May 5, 2014

கூத்துக் கட்டு

மறுபடியும் வருடாந்திரக் கூத்து கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம்தான். ஆரம்பமாகிவிட்டது. ஒரு விண்ணப்பம் ஐந்நூறு ரூபாய். இதிலிருந்தே ப்ளஸ் டூ மாணவர்களின் பெற்றோர்களின் சட்டைப்பைகளில் பொத்தல் விழத் தொடங்குகிறது. ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச இரண்டு அல்லது மூன்று இலட்சம் விண்ணப்பங்களாவது விற்பனை ஆகக் கூடும். கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடுகள், அட்மிஷன் நடைமுறைகளுக்கான செலவுகள் என பல்வேறு செலவுகள் இருந்தாலும் விண்ணப்ப விற்பனையிலேயே கணிசமான இலாபம் பார்த்துவிடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட அறுநூறு பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஊரிலிருக்கும் ஒவ்வொரு சாமி பெயரிலும் கல்லூரி திறந்து வைத்திருக்கிறார்கள். அம்மனாக இருந்தாலும் சரி, முருகனாக இருந்தாலும் சரி, யேசுவாக இருந்தாலும் சரி, அல்லது மேரி, பிறை என்று ஒரு சாமி பாக்கியில்லை. அவை போக அரசியல் தலைவர்களின் பெயர்கள், ரெளடிகளின் இனிஷியல்கள் என்று சகல பெயர்களிலும் கல்லூரிகளைத் திறந்து வைத்துக் கொண்டு பெரிய பொறியோடு அமர்ந்திருக்கிறார்கள் கல்வித் தந்தைகள். அதுவும் இந்த மேனேஜ்மெண்ட் கோட்டா என்று இருக்கிறது பாருங்கள். அதற்கு இவர்கள் கொடுக்கும் பில்ட் அப்தான் அட்டகாசம். ‘இன்னும் இரண்டு ஸீட்கள்தான் இருக்கிறது. ஒரு லட்சம் டோக்கன் தொகையாக கொடுத்துவிடுங்கள். நாளைக்கு இருக்குமா என்று சொல்ல முடியாது’ என்பார்கள். விட்டால் கிடைக்காது, போனால் வராது என்கிற குருவி லேகிய வியாபாரம்தான். மாணவர்களையும், பெற்றவர்களையும் யோசிக்கக் கூட அனுமதிக்க மாட்டார்கள். ஏமாந்த சோனகிரிகள் உடனடியாக பணத்தைக் கட்டிவிடுவார்கள். இப்படியே ஏகப்பட்ட ஸீட்களை விற்றுவிடுகிறார்கள். சென்றவருடம் கோயமுத்தூரின் பெரிய கல்லூரிகளில் கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய் வரைக்கும் மெக்கானிக்கல் ஸீட்களை விற்றிருக்கிறார்கள். இந்த வருடம் என்ன விலைக்கு விற்பார்கள் என்பது அந்த அங்காள பரமேஸ்வரிக்குத்தான் தெரியும்.

தமிழகத்தில் மட்டும்  இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. இளிச்சவாய பெற்றோர்களின் இளிச்சவாய பிள்ளைகளுக்காக இவை வாயைத் திறந்து காத்துக் கிடக்கின்றன. சப்தமேயில்லாமல் அவர்களை கபளீகரம் செய்து கொள்ளப் போகின்றன. ஒவ்வொரு வருடமும் இதுதானே நடக்கிறது? 

இந்த இரண்டு லட்சம் இடங்களில் தகுதியான இடங்கள் என்றால் வெறும் ஐம்பதாயிரம் இருக்கக் கூடும். மிச்சம் மீதியெல்லாம் கல்வித் தந்தைகளின் பாக்கெட்களை நிரப்புவதற்கான பாதாளக் குழிகள். மாணவர்களுக்கும், இந்த நாட்டுக்கும் இவை வேறு எந்த விதத்திலும் பிரையோஜனமற்றவை. அதுவும் பாருங்கள்- விதவிதமான பாடத்திட்டங்களை உருவாக்கிவிட்டார்கள். இதில் பெரும்பாலான படிப்புகளுக்கு இந்தியாவில் வேலையே இல்லை என்பதுதான் கொடுமை. நம்மவர்களும் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று அந்தப் பாடத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். படிப்பை முடிக்கும் போதுதான் எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்பது தெரியும்.

வீட்டிற்கு பக்கத்தில் இருக்கிறது, பக்கத்து வீட்டு அண்ணன் இங்குதான் படிக்கிறான், அக்கா இந்த சப்ஜெக்ட்தான் படித்துக் கொண்டிருக்கிறாள் போன்ற மொன்னையான காரணங்களை வைத்துக் கொண்டு தகுதியே இல்லாத பொறியியல் கல்லூரிகளிலும், துளி கூட வேலை வாய்ப்பு இல்லாத பாடங்களிலும் சேர்ந்து புதைகுழியில் விழுபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு லட்சம் பொறியாளர்கள் உருவாகிறார்கள் என்றால் ஆந்திரா, கர்நாடகாவை கணக்கு எடுத்தால் எவ்வளவு பேர் இருப்பார்கள்? வடமாநிலங்களில் எத்தனை பேர் இருப்பார்கள்? அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் பி.ஈ முடிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? ஒரு வினாடி யோசித்துப்பார்த்தால் கிறுகிறுத்துவிடும். 

ஆனால் ஒரு வருடத்தில் அதிகபட்சம் எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன? டிகிரி வாங்குபவர்களின் கணக்கோடு ஒப்பிடும் போது அது சொற்பமான எண்ணிக்கைதான். கடந்த சில வருடங்களாக நம் நாட்டில் வேலை வாய்ப்பு திணறிக் கொண்டிருக்கிறது. எழுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் படிப்புக்கு சம்பந்தமேயில்லாத வேலைகளில் இருக்கிறார்கள். பி.ஈ முடித்துவிட்டு கந்து வட்டிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் சூப்பர்வைசர்களாகவும் கம்யூட்டர் ஆபரேட்டர்களாகவும் காலம் தள்ளுகிறார்கள். பல லட்சம் செலவு செய்து படித்தவன் ஏழாயிரத்துக்கும் எட்டாயிரத்துக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

Freshers தேவைப்படும் நிறுவனங்கள் கல்லூரிகளுக்குச் சென்று வளாகத் தேர்விலேயே பொறுக்கி எடுத்துக் கொள்கின்றன. கல்லூரியில் வேலை வாங்காமல் வெளியே வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மூச்சு முட்டத் திணறுகிறார்கள். எங்கள் ஊரில் ஒரு இரட்டையர்கள். அப்பாவும் அம்மாவும் கூலி வேலைதான். கனரா வங்கியில் கடன் வாங்கி இரண்டு பேரையும் பொறியியல் படிப்பில் சேர்த்துவிட்டார்கள். அது ஒரு போனாம்போக்கி கல்லூரி. இரண்டு பேரும் படிப்பை முடித்துவிட்டார்கள். இப்பொழுது வேலை இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு Resume அனுப்பி வைத்திருந்தேன். ஒருவராலும் அவர்களுக்கு உதவ இயலவில்லை. எல்லோரும் ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் தங்களது இறுதியாண்டு ப்ராஜக்டைக் கூட விவரிக்கத் தெரியவில்லை என்கிறார்கள். இரண்டு காரணங்கள் இருக்கின்றன- முதல் காரணம் ஆங்கிலத்தில் சகஜமாக பேச முடிவதில்லை. இரண்டாவது காரணம், பாடத்தில் அறிவு போதுமான அளவு இல்லை. என்ன செய்ய முடியும்? அவர்களின் அம்மா அப்பாவை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. ‘ஏதாச்சும் வேலை வாங்க முடியுமா?’ என்கிறார்கள். பதில் சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது.

மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. இந்த அரசாங்கத்தைத் தான் சாத்த வேண்டும்.

எதற்காக கண்களை மூடிக் கொண்டு கல்லூர்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள்? பத்து வருடம் கல்லூரிகளை நடத்தினால் அதைப் பல்கலைக்கழகம் ஆக்கிவிடுகிறார்கள். பிறகு அவர்கள் வைத்ததுதான் சட்டம். UGC, AICTE என்று கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதற்கும் பிறகு அவற்றைக் கண்காணிப்பதற்கும் ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் இவற்றின் செயல்பாடுகள் அபத்தமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆய்வுக்கு வருகிறேன் என்று கிளம்பி வருவார்கள். வருகிற இடத்தில் கல்வித் தந்தைகள் விருந்துகளும், பெட்டிகளுமாக கொடுத்து பாந்தமாக கவனித்து அனுப்புவார்கள். ‘ஏவ்வ்வ்’ என்று ஏப்பம்விட்டபடியே ‘அத்தனையும் அருமை’ என்று குறிப்பு எழுதி வைத்து விட்டுப் போகிறார்கள்.

இது போன்ற அமைப்புகளில் உறுப்பினராவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சமாகக் கொடுத்து வருகிறார்கள். அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? கல்வித் துறை என்றாலே பணத் துறை என்ற நிலைமை வந்து வெகு காலம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் தகுதியின் அடிப்படையில்தான் துணைவேந்தர்களை நியமிப்பார்கள். இன்றுதான் பார்க்கிறோமே- பணம் கொடுப்பவன் தான் துணைவேந்தர். இது துணைவேந்தர் என்ற பதவிக்கு மட்டும் இல்லை- பதிவாளரில் ஆரம்பித்து க்ளார்க் வரைக்கும் ஒவ்வொரு பதவிக்கும் இதுதான் நிலைமை. 

இவர்கள்தான் இந்தியக் கல்வியின் முதுகெலும்புகள். லஞ்சமாகக் கொடுத்த பணத்தை சம்பாதிக்க வழி தேடுவார்களா அல்லது கல்விச் சேவை புரிவார்களா?

கல்லூரிகளில் ஆய்வகங்கள் இல்லை, தகுதியான ஆசிரியர்கள் இல்லை, மாணவர்களை பொறியியாளர்களாக மாற்றும் சிறப்பான பாடத்திட்டங்கள் இல்லை என்ற ‘இல்லைகளை’ பட்டியலிட்டால் ஒரு ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். சென்ற வருடம் மட்டும் எண்பதாயிரம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது மனதுக்கு சற்று ஆறுதலான செய்தி. மாணவர்கள் விழிக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். போதுமான சேர்க்கை நடைபெறாததால் தொடர்ந்து நடத்த இயலாமல் கிட்டத்தட்ட இருபது கல்லூரிகள் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன என்று சொல்கிறார்கள். நல்ல விஷயம். கண் துடைப்புக்காக நான்கு செங்கற்களை நட்டவைத்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பவர்கள் திணறட்டும். ஆறாயிரம் எட்டாயிரம் என்று சொற்ப சம்பளம் கொடுத்து வாத்தியார்களை கொத்தடிமைகளாக நடத்தும் கல்லூரி கனவான்கள் ஒழிந்து போகட்டும். வெறும் நூறு கல்லூரிகள் இருந்தாலும் தரமான கல்லூரிகளாக இருந்தால் வெளியே வரும் மாணவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். 

பொத்தாம் பொதுவாக பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டு ‘எம் புருஷனும் கச்சேரிக்கு போகிறான்’ என்ற கணக்காக நான்கு வருடங்கள் கனவுக்கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருக்கும் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வெகுஜன ஊடகங்கள்தான் துளியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அரசியல் தாதாக்களாலும், அரசியல்வாதிகளாலும், ரெளடிகளாலும் நடத்தப்படும் தகுதியில்லாத கல்லூரிகளின் தோலை உரித்துத் தொங்கவிடும் வேலையை துணிந்து அவர்களால் செய்ய இயலும் என நம்பமுடியாது என்றாலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குருட்டுத்தனமான பொறியியல் மோகத்தை கொஞ்சம் குறைத்துவிடும் விடும் வேலையையாவது செய்யலாம். 

பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டு ‘எவன் எப்படி போனால் என்ன?’ என்று கைகழுவிவிடும் கல்லூரிகளை மூடினால்தான் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளும், அவர்தம் பெற்றோரின் சம்பாத்தியமும் தப்பிக்கும். ஒரு மாணவன் பொறியியல் முடித்துவருவதற்கு தங்களது வாழ்நாள் சம்பாத்தியத்தையும் கரைத்துவிடும் மிகச் சாதாரண மனிதர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். BE என்கிற இரண்டு எழுத்துக்களை நம்பி அரைவேக்காடான பொறியியல் கல்லூரிகளிலும், பெயர் தெரியாத பாடங்களிலும் சேர்வதை மாணவர்கள் நிறுத்தட்டும். பொறியியல் மட்டுமே பிழைப்பதற்கான வழி என்று நம்புவதை குறைக்கட்டும். பொறியியல் முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிவிடலாம் என்பது அதீத கற்பனை. இருபத்தைந்து சதவீத பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. மீதமிருக்கும் எழுபத்தைந்து சதவீத மாணவர்களின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நல்ல கல்லூரியில் நல்ல பாடம் கிடைத்தால் மட்டுமே சேர வேண்டும். இல்லையென்றால் தயவுதாட்சண்யமே பார்க்காமல் கவுன்சிலிங் அறையை விட்டு எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வர வேண்டும். 

அட்மிஷனுக்கு இன்னமும் காலம் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் பொறியியல் தவிர்த்து நிறைய பாடங்களும் இருக்கின்றன. இப்பொழுதே யோசிக்கத் துவங்கினால் ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்துவிடலாம். இதுபற்றி இன்னமும் நிறைய பேசுவோம்.

21 எதிர் சப்தங்கள்:

manjoorraja said...

எனக்கு தெரிந்து பலர் பொறியியல் முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். அப்படியே கிடைத்தாலும் சம்பளம் குறைவு தான். (ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல சம்பளம் கிடைக்கிறது). மேலும் அக்கம்பக்கம் பார்த்து தங்களது பசங்களை பொறியியல் சேர்ப்பவர்கள் படும் கஸ்டமும், பொறியியல் பாடத்தில் விருப்பமே இல்லாமல் சேரும் பல மாணவர்கள் படும் கஸ்டமும், பல பாடங்களை அரியர்ஸ் வைத்து திணறுபவர்களும் தற்போது மிகவும் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர்.

Nat Murali said...

Sir,
All the colleges must issue BE or other certificate only under Anna University. Colleges can teach but the syllabus and the exams are controlled by only one Educational Authority (just like SSLC or CBSE). Then you will know the standards of the various Engg colleges.
Give them all time bound 3 to 5 years to fall in line or cancel their licenses. Once the standards are exposed they will move away from BE business to other lucrative -Liquor Manufacturing -Sand /ore exploitation etc..

பாலு said...

Beautiful article.. Spot on.. What I would recommend to the students is take lighter subjects in college like BA (sociology), History, anthropology, etc which form part of civil services exams and concentrate for 2 years on UPSC exams. There you are in the process of nation building.. Since I work with many IRS officers, I can notice that they are neither outstanding nor brilliant throughout their education. Right guidance at right point of time has made all the difference. Do not compete with your neighbour in education..

”தளிர் சுரேஷ்” said...

உண்மையைத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்! ஆனால் விழ வேண்டியவர்கள் காதில் விழுந்தால்தானே! எங்க ஊரில் 700- 800 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எல்லாம் பொறியியல் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் 1100 மதிப்பெண் எடுத்து பொறியியல் படித்தவரே இப்போது வேறு துறையில் பணி செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு என்ன வேலை கிடைக்குமோ? அது என்ன பி.இ மோகமோ தெரியவில்லை!

bala said...

Good article & a timely one Mani

Shankar said...

A very good article in the right time. You have missed one more point. There are many similarities in the names of the colleges. For Instance,
Sri Venkateswara College of Engineering ( SVCE) is a popular college. I know many who have enrolled in similar sounding colleges. Poor parents and innocent students fall victim to this sham.

Kamala said...

நெத்தியடி அடித்துள்ளீர்கள்.கல்வி பணம் சுரண்டும் சுரங்கமாகிவிட்டது.அரசாங்கமே செய்வதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வருத்தப் படலாம்! அதற்கு காசு கொடுக்கவேண்டாம்.அவ்வளவே.

bullsstreet said...

there is an engineering college in Karaikudi, in which they do not giving salary to their staff member for more than 8 months.They do not have laboratories,they do not conduct lab classes and they allow students to do mass copy in university examinations.They promise to parents that they will bring job even if the students have more than 15 arrears.How?they offer jobs with Rs 3000/- as salary.Such a fraud engineering college.Karaikudi students beware of this college in your town.

Unknown said...

BE மோகம் எல்லாம் ஒன்னும் இல்ல, ஊர்ல எல்லாரும் நடுத்தர வர்க்கம். மாச சம்பளத்துல குடும்பம் நடத்தறவங்க. நாலு வருஷத்துல படிப்பு முடிஞ்சிடும். வேலைக்கு போயிடலாம்னு ஒரு நப்பாசை தான்.

வவ்வால் said...

பொறியியல் கல்வி நிலை சரியாக அறிந்துக்கொண்டு எழுதியிருக்கலாம், ஏதோ உணர்ச்சிகரமாக அப்படியாக்கும் ,இப்படியாக்கும் என அடித்து விட்டுள்ளீர்கள்.

20 லட்சத்துக்குலாம் மெக்கானிக்கல் எங்கும் விற்பனை ஆகவில்லை, இப்படிலாம் யாரு கதைக்கட்டி விடுறாங்கனே தெரியலை.

#//இது போன்ற அமைப்புகளில் உறுப்பினராவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சமாகக் கொடுத்து வருகிறார்கள். அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? //

அது மருத்துவக்கவுன்சிலில் மட்டும் தான் மற்றவற்றில் 58 வயசு வரைக்கும் வேலை செய்யக்கூடிய அரசு ஊழியர்களே , மனிதவளத்துறை அமைச்சகம் மூலம் வேலைக்கு வருகிறார்கள், மேலும் பிற பல்கலைகளில் குறைந்தது 7 ஆண்டு டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் அவர்களை டெபுஷேனில் 3 ஆண்டுக்கு வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

எல்லாருமே ஏதோ ஒரு பல்கலை அல்லது ஐ.ஐடி ஊழியர்களே. விசிட்க்கு செல்வதும் பல்கலை கழக ஊழியர்கள் தான் , aicte ,ugc வெறும் மேற்பார்வை தான் ,அவர்கள் எல்லாம் பல்ப்பிடுங்கப்பட்ட பாம்புகள் அவ்வ்!

# வேலைவாய்ப்பு சதவீதம் குறைந்து வருவது உண்மை, சம்பளம் குறைந்து வருவதாக சொல்வதும் உண்மை ,ஆனால் அது எப்படி எனப்பார்க்கணும் , ஐ.டி ஆள் எடுப்பு குறைவதாலும், அதற்கான சம்பளம் குறைவதாலும் , ஒரே அடியாக பொறியியல் படிப்பு கீழ் போச்சு என பிம்பம் உருவாகி இருக்கு.

ஹீண்டாய்ல 25 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்னால் கூட ,கம்மியா இருக்கு எனபோகாமல் "ஐ.டிக்கு தான் போவேன் என்பதால் இந்த விளைவு. உற்பத்தி துறையில் வேலைய கூப்பிட்டு கொடுத்தாலும் போக மாட்டேன் என்பவர்களை என்ன செய்ய?

# பொறியியல் படிப்பில் இப்போதைய பிரச்சினை பார்டரில் பாஸ் ஆகிட்டு ' காசுக்கொடுத்து சீட் வாங்கும்" நபர்களால் தான். அண்ணப்பல்கலை கவுன்சிலிங்கில் இடம் கிடைத்து படிப்பவர்கள் எப்படியோ பிழைத்துக்கொள்வதை அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளேன்.

# டீம்டு யுனிவர்சிட்டி தவிர வேறு எங்கும் இஷ்டம் போல் படிப்பேயில்லை, மற்றவர்கள் எல்லாம் "aicte' sylabus படித்தான் ,அதிகப்பட்சம் வழக்கமான ஆறு பிராஞ்ச்கள் தான். 500 கல்லூரிகளில் நிலைமை அதான்.

VIT,SRM,mgr போன்ற நிகர்நிலைகள் அடிக்கும் கூத்துக்கு ஒட்டுமொத்தமாக சாணி அடிக்கும் உங்கள் பொதுப்புத்தியை என்ன என்பது அவ்வ்.

தருமி said...

//சென்ற வருடம் மட்டும் எண்பதாயிரம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவில்லை ...//

இதற்கு ஏற்றாற்போல் மூடப்படும் கல்லூரிகளும் நிறைய இருக்க வேண்டுமே... அப்படி கவிழ்த்து மூடிய கல்லூரி எதையும் நான் பார்க்கவேயில்லையே.... ஏன்?

NAGARATHAN said...

For the amount of BE's in India (Tamil Nadu) these engineers must lay road to moon. I always call this course (BE) as laying road to moon education

GANESAN said...

சரியாக சொல்லியுளிர்கள். உங்கள் கருத்துக்களுடன்
முழுவதும் உடன்படுகிறேன். ஆனால் எத்தனை பேருக்கு இது புரிய போகிறது?. -கணேசன்

Life said...

இது பொறியியல் இல்ல சார் எல்லாம் பணம் பிடுங்கும் பொறிகள்

பொறியியல் படித்தவர்களுக்கு எல்லாம் வேலையும் இல்லை. இன்றைய காலத்தில் படித்தவனை விட படிக்காதவர்கள் தான் பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள் நாலு பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பொறியியல் படிப்பதால் நமக்கு கூடுதலாக எந்த அறிவும் வைப்பது இல்லை ஏன் என்றல் எல்லாம் அர்த பழைய கல்வி முறைகள்.

ஒரு வண்டி பழுது பார்பவருக்கு இருக்கும் அறிவு லட்சங்களில் செலவு செய்து படித்தவனுக்கு இல்லை.
எனவே அனுபவமே பணத்தை பெற்று தருமே தவிர படிப்பு அல்ல .படித்தால் ஒரு அடிமையாக எவனோ ஒருவனுக்கு நம்முடைய மூளையை அடமானம் வைத்து சுதந்திரம் எதுவும் இல்லாமல் ஒரு அடிமையாக மட்டுமே இருக்க முடியும்.

விரைவில் செக்யூரிட்டி கூட பொறியியல் படித்தவராக இருப்பார்.இதுவும் நடக்கும்.

சேக்காளி said...

//விரைவில் செக்யூரிட்டி கூட பொறியியல் படித்தவராக இருப்பார்//
I am waiting.

ஜீவன் சுப்பு said...

@ வவ்வால் ...
//20 லட்சத்துக்குலாம் மெக்கானிக்கல் எங்கும் விற்பனை ஆகவில்லை, இப்படிலாம் யாரு கதைக்கட்டி விடுறாங்கனே தெரியலை.//

கதை இல்லங்க .. உண்மைதான் . கோவையில் உள்ள , இனிசியலை பெயராகக் கொண்ட கல்லூரியில் அதுதான் அமவுண்ட என்று கேள்வி . கவுரவத்திற்காகவே கொடுக்கிறார்கள் . முன்பு ece & it க்கு கொடுத்தார்கள் . சேவை துறையில் வேலை வாய்ப்பு குறையவும் இப்பொழுது மீண்டும் Core subject ஆனா மெக்கானிக்கல் , சிவிலுக்கு டிமான்ட் .

படிச்சு முடிச்சு ஆறுமாசமாச்சி இன்னும் வேலை கிடைக்கலங்குறது ரெம்பப் பழைய டயலாக் , படிச்சு முடிச்சு ஒரு வருசமாகியும் எவனும் IV கே கூப்பிடமாட்டேங்குறாங்குறதுதான் லேட்டஸ்ட் டயலாக் .

எங்க வீட்டு அம்மணி ஒரு லட்சம் கடன் வாங்கி காரைக்குடி அருகிலிருக்கும் ஒரு கல்லூரியில் படித்து விட்டு இப்போ வேலைக்காக , அதுவும் deo வேலை கிடச்சாக்கூட ok வாங்குன கடன திருப்பி செலுத்தலாம் ன்னு அலைஞ்சிட்டு இருக்கோம் .

அடிச்சு கேப்பான் அப்போகூட சொல்லீடாத ன்னு ஒரு வடிவேலு டயலாக் வரும் , அது மாதிரி free seat , No donation ன்னு சொன்னாகூட யோசிச்சு சேருங்கப்பா ... இல்லன்னா வாழ்க்கை பூரா கடன்காரந்தான் ...

ஜீவன் சுப்பு said...

மருத்துவமும் , கல்வியும் இலவசமாக , தரமாக கிடைக்கவேண்டுமென்று சொல்வார்கள் . ஆனால் , இப்பொழுது அது இரண்டும் தான் தரமற்று , காஸ்ட்லி ஆக இருக்கிறது .

அமுதா கிருஷ்ணா said...

இரண்டு வருடம் முன்பு கோயம்புத்தூர் இனிஷியல் கல்லூரியில் 13 லட்சம் கொடுத்து ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் சேர்த்தார்கள். இது தவிர வருடம் ஒரு லட்சம் ஃபீஸ்.இப்போது அந்த பையன் நான் படிக்க மாட்டேன் என்று இரண்டாவது வருட முடிவில் பிடிவாதம் பிடித்து கலைக்கல்லூரியில் இந்த வருடம் சேர்க்க இருக்கிறார்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//உற்பத்தி துறையில் வேலைய கூப்பிட்டு கொடுத்தாலும் போக மாட்டேன் என்பவர்களை என்ன செய்ய?//
அப்படிப் போகாமல் இருப்பது மடத்தனம்.
ஆனால் கடந்த ஆண்டில் கோர் கம்பெனிகளில் கேம்பஸ் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மிகக் குறைவு என்றே கேள்விப் பட்டேன். ஐ .டி அல்லாதோர்க்கும் ஐடி கம்பெனிகளே கை கொடுத்துள்ளன.சில முன்னிலைக் கல்லூரிகளின் placement விவரங்களை பார்க்கும்போது கேம்பஸ் மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்க கோர் கம்பெனிகள் அவ்வளவாக முன்வருவதில்லை என்றே தோன்றுகிறது.மேலும் ஐ.டி. துறை அளவுக்கு ஆட்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

வவ்வால் said...

முரளி,

கோர் கம்பெனிகளில் எப்பவுமே பி.ஈ முடிச்சவர்களின் எண்ணிக்கை கம்மியாத்தான் தேவைப்படும் , டிப்ளமோ,ஐடிஐ தான் அதிகம் தேவைப்படும், ஏன்னா அவங்க தான் உண்மையான "ஒர்க் ஃபோர்ஸ்' ,பி.ஈ முடிச்சவர்கள் "அங்கே டாப் லெவல் அதிகாரிகள், 10 ஐடிஐ க்கு ஒரு டிப்ளமோ , அதே போல 100 பேருக்கு ஒரு பி.ஈ தேவைப்படும் சூழல் எனவே பொறியியல் பட்டதாரிகளின் ஆளெடுப்பில் கோர் கம்பெனிகளுக்கு மிக குறைவாகத்தான் தேவைப்படும், அவற்றையும் மிக நல்ல கல்லூரிகளில் முடித்துக்கொள்வார்கள்

நீங்க வேண்டும்னா கவனிச்சு பாருங்க ,டிப்ளமோ, ஐடிஐ முடிச்சவர்கள் அதிகமாக வேலையில்லைனு சொல்லும் நிலை இருக்காது.

# எனவே உற்பத்தி அதிகரிக்காத சூழலில் கோர் கம்பெனிகள் ஆண்டு தோறும் பொறியியல் பட்டதாரிகளை அதிகம் வேலைக்கு எடுக்காது, எப்பொழதுமே சீரான ஒரு எண்ணிக்கையில் தான் அவர்கள் ஆளெடுப்பு இருக்கும்.

இத்தனை நாளாக ஐடி நிறுவனங்கள் " தேவை இருக்கோ இல்லையோ" எடுத்து வைத்துக்கொள்வோம், எப்படியும் புதிய ஆர்டர்கள் வரும் என முன்னரே கேம்பசில் ஆள் எடுப்பார்கள், தற்போது ஐடி இல் மந்தம் என்பதால் அப்படி ஆள் எடுப்பதை குறைத்துக்கொண்டார்கள்,எனவே வேலைவாய்ப்பு மங்கியதாக தெரிகிறது.

#//ஐ .டி அல்லாதோர்க்கும் ஐடி கம்பெனிகளே கை கொடுத்துள்ளன//

பொறியியலில் ஐடி என்ற பாடப்பிரிவே இருக்கு ஆனால் அவர்களை அதிகம் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் -))

கம்பியூட்டர் சயின்ஸ் அப்புறம் இசிஈ, மெக், டிரிபிள் ஈ ,இவர்களை தான் எப்பவுமே அதிக அளவில் "ஐ டி" நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும். ஏனெனில் மென்ப்பொருள் என்பது ஏதேனும் ஒரு துறைக்கு என தான் உருவாக்கப்படுகிறது, எனவே அத்துறையில் படித்து ,கணினி அறிவும் உள்ளவர்களை கொண்டு வேலை வாங்குவது எளிது என்ற காரணமே.

பலப்பொறியியல் கல்லூரிகளிலும் ஐடி என்ற பிரிவில் தான் அதிகம் காலியிடம் இருக்கும், மேலும் அந்த பிரிவையே மூடிவிட்ட கல்லூரிகளும் நிறைய அவ்வ்!

IT branch intake will be converted to some other branch by applying to aicte and anna university.

# //மேலும் ஐ.டி. துறை அளவுக்கு ஆட்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.//

IT ல நிறைய ஆள் எடுத்துட்டு ,குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியே அனுப்பிட்டே இருப்பாங்க, கேம்பஸில் எடுக்கும் ஆட்களில் 50% ஐ ஆறு மாதத்தில் வெளியில் தள்ளிடுவாங்க, இது போல எல்லாம் கோர் கம்பெனிகள் செய்வதில்லை, குறைவான ஆட்களை எடுத்தாலும் மெயின்டெயின் செய்துகொள்வார்கள்.

ஐடி ல நினைச்சா ஆள் சேர்க்கலாம், தூக்கலாம்னு வசதி இருப்பதால் , திறமையான ஆளைக்கண்டுப்பிடிக்கவே வேலைக்கு எடுத்து சோதித்துப்பார்க்கிறார்கள்.

Venkat said...

Sir, also the attitude of students towards the period after degree is 0. They think that there would be some 17th Standard after the 16 years.
I am still repenting the attitude towards college study. Just a talk by a working professional to these students would blow their mind and channelize them