Sep 24, 2014

அவ்வளவுதானா?

ஒரு பயிற்சி வகுப்பு.

காசு கொடுக்க வேண்டியிருந்தது. கொடுத்துவிடலாம் என்று தோன்றுகிற மாதிரியான தலைப்பு அது. சில மனிதர்கள் பேசுவதைக் கேட்பது என்பது புத்தகம் வாசிப்பது போலத்தான். ஒரு புத்தகத்தை வாசிக்கிறோம்.  ‘என்னை ரொம்பவும் பாதிச்ச புஸ்தகம்’ என்கிறோம். அந்தப் புத்தகம் உடனடியாக நம்மைப் புரட்டி போட்டுவிடுகிறதா என்ன? அதெல்லாம் இல்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் சில வாக்கியங்களோ, கதாபாத்திரமோ அல்லது சில பக்கங்களோ நமக்குள் ஆழப் பதிந்துவிடுகிறது. அப்படி பதிந்து போகும் விஷயம்தான் நமது ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். Personality Building. நம்மையுமறியாமல் Tune ஆகத் தொடங்குவோம். அப்படித்தான் சில மனிதர்களுடன் பேசும் போதும்- பேசிக் கொண்டேயிருப்பார்கள். நமக்குள் சில வாக்கியங்கள் பதிந்துவிடும் அது நமக்கே தெரியாமல் நம்மை உருமாற்றிக் கொண்டிருக்கும்.

இப்படி நம் ஒவ்வொருவருக்குமே நம்மை பாதித்த மனிதர்கள் இருப்பார்கள். தாத்தாவோ, பாட்டியோ, மறக்க முடியாத ஆசிரியரோ, பக்கத்து வீட்டு அக்காவோ, எதிர் வீட்டு மாமாவோ என ஏதாவதொரு விதத்தில். இந்த மனிதர்களின் வார்த்தைகளையும் அவர்கள் கொடுத்த ஐடியாக்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் நாம் முழுமையடையாமல்தான் நின்று கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன்.

அப்படித்தான் இந்த பயிற்சி வகுப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. பிரேசிலிலிருந்து ஒரு பேராசிரியர் வந்திருந்தார். காலையில் ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைக்கும் வகுப்பு. வகுப்பில் வெறும் பதினான்கு பேர்கள்தான். காசும் அவ்வளவு அதிகம் இல்லை. மூன்றாயிரத்து எழுநூற்றைம்பது ரூபாய். அந்தத் தொகைக்கே மதியச் சாப்பாடும் காலையிலும் மாலையிலும் தேநீரும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். பெங்களூருக்கு வேறு வேலையாக வந்திருக்கிறார். இடையில் ஒரு நாள் கிடைத்ததும் அதை ஒரு பயிற்சி வகுப்பாக மாற்றிவிட்டார். 

காலை முழுவதும் தனது சொந்த அனுபவங்களாகப் பேசிக் கொண்டிருந்தார், பேராசிரியர். பெரும்பாலும் Case studies. அத்தனையுமே பாஸிடிவ் திங்கிங் என்பது பற்றித்தான் இருந்தது. இத்தகைய அனுபவங்களை இணையத்தில் தேடினால் நூற்றுக் கணக்கில் தேடி எடுத்துவிடலாம். ஆனால் அதைச் சொல்லுகிற நேர்த்தி இருக்கிறதல்லவா? அது அந்தப் பேராசிரியருக்கு இருந்தது. 

முழுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவனின் கதை பிரமாதமானதாக இருந்தது. அவனுக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை. சிறு வயதிலேயே விடுதியொன்றில் தங்கியிருந்து படித்திருக்கிறான். படிப்பு நன்றாக வந்திருக்கிறது. தத்துவவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக வந்த போது அந்தக் கல்லூரிக்கு வந்திருக்கிறான். அந்த தேசத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் உண்டு என்பதால் மாணவனுக்கும் ஆரம்பத்திலிருந்தே அந்தப் பழக்கம் உண்டு. 

மன அழுத்தம், போதைப் பழக்கம் என சேர்ந்து அவனைச் சீரழித்திருக்கிறது. பேராசிரியர் பேசும் போதெல்லாம் போதையை தத்துவவியலோடு பொருத்திப் பேசுவானாம். அவனுக்கு காதலி என்றெல்லாம் யாரும் இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் கண்கள் சொக்கிக் கிடப்பவனுக்கு யார் சிக்குவார்கள்? ஏதோ ஒரு வேகத்தில் கல்லூரியின் கட்டடத்தின் மீது ஏறி எட்டிக் குதித்திருக்கிறான். தலை கீழாக விழுந்தவனின் மண்டை பிளந்திருக்கிறது. ஆனால் உயிர் போகவில்லை. தப்பித்துவிட்டான். மரணத்தைப் பார்த்துவிட்டு வந்தவனுக்கு வாழ்க்கையில் இதையெல்லாம் தாண்டி என்னனென்னவோ இருக்கின்றன என்று கடவுள் ட்யூப்லைட் அடித்திருக்கிறார். அதன் பிறகு முழு நேர தத்துவியல் ஆராய்ச்சியாளன் ஆகிவிட்டான் என்று தலையைக் குனிந்து நடு மண்டையின் முடியை விலக்கிக் காட்டினார். பிளந்த தழும்பு இன்னமும் இருக்கிறது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டையாக உலகம் முழுவதுமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

‘இதுக்கு மேல இழக்கிறதுக்கு ஒன்னுமில்லைன்னு நினைக்க ஆரம்பிக்கிறோம் இல்லையா? அந்தப் புள்ளிதான் பாஸிடிவ் திங்கிங்’ என்று நிறுத்தினார். துளி குழப்பமாகத்தான் இருந்தது. அவரே விளக்கினார். ஒரு கேள்வி பதில் மூலம். ‘இருப்பதிலேயெ மிகப்பெரிய இழப்பு என்ன?’என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லோரும் ஏற்றுக் கொண்ட பதில் ஒன்றுதான்.‘உயிர்’. உயிரைத் தவிர வேறு எது போனாலும் மீட்டெடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்பதுதான் அவர் சொல்ல வந்தது. அவர் சொல்வதும் சரிதான். சொத்து போனால் போகட்டும். வேலை போனால் போகட்டும். உறவுகள் போனால் போகட்டும். உடலில் உயிர் போகவில்லை அல்லவா? அப்புறம் என்ன? தம் கட்டு என்றார்.

நிஜமாகவே பல பிரச்சினைகளைச் சந்திக்கும் போது ‘இதோடு செத்துத் தொலைந்துவிடலாமா’ என்கிற எல்லைவரைக்கும் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால் தாண்டி வந்துவிட்டால் அவ்வளவுதான். ‘நான் எல்லாம் அந்தப் பிரச்சினையையே பார்த்தவன் தெரியுமா?’ என்று ஹீரோவாகிவிட முடிகிறது. அவர் சொன்ன அதே விஷயம்தான்- எவ்வளவுதான் பெரிய பிரச்சினை என்றாலும் தம் கட்டிவிட வேண்டும். 

பயிற்சி வகுப்பு முடிந்து வெளியே வரும் போது கை கால் முடியெல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன. 

சொல்ல மறந்துவிட்டேன். வகுப்புக்கு வரும் போது நமக்குப் பிடித்த மூன்று புத்தகங்களை எடுத்து வரச் சொல்லியிருந்தார்கள். 

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ மனுஷ்ய புத்திரனின் ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ மற்றும் சுகுமாரனின் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ ஆகிய தொகுப்புகளை எடுத்துச் சென்றிருந்தேன். இவர்கள் மூவருமே இரண்டாவது பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் மனிதர்கள்தான். தனியாக அவர்களோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினால் கூட எனர்ஜி டானிக்கை நேரடியாக நரம்பில் ஏற்றிவிடுவார்கள். அதனாலேயே அவர்களின் புத்தகங்களை எடுத்துச் சென்றிருந்தேன்.

கேள்வி கேட்க்கப்படும் என்பதால் புத்தகங்களை மறுவாசிப்பு செய்துவிட்டு வாருங்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். ஏதாவது கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி வரைக்கும் அவர் அந்தப் புத்தகம் பற்றி வாயைத் திறக்கவேயில்லை. கடைசியில் ‘இந்த செமினாரினால் ஒன்றுமே பயன் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். குறைந்தபட்சம் உங்களுக்குப் பிடித்த மூன்று புத்தகங்களைத் திரும்ப வாசிக்க வைத்திருக்கிறேன்’ என்றார்.

அட, இது கூட பாஸிடிவ் திங்கிங்தான்.

பார்வையற்ற குழந்தை

பார்வையற்ற குழந்தை
மரப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கிறாள்
அவளுக்கு 
அது ஒரு பிரச்சினையே இல்லை

அவளாகக் கற்பித்துக்கொண்ட
இந்த உலகின் ஒழுங்கில்
ஏழாவது படிக்குப் பிறகு 
ஒன்பதாவது படி
வராதவரை

பார்வையற்ற குழந்தை
நிதானமாகவே படிகளில் இறங்கிக் கொண்டிருக்கிறாள்.

- மனுஷ்ய புத்திரன்