Aug 12, 2014

அங்க என்னம்மா சத்தம்?

யாசர் அராபத்தை தூர்தர்ஷனில் காட்டிய காலத்திலிருந்தே இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியும். ஆனால் என்ன நடக்கிறது என்று துல்லியமாகத் தெரிந்து கொண்டதில்லை. சிலர் இஸ்ரேல்தான் பிரச்சினை செய்கிறது என்கிறார்கள். சிலர் பாலஸ்தீனம்தான் பிரச்சினை செய்கிறது என்கிறார்கள். என்ன கருமமோ தெரியாது- ஆனால் கொத்துக் கொத்தாக குழந்தைகளும் பொதுமக்களும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அதுவும் எப்படி? பாலஸ்தீனத்தில் இருக்கும் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் போன்ற பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒளிந்திருந்து வீசுகிறார்கள். இஸ்ரேல் இதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஏவுகணை வந்தவுடனேயே அது பள்ளியா, மசூதியா, குடியிருப்புப் பகுதியா என்றெல்லாம் பார்ப்பதில்லை. எந்த இடத்திலிருந்து ஏவுகணை வருகிறதோ அதே இடத்தைக் குறி வைத்து திருப்பி குண்டு வீசுகிறார்கள். வீடுகளும் பள்ளிகளும் மருத்துவமனைகளும் நொறுங்குகின்றன. மக்களுக்கு நல்லநேரமாக இருந்தால் மொத்தமாகச் சாகிறார்கள். கெட்ட நேரமாக இருந்தால் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். பிழைத்துக் கொண்டால் கெட்ட நேரம்தான். ஒரே வழியாக செத்துவிட்டால் பரவாயில்லை. கையிழந்து, கால் இழந்து, கண்களை இழந்து கிடந்தால் ஒவ்வொரு நாளும் நரக வேதனைதான். ஒரு பக்கம் எகிப்து தனது எல்லையை மூடிவிடுகிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் எல்லையை மூடி வைத்துவிடுகிறது. இன்னொரு பக்கம் கடல். அந்தக் கடலில் இரண்டு கிலோமீட்டர்களைத் தாண்டினால் இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்து படகோடு கொளுத்துவார்கள். எங்கே போய் தப்பிப்பது? உண்மையிலேயே பாலஸ்தீனிய மக்கள் பாவம்தான். 

இது பற்றிய டாகுமெண்டரி ஒன்றை பெங்களூரில் திரையிட்டார்கள். சாப்ளின் டாக்கீஸ் என்ற அமைப்பினர். தமிழ் இளைஞர்கள்தான். நற்றமிழன் பழனிசாமியை மட்டும் அந்தக் குழுவில் தெரியும். சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர். திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்கு வாடகை மட்டுமே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். அது போக ப்ரொஜெக்டர், ஆடியோ சிஸ்டம்ஸ் எல்லாம் தனி. ஏதோ தனது சொந்தவீட்டு நிகழ்வு போல ஓடியாடி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இருபது பேர்கள்தான் வந்திருப்பார்கள். இதற்கெல்லாம் அவ்வளவுதான் வரவேற்பு இருக்கு போலிருக்கிறது. படம் முடிந்த பிறகு ஒரு உரையாடலையும் நிகழ்த்தினார்கள். 

இஸ்ரேல் ஒன்றும் சாதாரண நாடு இல்லை. ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. அப்படித்தான் காலங்காலமாக அதன் வரைபடம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. 1946 ஆம் ஆண்டிலிருந்த இஸ்ரேலிய வரைபடத்துக்கும் இன்றைய இஸ்ரேலிய வரைபடத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன.


இந்தப் பிரச்சினையின் பின்னணியில் மிகப்பெரிய உலக அரசியல் இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அரேபிய நாடுகளுக்கு செக் வைக்கும் ஒரு தோழன் தேவை. குவைத்தும், சவூதி அரேபியாவும் என்னதான் அமெரிக்காவின் அடிமைகள் என்றாலும் இஸ்லாமிய தேசங்கள் அல்லவா? அவற்றை முழுமையாக நம்ப முடியாது. அதனால் இஸ்ரேலுக்கு எல்லாவிதத்திலும் கொம்பு சீவி விடுகிறது. மேற்கு ஆசியாவில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருந்தால்தான் தனக்கு பெட்ரோல் வரத்தில் பிரச்சினை இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. ஈராக்கில் வேதியியல் ஆயுதங்கள் இருப்பதாக சதாமைக் கொன்றது. கொன்றால் தொலையட்டும். ஒரு ஸ்திரமான அரசு அமைய உதவியதா? எந்தக் காலத்திலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஈராக் கதறிக் கொண்டேயிருப்பதுதான் அமெரிக்காவுக்கு நல்லது. இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது என்பதைத்தான் பார்க்கிறோமே. ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக ஆட்டையைக் கலைக்க முயன்றது. ஏதோ ஒரு புண்ணியவானால் சற்று அடங்கியிருக்கிறது. மேற்கு ஆசியா அமைதியாகிவிட்டாலும் அல்லது அவர்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டாலும் தீர்க்கவே முடியாத தனது பெட்ரோல் பசியினால் அமெரிக்கா திண்டாடிவிடும்.

அமெரிக்கா என்ன அமெரிக்கா? இந்தியாவுமே அப்படித்தான். வெகுகாலம் வரைக்கும் இந்தியா பாலஸ்தீனத்துக்கு நட்பாகத்தான் இருந்தது. இப்பொழுதுதான் ஜகா வாங்குகிறது. ‘நமக்கு இஸ்ரேலும் வேண்டும் பாலஸ்தீனமும்’ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பேசுகிறார். இந்தியா கமுக்கமாக ஒதுங்கிக் கொள்கிறது. மிகப்பெரிய ஆயுத பலவானான இஸ்ரேல் பாலஸ்தீனத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் போது எப்படி ‘எனக்கு இரண்டு பேருமே ஒன்றுதான்’ என்று சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ‘ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம். கொன்றுவிட்டு வா, தோளில் கை போட்டுக் கொள்கிறோம்’ என்பதுதான் அதில் இருக்கும் அர்த்தம்.

சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு அமெரிக்காவின் தோள்களை இந்தியா பற்றிக் கொள்ளத் துவங்கியதிலிருந்தே தனது பாலஸ்தீன நட்பிலிருந்து சற்று விலகிக் கொண்டேயிருக்கிறது. இஸ்ரேல்தான் அமெரிக்காவின் நண்பன். பாலஸ்தீனத்தோடு நட்பு பூண்டு என்ன பிரையோஜனம் என்ற நினைப்புதான். இஸ்ரேலிடம் நட்போடு இருந்தால் ஆயுதமாவது பேரம் பேசலாம். பாலஸ்தீனத்திடம் என்ன இருக்கிறது? செத்துக் கொண்டிருக்கும் சில்வண்டுகளைத் தவிர?

இப்பொழுது பூதாகரமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரச்சினையின் பின்னால் கூட ஒரு அரசியல் அல்லது வியாபாரம் இருக்கிறது என்கிறார்கள்.

உலகத்திலேயே ஆயுத விற்பனையின் மஹாராஜா இஸ்ரேல்தான். இப்பொழுது நடக்கும் பிரச்சினை கூட அதன் புதிய டெக்னாலஜியை உலகுக்கு விளம்பரம் செய்வதற்கான உத்திதானாம். Iron dome என்ற டெக்னாலஜி அது. எதிரி தேசத்திடமிருந்து வரும் ராக்கெட்களையும், ஏவுகணைகளையும் அது வரும் பாதையிலேயே கண்டுபிடித்து திருப்பி அடித்து அழிக்கும் நுட்பம். ‘என்கிட்ட இந்த டெக்னாலஜி இருக்கு’ என்று எப்படி விளம்பரப்படுத்துவது? அதற்காகத்தான் பாலஸ்தீனத்தை சீண்டி விடுவதும் அதனால் டென்ஷனான ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமிருக்கும் தீபாவளி ராக்கெட்டை வீசும் போது திருப்பி அடித்து ‘இது எப்படி இருக்கு?’ என்று உலகத்திடம் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள். சில நாடுகள் பில்லியன் டாலர்களைக் கொட்டி இந்த டெக்னாலஜியை விலைக்கு வாங்குவார்கள்.

சமீபத்திய பிரச்சினைக்கு அடிப்படையான காரணம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்று கொன்றுவிட்டார்கள் என்று அறிவித்துவிட்டுத்தான் இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கியது. இது இஸ்ரேல் நடத்திய சதி என்றும் இது வல்லரசுகளால் பாலஸ்தீனத்தின் மீது திணிக்கப்பட்ட போர் என்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். ‘துலுக்கர்கள் வாழும் தேசம் அழியட்டும்’ என்று இஸ்ரேல் ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். இப்படியே இந்துத்துவம் பேசுபவரும் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசுவதுதான் அயற்சியாக இருக்கிறது. 

வெளிப்படையாகச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சினையின் பத்து சதவீதம் கூட தெரியாது. இந்துத்துவம் பேசுபவர்கள் எல்லாம் இசுலாமியர்களுக்கு எதிரான இஸ்ரேலுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று ‘ஐ சப்போர்ட் இஸ்ரேல்’ என்று எழுதுவதும் இஸ்லாமியர்கள் எல்லோரும் தனது இனம் சித்ரவதைப்படுகிறது என ‘இஸ்ரேல் டவுன் டவுன்’ என்று பேசுவதும்தான் நடக்கிறது. மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம்.

என்னவோ அரசியல் இருக்கட்டும். இந்தப் போரில் செத்துச் சுண்ணாம்பு ஆவதெல்லாம் பாலஸ்தீனிய பொதுமக்கள்தான். அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? மூன்று வயதில் பெற்றவர்களை இழக்கிறார்கள். உடல் உறுப்புக்களை பறிகொடுக்கிறார்கள். பார்வையை இழக்கிறார்கள். சொந்தங்களை விட்டுப் பிரிந்து தவிக்கிறார்கள். வீடுகளையும் உடமைகளையும் இழந்து பொதுவெளியில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பெற்றவர்களுக்கு இதைவிடவும் கொடுமை. தங்களது குழந்தைகள் கண் முன்னாலேயே சாவதை பார்க்கிறார்கள். பிள்ளைகளின் காயங்களுக்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களைச் சுற்றிலும் அத்தனை கொலைவெறி. அத்தனை வன்மம். அத்தனை காவு வாங்கும் அரசியல்.

முதியவர்களையும் குழந்தைகளையும் சுட்டுவிட்டு சிகிச்சைக்கு அனுமதியளிக்காத பாவத்தை யார் சுமக்கப் போகிறார்கள்? அனைத்து எல்லைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. உணவுக்கு வழியில்லை. நல்ல குடிநீருக்கு வழியில்லை. சிகிச்சைக்கு சாத்தியமில்லை. அந்த அப்பாவிகள் என்ன பாவம் செய்தார்கள்? 

ஆனால் ஒன்று- பெட்ரோலுக்காகவும், ஆயுத விற்பனைக்காவும், மதத்துக்காகவும் இன்னும் ஏதேதோ காரணத்திற்காகவும் குருட்டுவாக்கில் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் குழந்தைகளின் கதறலுக்கும் அப்பாவிகளின் கண்ணீருக்கும் ஏதாவதொரு பதிலைச் சொல்லியாக வேண்டும். இவர்களால் பதில் சொல்லவே முடியாது என்று நம்பலாம். பதில் சொல்ல முடியும் என்று யாராவது கையை உயர்த்தினால் சந்தோஷம். ஆனால் அந்தப் பதிலில் துளியாவது நேர்மையிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

ஓவியக்கலைஞர் சந்தோஷ் நாராயணின் அஞ்ஞானச் சிறுகதை ஒன்று-

‘அடோல்ஃப் ஹிட்லரை எரிச்ச பிறகு அந்த சாம்பல சின்னச் சின்ன மைக்ரோ கேப்சூல்ல அடச்சு நாஜிக்கள் குழு ஒண்ணு பத்திரமா பாதுகாத்துட்டு வருது தெரியுமா?’ என்றார் ப்ரொஃபசர் லர்ஹிட்.

ஆந்த்ரோ போலஜி மாணவனான சக்தி மேவாயைத் தடவினான்.  ‘இப்போ அது கிடைக்குமா’ என்றான்.

‘விற்பனைக்கே கிடைக்கும். ஆனா அது ஹை சீக்ரெட் அண்ட் கோடிக்கணக்குல விலை போகுது’ என்றார் ப்ரொஃபசர்.

‘யாராவது அதை வாங்கி இருக்காங்களா?’ 

‘ஆமா இரண்டாயிரத்துக்குப் பிறகு அதுல ஒண்ணு இந்தியாவுக்கு வந்ததாகவும் இன்னொண்ணு இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கு’

‘கடைசியா யாரு வாங்கினாங்க?’

‘இஸ்ரேல்’

13 எதிர் சப்தங்கள்:

Unknown said...

\\\ மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம் \\\\

பதிவு முழுவதும் நீங்கள் விவரமாக சொன்னதை இந்த ஒரே வரியில் சுலபமாக புரிய வைத்து விட்டீர்கள்

Unknown said...

மனம் கனக்கிறது

Unknown said...

மனம் கனக்கிறது

சிவ.சரவணக்குமார் said...

இஸ்ரேலைத்தவிர , பாலஸ்தீனத்தை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுமே இஸ்லாமிய நாடுகள்... போருக்கு பயந்து தப்பி ஓடிவரும் அகதிகளுக்கு [ இஸ்லாமியர்களுக்கு ] அடைக்கலம் கூடத்தர‌மாட்டார்களாம்.... இத்தனைக்கும் எல்லோரும் எண்ணைப்பண‌த்தில் கொழிப்பவர்கள்..... ஆனால் , எங்கோ இருக்கும் இந்தியா பாலஸ்தீனர்களை ஆதரிக்க வேண்டுமாம்..... இதுதாங்க ஒரிஜினல் மதச்சார்பின்மை.... நடத்துங்க.......

Ram said...

>>>>>>‘ஆமா இரண்டாயிரத்துக்குப் பிறகு அதுல ஒண்ணு இந்தியாவுக்கு வந்ததாகவும் இன்னொண்ணு இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கு’
‘கடைசியா யாரு வாங்கினாங்க?’
‘இஸ்ரேல்’

இம்சித்தலுக்குப் பெயர்பெற்ற
இம்மூன்று நாடுகளின் பெயரும்
இ என்று தொடங்குவது
இயல்பில் அமைந்ததாய்த் தோன்றவில்லை

Anonymous said...

"அதுல ஒண்ணு இந்தியாவுக்கு வந்ததாகவும்"

நீங்கள் மோடி ஆதரவு நிலைபாட்டை தேர்தலின் போது எடுத்திருந்தீர்கள் ... உங்கள் நிலைப்பாடு நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களை நிறைவு செய்கிறதா?

Pandiaraj Jebarathinam said...

அஞ்ஞானச் சிறுகதை மூலம் ஹிட்லரின் ஆவி படர்ந்த நாடுகளை சுட்டிக்காட்டிய விதம் கதையின் சிறப்பு..

Anonymous said...

ராகெட் வருகிற இடத்துல குண்டு போடாம கடல்லயா போட முடியும். ஒரு வேலை ஹமாஸ் ராக்கெட்ல இஸ்ரேல் மக்கள் செத்தா பரவாயில்ல போல இருக்கு

Anonymous said...

//பெட்ரோலுக்காகவும், ஆயுத விற்பனைக்காவும், மதத்துக்காகவும் இன்னும் ஏதேதோ காரணத்திற்காகவும் குருட்டுவாக்கில் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் குழந்தைகளின் கதறலுக்கும் அப்பாவிகளின் கண்ணீருக்கும் ஏதாவதொரு பதிலைச் சொல்லியாக வேண்டும். //

yours words are also suitable for Hamas supporters!

Nandanan said...

ஹிட்லர் மட்டும் இவிங்கள அப்படி கஷ்ட படுதலேன்னா இந்நேரம் ஐரோப்பா முழுவதும் இஸ்ரேல் ஆகி இருக்கும் !

Anonymous said...

வேதியியல் ஆயுதம் இல்ல சார் இரசாயன ஆயுதம் . இயல் ன்னு சொல்லும் போது அது ஒரு பிரிவு பத்தி ஆகாதா ???

Unknown said...

if isravel is wrong, tell me one muslim country which have peace, tolerance to other religion, etc..

நாடோடிப் பையன் said...

கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.

இஸ்ரெலின் அயர்ண் டோம் அமெரிக்கா-வின் டெக்நாலஜீ.

Also, the world's exporters are US (30%), Russia (23%), Germany, France, and UK. Israel is not the top exporter.