Jul 22, 2014

அவ்வளவு எளிதான காரியமா?

இன்னமும் பெங்களூர் அடங்கியபாடில்லை. ஒன்றாம் வகுப்பு குழந்தையை பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்த சம்பவத்தை வைத்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மாநகர போலீஸ் கமிஷனரை நேற்று தூக்கிவிட்டார்கள். அவர் மீது ஏற்கனவே நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு. இதைச் சாக்காக வைத்து இடத்தை காலி செய்துவிட்டார்கள். இனி ஒரு ரெட்டிகாருதான் கமிஷனர். 

VIBGYOR- வானவில்லின் ஏழு வர்ணங்களைப் போல குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிறங்களை கற்றுத் தருகிறோம் என்றுதான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். மகியை பள்ளியில் சேர்பதற்கு முன்பாக இங்கும் விசாரித்தேன். எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாக கேட்டார்கள்- எல்கேஜிக்கு. கட்டுபடியாகாது என்று பின் வாங்கிக் கொண்டேன். ஆனால் பள்ளியைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயம்தான் சொன்னார்கள். நல்ல கட்டிடடங்கள், சொல்லித் தருகிறார்கள், நல்ல வசதிகள்- ஸ்கேட்டிங் கூடச் சொல்லித் தருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பீஹாரிதான் இந்தக் குழந்தையை சீரழித்திருக்கிறான். 

பள்ளி நிர்வாகம் பதறிப் போயிருக்கிறது. குழந்தையின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்பதற்காக பதறியது என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். பிஸினஸ் அடிபடுகிறது. அடுத்த வருடம் சேர்க்கை அதலபாதாளத்தில் விழக் கூடும். ஒரு குழந்தையின் சேர்க்கை தடைபட்டாலும் கூட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம். அதனால் முடிந்தவரை விவகாரம் வெளியில் வராமல் இருக்க திணறிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் ‘இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்திலேயே நடக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது பொய். பள்ளியின் வளாகத்தில் மதியம் பதினொன்றரை மணிக்கு நடந்திருக்கிறது. விவகாரம் கை மீறி போய்விட்டது. பல பள்ளிகள் பெற்றோர்களை அழைத்து ‘பள்ளியில் குழந்தைகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பில்லை’ என்று எழுதி கையெழுத்துக் கேட்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் பொங்கிவிட்டார்கள். எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்- ஒரு பகலின் பெரும்பாலான நேரம் குழந்தைகள் பள்ளியில்தான் இருக்கிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதாம்.

இன்னொரு நிகழ்வு. அதுவும் பெங்களூரில்தான். இருபது நாட்கள் ஆகியிருக்கும். ஒன்பதாம் வகுப்பு பையன் ஒருவன் மீது இன்னொரு மாணவன் கல்லை எடுத்து வீசியிருக்கிறான். அது மாணவனின் கண்ணில் பட்டு விழித்திரை கிழிந்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க முடியும். ஆனால் பள்ளி நிர்வாகம் ஒரு கர்சீப்பை கையில் கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. போகிற வழியில் வலி தாளாமல் மயங்கி விழுந்திருக்கிறான். சாலையில் போனவர்கள் 108 ஐ அழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது அவனது அடிபட்ட கண்ணில் முற்றிலுமாக பார்வை போய்விட்டது. முதல் நாள் செய்தி வந்தது. அதன் follow up ஏதாவது வரும் என்று அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடியதுதான் மிச்சம். அமுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. பள்ளிகளின் பொறுப்புணர் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

இந்த VIBGYOR விவகாரத்தையும் அமுக்கிவிடுவார்கள் என்றுதான் நினைத்தேன். எப்படியோ தப்பித்துவிட்டது. இது போன்ற நிகழ்வுகள் இப்பொழுது சாதாரணமாகிவிட்டன. ஏதாவதொரு செய்தி கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஐந்து சதவீத விவகாரங்கள் மட்டுமே வெளியில் தெரிகின்றன என்று சொல்கிறார்கள். குழந்தைகள் மீதான விவகாரங்கள் வெளியில் வராமல் போவதற்கு மிரட்டல் முதற்காரணம் என்றால் குழந்தைகளோடு நாம் உருவாக்கிக் கொள்ளும் இடைவெளி இரண்டாவது காரணம். காரியத்தைச் செய்பவன் ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறான். அம்மா அப்பாவிடம் சொன்னால் அவர்கள் திட்டுவார்களோ என்று நம்மிடம் சொல்லவும் பயப்படுகிறது. குழந்தை என்ன செய்யும்?

இந்தக் குழந்தையையும் மிரட்டியிருக்கிறார்கள். வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவோம் என்று பயமூட்டியிருக்கிறான். பாவம். பிஞ்சுக் குழந்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டது. அந்தக் குழந்தையின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை இரண்டாம் நாள் நடந்த நிகழ்ச்சி பன்னிரெண்டு நாட்களுக்குப் பிறகுதான் வெளியில் தெரிந்திருக்கிறது.

எப்பொழுதுமே நகரங்களில் நடைபெறும் வன்முறைகள்தான் ஊடக வெளிச்சம் பெறுகிறது. டெல்லியில் நடந்த வன்புணர்வுக்கு மாதக்கணக்கில் கவனம் செலுத்திய ஊடகங்கள் உத்தரபிரதேச வன்புணர்வுகளுக்கு என்ன செய்தார்கள்? குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பெங்களூரில் மட்டும்தான் நடக்கிறதா என்ன? பாலியல் பலாத்காரங்கள் இந்த நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகரத்தில் நிகழ்ந்தால் மட்டும்தான் Flash அடிக்கிறார்கள். குற்றச்சம்பவங்கள் நகரங்களில் நடந்தால் மட்டும்தான் கவனிக்கிறார்கள். இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரங்கள் வெளியில் வரத் துவங்கினால் நமது சமூகத்தின் நோய்க்கூறு தெளிவாகத் தெரியும்.

நோய் பீடித்த சமூகம் இது. 

பகைமை, வெறி, கோபம், பணத்தாசை, காமம் என எல்லாமும் கட்டுக்கடங்காமல் பாய்ந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பள்ளி வளாகத்திலேயே வைத்து இவர்கள் சூறையாடிய நேரத்தில் அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. முந்தைய தலைமுறை வரைக்கும் பாவம், புண்ணியம் என்பன குறித்து ஒரு நம்பிக்கை இருந்தது. கொடுத்த வாக்கை மீறாதவர்கள் சுற்றிலும் இருந்தார்கள். நியாயமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிடிப்போடு இருந்தார்கள். நமது பாவம் வாரிசுகளைச் சூழும் என்று பயந்தார்கள். அவமானம் வந்து சேர்ந்தால் கூனிக் குறுகினார்கள். இப்பொழுதெல்லாம் யார் பயப்படுகிறார்கள்? யாரை வேண்டுமானாலும் காமத்தோடு பார்க்கலாம். எதற்காக வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். பணம் கிடைக்குமானால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். தலைகீழாக மாறிவிட்டது.

எல்லாவற்றிற்கும் கடும் தண்டனைகள் தீர்ப்பாக முடியாதுதான். வன்புணர்வுக்கு மரண தண்டனை என்று சட்டத்திருத்தம் என்று முடிவு செய்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்? அமைச்சரின் மகனோ, அதிகாரியின் புதல்வனோ செய்யும் வன்புணர்வுகளுக்கு ஏதோ ஒரு வடக்கத்திக்காரனை குற்றவாளியாக்கி தூக்கில் தொங்கவிடுவார்கள். இங்கு எத்தனை மரண தண்டனை குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது? அனுமதிக்கமாட்டார்கள். நமக்கு எதுவுமே தெரியாது. வழக்கு நடக்கும். குற்றவாளி என்று முடிவு செய்து தூக்கில் தொங்கவிடுவார்கள். ‘இவனுக்கெல்லாம் வேணும்’ என்று நாமும் திருப்தியடைவோம். இது இந்தியாவில் சாத்தியமானதுதான். ஆனால் வேறு என்ன தீர்வு இருக்கிறது?

என்னதான் உணர்ச்சிவசப்படாமல் யோசித்தாலும் இது போன்ற பிரச்சினைகளுக்கு கடும் தண்டனைகளைத் தவிர வேறு தீர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே பிரச்சினை தண்டனை வழங்கப்படுகிறதா என்பதுதான். இதே பெங்களூரில் சென்ற வாரத்தில் சாலையில் நின்ற பெண்ணை காரில் தூக்கிப் போட்டுச் சென்று கசக்கியிருக்கிறார்கள். செய்தவன் கட்சிக்காரனின் மகனாம். இதை நிறைய முறை செய்திருக்கிறானாம். பந்தாவாகச் சொன்னால் Hobby. அதற்கு பிறகு அந்தச் செய்தியைக் காணவில்லை. அவன் கண்டிப்பாகத் தப்பித்துவிடுவான்.

உண்மையான குற்றவாளிகளை கைது செய்து வெளிப்படையான விசாரணையை நடத்தி கடும் தண்டனைகளைக் கொடுத்தால் சற்றேனும் கட்டுப்படுத்தலாம். ஒன்றரைப் பத்தியில் தீர்வு சொல்லிவிட்டேன். அவ்வளவு எளிதான காரியமா என்ன? மொத்த காவல்துறையும் மாற வேண்டும். நீதித்துறை சீர்படுத்தப்பட வேண்டும். நடக்கவா போகிறது? ம்ஹூம். இதெல்லாம் நம் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகிவிடும். ‘ஊர் உலகத்துல நடக்கிறதுதானே?’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம். அவ்வளவுதான்.

12 எதிர் சப்தங்கள்:

Avargal Unmaigal said...

சட்டத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டிய தருணம் தலைவர்களை நம்பி புண்ணியம் இல்லை. நிர்வாகத்தையும் தண்ண்டிக்க வேண்டும் காரணம் அதை மூடி மறைக்க பார்த்தற்காக என்னைக் கேட்டால் அந்த நிர்வாகியை முதலில் அடித்து கொள்ள வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் இப்படி பெற்றோர்களிடம் எழுதி கேட்கமாட்டார்கள்

வல்லிசிம்ஹன் said...

குழந்தையை மோசம் செய்யும் கொடூர நெஞ்சிற்கும் ஊரி ல் குழந்தை இருக்கும்.. தோட்ட நகரம் இனி கல்லறை நகரம் ஆகாமல் இருக்கணும்.

”தளிர் சுரேஷ்” said...

ஒரு ஐந்து வயது குழந்தையை பாலியல் வன்முறை செய்பவனை எந்த தகுதியில் பள்ளியில் சேர்த்தார்கள்? ஏற்கனவே அவன் மீது புகார் இருக்கிறது! கடும் தண்டனைகள் அரேபிய முறையில் வழங்க வேண்டும் அப்போதுதான் இது குறையும்.

ராஜி said...

இதுப்போன்ற நாய்களுக்கு மரண தண்டனை கூடாது சகோ! பேசும், பார்க்கும் சக்தியை மருத்துவரீதியாக வலியில்லாம எடுத்துட்டு நெத்தில பச்சைக் குத்தி விட்டுடனும். நாய்ங்க பசிக்குதுன்னு வாய் திறந்தும் சொல்ல முடியாமயும், சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாமயும் துடிதுடிச்சு சாகனும். அப்போதான் சரிப்பட்டு வரும்.

தருமி said...

டெல்லி நிகழ்ச்சியில் இவனுக்கு வயது 18 ஆகவில்லை என்று ஒரு யோக்கியனுக்கு தண்டனை ஏதும் இல்லை. ஆனால் நீங்கள் கடும் தண்டனை பற்றிப் பேசுகிறீர்கள். நமது நீதிமன்றங்கள் மீதே நம்பிக்கையில்லை ... என்னவோ போங்கள் ...

ilavalhariharan said...

Arabia muraiyil pothumakkal munnilaiyil bagirangamaga thandanai thara vendum....appoathum thirunthuvaargalo maatargalo

Seeni said...

தண்டனை கடுமையாக வேண்டும்..

Srividhya said...

Our nigzhvin thakkam maraiyu mun innonru. munnathai Vida kodumaiyaga. Kannir varugirathu samugathai ninaithu. Enge sendru kondirukkom enru puriyala.

Yarlpavanan said...

சிறந்த ஆய்வுப் பகிர்வு
சமூக விழிப்புணர்வு தேவை.

Jegadeesh said...

பெற்றோர் குழந்தைகளுடன் மனம்விட்டு பேசி அவர்களின் தேவைகளை கண்டறிய வேண்டும். நாமே அவர்களுக்கு இதுதான் தேவை என்றோ அல்லது இது போதும் என்றோ முடிவு செய்யகூடாது. யாரவது நம் குழந்தைகளை பற்றி குறை சொன்னால் உடனே அவர்கள் முன்னால் நம் குழந்தையை திட்டவோ அறிவுரை சொல்லவோ கூடாது. குழந்தைகளிடம் தனியாக பேசி அவர்களுக்கு புரிய வைக்க முயர்சி செய்ய வேண்டும். அவர்களிடம் எதாவது மாறுதல் தெரிந்தால் அதை பற்றியும் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும், அதை விட்டு விட்டு நாமே பள்ளியில் இருந்து களைத்து வந்திருப்பதாகவோ, விளையாட்டினால் களைத்து இருக்கலாம் என்றோ முடிவு செய்ய கூடாது. முக்கியமாக மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்ய கூடாது. அவர்களுக்கு விளையாட்டாக கொடுக்கும் வாக்குறுதியை கூட நாம் நிறைவேற்ற வேண்டும். மொத்ததில் குழந்தைகளுக்கு நம் மேலும் நமக்கு குழந்தைகள் மேலும் நம்பிக்கை இருக்க வேண்டும்.... எப்படி பார்த்தாலும் அவர்கள் நம் குழந்தைகள்..

Kamala said...

In Afghanistan a 10 year old girl was raped by a mullah. The girls parents and family are going to kill her. The child's mother said,''We will make you a bed of dust and soil. We will send you to the cemetery where you will be safe,'' Why punish that little girl? Shame on menfolk! The mullah is enjoying, may be he will molest some more children. India is fast becoming one like that.

Anonymous said...

//In Afghanistan a 10 year old girl was raped by a mullah. The girls parents and family are going to kill her. The child's mother said,''We will make you a bed of dust and soil. We will send you to the cemetery where you will be safe,'' Why punish that little girl? Shame on menfolk! The mullah is enjoying, may be he will molest some more children. India is fast becoming one like that.//

will not let that happen mam