இறந்து போன மாணவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஒவ்வொன்றாக நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்தேன். யாரென்றே தெரியாத மாணவர்கள்தான்- ஆனால் மொத்தமாக இறந்து போயிருக்கிறார்கள். தெலுங்கானாவிலிருந்து ஹிமாச்சல் பிரதேசம் சென்றிருக்கிறார்கள். பியாஸ் நதியில் நின்று படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது இருபத்தி நான்கு மாணவர்களை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வெறும் ஒன்றரை நிமிடங்கள்தான். மொத்தக் காரியமும் முடிந்துவிட்டது. இன்னமும் உடல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை உடல்களும் கிடைக்கும் என்று சொல்லமுடியாதாம். நீரின் அந்த வேகத்தில் சிதறாமல் இருந்தாலே பெரிய விஷயம்தான். அத்தனை வேகம் அந்த நீருக்கு.
இந்தத் தெலுங்கானா மாணவர்கள் Industrial Visit சென்றிருக்கிறார்கள். மணாலியில் எந்த நிறுவனம் இருக்கிறது என்று பார்க்கச் சென்றார்களோ தெரியவில்லை. இப்பொழுதுதான் ஜூன் மாதம். கல்லூரி திறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவசர அவசரமாக ஏற்பாடுகளைச் செய்து பயணப்பட்டிருக்கிறார்கள். அவசரமாக வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார்கள்.
தமிழகக் கல்லூரிகளிலும் இத்தகைய பயணங்கள் உண்டு. சம்பந்தமே இல்லாமல் IV என்று பெயர் வைத்திருக்கிறார்கள். போகிற ஊரில் ஒரேயொரு நிறுவனத்திற்குள் புகுந்து ஒன்றரை மணி நேரம் பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஊட்டி, காஷ்மீர், மணாலி போன்ற சினிமா படப்பிடிப்பு நடக்கும் ஊர்களாகச் செல்வார்கள். கூத்தடிப்பதற்கு பொறியியல் கல்லூரியின் அகராதியில் Industrial Visit என்று பெயர்.
கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த போது பெங்களூர், மங்களூர், மைசூர், ஊட்டி என்று பல ஊர்ச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்கு முந்தைய வருடம் ஹைதராபாத். வெகுதூரப் பயணம் என்பதால் எப்படியும் கையில் பணம் இருக்கும். இளரத்தம் வேறு. சுற்றிலும் நண்பர்கள். இந்தப் பயணத்தில்தான் முதன் முறையாக புகையை இழுத்துப் பார்த்தேன். குடித்தும் பார்த்தேன். குடித்துவிட்டு ‘எனக்கு போதையே ஏறவில்லை’ என்று பிதற்றிக் கொண்டிருந்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது. ‘எல்லோரும் இப்படித்தாண்டா சொல்வாங்க’ என்று மற்றவர்கள் கலாய்த்ததும் ஞாபகம் இருக்கிறது. அதன்பிறகு கால்கள் நடுங்குகின்றன. நிற்க முடியவில்லை. எங்கே விழுந்தேன் என்று தெரியவில்லை. இழுத்து வந்து அறையில் வீசியிருந்தார்கள். விடிந்து எழுந்தால் சட்டை முழுவதும் வாந்தி நாற்றம். தண்ணீரில் கழுவித்தான் படுக்க வைத்தார்களாம். ஆனால் எதுவும் ஞாபகத்தில் இல்லை.
இன்னொரு மாணவன் தங்கியிருந்த விடுதியின் வாஷ்பேசினில் புல்-அப் எடுத்திருக்கிறான். உடைந்து விழுந்ததில் கை கால்கள் எல்லாம் கீறல்கள். முகம் மொத்தமும் கிழிந்துவிட்டது. தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்த வகைக்காரர்கள் அத்தனை பேரும் முந்தின நாள் இரவில் குடித்திருந்தார்கள். ‘நிர்வாகத்திடம் சொல்லிவிடாதீர்கள்’ என்று கெஞ்சியபடி உடன் வந்திருந்த ஆசிரியர்கள் பதறிக் கொண்டிருந்தார்கள்.
எலெக்ட்ரிக்கல் படிக்கும் மாணவர்கள் மின்னியல் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்கவும், கம்யூனிகேஷன் மாணவர்கள் தொடர்பியல் நிறுவனங்கள் எப்படி இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய பயணங்கள் பாடத் திட்டத்திலேயே இணைந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுதெல்லாம் கற்றல் பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவதாக இல்லை. நல்ல ஊராகத் தேர்ந்தெடுத்து கல்லூரியில் அனுமதி கேட்கிறார்கள். கல்லூரி நிர்வாகமும் அனுமதி கொடுத்துவிடுகிறது. கும்மாளமடித்துவிட்டுத் திரும்புகிறார்கள்.
ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தோம். அவர்கள் கடைசி நேரம் வரைக்கும் தரவில்லை. நிறுவனத்திடமிருந்து அனுமதி வரவில்லையென்றால் கல்லூரி நிர்வாகமும் கல்விச்சுற்றுலாவுக்கு அனுமதி தராது என்று அறிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லை. நண்பன் ஒருவனின் மாமா ஹைதராபாத்தில் பணியிலிருந்தார். அவரை ஃபேக்ஸ் அனுப்பச் சொல்லிவிட்டோம். அவரும் அனுப்பிவிட்டார். அதையே நிறுவனத்தின் அனுமதியாகக் காட்டி கல்லூரியை ஏமாற்றிவிட்டோம். அவ்வளவுதான் IV.
கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுலா அவசியமில்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் வரைக்கும் செல்ல வேண்டியதன் அவசியம் என்ன என்று யோசிக்கலாம் அல்லவா? சுற்றுலா நிறுவனத்திற்கு கொடுத்த பதினைந்தாயிரம் போக போக தனிப்பட்ட செலவுகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து அல்லது பத்தாயிரம் வரைக்கும் தேவைப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு துவக்கத்திலேயே எதற்காக இவ்வளவு பெரிய சுற்றுலாவுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி தந்திருக்கிறது? எல்லாம் நல்லபடியாக நடந்துவிட்டால் நல்லது. இப்படி விபரீதங்கள் நிகழும் போது யாருக்கு பாதிப்பு? யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? அப்படியே பொறுப்பேற்றாலும் இழப்பு பெற்றவர்களுக்கு மட்டும்தானே?
முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டார்கள்; அணை அதிகாரிகள் அங்கே எந்த முன்னெச்சரிக்கைப் பலகையும் வைத்திருக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம்பட்ச குற்றச்சாட்டுகள். எந்த அடிப்படையில் இந்தச் சுற்றுலாவுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தது என்பதை முதலில் தெளிவு படுத்தச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். கல்வித் துறையிலிருந்து காவல்துறை வரைக்கும் இப்பொழுதே சில பல கோடிகளை அள்ளி வீசியிருப்பார்கள். மிச்சமிருக்கும் உடல்களைக் கைப்பற்றுகிற வரைக்கும் ஊடகங்கள் இந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருப்பார்கள். அதன் பிறகு அவர்களும் மறந்துவிடுவார்கள். இருபத்து நான்கு மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும்தான் காலகாலத்துக்கும் அழுது கொண்டிருப்பார்கள்.
அந்த மாணவர்களை வெள்ளம் அடித்துச் செல்லும் வீடியோவும் இணையத்தில் காணக் கிடைக்கிறது. கொடூரமான வீடியோ அது. மாணவர்கள் பாறை மீது நின்று கொண்டிருக்கிறார்கள். நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. எந்தச் சிரமமும் இல்லாமல் பூக்களை அடித்துச் செல்வது போல நீர் இழுத்துச் செல்கிறது. தப்பித்துக் கரையேறியவர்கள் நண்பர்களைக் காப்பாற்ற நீரின் போக்கோடு வெகுதூரம் ஓடுகிறார்கள். களைத்துப் போய் ஓரிடத்தில் நிற்கிறார்கள். அத்தனையும் கை மீறிப் போயிருக்கிறது. வீடியோ முடிகிறது.
‘தப்பித்துவிட வேண்டும்’ என்பதைத் தவிர இழுத்துச் செல்லப்படுபவர்களின் மனது வேறு எதையாவது யோசித்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் தப்பித்தவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? சில வினாடிகளுக்கு முன்பாக கரையேறியதால் தப்பித்துவிட்டார்கள். அதற்காகச் சந்தோஷப்பட்டிருப்பார்களா அல்லது கண்களுக்கு முன்பாக இருபத்தி நான்கு பேரை நீர் இழுத்துச் செல்வதைப் பார்த்து கதறியிருப்பார்களா?
மரணம் எப்பொழுதுமே உடனடியாக அழுகையைத் தந்துவிடுவதில்லை. மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஏதோவொரு குழப்பம் சூழ்ந்துவிடுகிறது. அவராகத்தான் இருக்குமா? எதனால் இறந்தார் போன்ற குழப்பங்கள்தான் முதலில் உருவாகின்றன. உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை ‘மரணமடைந்தவர் எழுந்துவிடமாட்டாரா?’ என்று அவ்வப்போது யோசிக்கிறோம். எதுவும் சாத்தியமில்லை என்றான பிறகுதான் இழப்பின் பாரம் அழுத்தத் துவங்குகிறது.
ஆனால் நமக்கு நெருங்கிய உறவாக இல்லாதவரைக்கும் ஒவ்வொரு மரணச் செய்தியும் வெறும் செய்திதான் - அது எவ்வளவு கோரமான மரணமாக இருந்தாலும். நமக்கு சம்பந்தமில்லாதவரைக்கும் மரணத்தைக் காட்டும் ஒவ்வொரு வீடியோவும்- அது சுனாமியாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும்- வெறும் வீடியோதான். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ‘த்ரில்’ தரக் கூடிய வீடியோ. அவ்வளவுதான். ஃபேஸ்புக்கை மூடிவிட்டு நள்ளிரவு வரைக்கும் சினிமா விமர்சனங்களை படித்துக் கொண்டிருந்தேன். இறுகிக் கிடக்கிறது இதயமும் மனமும்.
16 எதிர் சப்தங்கள்:
//ஆனால் நமக்கு நெருங்கிய உறவாக இல்லாதவரைக்கும் ஒவ்வொரு மரணச் செய்தியும் வெறும் செய்திதான் - அது எவ்வளவு கோரமான மரணமாக இருந்தாலும். நமக்கு சம்பந்தமில்லாதவரைக்கும் மரணத்தைக் காட்டும் ஒவ்வொரு வீடியோவும்- அது சுனாமியாக இருந்தாலும், விபத்தாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும்- வெறும் வீடியோதான். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ‘த்ரில்’ தரக் கூடிய வீடியோ. அவ்வளவுதான்//
√
அருமையான பதிவு பலகோணங்களில் விவாதிக்க வேண்டிய விசயம் தான் இது ...
Excellent article I have got same thoughs and feelings
மனதை பாதித்த செய்தி! இதை வீடியோ கூட எடுத்துவிட்டார்களா? எல்லாவற்றையும் பேஸ்புக்கில் போட வேண்டும் என்ற திரில் இப்படியொரு கோர மரணத்தை அந்த மாணவர்களுக்கு கொடுத்துவிட்டது! யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
//முன்னறிவிப்பின்றி அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டார்கள்; அணை அதிகாரிகள் அங்கே எந்த முன்னெச்சரிக்கைப் பலகையும் வைத்திருக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம்பட்ச குற்றச்சாட்டுகள்.//மணி எழுதுவதற்கு முன் சில விசயங்களை சரிபார்க்கவும்.
பிரதீப், எதை தவறு என சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் அணையின் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.
i really like your writing style
இளம் தளிர்கள். பெற்றோர்களின் கதி தீராத துயரம். சிறுவயதில் திருச்சி சென்று வரவே தந்தை சரி சொல்லத் தயக்கம் காடினார். திருமங்கலத்திலிருந்து 4 மணி நேரப் பாஸ்ஞ்சர் பயணம். எங்கள் குழந்தைகள் கொடைக்கானல் செல்வதற்கு நான் மூன்று நாட்கள் யோசித்துப் பின பணம் கொடுத்தேன் . பலவகைப் புத்திமதிகளோடு. இப்போது எந்த சூழ்நிலைக்கு யார் பொறுப்பு ஏற்பது. வீடியோ பார்க்கத் தெம்பு இல்லை. நன்றி மணிகண்டன்.
மனம் கணக்கிறது நண்பரே
எத்துனை உயிர்கள்
அவர்களது குடும்பங்களை நினைத்துப் பார்கிறேன்
வருந்துகின்றோம்:(
x
இது மாணவர்களின் தவறு. கல்லூரிக்கு வேறு ஆப்ஷங்கள் கிடையாது. பழைய கட்டுப்பாடுகள் இப்போது பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. நீதித்துறைக்குச் செல்லும் மாணவர்களின் ஆக்ரோஷத்தைத்தான் சில வருடங்களுக்கு முன்பு பார்த்தோமே.
மாணவர்களின் தவறை, பெற்றோர்களின் தவறை அவர்களின் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனால் மற்ற காரணிகளைத் தேடுகிறது. Emotionஐக் குறைப்பதற்காக பணியாளர்கள் suspend செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் நடை நன்றாக உள்ளது.
மனதை பாதித்த செய்தி!
அண்ணா ..மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இல்லாத அக்கறை... கல்லூரி நிர்வாகத்திடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்??
உண்மையில் பெரும்பாலோர்க்கு தெரியாத விசயம்......இது போன்ற சில செயல் திட்டங்கள் நடைபெறும் ஆற்றில் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணிர் திறந்து விடுவார்கள்.கண்டிப்பாக அங்கே அறிவிப்பு பலகையும் தண்ணீர் திறந்துவிடும் போது அபாய அலாரமும் ஒலிக்க வேண்டும்.இதை அரசு அதிகாரிகள் துளி கூட கண்டு கொள்வதில்லை.ஆகவே இவ்விசயம் இரண்டாம் பட்ச குற்றச்சாட்டு இல்லைங்க. இந்தியா போன்ற நாட்டில் அரசு ஊழியரின் மிக மோசமான அலட்சிய போக்கையே உறுதி செய்கிறது.
மனதில் பாரமேறுகிறது #ஆழமான பதிவு
Post a Comment