Jul 7, 2014

இன்னுமா முடிவு செய்யலை?

இன்றிலிருந்து திருவிழா ஆரம்பிக்கிறது. 

பொறியியல் கவுன்சிலிங். இதைச் சாக்காக வைத்துதான் நிறையப் பேர் சென்னையை முதன் முதலாக பார்க்கப் போகிறார்கள். நான் அப்படித்தான் கிளம்பினேன். வீட்டிலிருந்தே புளிச்சாதம் கட்டிக் கொண்டு துணைக்கு அப்பாவின் நண்பரையும் அழைத்துக் கொண்டு மூன்று பேராகச் சென்றிருந்தோம். ஆனால் புளிசாதத்துக்கு வேலையில்லாமல் போய்விட்டது. உடன் வந்தவரின் சொந்தக்காரர் வீடு சென்னையில் இருந்தது. காலையிலேயே கொத்துக்கறியும் இட்லியும் கொடுத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அல்லாத ஒரு நாளில் காலை உணவாக அசைவம் சாப்பிடுபவர்கள் உண்டு என்பது அப்பொழுதுதான் முதன்முதலாக தெரியும். கொத்துக்கறி என்ற வகையறாவும் கூட அப்பொழுதுதான் அறிமுகம். அதுவரைக்கும் அசைவம் என்றால் ஞாயிறு மதியம் மட்டும்தான். அதுவும் குழம்பும் வறுவலும் மட்டும்தான். நான் சாப்பிடவில்லை. வற்புறுத்தினார்கள் ஆனால் கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக அசைவம் சாப்பிட முடியாது என்கிற மனநிலைதான் இருந்தது. கவுன்சிலிங் நிகழும் இடம் குறித்து அத்தனை பயம்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் படிப்புதான் சொத்து. மற்றவையெல்லாம் தாத்தா காலத்திலேயே கரைந்திருந்தன. படிப்பு மட்டும் இல்லையென்றால் பங்காளிகள் தோட்டத்தில் பண்ணையத்தில்தான் சேர வேண்டும் என்பார்கள்- எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே பயம் அதிகமாகியிருந்தது. கவுன்சிலிங் நடந்த தினத்தன்று மொத்த எண்ணமும் இதைத்தான் சுற்றிக் கொண்டிருந்தது. இன்று எடுக்கப் போகும் முடிவுதான் வாழ்க்கையை அமைக்கப் போகிறது என்று தெரியும். கொஞ்சம் பிசகினாலும் கந்தரகோலம் ஆகிவிடக் கூடும் என்பதால் நடுங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது விவரமும் போதாது. உடன் வந்தவருக்கும் பொறியியல் படிப்பு பற்றியெல்லாம் அதிகம் தெரியாது. அவரது மகனை முந்தைய வருடம் கல்லூரியில் சேர்த்திருந்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரை முழுமையாக நம்பியிருந்தோம்.

எனது கவுன்சிலிங் கதையை எழுதுவது நோக்கம் இல்லை. ஆனால் அந்த பயம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்பாக தமிழ் வழிக்கல்வியை முடித்துவிட்டு கவுலந்தாய்வுக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு ரயிலேறிய ஒவ்வொருவரும் இதை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். நேற்றிரவும் கூட ஈரோடு தொடரூர்தி நிலையத்தில் இதே மனநிலையில் ஏகப்பட்ட மாணவர்களைப் பார்க்க முடிந்தது. பெரிய அளவில் மாறுதல்கள் இல்லை. ஒரேயொரு முன்னேற்றம்- செல்போன். அவ்வப்போது ஃபோனில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அதற்கு வழியில்லை. கவுன்சிலிங் முடித்துவிட்டு வெளியே வந்து எஸ்.டி.டி பூத்திலிருந்துதான் அழைத்தேன். ‘சேலமா? அது ரவுடிகள் ஊருன்னு சொல்லுவாங்களே’ என்று அம்மா பயந்தார். அவருக்கு யாரெல்லாம் மனக்கண்ணில் வந்து போனார்களோ.

இந்த வருடமும் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு ஐடியா சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். சொல்வதெல்லாம் ஒரே ஆலோசனைதான். ஸ்டீரியோ டைப். அதையே எழுதி வைத்துவிட்டால் இன்னமும் சிலருக்கு உதவக் கூடுமல்லவா? அதனால்தான் இது-

இந்த வருடமும் மாணவர்களின் மனநிலையைப் பார்த்தால் மெக்கானிக்கலில் சேர்வதற்குத்தான் போட்டி அதிகம் இருக்கும் போலிருக்கிறது. தவறில்லை. ஆனால் படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பது உத்தேசமாகவாவது தெரிய வேண்டும். எந்த மாதிரியான நிறுவனத்தில் வேலை கிடைக்கும்? மெக்கானிக்கல் வல்லுநர்கள் என்ன வேலைகளைச் செய்கிறார்கள் போன்ற அடிப்படையான கேள்விகளுக்காவது பதில் தெரிந்து கொண்டாலே பாதி தெளிவு கிடைத்துவிடும். 

எல்லோரும் சேர்கிறார்கள் அதனால் நானும் சேர்கிறேன் என்பதாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான். 

பெரும்பாலானோர் நிராகரிப்பது போல கம்யூட்டர் சயின்ஸூம், இன்பர்மேஷன் டெக்னாலஜியும் இளையதாரத்து குழந்தைகள் இல்லை. இன்னமும் இந்தப் பாடப் பிரிவுகளுக்கான வேலைவாய்ப்புகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஐடித்துறை குழியிலேயே விழுந்தாலும் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேருக்காவது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் துறை இது. நல்ல கல்லூரியில் இந்தப் பாடங்கள் இருந்தால் விட்டுவிட்டு குப்பைக் கல்லூரியில் மெக்கானிக்கலில் விழ வேண்டியதில்லை. 

இன்னொரு பாடம் இருக்கிறது- மின்னியல் மற்றும் மின்னணுவியல். யாரைக் கேட்டாலும் ‘அது கொஞ்சம் கஷ்டமாச்சே’ என்கிறார்கள் அல்லது ‘அதை சைக்கோக்கள்தான் படிப்பாங்க’ என்கிறார்கள். என்னைப் போன்றவர்களை கணக்கில் வைத்துக் கொண்டு ‘சைக்கோக்களின் பாடம்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்களோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் வகுப்பில் இருந்து மட்டுமே ஏழெட்டு பேர் மின்சார வாரியத்தில் வேலைக்குச் சென்றார்கள். ரயில்வே, இராணுவம் போன்ற அரசு சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கு பிரகாசமான வாய்ப்புள்ள பாடத்திட்டம் இது. கடினமெல்லாம் இல்லை. புரிந்து படிப்பதில்தான் இருக்கிறது. ஆகாவழிக் கல்லூரியில் படிக்கும் சீனியர்களிடம் பேசினால் அப்படித்தான் சொல்வார்கள். வாத்தியாருக்கும் சொல்லித் தரத் தெரியாது- படிப்பவனும் வளைந்து படிக்க மாட்டான். நல்ல கல்லூரியில் இந்தப்பாடத்தை படிக்கும் மாணவர்களிடம் பேசிப் பார்க்கலாம். ஐடியா கிடைக்கும்.

ஒரு காலத்தில் யாரைக் கேட்டாலும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்றார்கள். இப்பொழுது படுபயங்கரமாக யோசிக்கிறார்கள். இது எவர்க்ரீன் பாடம். EEE போலவே அரசு வேலை வாய்ப்புகளுக்கு தகுந்த பாடம். அதைத் தவிர ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் துறைகளிலும் எப்பொழுதும் மதிக்கப்படும் பாடம். குருட்டுவாக்கில் நிராகரிக்காமல் பரிசீலனை செய்யலாம்.

முக்கியமான பாடங்களுக்கு இந்த நிலைமை. மற்ற பாடங்கள்? 

சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் போன்ற பாடங்கள் நல்ல கல்லூரியில் கிடைத்தால் தாராளமாக சேர்ந்துவிடலாம். இவையெல்லாம் தவிர ஏரோநாட்டிகல், மெக்கட்ரானிக்ஸ், கெமிக்கல், ஆட்டோமொபைல் என்று ஏகப்பட்ட பாடப்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒருமுறைக்கு இருமுறையாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம்- கல்லூரி. பாடத்தைவிடவும் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமக்கு விருப்பமான பாடம் கிடைக்கிறதே என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்வதைவிடவும் மிகப்பெரிய தவறு இருக்க முடியாது. அதனால் இதில் மட்டும் உச்சபட்ச கவனம் இருக்கட்டும். 

நல்ல கல்லூரி என்று எப்படி முடிவு செய்வது? தற்பொழுது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் பேசினால் கல்லூரிகளின் தரவரிசையை உத்தேசமாக நிர்ணயித்துவிடலாம். தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கல்லூரிகளுக்கும் தரவரிசையை நமக்கு அவசியம் இல்லை. கட்-ஆஃப் மதிப்பெண் 199 என்றால் அந்த மதிப்பெணுக்கு எதிர்பார்க்கும் கல்லூரிகளுக்கான பட்டியலைத் தயாரித்தால் போதும். கட் ஆஃப் 185 என்றால் அதற்கு ஏற்ற கல்லூரிகளின் பட்டியல் கைவசம் இருந்தால் போதுமானது. குழப்பமாக இருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பக்கத்தை துழாவினால் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

வெற்றுத்தாளில் வரிசையாக குறித்துக் கொண்டு போவதைவிடவும் பின்வரும் பட்டியல் கவுன்சிலிங்கின் போது பெருமளவில் உதவி செய்யும்.


ECE
Mech
EEE
CS
IT
Anna Univ
1
4
5
8
9
PSG Tech
2
6
7


MIT
3




GCT- Coimbatore






அண்ணா பல்கலைக்கழகத்தில் ECE முதல் சாய்ஸ். இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் இரண்டாவது சாய்ஸ் இருக்கிறதா என்று தேட வேண்டும். இந்தப் பட்டியலின் படி கோவை பி.எஸ்.ஜியில் ECE. அங்கேயும் இல்லையென்றால் மூன்றாவது சாய்ஸான சென்னை எம்.ஐ.டியில். இந்த மூன்றுமே கிடைக்கவில்லையென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல். பத்து சாய்ஸ் வைத்திருந்தால் நிச்சயம் ஒன்று மாட்டிவிடும்,

இது ஒரு உதாரணமான பட்டியல்தான். 

நமக்கு விருப்பமான பாடங்களையும், கல்லூரிகளையும் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இருந்தால் இந்தப் பட்டியலை எளிதாக தயாரித்துவிடலாம். இந்தப் பட்டியலைத் தயாரித்துவிட்டால் தொண்ணூறு சதவீத வேலை முடிந்த மாதிரிதான்.

இப்போதைக்கு இவ்வளவுதான்.

உபதேசம் செய்வதைவிட எளிமையான வேலை இருக்கிறதா? செய்தாகிவிட்டது. பங்காளி வீட்டில் பண்ணையத்தாளாக போக வேண்டிய நிலைமையில் இருப்பவனுக்கு எவ்வளவு குழப்பம் இருக்கும் என்று தெரியும். அதனால் அவனை இன்னமும் குழப்ப வேண்டியதில்லை.  ‘இவன் ஏதாவது உதவ வாய்ப்பிருக்கிறது’ என்று நினைத்தால் தயக்கமில்லாமல் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பதில் அனுப்பி வைக்கிறேன்.

vaamanikandan@gmail.com

6 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

//அம்மாவுக்கும் அப்பாவுக்கும் படிப்புதான் சொத்து. மற்றவையெல்லாம் தாத்தா காலத்திலேயே கரைந்திருந்தன. படிப்பு மட்டும் இல்லையென்றால் பங்காளிகள் தோட்டத்தில் பண்ணையத்தில்தான் சேர வேண்டும் என்பார்கள்- எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.//

Bhavani aaru paayum unga oorulae ippadi payamuruthi irunthal, vaara kaadu-ana engal ooruil ennoda petror athukkum mel. Tirupurkku thooku posiyathan thooka vendum endrarkal.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

vijayan said...

சேலம் ரௌடிகள் ஊரென்று யார் அம்மாவிற்கு தப்பான தகவலை கொடுத்தவர்கள்?

யாஸிர் அசனப்பா. said...

அந்த புளி சோறு, ரயில் பயணம், கவுன்சிலிங்க் ஏரியாவில் இருந்த பெருங்கூட்டம்................எனக்கும் இன்னும் நினைவில் இருக்கிறது தோழர்.

அமுதா கிருஷ்ணா said...

1986-90ல் என் தங்கை EEE படித்த போது ஹாஸ்ட்டல் இல்லாமல் வீட்டில் இருந்து படிக்க ஏதுவாக நெல்லை காலேஜ் செலக்ட் செய்தாங்க.முதல் வருட முடிவில் அந்த காலேஜ் ப்ரொஃப்ஸர் முடிவு செய்து EEE செலக்ட் செய்தாங்க. அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் மொத்தமே 10 காலேஜ் தான் இருந்தது. எம்.ஜி.ஆர் செய்த நல்லது எண்ட்ரன்ஸ் வைத்தது. அதனால் தான் மிடில்க்ளாஸ் ஃபேமிலியில் அப்பவே படிக்க முடிந்தது.

Unknown said...

CS is no 1 in Anna univ main campus.More than 60% of Mech not placed and searching for job
Source: Self :)