Aug 8, 2014

எப்படி மறக்க முடியும்?

வீட்டிற்கு ஒரு மீன் தொட்டி வாங்குகிறோம். வெகுகாலமாகவே மீன் வளர்க்கிறேன். ஒன்றாம் வகுப்பிலிருந்தேதான். அந்தச் சமயத்தில் செண்பகபுதூர் என்ற ஊரில் குடியிருந்தோம். அம்மாவுக்கு முதல் போஸ்டிங் அங்குதான். கிராம நிர்வாக அலுவலராகச் சேர்ந்தார். பெயருக்கு ஏற்ற மாதிரியே அட்டகாசமான கிராமம். வீட்டை விட்டு கீழே இறங்கினால் வயல்தான். கொப்பு, வாய்க்கால், ஆறு என்று சுற்றிச் சுற்றி நீர் நிலைகளாக இருக்கும். 

ஒரு காலத்தில் மணியகாரர் என்றால் மரியாதையே வேறு மாதிரிதான். ஒரு காலம் என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக. கிராமத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும்- அது திருட்டாக இருந்தாலும் சரி கொலையாக இருந்தாலும் சரி போலீஸ்காரர்கள் மணியகாரர் வீட்டுக்குத்தான் வருவார்கள். மணியகாரராக பார்த்து குற்றவாளியை பிடித்துக் கொடுத்தால் உண்டு. இல்லையென்றால் திரும்பிச் சென்றுவிடுவார்களாம். சிறு குற்றங்களுக்கு பல சமயங்களில் மணியகாரர்களே தண்டனை கொடுத்துவிட்டு போலீஸ்காரர்களிடம் ‘அப்படியெல்லாம் இங்க ஒண்ணும் நடக்கலை’ என்று சொல்லிவிடுவார்களாம். உள்ளூரில் ஒருவனை போலீஸ் பிடித்துச் சென்றால் அது தனக்குத்தான் அவமானம் என்று நினைத்துக் கொள்வார்கள்.

பிறகு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் மணியகாரர், கணக்குபிள்ளை என்ற வேலைகளையெல்லாம் ஒழித்து எல்லோரையும் கிராம நிர்வாக அலுவலர் என்று மாற்றிய பிறகுதான் இந்த வேலையின் மரியாதையைக் கெடுக்கத் துவங்கினார்கள். சாதிச்சான்றிதழிலிருந்து பட்டாமாறுதல் வரை எல்லாவற்றுக்கும் ரேட் நிர்ணயித்தார்கள். மணல் திருட்டிலிருந்து சிலை திருட்டு வரையிலும் கமிஷன் வாங்கத் தொடங்கினார்கள். அவர்களோடு நிறுத்திக் கொள்வதுமில்லை. ஆர்.டி.ஓ வரைக்கும் வசூலித்துக் கொடுக்கும் வேலையும் இவர்களுடையதுதான். ‘ஐந்நூறு ரூபாயை வீசினா மணியகாரன் வேலையை முடிச்சுக் கொடுத்துடுவான்’ என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது.

மணியகாரர் கதையைச் சொல்வதற்காக எழுதத் தொடங்கவில்லை. அப்பொழுது- முப்பது வருடங்களுக்கு முன்பாக- அம்மா வேலைக்குச் சேர்ந்த போது ஊருக்குள் மரியாதை இருந்தது. ‘மணகரம்மா கொடுக்கு’ என்று யாராவது அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஊர் முழுவதும் தெலுங்கு பேசும் நாயக்கர்கள்தான். போகிற பக்கமெல்லாம் மீன் குஞ்சு பிடிப்பதுதான் பொழுது போக்கு. சில சமயங்களில் மைனாக்களும், சிட்டுக்குருவி குஞ்சுகளும் கிடைக்கும். பிடித்து வந்து வீட்டில் வைத்திருந்தால் இரண்டு நாட்களில் பூனை பிடித்துக் கொள்ளும் அல்லது எறும்பு தின்றுவிடும். பாதுகாக்கவே முடிந்ததில்லை. ஆனாலும் ஆசை அடங்காது. 

நாதன் என்றொரு மனிதர் இருந்தார். அவருடைய தந்தை கிராம உதவியாளர். ஏதோ உடல்நல பிரச்சினையில் நடமாட்டமில்லாமல் படுக்கையில் விழுந்துவிட்டார். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அரசு ஊழியர் பணிக்கு வராவிட்டால் அவர் பணிநீக்கம் செய்யப்படுவார் அல்லவா? அதனால் அவர் வேலைக்கு வருவதாக கணக்குக் காட்டி நாதனை வேலையில் வைத்திருந்தார்கள். நாதனுக்கு பெரிய வேலை இருக்காது. அதிகாலையிலேயே வரி வசூலுக்குச் சென்றுவிட்டு திரும்பிவிடுவார். அதன் பிறகு நாள் முழுவதும் வெளியில்தான் அமர்ந்திருப்பார். விடுமுறை கிடைத்தால் அவரோடு சுற்றச் சென்றுவிடுவோம். அவர்தான் மீன் பிடித்துத் தருவார். வேஷ்டியை கழட்டி நீருக்குள் முக்கி எழுந்தால் பெருமீன்களோடு வெளியே வருவார். பெருமீன்கள் எல்லாம் குருமாவுக்கு. சிறுமீன்கள் எல்லாம் பாட்டிலுக்கு. 

அவர் தாழ்த்தப்பட்ட சாதி. பயந்த சுபாவம். திருமணம் ஆகியிருக்கவில்லை. ஏகப்பட்ட முறை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நன்றாக ஞாபகமிருக்கிறது- ஒரு முறை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். வீட்டின் மூலையில் அவரது அப்பா படுத்திருந்தார். அவரது உடலில் கொப்புளங்களாக இருந்தது. கிடை புண். கடையில் வாங்கி வைத்திருந்த ஜிலேபி அவர்கள் வீட்டில் இருந்தது. அதை எங்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்த போது நாதனுக்கும் அவரது அப்பாவுக்கும் கடும் சண்டை வந்துவிட்டது. அவரது அப்பா கடும் எதிர்ப்புக் காட்டினார். இரண்டு பேரும் தெலுங்கில் மாற்றி மாற்றித் திட்டிக் கொள்கிறார்கள். கடைசியில் அந்த ஜிலேபியை ஒரு தட்டில் வைத்து அதன் மீது தண்ணீர் தெளித்து எடுத்துக் கொடுத்தார்கள். சாப்பிடும் போது ‘கழுவியாச்சு...வீட்டில் சொல்லிடாதீங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதன் பிறகு என்ன காரணத்தினாலோ அவர் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லவேயில்லை. 

ஒன்றரை வருடத்தில் அந்த ஊரை விட்டு வந்துவிட்டாலும் நாதனை மட்டும் மறக்கவே முடியாது. வளர்ந்த பிறகு வாய்க்காலுக்கு தனியாகச் சென்று வரத் துவங்கிய போதும் நிறைய மீன்களைப் பிடித்து வந்து கிணற்றில் விட்டிருக்கிறேன்.  கெலுத்தி, கல்லொட்டி, ஆறா, ஜிலேபி, கெண்டை என்று வகை வகையாகச் சிக்கும். கால்களைக் கிழித்துக் கொண்டும் முட்களில் சிக்கியும் எவ்வளவு சிரமப்பட்டாலும் மீன்களைப் பிடித்து வருவோம். பெரிய வாளியை எடுத்துச் சென்று மீன்களைப் பிடித்து அதில் நிரப்பி அவை குதித்துவிடாமல் தூக்கி வருவோம்.  எவ்வளவுதான் கஷ்டப்பட்டு கிணற்றில் கொண்டு வந்து விட்டாலும் கூட வருடம் ஒரு முறையாவது கிணற்று நீரைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று புதுச் சுண்ணாம்புக் கரைசலை நீருக்குள் ஊற்றுவார்கள். அடுத்த நாள் காலையில் மீன்கள் செத்து மிதங்கும். கண்களில் நீர் பொத்துக் கொண்டு வரும். வெறித்தனமாக வாய்க்காலுக்கு ஓடி அடுத்த பேட்ச் மீன்களுக்குத் தயாராவோம்.

வண்ண மீன்கள் வாங்க வேண்டும் என்றால் அதிகபட்சம் பத்து ரூபாய் தருவார்கள். இரண்டு கப்பி மீன்கள் வாங்கலாம். ஹார்லிக்ஸ் பாட்டிலில் வைத்திருப்பேன். ஒரு மாதத்துக்குள் செத்துப் போய்விடும். அப்படியே வளர்ந்த ‘மீன் ஆசை’ இப்பொழுதுதான் மீன் தொட்டிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததிலிருந்து சேலம், வேலூர், ஹைதராபாத் என்று வெளியூர் வாசம். பெங்களூரிலும் வாடகை வீடுகள். ஒரு மீன் தொட்டி வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நிலையான வீடு இல்லை என்ற காரணத்தைக் காட்டி சாத்தியப்படவேயில்லை. 

கடந்த இரண்டு வாரங்களாக நல்ல தொட்டிக்கு அலைந்து திரிந்தேன். பெரும்பாலும் பாய்மார்கள்தான் மீன்கடையை நடத்துகிறார்கள். மீன் தொட்டி வேண்டும் என்று கேட்டுச் சென்றால் ஒரு கடையிலும் மதிக்கவில்லை. மூன்றடி அகலத்தில் ஒரு தொட்டி வேண்டும் என்றால் ரொட்டித் துண்டு கேட்டுச் சென்றது போல பார்க்கிறார்கள். பெங்களூர் கடைகளுக்குச் செல்வதற்கென்றே ஒரு கெட்டப் இருக்கிறது. முக்கால் ட்ரவுசர், வயிறு புடைக்க ஒரு டீ-சர்ட், கண்ணாடியை மூக்குக்கு மாட்டாமல் மண்டைக்கு மாட்டியபடி செல்ல வேண்டும். 

சரி இருக்கட்டும்.

கடைசியாக ஒரு தமிழரின் கடை கிடைத்தது. அவருக்கும் என்னுடைய வயதுதான் இருக்கும். பாண்டிச்சேரிக்காரர். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறார். அந்த நிறுவனம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது. மூன்று வருடங்கள் அங்கிருந்திருக்கிறார். கையில் காசு சேர்ந்துவிட்டது. வழக்கமாக வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் ஒரு அபார்ட்மெண்டில் ப்ளாட் வாங்குவார்கள். இவர் வேலையை விட்டுவிட்டு மீன் கடை ஆரம்பித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே வண்ண மீன்கள் வளர்க்கிறாராம். அதே ஆர்வத்தில் கடையைத் திறந்துவிட்டார். இதில் நல்ல வருமானம் என்றார். 

அவரிடம்தான் தொட்டி, மீன் என எல்லாவற்றிற்கும் சொல்லி வைத்திருக்கிறேன். அவரோடு ஃபோனில் பேசும் போதெல்லாம் ‘வெட்டிச் செலவு’ என்று வீட்டில் முறைக்கிறார்கள். அவர்கள் முறைப்பதையெல்லாம் பார்த்தால் ஆகுமா? ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நாதன் ஞாபகம் வந்துவிட்டது. நாங்கள் அந்த ஊரை விட்டு வந்த ஓரிரண்டு வருடங்களிலேயே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதிகாலையில் வரி வசூலுக்குச் சென்றிருக்கிறார். அப்பொழுது ஆற்றில் மணல் எடுத்து வந்த லாரி நசுக்கிவிட்டுச் சென்றுவிட்டது. வேண்டுமென்றே இடித்தார்களோ அல்லது தெரியாமல் இடித்தார்களோ தெரியாது. நாதன் இறந்து போனார். அடுத்த ஆறு மாதத்தில் அவரது தந்தையும் கேட்பாரற்று அதே படுக்கையில் இறந்து கிடந்தார். இப்பொழுதும் மீன் சூறைவாசம் நாதனின் அப்பாவிடம் வீசிய சூறையைப் போலவேதான் இருக்கிறது. 

5 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

கடைசியில் எதிர்பாராத நிகழ்ச்சிகளை சொல்லி பதிவை நினைவில் வைக்க செய்து விடுகிறீர்கள்!

சேக்காளி said...

நேத்து என்னடான்னா "வாழ்க" ன்னேங்க. இன்னைக்கு என்னடான்னா மதிப்பை கெடுக்க துவங்கினார்கள் னு சொல்லுறீங்க. "இணையச்செயலாளர்" னு புதுசா ஏதாவது தரப்போறாங்களா?

Paramasivam said...

செண்பகபுதூர் பற்றி நீங்கள் விவரித்தது எனக்கு நான் வளர்ந்த லால்குடி கிராமத்தை நினைவு படுத்தியது. இப்போது இது சிறு நகரமாக மாறி இருக்கிறது. நன்றாக வந்து கொண்டு இருந்த பதிவு, சிறிது சோகமாக முடித்திருப்பது வருத்தமாக உள்ளது. ஆனால், மணல் கொள்ளைக் காரர்களால் அரசு அதிகாரிகள் விபத்தில் (?) இறக்கிறார்கள் என்பது உண்மை. நன்கு பதிவாகி உள்ளது. அது கிடக்கட்டும். மீன் வளர்ப்பதில் விருப்பம் ஆன எனக்கு, அதுவும் பெங்களூரில் இருப்பதால், பாண்டி நண்பரின் செல் எண் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.

Muthuram Srinivasan said...

உங்க ஊர்பக்கம் இருந்து இசை நு ஒருத்தர் பட்டைய கெளப்புறார்ராம்ல. கொங்கு நாடு தமிழ் உடைத்துன்னு ஆகிப்போச்சு. தமிழை நாங்க உங்க ஊருக்கு விட்டு கொடுத்திட்டு சினிமாவை புடிச்சுகிட்டோம்னு நெனைக்கிறேன்.

நாடோடிப் பையன் said...

Very sad.