பெங்களூர் வந்த பிறகு சில சினிமா நடிகைகளிடம் பேச்சுவார்த்தை உண்டு. வெறும் பேச்சுவார்த்தைதான். வேறு எதுவும் இல்லை. அதுவும் நடிகைகள் என்றால் இப்பொழுது மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு சமயத்தில் பிரபலமாக இருந்தவர்கள். நான்கைந்து பேர்களுடனாவது தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் சில இணைய இதழ்களுக்காக நேர்காணல் செய்து கொடுக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. திரையில் பார்ப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதில் ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும்? இரட்டைச் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டேன். அந்த இதழ்களுக்கு சினிமா பி.ஆர்.ஓக்களோடு தொடர்பு இருக்கும் என்பதால் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார்கள். நமக்கு தோதான நாளாக பார்த்து கேள்விகளோடு சென்றால் போதும். அதுவும் கூட சில சமயங்களில் கேள்விகளையும் அவர்களே அனுப்பிவிடுவார்கள்.
ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிந்தது. நடிகைகள் என்பதால் ஆயிரத்தெட்டு கற்பனைகளோடும் ஏகப்பட்ட மேக்கப்களோடும்- என்ன பெரிய மேக்கப்? பின்னால் இருக்கும் முடியை இழுத்துக் கொண்டு வந்து முன்னால் இருக்கும் சொட்டையை மறைக்க படாதபாடுபடுவதுதான். அது துளி காற்றடித்தாலும் நமக்கு போக்கு காட்டிவிட்டு பின்னாலேயே சென்றுவிடும். வெகு சிரமம். பெங்களூரில் பிரபலமான ட்ரைக்காலஜி செண்டர்கள் உண்டு. முடியை வேரோடு பிடுங்கியெடுத்து மும்பைக்கு நகருக்கு பரிசோதனைக்காக அனுப்புவார்கள். ரிசல்ட் வந்த அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கிறார்கள். காசு மட்டும் கொடுத்தால் போதும். முடிக்கு வழி செய்துவிடுவார்கள். பதினெட்டாயிரத்தில் தொடங்கில் பல லட்சம் ரூபாய் வரைக்கும் வகை வகையாக முடி நட்டுகிறார்கள். விசாரித்துப் பார்த்தேன். இவ்வளவு காசு கொடுக்க எனக்கு மனம் வராது. தொலையட்டும், தினமும் குழம்புக்குள்ளும் ரசத்துக்குள்ளும் கிடக்கும் கறிவேப்பிலையை பொறுக்கி மென்று கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன். வந்தால் முடி. போனால் __________.
ஆனால் மார்கெட்டில் இல்லாத நடிகர் நடிகைகளை பார்ப்பதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை என்று புரிந்து கொள்வதற்கு வெகுகாலம் ஆகவில்லை. எதிர்பார்ப்பதைவிடவும் விடவும் மிகச் சாதாரணமாக இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பிலிருந்து கனவு கொண்டிருந்த ஒரு நடிகையின் வீட்டுக்கு ஃபோன் செய்தால் அவரே நேரடியாக எடுக்கிறார். வேலைக்கார பெண் எடுப்பார் என்று நினைத்திருந்தேன். வீட்டுக்குச் சென்றால் ஒரே ஒரு பெண் காலையில் வந்து பாத்திரம் கழுவிவிட்டுச் செல்வதோடு சரி. துணியை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்துக் காயப்போடுவது வரை ஒவ்வொரு வேலையையும் அந்த நடிகையேதான் செய்து கொண்டிருக்கிறார். அமரச் சொல்லிவிட்டு வழியும் வியர்வையை துடைத்தபடியே வந்து ‘வீட்டை எப்படி கண்டுபிடிச்சீங்க?’ என்றார். பார்க்க வராமலே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எப்பொழுதும் கனவு தேவதையாகவே இருந்திருப்பார்.
நடிகர் திலீப்பை ஒரு முறை பார்க்கச் சென்றிருந்தேன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ திலீப். ஒரு விழாவுக்காக பெங்களூர் வந்திருந்தார். நேர்காணல் வேண்டும் என்ற போது சிரித்துக் கொண்டே ‘சும்மா பேசுவோம். என் பேட்டியெல்லாம் யார் சார் படிக்கப் போறாங்க?’என்றார்.
‘இல்லை சார்....ரஜினி கமல் கூட எல்லாம் நடிச்சிருக்கீங்க இல்ல’ என்று உளறிவிட்டேன்.
அவருக்கு சுருக்கென்று பட்டிருக்க வேண்டும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. ‘அதான் நானும் சொன்னேன். மார்க்கெட்டிலேயே இருக்கணும். இல்லைன்னா மார்க்கெட்டில் இருக்கிறவங்களைப் பத்தி பேசணும்..அதுவும் இல்லைன்னா நடிகைகள் பத்தி பேசணும்....திலீப்புக்குன்னு சொல்லுறதுக்கு சுவாரஸியமா என்ன இருக்கு சொல்லுங்க?’ என்றார். வாழ்க்கையில் ஓய்ந்துவிடுபவர்களுக்கு வரக் கூடிய விரக்தி அது. அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. வெறுமனே அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் உற்சாகமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த முறை வரும் போது இன்னமும் நிறைய பேசுவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் மறுமுறை சந்திக்கவே முடியவில்லை.
இன்னொரு நடிகை- அவர் எனது கல்லூரி பருவத்தில் ஒரே படத்தின் மூலம் மிகப் பிரபலம் ஆகியிருந்தார். இப்பொழுது பெங்களூரில்தான் வசிக்கிறார். சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. பேட்டி என்பதற்கெல்லாம் ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் அவரது மின்னஞ்சல் ஐடி கிடைத்திருந்தது. அந்த இணையதளத்தினர் ‘சாட்’ செய்து பாருங்கள் என்றார்கள். சில நாட்கள் கழித்து வேறொரு மின்னஞ்சல் ஐடியை உருவாக்கி வெளிநாட்டில் வசிப்பதாக மின்னஞ்சல் அனுப்பினேன். ஃபேக் மின்னஞ்சல்தான். அதற்கு பதில் அனுப்பினார். பிறகு ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்கு பிறகு ‘சாட்டிங்’ செய்யத் துவங்கினோம். அவரது நிறம், மேக்கப், புன்னகை என அத்தனையும் உதிர்ந்து வெறும் ரத்தமும் சதையுமான மனுஷியாகத் தெரிந்தார். அவர் பேசியது வெறும் அழுவாச்சி காவியம். தனது அப்பா சரியில்லை. வளர்ப்பு சரியில்லை. சினிமாவுக்குள் வந்தால் முதல் வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சரியில்லை. உடன் நடித்த நடிகர் சரியில்லை. எதிர்பட்ட எந்த ஆண்மகனும் சரியில்லை.
‘எனக்கு அப்போ வெறும் பதினாலு வயசு தெரியுமா?’ என்று உடைந்து போனார். அந்தத் தகவல்களையெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய எந்த அவசியமும் அவருக்கு இல்லை. ஆனால் அவருக்கு வேறு வடிகாலே இல்லை. அப்படித்தான் சொன்னார். பெங்களூரில் சொல்லிக் கொள்ளும்படியாக நண்பர்கள் இல்லை. சினிமாவிலும் தொடர்புகள் இல்லை. எத்தனை நேரம்தான் அம்மாவிடமே பேசிக் கொண்டிருப்பது? நிறையச் சொன்னார். அவருக்கு தன்னைப் பற்றிய தகவல்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பத்திரிக்கை, பேட்டி என்று வெளியே முகம் காடினால் ஏற்கனவே இருட்டடிக்கப்பட்டிருக்கும் தனது வாழ்க்கை இன்னமும் சீரழிந்துவிடும் என பயம்தான்.
முதல் படத்தில் நடித்த போதே ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு எந்தப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் தடுத்திருக்கிறார்கள். மீறி நடித்த சில படங்களும் மரண அடி. பதினான்கு வயதில் சினிமாவுக்கு வந்ததால் படிப்பு பாழானது. இந்த பொறுக்கிகளிடம் சிக்கி சினிமா வாய்ப்பும் தொலைந்து போனது. என்ன செய்வார்? பெங்களூரில் தனது அம்மாவோடு குறுகிக் கிடக்கிறார். சில நாட்கள் பழகிய பிறகு ‘உங்களோடு பேச வேண்டும்’ என்றார். அவரை அதற்கு மேலும் ஏமாற்ற விரும்பவில்லை. நமது உறவுக்காரப் பெண்ணொருத்தி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கும் போது அவளோடு எந்த நடிகனும் இயக்குநரும் குழாவினார்கள் என்று அறிந்து கொள்வதற்கு எப்படி மனம் வரும்? சரியா தவறா என்று தெரியவில்லை- அதன் பிறகு இன்றுவரை அந்த மின்னஞ்சல் அக்கவுண்ட்டை திறக்கவேயில்லை. திறக்கவும் போவதில்லை.
ஒதுக்கப்பட்டுவிட்ட பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு ஆறவே ஆறாத ஒரு காயம் இருந்து கொண்டேயிருக்கிறது. எந்தக் காலத்திலும் ஆறாத காயம் அது. வெற்றிகரமான நடிகர் நடிகைகளாக இருந்து பிறகு தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டவர்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் துளி வெளிச்சம் படத் துவங்கி பிறகு துளிர்க்கவே வழியில்லாமல் முடங்கிக் கிடப்பவர்களையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்பட்டவர்களையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களால் அந்த வண்ண உலகை விட்டு வெளிவரவும் முடிவதில்லை. நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை சமாளிக்கவும் முடிவதில்லை. திரும்பத் திரும்ப அதையே நினைத்து தங்களைத் தாங்களே அழுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கலாம்- ஆனால் வெளியிலிருந்து பார்த்தால் சொர்க்கமாகத் தெரிகிற கனவு உலகில் கொடிகட்டிய ஆனானப்பட்ட ராபின் வில்லியம்ஸே மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று படிக்கும் போது மோனலும், குணாலும், சில்க் ஸ்மிதாவும் ஒரு வினாடி நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.
5 எதிர் சப்தங்கள்:
//நமது உறவுக்காரப் பெண்ணொருத்தி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கும் போது //
இது போன்ற சிந்தனைகள் தான் நம்மை இணைக்கின்றன.
கனவு உலகத்தின் மறு பக்கத்தை காட்டியுள்ளீர்கள்,
வேதனைதான்.
மிக வேதனையாக இருக்கிறது. ஆனாலும் இப்போது பிஸியாக இருப்பவர்களின் எதிர்காலமும் இப்படியாகாமல் இருக்க வேண்டும்.
நினைத்ததை விட எளிதாகவே நடிகையை அடையாளம் தெரிந்தது. அவரது விகிபீடியா பக்கத்தைப் பார்த்தால் அப்படி ஒன்னும் முழுக்க field-out ஆன மாதிரி தெரியலயே. மணிதான் கொஞ்சம் ஓவரா உருகுறாரோ? :-)
மணி, இது மாதிரி பாதி அடையாளம் கொடுப்பதன் நோக்கம் என்ன? சில காரணங்களை என்னால் யோசிக்க முடிந்தது, ஆனால் உங்கள் நோக்கத்தைத் தெரிவித்தால் நோட்ஸ் கம்பேர் பண்ண வசதியாய் இருக்கும். :-)
சிறந்த கருத்துப் பகிர்வு
Post a Comment