் வணங்கிவிட்டு வருகிறேன். எவ்வளவு திருப்தியாக இருந்தது தெரியுமா?