Jun 24, 2014

பழைய ஈயம் பித்தளைக்கு...

ஒரு பள்ளியிலிருந்து அழைத்திருந்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஆரம்பப்பள்ளி. கிராமப்பள்ளிதான். ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். மொத்தமே இரண்டு ஆசிரியர்கள்தான். நல்ல ஆசிரியர்கள் போலிருக்கிறது- மாணவர்களுக்கு கணினி பயிற்சியளிப்பதற்கான எத்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் கைவசம் கணினி இல்லை. ஏதாவது கணினிக்கு ஏற்பாடு செய்ய இயலுமா என்று கேட்டிருக்கிறார்கள்.

ஒன்று அல்லது இரண்டு கணினி - இயங்கக் கூடிய நிலையில் இருக்கும் பழைய கணினியாக இருந்தாலும் சரி பயன்படுத்திக் கொள்கிறோம் என்கிறார்கள். நல்ல காரியமாகத்தான் தெரிகிறது.

நம் தலைமுறையில் கணினியைப் பார்க்க கல்லூரி வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்பொழுது தனியார் பள்ளிகளில் படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். பாம்பட்டிக்காட்டில் இருக்கும் தனியார் பள்ளிகள் கூட Smart class ஐ அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்தியமங்கலத்திலிருந்து இருபது கிலோமீட்டர் தாண்டி ஒரு ஊர் இருக்கிறது. வீரப்பன் அந்த ஏரியாவில் சுற்றித் திரிந்திருக்க வாய்ப்பிருப்பிறது. அத்தனை அடர்ந்த வனப்பகுதி அது. அந்த ஊரில் ஒரு தனியார் பள்ளி இருக்கிறது. அங்கு படிக்கும் ஐந்தாவது வகுப்பு மாணவன் smart class பற்றி பேசுகிறான். ஆச்சரியமாக இருந்தது.

அதுவே நம்பியூரிலிருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் ஒரு பள்ளி இருக்கிறது. அரசாங்கப்பள்ளி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கம்யூட்டர் சயின்ஸ் க்ரூப் நடத்துகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் கணினி சொல்லித் தர ஆசிரியர் இல்லை. பத்தாம் வகுப்பு வரைக்கும் மாணவர்கள் கணினியை பார்த்திருக்கவே மாட்டார்கள்.  ப்ளஸ் ஒன் வகுப்பில் கம்யூட்டர் க்ரூப்பில் சேர்ந்த பிறகும் பெரியதாக முன்னேற்றம் இல்லை. கணினியை பார்க்கலாம். இயக்கவெல்லாம் தெரியாது. அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று விசாரிப்பதற்காக தலைமையாசிரியரிடம் தொடர்பு கொண்டேன் ‘ஒரு ஆசிரியருக்கு மாதாமாதம் சம்பளம் ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றார். திகில் ஆகிவிட்டது. உண்மையில் பெரிய பட்ஜெட். மாதம் ஐயாயிரம் என்றாலும் கூட வருடத்திற்கு அறுபதாயிரம் தேவை. வலுவான பெற்றோர் ஆசிரியர் கழகம் இருந்தால் அவர்களே சமாளித்துவிடுவார்கள். ஆனால் அவர்களே மழை இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் செய்ய சாத்தியமே இல்லை. இருந்தாலும் என்னளவில் இது சிரமமான காரியமாகத் தெரிந்ததால் அதன் பிறகு அதை யோசிக்கவே இல்லை.

இப்படித்தான் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.

சில பள்ளிகளில் ஆசிரியர்கள் முனைப்பானவர்களாக இருந்தால் நல்ல விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். முதல் பத்தியில் சொன்ன ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பிற்குள்ளேயே மாணவர்களுக்கு கணினி சொல்லித்தர விரும்புகிறார்கள். அவர்கள் கேட்டு இரண்டு வாரத்திற்கு மேலாகிறது. எதற்கும் விசாரித்துக் கொள்ளலாம் என்று விசாரித்ததில் தாமதமாகிவிட்டது. அதே மாவட்டத்தில் இருக்கும் இன்னொரு பள்ளியாசிரியரிடம் மூலமாக விசாரித்துவிட்டேன். ‘அந்த ஸ்கூலில் டீச்சிங் ரொம்ப நல்லா இருக்கும்’ என்று சான்றிதழ் கொடுத்தார். சான்றிதழ் கொடுத்தவர் நம்பகமான ஆசிரியர். 

பணம் கேட்கவில்லை; வேறு உதவி எதுவும் கேட்கவில்லை. கணினி கேட்கிறார்கள்- அதுவும் பழைய கணினி. யாராவது புதிய கணினி வாங்கித் தருவதாக இருந்தாலும் இரட்டைச் சந்தோஷம். பள்ளி முகவரிக்கு நேரடியாகவே ஆர்டர் செய்துவிடலாம்.

சில நண்பர்களிடம் விசாரித்திருக்கிறேன். முயற்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். எப்படியும் ஒன்றிரண்டை தேற்றிவிடலாம் என்று நினைக்கிறேன். அதிகமாக வந்தாலும் பிரச்சினையில்லை. வேறு நல்ல அரசு பள்ளிகளாக பார்த்துக் கொடுத்துவிடலாம். சில பள்ளிகள் பழைய கணினி வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. விசாரித்துதான் கொடுக்க வேண்டும். ஆனால் சேகரிப்பதை சேகரித்துவிடலாம்.

இந்தக் காரியத்தில் இணைந்து செயலாற்ற விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் ஒரு தகவல் கொடுங்கள். பணமாக இருந்தால் அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்துவிடலாம். ஆனால் இதை எப்படி இடம் மாற்றுவது? யோசிக்க வேண்டும். செளகரியப்படும் ஊர்களாக இருந்தால் நானே வந்து வாங்கிக் கொள்கிறேன். இல்லையென்றால் வேறு சாத்தியங்களை ஆராயலாம்.

நன்றி.

vaamanikandan@gmail.com

5 எதிர் சப்தங்கள்:

kingraj said...

முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துக்கள் ஐயா.

இருப்பு said...

நண்பா எங்கள் ஊர் பெயர் ( கன்னித்தமிழ்நாடு )இது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் இருக்கிறது இந்த ஊர் 1955 ல் தான் உருவானது இன்றைய நெய்வெலிக்காக "வெள்ளையன் குப்பம்"என்ற இடத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் உருவாக்கியது ,இங்கு ஒரு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது ஒரு முந்திரி மரத்தின் கீழ் அதில் முதல் சேர்க்கை நடைபெற்றது நான் மூன்றாவது மாணவன் இன்றும் பள்ளியின் பதிவேட்டில் உள்ளது ,இன்று இந்த பள்ளி நடுநிலை பள்ளியாக வளர்ந்து நிற்கிறது அதுமட்டுமல்ல எங்கள் ஊரில் இருந்து சென்னை ஐ ஐ டி யில் படித்து அமெரிக்க குடிமகனாக உள்ள குணசேகரன் என்பவர் நிறைய உதவிகளை செய்துள்ளார் கணணிகளை வாங்கித் தந்து அதற்க்கு ஒரு ஆசிரியரும் பணியமர்த்தி அதற்க்கான ஊதியமும் அவர் தான் தந்து கொண்டுள்ளார் கடந்த 2013 ஆம் ஆண்டு மாவட்டத்தில் முதல் இடம் வந்தது இந்த அரசுப்பள்ளி, எங்கள் ஊர் மக்களும் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளனர் தேவையான இடம்கூட வாங்கித்ததோம் ஊரில் வரி சேர்த்து ,கழிப்பறை கட்டித்தந்தோம் ,பள்ளியைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்டித்தந்தோம் .
கன்னித்தமிழ் நாடு
கிருஷ்ணசாமி சேகர்

வவ்வால் said...

கிருஷ்ணசாமி சேகர் அவர்களே,

உங்க ஊரில் அப்பவே இந்த நல்ல செயல்களை செய்துள்ளார்கள்,பாராட்டுக்குரியது.

கன்னித்தமிழ் நாடு என்ற ஊரினை கேள்விபட்டுள்ளேன் , பெயரே வித்தியாசமாக இருக்கென மனதில் பதிந்தது,அப்பக்கம் வந்ததில்லை, ஹி...ஹி இத்தினிக்கும் கடலூர் மாவட்டம் தான் நான் , எப்பவாது அந்த ஊர் பக்கம் வரவேண்டும் என நினைப்பதுண்டு.

சாகித்திய அகதமி விருது பெற்ற சிற்றிலக்கிய எழுத்தாளர் "குறிஞ்சி வேலன்" மீனாட்சிப்பேட்டை என கேள்விப்பட்டதுண்டு, ரெண்டு ஊரும் பக்கம் தானே?

manjoorraja said...

மணி, இதில் ஒரு சிறு பிரச்சினை உள்ளது. பழைய கணினியை கொடுத்தால் ஆபரேட்டிங் சிஸ்டம் பிரச்சினை வருமே. அதனால் என்ன லாபம். மேலும் இப்போதைய பாடத்திட்டங்களுக்கு பழைய கணினி ஒத்துவருமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

sivakumarcoimbatore said...

முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துக்கள் mani sir...