May 6, 2014

ஒரு ஐடியா சொல்லுங்க

முதன் முதலாக வேலைக்குச் சென்ற போது ஒரு ஆசை இருந்தது. பத்து வருடங்களில் வேண்டுமளவுக்கு சம்பாதித்துவிட்டு இந்த பெங்களூர், ஹைதராபாத்தையெல்லாம் விட்டுவிட்டு சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. 

எங்கள் ஊரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள்தான் அதிகம். அதுவும் என் அம்மா அப்பாவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்கவே கூடாது. ‘அரைக்காசானாலும் அரண்மனைச் சம்பளம்; கால் காசானாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்’ என்று அரசு ஊழியர்களாகவே காலத்தை ஓட்டிவிட்டார்கள். வேலைக்கு போனோமோ, ஒன்றாம் தேதியானால் சம்பளத்தை வாங்கினோமோ என்று இருந்துவிட வேண்டும் என்றுதான் எங்களையும் வளர்த்தார்கள். அதனால் புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றால் அவ்வளவு சாமானியத்தில் விட மாட்டார்கள். வேறு எதைச் செய்வது என்று பெரிய குழப்பம் எதுவும் இல்லை- வயலோ அல்லது தோட்டமோ வாங்கி விவசாயம் செய்து ஊருக்குள் பண்ணையாராக பந்தா காட்டலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு ஏக்கர் வயல் மூன்று லட்ச ரூபாய்க்கும், ஒரு ஏக்கர் தோட்டம் ஏழு லட்சத்திற்கும் விற்றுக் கொண்டிருந்தது. வயலுக்கும் தோட்டத்துக்கும் வித்தியாசம் தெரியும் அல்லவா? வயலுக்கு தனி மின் வசதியோ அல்லது மோட்டார் வசதியோ இருக்காது. வாய்க்காலில் வரும் நீரை ஒவ்வொரு வயலுக்கும் முறை வைத்து பாய்ச்சுவதற்கு ‘தண்ணிவாக்கி’ இருப்பார். அவருக்கு ஒவ்வொரு போக விளைச்சலின் போதும் ஏக்கர் கணக்கிற்கு ஏற்ப நெல் அளந்து கொடுப்பார்கள். வயலில் நெல்தான் விளைவிப்பார்கள். தோட்டம் அப்படியில்லை- தனி மின் வசதி இருக்கும். கிணறு இருக்கும். மோட்டார் வைத்திருப்பார்கள். வாழை, கரும்பு, மஞ்சள் என்று தோட்டப்பயிர்களாக விளைவிப்பார்கள். என்ன இருந்தாலும் தோட்டத்திற்குத்தான் மவுசு ஜாஸ்தி.

என் கணக்குக்கு ஐந்து ஏக்கர் வயலும், ஐந்து ஏக்கர் தோட்டமும் வாங்கி அந்தத் தோட்டத்திலேயே ஒரு பண்ணை வீடு கட்டி இரட்டை மாட்டு வண்டி ஒன்றை வைத்துக் கொண்டு, முடிந்தால் ஒரு புல்லட் வாங்கி அலப்பறை செய்ய வேண்டும். எப்படியும் பத்து வருடத்தில் அதற்கான பணத்தைச் சேர்த்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

இது நடந்து வெகு காலம் ஆகிவிடவில்லை. ஒரு பவுன் ஆறாயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்றுக் கொண்டிருந்த பத்து வருடங்களுக்கு முன்புதான். பத்து வருடம் என்பது சொல்வதற்கு குறுகிய காலமாகத்தான் தெரிகிறது. ஆனால் இந்தப் பத்து வருடங்கள்தான் எங்கள் ஊரைப் புரட்டிப் போட்டிருக்கிறது. எங்கள் ஊரை மட்டுமில்லை- பெரும்பாலான ஊர்களையும். இந்தச் சமயத்தில்தான் கிடைத்த இடங்களையெல்லாம் கூறு போடத் துவங்கினார்கள். வயலும், தோட்டமும் தங்கள் விலைப்பட்டியலில் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கத் துவங்கின.

“ஐம்பது வருடங்களுக்கு முன்பாக இதெல்லாம் நம் இடமாக இருந்தது” என்று அப்பா காட்டிய இடத்தை தாத்தா வெறும் ஆறாயிரம் ரூபாய்க்குத்தான் விற்றிருக்கிறார். பதினைந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அங்கு ஒரு ஏக்கர் லட்ச ரூபாய்க்குத்தான் விற்றுக் கொண்டிருந்தது. எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அப்பாவுக்கு அந்த இடங்களை வாங்கும் சக்தி இல்லை. ஒருவேளை மகன்களின் காலத்தில் இந்த இடங்களை வாங்கிவிட முடியும் என்று அப்பா கற்பனை செய்திருக்கக் கூடும். ம்ஹும். இந்தப் பதினைந்து வருடங்களில் அதே இடம் கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் என்னாலும் தம்பியாலும், நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை.

தொலையட்டும்.

பவுன் விலை இருபதாயிரத்தைத் தாண்டிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு ஏக்கர் வயல் பதினைந்து லட்சத்தைத் தொட்டுவிட்டது. தோட்டம் பற்றி கற்பனை கூட செய்ய முடியவில்லை. இன்றைய நிலவரத்தில் முப்பது லட்சத்தைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். எங்கே போவது? இந்தப் பழம் புளிக்கும் கதைதான் - தோட்டமும் வேண்டாம்; வயலும் வேண்டாம். 

தோட்டமும் வயலும் வாங்கி செட்டில் ஆவதை விடுங்கள். அது சாத்தியமே இல்லை. இப்படியே ஏதாவதொரு முதலாளிக்கு பணிவிடை செய்து கடைசிவரைக்கும் காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் ஓய்வு பெறும் காலத்தில் வருமானத்திற்கு என்ன செய்வது என்பதுதான் பெரிய திகிலாக இருக்கிறது. முந்தைய தலைமுறையில் ஓய்வு பெறும் காலம் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை. அரசாங்க வேலையில் இருந்தார்கள் அல்லது சிறு வணிகம் ஒன்றை கடைசி காலம் வரைக்கும் செய்து கொண்டிருந்தார்கள் அல்லது தனது விவசாயத் தொழிலையே மகன் நீட்டி தனக்கு கடைசிக் காலம் வரைக்கும் கஞ்சி ஊற்றிவிடுவான் என்று நம்பினார்கள். அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.

நம் காலத்தில் எதை யோசிப்பது? 

விவரமானவர்களும் வலிமையானவர்களும் வாடகை வரும் படியாக வீடு அல்லது கடைகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஈரோட்டில் ஒருவரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த போது அவரது மகன் பெங்களூர் ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறானாம். இடம் மட்டும் ஒரு கோடியே முப்பது லட்சம். கட்டடத்திற்கான திட்ட மதிப்பீடு ஒன்றரைக் கோடி. எனது வாய்க்குள் ஒரு ஈ புகுந்து வெளியில் வந்தது. வாய்ப்பு இருப்பவர்கள் வகுந்து கட்டுகிறார்கள். வாய்ப்பு இல்லாதவர்கள் இப்படியே யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஹைதராபாத்தில் வேலைக்குச் சேர்ந்த போது மேனேஜர் ஒரு ஐடியா சொன்னார். “மாதம் ஒரு பவுன் வாங்கி சேகரிக்கத் துவங்கினால் பத்து வருடங்களுக்குப் பிறகு அதுவே உனது ரிடையர்ட்மெண்ட் செலவுகளை ஏற்றுக் கொள்ளும்”- இது நல்ல ஐடியாவாகத்தான் இருந்தது. ஆனால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. காரணம் இருந்தது- கூடப் படித்தவர்கள் மாதம் முப்பதாயிரம் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் பத்தாயிரம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பவுன் விலை ஆறாயிரம்தான் என்றாலும் வீட்டிற்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருந்தது. முடிந்த வகையில் எல்லாம் கஞ்சத்தனப்பட்டு பணத்தைச் சேர்த்துக் கொண்டிருந்ததால் தங்கத்தை டீலில் விட்டுவிட்டேன்.

இப்பொழுதும் கூட யாராவது தெரிந்த பையன் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால் இந்த ஐடியாவைக் கொடுக்கிறேன். ஆனால் அவர்களாலும் செயல்படுத்த இயலுமா என்று தெரியவில்லை. பவுன் விலை இருபதாயிரத்தைத் தாண்டிவிட்டது. குறைந்தபட்சம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கினால்தான் இந்தத் திட்டம் சாத்தியம். 

இன்னொரு திட்டமும் சொன்னார்கள். ஒன்றாம் தேதியானால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிஸான் விகாஸ் பத்திரம் அல்லது இந்திர விகாஸ் பத்திரம் வாங்கி விட வேண்டும். இப்படியே தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தரை வருடம் முடிந்தவுடன் முதல் மாதம் வாங்கிய பத்திரம் முதிர்ச்சியுற்று பத்தாயிரம் ரூபாயைக் கொடுக்கும். அடுத்த மாதம் இரண்டாவதாக வாங்கிய பத்திரம் முதிர்ச்சியுறும். இப்படி ஒவ்வொரு மாதமும் முதிர்ச்சியுறும் ஒவ்வொரு பத்தாயிரத்துக்கும் மீண்டும் பத்திரம் வாங்கி வர வேண்டும். அது அடுத்த ஐந்தரை ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். இப்படியாக ஒவ்வொரு ஐந்தரை வருடத்திலும் ஐந்தாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம், நாற்பதாயிரம் என்று பெருகிக் கொண்டே போகும். முப்பத்தி சொச்சம் வருடங்கள் வேலை செய்ய முடியுமானால் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் வரும்படி வருமானத்தை பெருக்கியிருக்கலாம். இதெல்லாம் பிராக்டிக்கலாக எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு அத்தனை சுவாரசியமாக இருந்தது. அதையும் செயல்படுத்தவில்லை.

இப்படி வேறு ஏதாவது திட்டம் இருந்தால் சொல்லுங்கள். அதைச் செயல்படுத்தி நாமும் டாட்டா பிர்லாவாகவோ அல்லது அம்பானி பிரதர்ஸ் ஆகவோ மாறிவிடலாம். 

31 எதிர் சப்தங்கள்:

Shankari said...

If you get some idea pls do share! Every month is going off and still planning!
Good post - written well..

Unknown said...

Kissan Vikas Discontinued from 01.12.2011

Vaa.Manikandan said...

ஆமாம். இது 2005 வாக்கில் சொல்லப்பட்ட ஐடியா அரவிந்த்.

Praba said...

does this help you ? http://www.homeshop18.com/product/loadItem?itemId=31265283&catalogueID=2

துளசி கோபால் said...

ஜஸ்ட் ஒரு மூணு வருசம் வெளிநாட்டுலே போய் வேலை செஞ்சுட்டு திரும்பிடலாமுன்னு 'திட்டம்'! இதுலே மாச சேமிப்பு இவ்வளவுன்னு கணக்கெல்லாம் போட்டுக்கிட்டு வந்தோம்.

ஆச்சு 32 முடிஞ்சு இப்போ 33 வருசம். ஆமா......... இந்தியா எங்கே இருக்கு?

எம்.ஞானசேகரன் said...

மியூட்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி. திட்டம்!

கார்த்திக் சரவணன் said...

பணம் சம்பாதிப்பதைவிட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் கேள்விக்குறியாகிவிட்டது. எனக்குத் தெரிந்த ஐடியா ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இது நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். PF எனப்படும் வருங்கால வைப்பாக மாதாமாதம் சம்பளத்திலிருந்து பன்னிரண்டு சதவீதம் பிடித்தம் செய்வார்கள். இது தவிர கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் வரை (மொத்தமாக முப்பத்தாறு) பிடித்தம் செய்வது போல திட்டமிடலாம். உதாரணமாக ஒருவருக்கு சம்பளம் பத்தாயிரம் ரூபாய் எனக்கொள்வோம். அவருக்கு கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படவேண்டிய PF தொகை ஆயிரத்து இருநூறு. இதையே அவர் கூடுதலாக இருபத்து நான்கு சதவீதம் பிடித்தம் செய்ய நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டால் அவரது சம்பளத்திலிருந்து கூடுதலாக இரண்டாயிரத்து நானூறு ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இப்படிப் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு 8.5 சதவீதம் வட்டியும் கிடைக்கும். சம்பளம் குறைவதால் நாமும் அதிக ஆடம்பரமின்றி சுருக்கமாக செலவழிப்போம்.

மொத்தமாக சம்பளம் வந்து அதிலிருந்து செமிப்புக்கென்று மாதாமாதம் எடுத்துவைப்பதை விட, இந்த மாதிரியான சேமிப்பு சாலச் சிறந்தது.

Unknown said...

Hi....now I am 65 years old and widow.when I was 38 ,my husband passed away with nothing ...it was 1988...I too wanted to start something like a small business or buy a shop In west Mambalam.i did not have any one to boost my confidence...I am not blaming any one....gold cost 2000 rupees then....knowing the situation wen one takes risks and plunges he will win...otherwise.one has to be contented......

bullsstreet said...

அன்புள்ள வா.மணிகண்டன்
நன்றாகவே எழுதுகிறீர்கள்.அப்படியே பெட்டியை விட்டு வெளியே வாங்க பாஸ்(Get out of the box).தங்கம் என்றால் ஒரு பவூன் என்ற அளவில் வாங்க வேண்டியதில்லை.ஒரு கிராம் அரைகிராம் கால்கிராம் ஏன் அதற்கும் குறைவான அளவூகளில் 50 மில்லி 100 மில்லி தங்கக்காசுகள் கூட கிடைக்கின்றன.முடிந்த அளவூகளில் மாதாமாதம் வாங்கி சேமிக்கலாம்.என்னுடைய வலைப்பூவிற்கு வாருங்கள்.மாதம் ரூ பத்தாயிரம் மட்டும் முதலீடு செய்து ஒரு வருடத்திற்குள் ஒரு கோடிக்கு அருகே ஆஃப்ஷன் டிரேடிங்கில் எப்படி சம்பாதிப்பது என்று எழுதியிருக்கிறேன்.வெறும் வங்கியில் போடப்படும் ஃபிக்சட் டெபாசிட் பணத்தைக் கொண்டு ஏழே மாதத்தில் 138 சதவீத வட்டி போன்ற லாபத்தை அடைவது எப்படி என்றும் எழுதியிருக்கிறேன்.அவ்வளவூ ஏன் வெறும் ரூ 163 (ஆமாம்பா ஆமாம்.வெறும் நுரற்றி அறுபத்தி மூன்று ரூபா மட்டும்தான்) வைத்துக் கொண்டு 365 நாட்களில் அதை எப்படி ஒரு கோடியாக மாற்றுவது என்றும் எழுதியிருக்கிறேன்.இதில் எதையூம் மிகைப்படுத்தவில்லை.அவசரமில்லாமல் பொறுமையாக லாட்டரலாக யோசித்து ஷேர் டிரேடிங்கில் பணம் பண்ணலாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.இவற்றை தெரிந்து கொள்ள பின்வரும் தளங்களுக்கு வருகை தாருங்கள்.
http://bullsstreetdotcom.blogspot.in
http://bullsstreet.com
நன்றி.
அன்புடன்
டி.ஏ.விஜய்

வெளங்காதவன்™ said...

மாசம் கொஞ்சம் பணம் போட்டு, தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதுதான் சிறந்த திட்டம். நானும் செய்கிறேன். செய்வேன்.

J A G A N said...

The best way that i could think of is to start a small business in part time around the area of expertise.

I think it's almost impossible to work in IT !!! & to have a retirement plan. The only thing we can expect in life can be the unexpected.

R.Subramanian@R.S.Mani said...

' AKKARAIKKU IKKARAI PACHCHAI '

சேக்காளி said...

Jaikumar said...

*open PPF account and contribute max limit.
*invest in MF by monthly SIP.
* Read "Rich dad poor dad" book and realise how we made mistake by investing in home. Also how we are missing the opportunities.

சேக்காளி said...

//ஒரு ஐடியா சொல்லுங்க//
நவீன தொழில்நுட்பங்கள் (LATEST TECHNOLOGY 4G³) மூலம் குறி சொல்வதற்கும், பில்லி சூனியம் வைப்பதற்குமான பன்னாட்டு நிறுவனம் ( MULTI NATIONAL CO - MNC) ஒன்றை $********** செலவில் துவங்க இருக்கிறேன். இந்திய பிரிவை நிர்வகிக்க ஒருவர் தேவை.சேர்த்துக் கொள்ள நான் ரெடி. சேர்ந்து கொள்ள(RISK எடுக்க) நீங்கள் ரெடியா?.

Unknown said...

Idea Kekkurathukku nallathan irukku.....

Selvakumar said...

சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியம் என்பது அனைவராலும் உணரப்பட்டாலும், பலருக்கும் அது புதிராகவே இருக்கிறது. வங்கி FD, தங்கம், பி.எஃப்’.,பங்குச் சந்தை நேரடி முதலீடு, பரஸ்பர நிதி, RD, என்று ஏராளமான திசைகளும், எண்ணிலடங்கா வழிகளும் உள்ளன. ”இதில் எது அதிகம் பயன் தரும்” “எது நல்லது” “எதில் சுலபமாக பணம் பார்க்கலாம்” என்பதெல்லாம் தவறான கேள்விகள். எது நமக்கு உகந்தது என்பதே சரியான தேடல். அதாவது நூறு ரூபாயின் சிறந்த பயன்பாடு ஒருவருக்கு சினிமா, ஒருவருக்கு பிரியாணி, ஒருவருக்கு புத்தகம். வயது, ரிஸ்க் எடுக்கும் அளவு, கையிருப்பு, குறுகிய மற்றும் நீண்ட கால கடமைகள், குடும்ப நபர்களின் வயது, வருமானம், உடல் நிலை, செய்யும் தொழிலின் தன்மை, வாழ்க்கை முறை என பல விஷயங்களை ஆராய்ந்து வாழ்க்கை முழுவதுற்குமான சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு நாள் உடற்பயிற்சி செய்து விட்டு எடை குறைத்து விட முடியாது. தனி நபர் பொருளாதாரம் பற்றிய அடிப்படைகள் எவராலும் படித்து புரிந்து கொள்ளக் கூடியதே. அதன் பின்னர் தகுதியான ஒரு ஆலோசகரிடம் கலந்துரையாடுவது சிறந்தது, பார்ப்பவரிடமெல்லாம் மருத்துவ ஆலோசனை கேட்பது போல இதுவும் ஆபத்தில் முடியலாம். FundsIndia.com போன்ற தளங்கள் அடிப்படை புரிதலையும் நல்ல வழிகாட்டுதலையும் தர இயலும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் "மா விற்கச் சென்றால் காற்றும், உப்பு விற்கச் சென்றால் மழையும் பெய்யும்" அளவுக்கு நல்லூழ் செய்தவன்.பிறகென்ன "உடம்பெல்லாம் நெய்யைப் பூசி உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்" முடிவுக்கு
வந்தாகிவிட்டது.
இங்கே வங்கிகள் நம்மை சேமி என எப்போதும் தூண்டும்,அது அவர்கள் வியாபாரம் நம் பணத்துக்கு ஒரு வீத வட்டிதந்து, அதே நம்பணத்தை 2 வீத வட்டிக்கு விடுவார்கள். அவர்களிடம் ஒரு திட்டம் இருக்கிறது, மாதாமாதம் குறிப்பிட தொகையை போட்டால் வட்டிதருவார்கள், அதை 5 வருடம் தொடர்ந்து போட வேண்டும், 5 வருட முடிவில் வட்டியும் முதலும் கிடைக்கும் ஆனால் இப்பணத்தை இடையில் எடுத்தால் முதலை மட்டுமே தருவார்கள் வட்டி இல்லை.வட்டி போகிறதே என்பதால் 5 வருடங்களையும் பல்லைக் கடித்து விட்டுப்பிடித்தேன்.
இப்போ நோயற்ற வாழ்வு பற்றி சிந்திக்கிறேன். அதனால் "நமக்குக் கீழே உள்ளவர் கோடி என நிம்மதி நாடி விட்டேன்.
ஆனாலும் உங்கள் முயற்சியை நிறுத்த வேண்டாம்.

Gujaal said...

அவரு உங்களுக்கு சோதிடப் பரிகாரம் செய்து பங்கு வணிகம் மிகவும் லாபகரமாக அமைய உதவுவார்.

விஜய் அய்யா,

உங்களின் இத்தனைகால அனுபவத்தில் எத்தனையோ பேருக்கு இவ்வாறு பணம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறீர்கள். ஓரிரண்டு ரெஃபரன்ஸ் கிடைக்குமா?

பிறக்கும்போது உள்ள கிரக அமைப்பின்படி நம் தலையில் எழுதப்பட்ட விதியானதை எப்படி பரிகாரம் மூலம் சரிக்கட்டுவீர்கள்?

Gujaal said...

என் பரிந்துரை http://www.subramoney.com/

sivakumarcoimbatore said...

good idea sir...

sivakumarcoimbatore said...

thanks sir..good idea, vaa mani sir..

Babu said...

As Selvakumar has said one solution does not fit all. It has to be person specific. Still some ideas may have universal appeal. Looking in retrospect the return on many of the savings like bank deposits, PF etc which are relatively risk free have infact shrunk in their real value due to inflation. As long as the asset in which investment is made appreciates in excess of inflation, the savings would be productive. But as one has said, a compulsive savings is better to check avoidable consumption. When your ability to save is currently constrained due to lower income flow, it may be wise to borrow and invest (provided the expected returns are more than debt servicing - only low cost loans - surely not from credit card). But in any case the size of such debt should be reasonable and not ambitious.A debt trap is the worst enemy. It is not wise to pool all your savings into any one asset, especially shares. Investment in speculative assets should be out of real savings - a surplus which you are mentally prepared to lose. The term profits in risky ventures include losses as well. It is a good idea to use voluntary PF,PPF,SIP,RD,insurance etc to the extent of about 65% of your portfolio. Gold,Immovable Property and shares can fill the 35%

Gujaal said...

//voluntary PF,PPF,SIP,RD,insurance etc to the extent of about 65% of your portfolio.//

When will Indian forget the notion of Insurance being an investment engine.
It is an expense tool to risk averse/mitigate to future unexpected heavy expenditures.

vijayscsa said...

Now, we have only NSC (National Savings Certificate) as option from Post office

Unknown said...

விஜய் அய்யா,

குறைச்சது, ஒரு பத்து வருசம் மார்கெட் இருப்பிங்கனு நினைக்கிறேன்,

"வெறும் ரூ 163 (ஆமாம்பா ஆமாம்.வெறும் நுரற்றி அறுபத்தி மூன்று ரூபா மட்டும்தான்) வைத்துக் கொண்டு 365 நாட்களில் அதை எப்படி ஒரு கோடியாக மாற்றுவது என்றும் எழுதியிருக்கிறேன்" -- இத உண்மையா நம்பி நீங்க மட்டும் முதலீடு பண்ணி இருந்தா, 10,000 கோடிக்கு அதிபர் ஆயிருக்கலாம்.

அமுதா கிருஷ்ணா said...

ஹை நம்மளை போல எப்படி சேமிப்பது என்று தெரியாமல் நிறைய பேர் இருக்காங்க.

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்

சேக்காளி said...

புள்ள என்னமா சந்தோசப்படுது.

Unknown said...

http://www.subramoney.com/2014/05/should-i-do-business/

Unknown said...

பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.