Nov 21, 2014

ஆழம் தெரியாமல் காலை...

நண்பர் வீடு வாங்குகிறார். அபார்ட்மெண்ட்டில் ஒரு ஃப்ளாட். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய் ஆகிறது. மனைவியின் நகையை விற்று இருபத்தைந்து லட்சம் தேற்றிவிட்டார். இன்னுமொரு இருபத்தைந்து லட்சத்துக்கு வங்கிக் கடன் தான். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் பில்டர்கள் ஏமாற்றிவிடக் கூடும் என்பதால் ‘அந்த அபார்ட்மெண்ட்டில் யாராவது ஸ்டேட் பேங்க் இல்லைன்னா ஹெச்.டி.எஃப்.சியில் கடன் வாங்கியிருக்கிறார்களா என்று பாருங்கள்...வாங்கியிருந்தால் கண்ணை மூடிக் கொண்டு அட்வான்ஸ் கட்டிவிடுங்கள்’ என்பார்கள். அந்த இரண்டு வங்கிகளின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு சீக்கிரம் கடன் தந்துவிட மாட்டார்கள். துருவி எடுத்து விடுவார்கள். அனைத்து ஆவணங்களும் சரியாகவும், மாநகரட்சியின் அனுமதிப்படி துல்லியமாகவும் கட்டியிருந்தால்தான் கடன் தருவார்கள். அதனால் ஏற்கனவே யாராவது கடன் வாங்கியிருந்தால் அந்த அபார்ட்மெண்ட்டில் பிரச்சினை எதுவும் இருக்காது என்று அர்த்தம். துணிந்து வாங்கலாம்.

நாங்கள் வீடு கட்டும் போது ஸ்டேட் வங்கியில் இருபத்து நான்கே கால் லட்சம் வாங்குவதற்குள் எவ்வளவு திணறினோம் என்று ஞாபமிருக்கிறது. ஆயிரத்தெட்டு கேள்விகள், நூற்றியெட்டு விசாரணைகள் என்று பிளிறினார்கள். அப்படியே கடன் தருவதாக ஒத்துக் கொண்டாலும் கட்டிட வேலை நடக்க நடக்கத்தான் பணத்தை பட்டுவாடா செய்வார்கள். நமக்கே தெரியாமல் யாரோ ஒரு மனிதர் வந்து எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்று பார்த்துச் செல்வார். அவர் பச்சைக் கொடி காட்டினால்தான் அடுத்த தொகை கைக்கு வரும். அதே சமயத்தில் வேறு சில வங்கிகளில் கடன் வாங்கியிருந்தவர்களுக்கு இந்த பிரச்சினையெல்லாம் இல்லை. ‘இன்னும் வாங்கிக்குங்க சார்’ என்று கேட்டுக் கொடுத்த வங்கிகளையெல்லாம் தெரியும்.

இப்பொழுது எதற்கு இந்த ஞாபகம்? ஒன்றுமில்லை. அதானிக்கு கிட்டத்தட்ட ஆறாயிரத்து இருநூறு கோடியை வழங்குவதாக அதே ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது. 

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அப்பா பெரிய பிஸினஸ் புள்ளி எல்லாம் இல்லை. சாதாரணக் குடும்பம். அதானியின் கதையைப் படித்தால் அண்ணாமலை ரஜினி தொடையைத் தட்டி பணக்காரன் ஆனது போல இருக்கிறது. பதினெட்டு வயதில் பம்பாய்க்கு சில நூறு ரூபாய்களோடு வேலைக்குச் சென்றிருக்கிறார். வைரத்தை தரம் பிரிக்கும் வேலை. ஒரே வருடத்தில் தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாகத் தொழில் ஆரம்பித்திருக்கிறார். ஒரே வருடம்தான். இருபது வயதில் பல லட்ச ரூபாய்களை கொழித்துவிட்டார். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அந்தக் கதையை வினவு தோழர்கள் விவரித்தால்தான் சரியாக வரும்.

தனது இருபத்தாறு வயதில் அதானி குழுமத்தை தொடங்கினார். அதன் பிறகு திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. சாம்ராஜ்யம்தான். முந்தாநாள் ஆஸ்திரேலியாவில் நரேந்திர மோடியுடன் கையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இன்னமும் வளர்ந்து கொண்டேயிருக்கிறார். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபோர்ன்விட்டாவெல்லாம் மிக்ஸ் அடித்து குடித்த வளர்ச்சி.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் அமைக்கிறாராம். Carmichael Mining Project. அதற்காகத்தான் அதானிக்கு ஒரு பில்லியன் டாலரைத் தருவதாக ஸ்டேட் வங்கி உறுதியளித்திருக்கிறது. நானும் நீங்களும்தான் பத்தாயிரம் ரூபாயை வாங்கிச் சேர்ப்பதற்குள் கண்ணாமுழியைத் திருகிக் கொண்டு திரிய வேண்டும். ஆனால் அதானி அல்லவா? அதனால் ஒரு பில்லியன் டாலர். இப்படிக் கொடுத்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? எதிர்கட்சிகள் கதறுவார்கள். அதற்கும் ஸ்டேட் வங்கியிடம் நாசூக்கான பதில் இருக்கிறது. ‘இது சும்மா புரிந்துணர்வு ஒப்பந்தம்தான்..எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டுத்தான் தருவோம்’ என்று சொல்கிறார்கள். இதெல்லாம் உடான்ஸ் பதில். நிச்சயமாகத் தந்துவிடுவார்கள்.

அதானிக்கு கடன் தர முடியாது என்று ஏற்கனவே சில வங்கிகள் மறுத்திருக்கின்றன. ‘இந்தத் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்’ என்று காரணம் சொன்னார்களாம். அதே கேள்வியை ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ச்சே..ச்சே குயின்ஸ்லேண்ட் மாகாண அரசிடம் விசாரித்துவிட்டோம். அதெல்லாம் ஒன்றுமில்லையாம்’ என்று கேள்வி கேட்டவருக்கு பெரிய பன்னாக கொடுத்திருக்கிறார். அவனவனுக்கு அவனவன் பிரச்சினை. கடந்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரிய அடி வாங்கியிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். எவனாவது வந்து ‘நான் ஒரு சுரங்கம் அமைக்கிறேன்’ என்று கேட்கும் போது அரசாங்கத்திற்கு நாக்கில் எச்சில் வடியத்தானே செய்யும்? தொடங்கச் சொல்லி அனுமதி கொடுத்துவிட்டார்கள். 

அதானி குழுமத்துக்கு ஏற்கனவே கிட்டத்தட்ட எழுபதாயிரம் கோடி கடன் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. எனவே பழைய கடன் நிலுவை மற்றும் முன் பணமாக ஐந்தாயிரம் கோடியை அதானி குழுமம் ஸ்டேட் வங்கிக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் மிச்சமிருக்கும் ஆயிரத்து இருநூறு கோடிதான் புதுக்கணக்கு என்று என்ன என்னவோ சொல்கிறார்கள். பெரிய இடத்து விவகாரம்.

ஒரு பில்லியன் டாலரை ஸ்டேட் வங்கி கொடுத்தாலும் இன்னுமொரு ஆறரை பில்லியன் டாலரை வேறு பல இடங்களிலிருந்து பெறுவதற்கான முயற்சிகளில் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ஏழரை பில்லியன் டாலர்கள். எங்கே போவது? இல்லாதவனுக்குத்தான் அந்தப் பிரச்சினையெல்லாம். அதானிக்கு அதெல்லாம் ஜூஜூபி மேட்டர். இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட நானூறு கிலோமீட்டருக்கு ரயில்வே ட்ராக் அமைக்கும் வேலை இருக்கிறது. அதற்கு மட்டுமே கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். அந்த வேலையை கொரிய நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு அதற்கு பிரதிபலனாக இன்னொரு கொரிய கடன்காரனிடம் பல்லாயிரம் கோடியை வாங்கப் போகிறார்களாம். வேறு சில அமெரிக்க வங்கிகள் உதவும் போலிருக்கிறது. குயின்ஸ்லேண்ட் அரசாங்கமும் தன் பங்காக ஒரு தொகையைப் போடுகிறது. சமாளித்துவிடுவோம் என்று படம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே பணத்தை புரட்டிவிட்டாலும் கூட இது ஒன்றும் சாதாரண திட்டமில்லை என்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாயிலான ப்ராஜக்ட். நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆழம் தெரியாமல் அதானி காலை விடுகிறார் என்று சில கட்டுரைகளில் வாசித்தேன். விட்டால் என்ன? தூக்கிவிடத்தான் பெரிய கையாக இருக்கிறதே! தாமரையைச் சுமந்து கொண்டிருக்கும் கை- சாட்சாத் அந்த மகாலட்சுமியின் கையைச் சொல்கிறேன். நமக்கெதுக்கு அரசியல் எல்லாம்?