Nov 24, 2014

பயப்படுறியா கொமாரு?

சிக்மகளூரில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை மண்டை மீது அடித்திருக்கிறான். வெறும் கையில்தான் அடித்திருக்கிறான். பின் மண்டையில் அடி வாங்கியவன் சுருண்டு விழுந்து அதே இடத்திலேயே இறந்துவிட்டான். என்ன பிரச்சினையென்று சரியாகத் தெரியவில்லை. கழிவறையில் ஏதோ தகராறு. கை நீட்டிவிட்டான். மற்ற மாணவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அடித்தவன் எப்பொழுதுமே தன்னைப் பார்த்து அடுத்தவர்கள் பயந்தபடியே இருக்க வேண்டும் என சொல்வானாம்.  இறந்து போன பையன் எதிர்த்திருப்பான் போலிருக்கிறது. வீசி விட்டான். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு எப்படியான ஆசை என்று பாருங்கள்.

சமீபத்தில் ஜிகிர்தண்டா படம் பார்த்தேன். படம் முழுவதுமே இதுதான் பின்னணி. தன்னைப் பார்த்து அடுத்தவர்கள் பயப்பட வேண்டும் என்று சிம்ஹா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம்தான் என்றில்லை. ரேஸ் குர்ரம் படம் படத்திலும் இதேதான் டயலாக். வில்லன் மத்தாலி சிவா ரெட்டி அதைத்தான் சொல்கிறான். ‘இந்த ஊருக்கு என்னைப் பார்த்து பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்’என்று. இந்த இரண்டு படங்களும் சாம்பிள்தான். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீத படங்களில் இந்த வசனம் வந்துவிடுகிறது. அதனால்தான் பத்தாம் வகுப்பு பையன் கூட இம்மிபிசகாமல் ஆசைப்படுகிறான். சினிமாக்காரர்களிடம் போய் நாம் பொங்கல் வைக்க முடியாது. ‘சமூகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம்?’ என்று சொல்லிவிடுவார்கள். 

சினிமாவில் மட்டும்தானா? ஹெச்.ஆர் டைரக்டராக ஒருவர் இருந்தார். பெயரைச் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ‘இவனுக எப்ப பாரு WFRன்னே பேசிட்டிருக்கானுக’ என்பார். அவர் சொன்னது நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஆட்களைத்தான். Work Force Reduction என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் WFR. நிறுவனம் லாபத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தலைமையிடமிருந்தும் எந்த சமிக்ஞையும் வரவில்லை. ஆனால் உள்ளூர் பெருந்தலை இதைச் செய்துவிட வேண்டுமென ஆர்வமாக இருக்கிறார்.

‘ஏன் சார்?’ என்று கேட்டால் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது. ஊழியர்களிடம் ஒரு மெலிதான பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். எதையுமே துணிந்து கேட்க வழியில்லாதபடி அந்த பயம் அவர்களை அமுக்கியே வைத்திருக்க வேண்டும். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை பத்து தலைகளை உருட்டினால் மற்றவர்கள் பயந்து கொள்வார்கள் இல்லையா? படு கேவலமான லாஜிக்தான். ஆனால் அப்படித்தான் இருக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் இந்த பயம் என்கிற கான்செப்ட் வந்துவிட்டது. 

பள்ளிகளில் சில ஆசிரியர்கள் இருப்பார்கள். திடீரென்று எவனையாவது எழுப்பி தர்ம அடி அடித்துவிடுவார்கள். அவன் அடி வாங்குவதை பார்த்துவிட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு மற்ற மாணவவர்கள் பயந்தபடியே கிடப்பார்கள். பயம் ஓய்ந்து சற்று துளிர்விடத் தொடங்கும் போது வேறொருவனை எழுப்பி தர்ம அடி. எந்தக்காலத்திலும் அந்த ஆளைப் பார்த்து மாணவர்கள் பயந்து கொண்டேயிருப்பார்கள்.

அப்படித்தான். அதே மாதிரிதான் எல்லா இடங்களிலும். 

முதலாளியைப் பார்த்து ஊழியர்கள் பயப்பட வேண்டும். அரசியல்வாதிகளையும் தாதாக்களையும் பார்த்து சினிமாக்காரன் பயப்பட வேண்டும். பெங்களூரில் கன்னடக்காரனைப் பார்த்து தமிழ்காரன் பயப்பட வேண்டும். சென்னையில் உள்ளூர்க்காரனைப் பார்த்து வெளியூர்க்காரன் பயப்பட வேண்டும். ஒரு சாதிக்காரனைப் பார்த்து இன்னொரு சாதிக்காரன் பயப்பட வேண்டும். எதுவுமே இல்லையென்றாலும் என்னைப் பார்த்து நீ பயப்பட வேண்டும். உன்னைப் பார்த்து அடுத்தவன் பயப்பட வேண்டும். அவ்வளவுதான்.

ஆளுங்கட்சியை எதிர்த்து ஒரு செய்தியை எழுதச் சொல்லுங்கள். எழுத மாட்டார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ ஒரு பயம் இருக்கிறது அல்லவா? அதுதான் அதிகாரவர்க்கத்திற்குத் தேவை. சமீபத்தில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட குழந்தைகள் செத்துப் போனார்கள். ஏன் பெரும்பாலான ஊடகங்களில் இந்தச் செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டது? அரசாங்கத்தின் விளம்பரம் கிடைக்காது என்கிற பயமோ அல்லது எதற்காக அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பயமா?

சமீபத்தில் ஈராக் தீவிரவாதிகள் இந்திய நர்ஸ்களை பிடித்து வைத்திருந்தார்கள். மோடி அரசாங்கம் பதவியேற்ற சமயம் அது. பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தி அவர்களை விடுவித்தார்கள். என்ன பேசினார்கள் என்ற விவரம் எந்தவிதத்திலும் கசியவில்லை. இங்கு யாருக்குமே என்ன பேரம் பேசப்பட்டது என்று தெரியாதா என்ன? ஏதேதோ விவகாரங்களை பிரித்து மேய்கிறோம். இதைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை? ‘இந்திய அரசாங்கம் பணம் கொடுத்தது என்று தெரிந்தால் வேறு தீவிரவாத அமைப்புகளும் இந்தியர்களை குறி வைத்துக் கடத்தி அரசாங்கத்திடம் பேரம் பேசும்’ என்று சொல்வார்கள். இப்பொழுது மட்டும் தீவிரவாதிகளுக்குத் தெரியாதா என்ன?. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

யாரையும் குறிப்பாக குற்றம் சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. ஒரு நாளில் மட்டும் எவ்வளவு விவகாரங்களுக்காக நாம் பயப்படுகிறோம்? ஒரு காரியத்தைச் செய்யும் போது எதையெல்லாம் நினைத்து பயப்பட வேண்டியிருக்கிறது. பயம் ஒரு விதத்தில் நமக்கு பாதுகாப்பானதுதான். பயமே இல்லையென்றால் வரைமுறையில்லாமல் ஆடத் தொடங்கிவிடுவோம். ஆனால் பயத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? ஜாக்கிரதையுணர்வுக்கும் பய உணர்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. 

நம்மிடம் பயம்தான் ஜாஸ்தி. பக்கத்துவீட்டில் ஏதாவது பிரச்சினையென்றால் சத்தமே வராமல் நம் ஜன்னலை மூடுவதற்கு ஜாக்கிரதை உணர்வு என்று அர்த்தமில்லை. விபத்தில் ஒருவன் அடிபட்டுக்கிடக்கிறான் என்றால் ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்று பம்முவதற்கு ஜாக்கிரதையுணர்வா காரணம்? 

இப்பொழுதெல்லாம் நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமேயில்லாதவனைக் கூட பார்த்து பயப்பட வேண்டியதாக இருக்கிறது. எவன் எப்படி எகிறுவான் என்றே தெரியாத ஒரு in-secured சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவன் வேண்டுமானாலும் ஓங்கி ஒரு அறையை விட்டுவிட முடியும். எவன் வேண்டுமானாலும் நம் குடியைக் கெடுத்துவிட முடியும். எவன் வேண்டுமானாலும் நம்மைக் கீழே தள்ளி மிதித்துவிட முடியும். 

இதையெல்லாம் நம்மால் மாற்றிவிட முடியுமா என்ன? ம்ஹூம். சுத்தமாக நம்பிக்கையில்லை. என்னதான் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. குறைந்தபட்சம் நம்மளவில் மாறலாம். இன்னொருவனை எந்தவிதத்திலும் பயமுறுத்தும் செயலில் இறங்கமாட்டேன் என்று வேண்டுமானால் உறுதியெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. இன்னொருவனை பயப்படச் செய்து அதில் இன்பம் துகிப்பதில் ஒரு கிக் இருக்கிறது. அந்த கிக்கை தெரிந்து கொண்டால் போதும். தெரு நாயையாவது பயமூட்டி திருப்தியடைந்து கொண்டிருப்போம்.