Jul 22, 2014

கட்டுக்கு போகலாமா?

சாவக்கட்டுபாளையம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்தான் இருக்கும். அந்தக் காலத்தில் சேவல்கட்டு நடந்திருக்க வேண்டும். இப்பொழுது கட்டு நடப்பதாகத் தெரியவில்லை. அந்த ஊரில்தான் நடப்பதில்லையே தவிர இப்பொழுதும் ஆங்காங்கே கட்டு வைக்கிறார்கள். ஊருக்குச் சென்றிருந்த போது தெரிந்த பையன் ஒருவன் தனது கட்டுச்சேவலைக் காட்டினான். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் வீட்டுக்குத் தெரியாமல் ஒரு தோட்டத்தில் வைத்து வளர்க்கிறான். ‘ஈரல் போட்டு வளர்க்கிறேண்ணா’ என்றான். விட்டால் கொத்திவிடும் போலிருந்தது. முரட்டுத்தனமாக இருந்தது. முட்டையிலிருந்து வந்தவுடனே குஞ்சை தனியாக பிரித்துவிடுவார்களாம். தாய்க்கோழியோடு சேர்ந்து சுற்றினால் பந்தபாசத்துக்கு கட்டுப்பட்டு சண்டையில் சுணங்கிவிடும் என்றான். இதை இவன் என்ன சொல்வது? ‘சேவல்கட்டு’ நாவலில் தவசியே சொல்லியிருப்பார்- ம.தவசி. இந்த நாவலுக்காக சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது வாங்கியவர்.

நாவல் நூற்றிப்பத்து பக்கம்தான். சேவுக பாண்டியன் என்ற ஜமீன் வெள்ளைக்கார துரைமார்களுக்கு வரி வசூல் செய்து கொடுக்கிறவர். துரைமார்களோடு வசூலுக்குச் செல்லுமிடத்தில் சேவல்கட்டு நடக்கிறது. ஜமீனுக்கு இதில் எல்லாம் அனுபவம் இல்லை. ஜமீனுக்கு இது கூடத் தெரியவில்லை என்று ஊரே நக்கலடிக்கிறது. இதில் அவமானப்பட்டவர் இனி எப்படியும் பழகிவிடுவது என கட்டு பழகுகிறார். குடி முழ்குகிறது. அடுத்த தலைமுறையில் அவரது மகன் போத்தையாவும் இதிலேயே கிடக்கிறார். தனது தந்தையின் தோல்விகளுக்கு தனது வெற்றிதான் ஆறுதலாக இருக்கும் என வெறிகொண்டு அலைகிறார். இரண்டு தலைமுறைக் கதைதான் இந்த நாவல். 

எளிமையாகச் சொல்லிவிட்டேன். ஆனால் சேவல்கட்டின் நுட்பங்கள், அதன் வரலாறு, அதிலேயே கிடக்கும் மனிதர்கள் என தவசி தூள் கிளப்பியிருப்பார்.

கதையின் வேகத்துக்கு முசுவாக அமர்ந்தால் மூன்று மணி நேரத்தில் வாசித்து விடலாம். இடையிடையே விவரணைகள், புனைவுகள் என ஸ்பீட் ப்ரேக்கர்கள் உண்டு. ‘ஜம்ப் பண்ணியது’ போன்ற சலிப்பூட்டும் வார்த்தைப் பிரயோகங்களும் உண்டு. ஜம்ப் பண்ணியது என்பது மட்டுமே நாவலில் மூன்று இடங்களில் வருகிறது. அது என்ன ஜம்ப் பண்ணியது? பண்ணியது போன்ற சொற்களை பேசும் போது உபயோகப்படுத்தினால் வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் எழுத்தில் வாசிக்கும் போது நம்மையுமறியாமல் ஒரு சலிப்பு வரும். தவசி இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஆனால் சேவல்கட்டு நாவலில் இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை. உள்ளே இருக்கும் சரக்கு அப்படி. 

இரண்டு சேவல்களுக்கான சண்டை என்பது அவற்றைப் பொறுத்தவரையிலும் உயிர் பிரச்சினை. முட்டையிலிருந்து வெளியில் வந்ததிலிருந்தே தனிமைப்படுத்தி வன்மத்தை உருவேற்றி வளர்க்கிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுவெளியில் கட்டி வைத்துவிடுவார்கள். அப்பொழுதுதான் சேவலின் பயம் போகுமாம். இறக்கைகள் உறுதியாக வேண்டும் என்பதற்காக கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் போட்டுவிடுவார்கள். நீச்சலடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். பயமும் போகும், இறக்கைகளும் உறுதியாகும். பெட்டைக் கோழிகளை கண்ணிலேயே காட்டமாட்டார்கள். அப்படித்தான் வெறியேறும். இப்படியெல்லாம்தான் கட்டுக்குத் தயாராக்குவார்கள். அந்த ஜீவனை வெறுப்பேற்றி வெறுப்பேற்றியே முரடனாக்கி கட்டில் இறக்குகிறார்கள். காலில் கூரிய கத்தி. தோற்கவே கூடாது. தோற்றால் வென்றவனின் வீட்டில் சூப்பு வைத்து குடித்துவிடுவார்கள்.

நல்லவேளையாக மனிதர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. தோற்றாலும் கூட மீண்டும் எழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜல்லிக்கட்டிலும் கூட தோற்றுப் போனவுடனே அந்தக் காளையை கறி போட்டுவிடுவதில்லை. ஆனால் கட்டுச்சேவலுக்கு அப்படியில்லை. ஒவ்வொரு முறையும் நாக்-அவுட்தான். வெறித்தனமாக வென்றே தீர வேண்டும்.

அமத்தா ஒரு சேவல்கட்டு கதையைச் சொல்லியிருக்கிறார். பக்கத்து ஊரில் ஒரு பண்ணையார் இருந்தாராம். அவரது தோட்டத்தில் எந்தக் காலத்திலும் பத்துக்கும் குறையாத கட்டுச்சேவல்கள் இருக்கும். அக்கம்பக்கம் எங்கு கட்டு நடந்தாலும் ரேக்ளா வண்டியில் ஏறிக் கொண்டு கூடவே ஒருவனை துணைக்கு அழைத்துச் சென்று வருவாராம். கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான். வெற்றியென்றால் எதிராளியின் முண்டமாக்கப்பட்ட சேவல் மட்டுமில்லை- தோற்றவனின் தோட்டம், காடு என வென்று வருவார். இதெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்புதான் நடந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது அவரது வாரிசுகள் யாரும் வசதியாக இல்லை. குடும்பமே சீரழிந்து போய்விட்டது. ஜெயித்த தோட்டங்காட்டையெல்லாம் என்ன செய்தார் என்று கேட்டிருக்கிறேன். அமத்தா மழுப்பிவிட்டார். சமீபத்தில்தான் வேறொருவர் சொன்னார். அத்தனை சொத்தையும் விற்று பணமாக்கி சினிமா எடுக்கிறேன் என்று சென்னை செல்வாராம். அந்தக் கால நடிகை ஒருவரோடு தொடுப்பு இருந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரிணிதான். அந்த நடிகைக்கு ஒட்டியாணமும், வைரத் தோடுமாகவும் கொடுத்துக் கொடுத்தே நாசமாகப் போனாராம். தனது ஒட்டியாணமும், வைரத் தோடுகளும் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சேவல்களின் ரத்தமும் சதையும் என்று அந்த சூப்பர் ஸ்டாரிணிக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. காலாகாலமும் ஆண்கள் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டாவது வீர விளையாட்டு. ஏற்றுக் கொள்ளலாம். காளையை எதிர்த்துப் போராட உடற்திறமும் வேண்டும்; மதி நுட்பமும் வேண்டும். ஆனால் இந்த சேவல்கட்டிலிருந்து மனிதன் எதைக் கற்றுக் கொண்டிருப்பான்? 

சேவலுக்கு இந்த கட்டு உயிர்ப்பிரச்சினை என்றால் மனிதனுக்கு மானப்பிரச்சினை. தனது சேவல் தோற்றுவிடக் கூடாது என்று பைத்தியமாகத் திரிந்திருக்கிறார்கள். சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். குடும்பத்தைச் சிதைத்திருக்கிறார்கள். உயிரை மாய்த்திருக்கிறார்கள். எதிரிகளைக் கொன்றிருக்கிறார்கள். 

என்னென்னவோ கேள்விகளை எழுப்புகிறது இந்த நாவல்.

நாவலை எழுதிய தவசி இப்பொழுது உயிரோடு இல்லை. இப்பொழுது இருந்திருந்தாலும் அவருக்கு நாற்பது வயதுக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இறந்து போனார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டும் என்றெல்லாம் படித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்கு தேடியும் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் இந்த நாவலில் கூட தவசி பற்றிய குறிப்புகள் இல்லை. 

இதுதான் எழுத்தின் பலம். எப்பொழுதோ ஒரு நல்ல நாவலையோ, சிறுகதையையோ எழுதிவிட்டு போய்விடுகிறார்கள். பிறகு யாரோ வந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். 

எழுத்துக்கு ஒரு பலவீனமும் உண்டு- சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளர்கள் வாசிப்பு எழுத்து என்று வாழ்வை இழந்து நல்ல படைப்புகளை உருவாக்கி வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அவர்களது வாரிசுகள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

சேவல்கட்டு நாவலை ஆன்லைனில் வாங்கலாம்.

4 எதிர் சப்தங்கள்:

ulagathamizharmaiyam said...

இப்பொழுது சாவக் கட்டுப்பாளையம் என்றோ சாவக்காட்டுப்பாளையம் என்றோதானே அழைக்கப்படுகிறது?

Vaa.Manikandan said...

இப்பொழுது சாவக்கட்டுப்பாளையம்தான்.

ராஜி said...

சேவல் சண்டையில் இம்புட்டு இருக்கா!?

Sasilingesh said...

வாடிவாசல் மாதிரி சேவல்கட்டு போல....
வாங்கிடுவோம்