May 17, 2014

நாம் ஏன் ஹிந்தி கற்கக் கூடாது?

ஹைதராபாத்தில் பணியாற்றிய நிறுவனத்தில் யூனியன் கொஞ்சம் கெட்டி. அவ்வப்போது தொழிலாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். ‘இஞ்சினியரிங் முடித்துவிட்டேன்; சுக்கினியரிங் முடித்துவிட்டேன்’ என்று பொறியாளர்கள் யாரும் வாலாட்ட முடியாது. கூட்டி வைத்து கும்மி விடுவார்கள். அப்படியிருந்தும் எல்லோரும் அடங்கியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஒரு பையன் சேட்டையைக் காட்டி வாங்கிக் கட்டிக் கொண்டான். அவன் அப்பொழுதுதான் பி.ஈ முடித்திருந்தான். ஏதோ அரசியல் சார்பில்தான் வேலை வாங்கியிருந்தான். அவனது அப்பாவுக்கு சில அரசியல் தொடர்புள் இருந்தன. அதனாலோ என்னவோ நாக்கு சற்று நீளம். ஆறு மாதங்கள் பயிற்சி முடித்தவுடன் உற்பத்தி துறையில் (Production department)இல் அமுக்கிவிட்டார்கள். அந்தத் துறையில்தான் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டியதாக இருக்கும். இவன் அடிவாங்கட்டும் என்றே அந்தத் துறையில் அமுக்கினார்களா என்று தெரியவில்லை. இவனும் போன இடத்தில் வாயை வைத்துக் கொண்டிருக்காமல் ‘அக்கட குச்சொது; இக்கட மாட்லாடொது’ என்று தொழிலாளர்களிடம் வம்பு செய்யத் தொடங்கியிருந்தான். பொறுத்துப் பொறுத்து பார்த்தவர்கள், ஒரு நாள் ராத்திரியோடு ராத்திரியாக அழைத்துச் சென்று பட்டையைக் கிளப்பிவிட்டார்கள். ‘இதோடு நிறுத்திக்க.... இல்லைன்னா குண்டூருக்கு குண்டுக்கட்டாக மூட்டைக் கட்டித்தான் தூக்கிப் போவார்கள்’ என்கிற ரீதியில் பேசி வாய் மீது இரண்டு போட்டிருக்கிறார்கள். வீங்கிய உதட்டோடு மூன்று நாட்கள் சுற்றிக் கொண்டிருந்தான். அடங்கிவிட்டான். பிறகு வேறு துறையை கேட்டு வாங்கி செட்டில் ஆகிவிட்டான்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இந்த உதடு வீங்கிய விவகாரம் பயத்தைக் காட்டிவிட்டது. தெலுங்கும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. ஏதாவது விவகாரத்தில் நம்மையெல்லாம் மூலைக்கு இழுத்துச் சென்றால் கெஞ்சுவதற்குக் கூட வழியில்லாமல் கதற வேண்டுமே என்ற பயம்தான்.  முதல் வேலையாக தெலுங்கு பேசிப் பழகிக் கொண்டேன். அந்தந்த ஊரில்  அந்தந்த மொழி தெரிந்திருப்பது வரம் நம்மையும் அறியாமல் தைரியம் வந்துவிடும். கர்நாடக வந்த பிறகு கன்னடம் பேசிப் பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் அதை இன்னமும் செய்யவில்லை. ஆட்டோக்காரராக இருந்தாலும் சரி; மளிகைக்கடைக்காரராக இருந்தாலும் சரி- தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். ஏதாவது ஒரு தேவை வந்தால்தான் அந்த மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற வேகம் வரும். இல்லையென்றால் அசமஞ்சம்தான்.

இந்தியாவில் தமிழர்களுக்கு மட்டும்தான் ஹிந்தி சுத்தமாகத் தெரிவதில்லை. மலையாளிகளுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஆனால் நம் அளவுக்கு மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல மலையாளிகளுக்கு ஹிந்தி தெரிகிறது. நான்கு ஹிந்திக்காரர்கள் இருக்கும் ஒரு டீமில் தமிழனாக இருப்பது பெரிய பிரச்சினை. இரண்டு மூன்று தமிழர்கள் இருந்தால் தப்பித்துவிடலாம். தனியொருவனாக சிக்கிக் கொண்டால் பிதுங்கப் பிதுங்க முழிக்க வேண்டும்.ஏதாவது பேசிக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்தியில்தான் பேசிக் கொள்கிறார்கள். நம் இருப்பை கிட்டத்தட்ட புறக்கணித்துவிடுவார்கள். பல சமயங்களில் இது அயற்சியாகிவிடுகிறது. எனது பழைய டீமில் இரண்டு மூன்று முறை ‘ஆங்கிலத்தில் பேசுங்க’ என்று சொல்லியிருக்கிறேன். அதற்காகவே என் மீது சிலருக்கு எரிச்சல். அவ்வப்போது முகத்தைக் காட்டிவிடுவார்கள். இருந்தாலும் ஹிந்தியில்தான் பேசிக் கொள்வார்கள். முக்கியமான பிரச்சினையாக இருக்கும். நாம் அதைக் கோட்டை விட்டிருப்போம்.

இரண்டு தலைமுறைகளாக ஹிந்தி தெரியாமல் வளர்ந்துவிட்டோம். முன்பெல்லாம் இது நல்ல விஷயமாகத்தான் தோன்றியது. நம் மாநிலம் மட்டும் இரும்புக் கோட்டையாக இருக்கிறது என்ற ஒரு நினைப்பு அது. சரிதான். ஆனால் அரசியல் ரீதியாக மட்டும்தான் இது ஒரு இரும்புக் கோட்டை. பத்தாவது படித்த பையன் அவ்வளவு சீக்கிரம் வேறு மாநிலங்களில் வேலை வாங்க முடிவதில்லை. ஒரு செக்யூரிட்டி வேலையாக இருந்தாலும் கூட முதல் கேள்வியாக ‘என்ன மொழி தெரியும்’ என்பார்கள். நம் ஊரில் பத்தாவது படித்த பையனுக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழி தெரியும்? ஒரு டிரைவராகக் கூட சேர்த்துக் கொள்வதில்லை.

அரசியல்வாதிகளிடம் ‘நாம் ஏன் ஹிந்தி கற்கக் கூடாது?’ என்று பேசினால் அதன் நுண்மையான சிக்கல்களைப் பேசுவார்கள். ஏற்றுக் கொள்ளும்படிதான் இருக்கும். ஆனால் இது ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு வேண்டுமானால் பொறுத்தமாக இருக்கும். நம் ஊர்; நம் மக்கள்; நம் தொழில் என்று முழு ஆயுளையும் ஒப்பேற்றிவிடலாம். இப்பொழுதுதான் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் கிட்டத்தட்ட அத்தனை அரண்களையும் உடைத்துவிட்டார்களே. திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மொழி அறியாத காரணத்திற்காக ஏன் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? என்னதான் யோசித்துப் பார்த்தாலும் ஹிந்தி உள்ளே நுழைந்தால் தமிழ் நசுங்கிப் போகும் என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சாகத்தான் தெரிகிறது. வடக்கத்திக்காரன் இங்கு கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் தாண்டி உள்ளே வர முடிவதில்லை என்கிற ரீதியில் இது திராவிட அரசியல்வாதிகளுக்கு பெரும்பலம். ஆனால் உண்மையில், சாமானிய மக்களின் அத்தனை சிறகுகளையும் இது பிடுங்கிப் போட்டுவிடுகிறது என்பதுதான் நிதர்சனம். 

ஹிந்தித் திணிப்பைத் தடுப்பது சரியான விஷயம்தான்- கட்டாயம் ஆக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த மொழியை பள்ளியில் படிக்கக் கூட வழியில்லாமல் தடுப்பது பெரும் பாவம். இதைத் தடுத்து எதைச் சாதிக்கப் போகிறோம்? கன்னடக் காரனுக்கும், தெலுங்குக்காரனுக்கும் ஹிந்தி தெரிகிறது என்பதால் அவர்கள் எதை இழந்துவிட்டார்கள்? கன்னடத்திற்குத்தான் தமிழை விடவும் ஞானப் பீட விருதுகள் அதிகம். தமிழை விடவும் அதிகமாக கன்னட மொழியில் நல்ல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. தமிழர்களைவிடவும் கன்னடர்கள்தான் தாய்மொழி உணர்வோடு இருக்கிறார்கள். 

ஹிந்தி மொழி தெரியாமல் வெளிமாநிலங்களில் வேலைக்கு போவது முடியவில்லை என்பது மட்டும் பிரச்சினை இல்லை- தொழிற்துறையினருக்கும் சிரமம்தான். டெக்ஸ்டைல் துறையில் இருப்பவர்களை விசாரித்துப் பாருங்கள் - பஞ்சு மஹாராஷ்டிராவில் இருந்து வருகிறது. டெக்ஸ்டைல் எந்திரங்கள் லூதியானாவில் இருந்து வருகின்றன. மஹாராஷ்டிராக்காரனுக்கு மராத்தியும் தெரியும் ஹிந்தியும் தெரியும். லூதியானாக்காரனுக்கு பஞ்சாபியும் தெரியும், ஹிந்தியும் தெரியும். தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். வரவு செலவாக இருந்தாலும், வேறு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் இடையில் மீடியேட்டரை வைத்துக் கொண்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமக்கல் லாரிக்காரர்களிடம் பேசினால் இன்னமும் கதைகளைச் சொல்வார்கள்.

ஹிந்தியைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அது ஒரு மொழி. ஒரு Tool. பயன்படுத்திக் கொண்டு மேலே வரப் பார்க்க வேண்டுமே தவிர, இதை சென்ஸிடிவ் பிரச்சினையாக மாற்றி தங்களது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி இன்னுமொரு தலைமுறையின் வாய்ப்புகளையும் இருட்டடிப்பு செய்வதையாவது நிறுத்திக் கொள்ளலாம் என்பதற்காகச் சொல்கிறேன். நம் பிள்ளைகளின் பாவம் நம்மைச் சும்மா விடாது.

41 எதிர் சப்தங்கள்:

prabu said...

Sathiyamana varthai...

Tamil Indian said...

Everybody is free to learn Hindi. Have a reason to learn? Do it then. Ethu thadukkirathu?

நாச்சியப்பன் said...

நல்லதாய் நான்கு பழைய ஹிந்திப் பட DVD (எ.கா. ஆராதனா, ஷோலே, ஆனந்த், அபிமான்) பார்த்து ஒரே மாதத்தில் ஹிந்தி கற்று கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து விடுங்கள். குறிப்பு: subtitle இல்லாமல் படம் பார்க்கவும்

ராவணன் said...

இந்தி கற்றுக்கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளன. உங்களுக்கு இந்தி தேவை...எனக்கு ஜப்பான்...பிரெஞ்சு மொழிகள் வேண்டும். அனைத்தையும் படிக்கவேண்டும் என்று அரசு நிர்பந்திக்கமுடியாது. அனைத்து மொழிகளையும் அரசு பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியாது. அரசுபள்ளிகளில் மட்டுமே இந்தி கிடையாது. தனியார் பள்ளிகளில் இந்தி என்ன...சம்ஸ்கிருதம் கூட இருக்கு. சம்ஸ்கிருதம் படித்து கோயிலில் மணியாட்டவா போகின்றார்கள். உங்களுக்குப் பிடித்த மொழியைக் கற்க யாரும் தடைபோடவில்லை.

…எனக்கு இந்தி மொழி எந்தக்காலத்திலும் தேவைப்படவில்லை. நான் எதற்கு இந்தி படிக்கவேண்டும்.?

…உங்கள் டீமில் உங்களுக்குத் தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் தமிழில் பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள்.அதன்பின்னர் யாரும் இந்தியில் பேசமாட்டார்கள். உங்கள் மொழி கேவலமானது என்ற எண்ணம் இருந்தால் இந்தி படித்து இந்திக்காரர்களுடன் குலவுங்கள்,

Lakshmana Perumal said...

தமிழர்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளாததால் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் (ஏன் நம்மைப் போன்ற பொறியாளர்களும் இதில் சேர்த்தி) பேசிப் பேசி பழகுவதால் வெளிநாட்டில் பணி புரியச் செல்கிற போதும் சரி, பிற மாநிலங்களில் பணி புரியச் செல்கிற போதும் நம்மையும் அறியாமல் ஆங்கிலத்தில் சமாளித்து வெற்றி கண்டுள்ளோம். ஆரம்பக் கட்டங்களில் கஷ்டப்படுவோம் என்பது உண்மைதான். எனக்குத் தெரிந்து ஹிந்தியை பள்ளியில் படித்த தமிழர்கள் ஹிந்தி பேசிக் கேட்டிருக்கிறீர்களா? அதை விடக் கொடுமை எதுவும் இருக்காது. ஆனால் அவர்களுக்கு ஹிந்தியில் என்ன எழுதி இருக்கிறது என்பதை வாசிப்பது லாபம் தான். ஒரு மொழியை additional ஆக கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதில் உடன்படுகிறேன். பயன்பாட்டளவில் பேச மட்டுமே நீங்கள் குறிப்பிடுகிற மற்ற மொழிகள் பெரும்பாலும் தேவைப்படுகிறது. ஆந்திராக் காரனின் ஆங்கில உச்சரிப்பைக் காட்டிலும் நம்முடைய உச்சரிப்பும் மலையாளிகளின் உச்சரிப்பும் ஓரளவு நன்றாக இருப்பதாகவே நான் உணர்கிறேன். மொழியைக் கற்றுக் கொள்ள பள்ளியில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்ற நியதி சரியென எனக்குத் தோன்றவில்லை. மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் நீங்கள் சொல்ல முனைவதும் பேச்சுக்குத் தான் ஹிந்தி தேவை என்று சொல்வதாக நினைக்கிறேன். எழுத்துக்களைப் படிக்க வேண்டுமானால் பள்ளிகளில் ஹிந்தி அவசியம், ஆனால் ஹிந்தியை வெகு வேகமாகக் கற்றுக் கொண்டவர்கள் யாரென பாருங்கள். படிக்காமல் , நீங்கள் குறிப்பிடும் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் தான். அவர்களால் மட்டுமே வெகு விரைவாக எந்த மொழியையும் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. கட்டாயம் வருகிற போது மனிதர்கள் உலகின் எந்த மூளையில் வாழ்ந்தாலும் அதைக் கற்றுக் கொள்வார்கள். அல்லது கற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் இருக்கும் சவுதியில் கூட அராபிய மொழியை நன்கு பேசுபவர்கள் நம்மூரில் பள்ளியில் படிக்காமல் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அரேபிய மொழியை நன்கு பேசுவார்கள். படித்தவர்கள் நம்பர்களை மட்டும் தெரிந்தால் போதுமென்று , (அது எதற்கெனில் அராபியில் கடைக்காரன் கேட்பதற்கு சரியாகக் கொடுக்க வேண்டுமல்லவா ) அராபிய மொழியை அவ்வளவோடு கற்றுக் கொண்டு நிறுத்தி விடுவார்கள். ஆங்கில மொழியின் தேவை தேவையென்பது ஹிந்தியைக் காட்டிலும் அதிகமாகும், நீங்கள் குறிப்பிடுகிற உலக மயமாதலில். ஆதலால் அரசியல் காரணங்களுக்காக ஹிந்தியை எதிர்க்கவில்லை. நீண்ட காலத்திற்கு ஒரு மொழியை கற்றுக் கொள்ளத் தேவைப் பட போவதில்லை. கட்டாயமே ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது.

Aba said...

இலங்கைல சிங்களவர்கள் அதிகமா (கணிசமான அளவு) இருக்கற ஏரியாவுக்கு வந்து ஏழு வருஷமாச்சு. இன்னும் எனக்கு பதினைஞ்சு நிமிஷம் தொடர்ந்து சிங்களம் பேச முடியாது, ஆனா பாஷை நல்லா புரியும். குரோதமெல்லாம் இல்லை. வெட்கம்தான். யாழ்ப்பாணத்துல இருந்து வந்த புதுசுல என்னோட யாழ்ப்பாணத் தமிழை வச்சு இந்திய வம்சாவளி தமிழ் நண்பர்கள் ரொம்பக் கிண்டல் பண்ணாங்க. ரெண்டே மாசத்துல தமிழை மாத்திக்கிட்டேன். அப்புறம் அந்த பயம் மனசுல பதிஞ்சு போய் இப்போ சிங்களம் பேச விடாம தடுக்குது.

பத்து பதினஞ்சு சிங்கள நண்பர்கள் கேங்கில இருக்கும்போது அவங்க சிங்களத்துல பேசிக்கறது நல்லா புரியும். ஆனா பதிலுக்கு ஆங்கிலத்துல பேசிட்டிருப்பேன். அவங்களும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க (என்னோட இன மத orientation நல்லா தெரிஞ்சதனால). இதனாலேயே (தேவைப்படாததனால) இதுவரைக்கும் சிங்களம் பேசி பழகினதில்லை. இனி உடனடியா பாஷை கத்துக்கணும்...

Vaa.Manikandan said...

ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னதாக சில நண்பர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது மொழி ஒன்றை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இங்கு இல்லை. மூன்றாவது மொழியாக ஹிந்தியை பாடத்திட்டத்தில் வைத்திருந்தால் தவறு ஒன்றும் இல்லை.

Anonymous said...

இந்தியை யார் படிக்க வேண்டாம் என சொன்னது. இப்போது எல்லாம் தனியார் பள்ளிகளில் இந்தி படிக்கின்றார்கள். பிரைவேட் டுயுசனில் போய் படிக்கின்றார்கள். இந்தி பிரச்சார் சபாவில் தேர்வு எழுதுவோர் நிறைய பேர்.

என்னைக் கேட்டால் இந்தியை விட பஞ்சாபியை படியுங்கள் என்பேன். பஞ்சாபி படித்தால் இந்தி, குஜராத்தி என பல மொழிகளை புரிந்து கொள்ளவும் பேசவும் முடியும். அத்தோடு பஞ்சாபி உலகாளவிய மொழியாகவும் உள்ளது. நீங்கள் மட்டும் பஞ்சாபி பேசினால் பஞ்சாபி காரன் உதவி செய்வான் என்பதை தில்லியில் பார்த்துள்ளேன். அத்தோடு இந்திக் காரனே மூக்கின் மீது விரல் வைப்பான்.

என்னைக் கேட்டால் எங்கு வசிக்கின்றோமோ அந்த மாநில மொழியையும், தமது தாய் மொழியையும், ஆங்கிலத்தையும், எதாவது வேறு மொழியையும் கற்கலாம். அந்த வகையில் நான் பரிந்துரைப்பது பஞ்சாபி மொழியே.

Anonymous said...

நான் இந்தியோ வேறு மொழியோ படிக்கவில்லை. ஆனால் சுயமாக கற்றுக் கொண்டேன். மலையாளம் கன்னடம் இரண்டும் படங்கள் பார்த்தே கற்றுக் கொண்டேன். தெலிங்கும், இந்தியும் என்னால் ஓரளவுக்கு பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும். இரண்டையும் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். இப்போது பஞ்சாபி மொழி கற்கத் தொடங்கி இருக்கின்றேன். முடியும் என்றால் எல்லாம் முடியும். இந்தி எதிர்ப்பு இயக்கத்தால் நான் இந்தி படிக்க முடியாமப் போச்சு என ஒப்பாரி வைப்போர் உண்மையில் சாக்கு போக்கு சொல்பவர்கள். வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள், யார் வேண்டாம் என்றால். தமது இயலாமைக்கு இப்படி ஒரு அங்குச பங்குச காரணச் சாக்கு அவ்ளோ தான்.

Unknown said...

நீங்ஙள் சொல்வது முட்றிலும் சரியே. ஆனால் உங்ஙளுக்கு வரும் பின்னொட்டஙள்ல் பெரும்பாலும் ராவணன்" எழுதியது போலவே வரும், ஒருவரும் புரிந்து கொள்வது இல்லை.

பூவண்ணன் said...

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை நீடிக்க வைத்த போராட்டம்.ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி தான் இணைப்பு மொழி என்ற நிலை வந்து இருந்தால் நாம் இன்று அடைந்துள்ள நிலையை விட பல படிகள் கீழே இருந்திருப்போம்.
நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் தாய்மொழியை அனைவரின் மீதும் திணிப்பது சரி என்று வாதிடுவதில் எதாவது அர்த்தமோ,நியாயமோ உள்ளதா.இருவருக்கும் பொதுவாக ,மற்ற நாடுகளில் வசிப்போர் உடனும் தொடர்பு கொள்ள வசதியான ஆங்கிலத்தை அகற்றி விட்டு ஹிந்தி மட்டுமே இணைப்பு மொழி என்று வர மத்திய அரசு செய்த முயற்சியை முறியடித்தது தமிழ்நாடு தான்

http://swaminomics.org/how-english-survived-in-india/

Nehru strove for compromise in his Official Languages Act of 1963. This allowed continued use of English after 1965. But under the same Act, the Home Ministry issued circulars making Hindi obligatory for all central government officers, and declaring that Hindi would become the official language of India on January 26, 1965.

Annadurai saw this as Hindi imperialism, and struck back with the most violent agitation the state had ever seen. Several Tamil students immolated themselves in protest. The police opened fire on rampaging mobs, killing at least 66 (official figures) and maybe 500 (unofficial estimates). Fearful that the language issue would stoke secession, New Delhi retreated and assured all states that their adoption of Hindi would be optional, not mandatory. In 1967 the Official Languages Act was amended to specify that both English and Hindi could be used as official languages for all purposes.

In the state election of 1967, the DMK won a landslide victory. The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

viyasan said...

தமிழ் நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிகளிலும், கல்வி நிலையங்களிலும் (அது எந்த இனக்குழுவுடையதாக இருந்தாலும்), அதாவது தமிழ்நாட்டில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனும் தமிழைக் கட்டாயபாடமாகக் கற்றுக் கொள்ளவேண்டுமென சட்டத்தை இயற்றி, தமிழ்நாட்டில் தமிழின் இருப்பை உறுதி செய்து கொண்ட பின்னர், ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக் கொள்வதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழில் எழுத வாசிக்கத் தெரியாமலே பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெற்று, தமிழ்நாட்டிலேயே உயர்ந்த உத்தியோகம் பெற்று வாழக் கூடியதாக இருக்கிறது. அதைச் சிலர் பெருமையாகவும் கருதுகிறார்கள். அந்த நிலைமை மாற வேண்டுமே தவிர, தமிழர்கள் ஹிந்தியை மட்டுமல்ல, வேறு பல மொழிகளையும் கற்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் தமிழே தெரியாமல் ஹிந்தியை மட்டும் கற்பது தான் தவறு. அது தமிழர்களே ஹிந்தி திணிப்பை ஊக்குவிக்கும் செயல்.

தாம்சன் said...

திரு. மணிகண்டன்.. உங்கள் எழுத்து மீது மிகுந்த மரியாதை இருந்தது. இந்த பதிவால் என் எண்ணம் மாறிவிடுமோ என்று அச்சமாக உள்ளது.

உங்கள் பாணியிலே வருகின்றேன். 10ம் வகுப்பு முடித்த எத்தனை பேர் இரண்டாம் மொழி ஆங்கிலம் சரளமாக பேசி கேட்டு இருக்கின்றீர்கள்? கல்லூரி முடித்தவர்களே இன்னும் தடுமாரிக்கொன்டுதான் இருகின்றார்கள். இதில் 3ம் மொழியாக ஹிந்தி வைத்துவிட்டால் 10ம் வகுப்பு முடித்தவுடன் அனவரும் ஹிந்தி பண்டிட் ஆக மாறிவிடுவர்களோ? அப்படியே 3ம் மொழியாக ஹிந்தியை வைத்தாலும் அதை வைத்து யாரலும் புழக்கத்தில் உள்ள ஹிந்தியை பேச முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? ஆக மொழியினை கற்க அது பாடத்திட்டத்தில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் எந்த பாடத்திட்டத்தில் தெலுங்கு கற்றுக் கொண்டீர்கள்?

ஒரு மொழியை பேச பயிற்சி பெற ஒரு மாதம் முழுமையாக முயன்றால் போதும். அதற்காக 10 வருடம் ஹிந்தி இலக்கணம் கற்க சொல்கின்றீர்களா? நீங்கள் சொல்லும் வணிகர்கள், அதிகம் படிக்காதவர்கள் நன்கு ஹிந்தி படித்தவர்களை விட பேச்சு வழக்கு ஹிந்தியை அருமையாக பேசுவார்கள்.

வடக்கில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் எத்தனை பேர் தமிழ் கற்றுக்கொண்டுளார்கள் சொல்லுங்கள் பார்போம்? அவர்கள் இங்கு வாழவில்லையா?

எனக்கு ஹிந்தி பேச/படிக்க வேண்டும் என்ற தேவை இருந்தால் ஹிந்தி சபாக்களில் கற்றுக்கொள்ள முடியும். அதை விட்டு விட்டு அதை பாடமாக மாற்றி திணிக்க வேண்டாம்.

Anbazhagan Ramalingam said...

Fittest will survive. But no need to include hindi in syllabus. 12 varusham padicha english ke spoken english thevaipadudhu. Spoken hindi pona 3 masathula mudiya pora pblm idhu.

துளசி கோபால் said...

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா ஹை தான் ஸ்கூல் ஹிந்தி:-) அதை வச்சு சரளமா வடமாநிலங்களில் ஹிந்தி பேச முடியாது.

வீட்டு வேலைக்கு உதவியாளர் வச்சு அவர் மூலமாவே கொஞ்சூண்டு ஹிந்து கற்றுக்கொண்டேனொரு காலத்தில்.

தேவைன்னு வந்துட்டால் மொழி அறிவு தானாகவே வந்துருது பாருங்க.

கூடுதலா எத்தனை மொழிகள் கற்றுக்கொண்டாலும் நன்மையே!

கார்த்திக் சரவணன் said...

இந்தி கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய வித்தை இல்லையே. மற்ற மாநிலங்களில் சரளமாகப் புழங்கும் மொழி தமிழகத்தில் மட்டும் கொஞ்சம் குறைவு. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருப்பதாலோ, இந்தி எதிர்ப்பாளர்கள் அதிகம் இருப்பதாலோ என்னவோ நமக்கு மட்டும் இந்த மொழியைப் படிக்கும் / பேசும் வாய்ப்பு மிகமிகக் குறைவே. உங்களது குழுவில் இருப்பவர்கள் இந்தியில் பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது அவர்களது சவுகர்யம், மெஜாரிட்டி என்று கூட வைத்துக்கொள்ளலாம். நீங்கள் மட்டுமே முதன்மையானவர் என்றால் அவர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். தெரிந்த இந்தியில் பேசுங்கள், முதலில் சிரிப்பார்கள், அதற்கு பயந்தால் தமிழர்கள் இருக்கும் குழுவாக நீங்கள் தேடிச் செல்லவேண்டியிருக்கும். ஒன்று தெரியுமா? நம்முடைய ஆங்கில உச்சரிப்பைப் பார்த்து மூக்கில் விரல் வைத்த வடக்கத்திக்காரர்கள் ஏராளம். இவ்வளவு ஏன், நான் படிக்கும் ஜப்பானியப் பள்ளியில் சொன்னார்கள். தமிழர்கள் மற்ற மொழியினரை விட மிக வேகமாக ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்கிறார்களாம்.

Unknown said...

Old hindi movies like billa . koolie.... Nalai namathe. . new movies surriya vamsam. Kajini. Vtv. .... Ellame scene by scene same. . no need of subtitles.

கோவை சிபி said...

I am doing business with north India,regular visiting Hindi belt learned Hindi using 30 day's book.it a effective way to learn Hindi.50 to 75 words enough to manage the language.

நெல்லைத் தமிழன் said...

கட்டுரை மொழி வெறியைத் தூண்டவில்லை. நீங்கள் மட்டும் ஏன் மொழிவெறியோடு எழுதவேண்டும்? தமிழ் கேவலம் என்று கட்டுரை குறிப்பிடவில்லை. சமஸ்கிருதம் பிரென்சு படிப்பது நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான். தமிழாசிரியர்கள் எல்லா மாணவனும் தொல்காப்பியர்போல் தமிழ் எழுதவேண்டும் என்று நினைப்பதால் 90 சதவிகிதத்துக்குமேல் மதிப்பெண் போடுவதில்லை.

இந்தி மற்றும் பிற மொழிகள் தெரிந்திருப்பது மிகவும் நல்லது. என்னைக் கேட்டால் ஹிந்தி, மலயாளம், தெலுங்கு மராத்தி தெரிந்திருப்பது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஹிந்தி படிப்பது உபயோகம். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சென்னையில் எத்தனை கடைகளில் தமிழைவிட ஹிந்தி தெரிந்திருப்பது நல்லது என்று பாருங்கள். (அடையாறு ஆனந்தபவன், நாதன் ஸ்வீட் மற்றும் 'நிறைய கடைகளில் இப்போது ஹிந்திவாலாக்கள்தான்)

Sankar Mohan said...

With my little understanding, Our tamil culture is preserved to an extent because of not accepting any other language other than English. I did not mean we should not learn. But I am seeing Telugu people in Hyderabad are not able to write in Telugu. They doesn't know the Telugu literature. In fact it's large number than chennai tamil guys who doesn't know hoe to write tamil. Even movies started coming with one Hindi song in each movie. Same with Kannada people in Bangalore. They are getting influenced by the language and culture which is not native. You try to observe it in this angle. But we should not be averse towards other language. Learn them and use them when required. I know few tamil guys who can speak Hindi used to talk in Hindi when both the parties know tamil. They try to show off that they are speaking in a
Language which is not known by others.

Kamala said...

எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து ஹிந்தி கற்றுக் கொண்டு 'எனக்குத் தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது,' என்று சொல்வோர் இருக்கிறார்கள். அதனால்,'தமிழே தெரியாமல் ஹிந்தியை மட்டும் கற்பதுதான் தவறு.' தாய் மொழியோடு வேறு எந்த மொழியையும் கற்பதில் தவறேயில்லை.

Paramasivam said...

வங்கியில் பதவி உயர்வின் பொது என்னை டெல்லி மாற்றினார்கள். இந்தி தெரியாமல் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் நான் பட்ட கஷ்டம் அனைத்தும் உங்கள் பதிவு படிக்கும் பொது நினைவுக்கு வருகிறது. இங்கு பின்னூட்டம் இட்டவர்கள் இது பற்றி அறிய வாய்ப்பு இல்லை. சபாக்களில் சென்று படிப்பது என்பது சொல்வதற்கு எளிது. நான் என் குழந்தைகளை CBSE பள்ளியில் போட்டேன். நான் பட்ட கஷ்டம் அவர்களுக்கு இப்போது இல்லை. நன்கு settle ஆகி விட்டார்கள். தமிழ் நாட்டில் மட்டும் வேலை வாய்ப்பு என்பது எதிர் பார்க்க இயலாது. இப்போது உள்ள போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் நம்மை நாம் தான் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 10 to 13 வயது வரை குழந்தைகள் எதை வேண்டுமானாலும் கடினம் இன்றி கற்றுக் கொள்வார்கள். உங்கள் கருத்தில் நான் முற்றிலும் உடன் படுகிறேன்.

Kamala said...

ஒருமுறை நாங்கள் வட இந்திய தல யாத்திரை போயிருந்தோம். ரயிலில் காசியிலிருந்து கயா போகும் போது என் கணவர், பக்கத்தில் இருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார். உடனே,'ஹிந்துஸ்தான் மே அங்ரேசி போல்த்தே ஹை?' என்று சொல்லிவிட்டு எல்லோரும் முகம் திருப்பிக் கொண்டார்கள்.இனிமேல் ஹிந்தியே கற்றுக் கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தோம். இந்த மொழிப் பிரச்சினை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. கர்னாடகா உட்பட.

Paramasivam said...

வங்கியில் பணி புரிந்த நான் பதவி உயர்வில் டில்லிக்கு மாற்றப்பட்ட போது மிகவும் கஷ்டப்பட்டேன். என்னைப்போ;ல், ஆனால் பிற மாநில தோழர்கள் எந்த கஷ்டமும் இன்றி வாழ்க்கையை டில்லியில் துவங்கினார்கள். எனக்கு ஏழு எட்டு மாதம் ஆகியது. இந்தி ஒரு தொடர்பு மொழி என்ற அளவில் பேச படிக்க தெரிந்து இருக்க வேண்டும். இதை, உங்களைப் போல் நானும், உறுதியாகக் கூறுவேன்.

manjoorraja said...

இந்தியை வலிய திணிக்கக் கூடாது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் பள்ளிகளில் அதை விருப்பப்பாடமாக வைப்பதில் தவறில்லை. அதனால் பலருக்கும் பலன் உண்டு.

”தளிர் சுரேஷ்” said...

தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது! இளைய தலைமுறையினர் இந்த மொழி கற்க ஆவலுடனும் உள்ளனர். தேசிய மொழியான அதை கற்றுக்கொள்வதால் தமிழ் ஒன்றும் தாழ்ந்து போகாது. தாய்மொழியை முதல் மொழியாகக் கொள்வோம். பிற மொழிகளையும் அறிந்து கொள்வோம்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

கறுத்தான் said...

எங்கள் ஊரில் இருந்து எட்டாம் கிளாஸ் படித்த பையன் பம்பாய்க்கு பேப்பர் கடைக்கு வேலைக்கு சென்றான் இருபதே நாட்களில் இந்தியை பேச கற்றுக்கொண்டதாக சொன்னான் மேலும் அவன் படிப்பை நிறுத்த முக்கியமான காரணம் இங்கிலீஷ் இப்படி மொழி பலரது படிப்புக்கே உலை வைக்கிறது பத்தாம் கிளாசு பரிட்சையில் அதிகமான பேர் பெயில் ஆவது இங்கிலிஷில் தாய்மொழியில் பாடங்களை புரியும்படி சொல்லி கொடுத்தால் அவர்கள் பாடத்தில் சிறப்பான வர்களாக வருவார்கள் பிறகு அவர்கள் வேலை செய்ய ஆசைபடும் அல்லது வேலை கிடைக்கும் நாட்டு மொழியை ஒரு மூன்று அல்லது நான்கு மாதத்தில் கற்று கொடுத்து விடலாம் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால் அனைவவரும் தொழில் ரீதியாக சிறப்பான வர்களாக இருப்பார்கள் அப்படி இருந்தால் வேலையும் சுலபமாக கிடைக்கும் அல்லவா

Gujaal said...

//நான்கு ஹிந்திக்காரர்கள் இருக்கும் ஒரு டீமில் தமிழனாக இருப்பது பெரிய பிரச்சினை. இரண்டு மூன்று தமிழர்கள் இருந்தால் தப்பித்துவிடலாம். தனியொருவனாக சிக்கிக் கொண்டால் பிதுங்கப் பிதுங்க முழிக்க வேண்டும்.ஏதாவது பேசிக் கொள்ள வேண்டுமென்றால் ஹிந்தியில்தான் பேசிக் கொள்கிறார்கள். நம் இருப்பை கிட்டத்தட்ட புறக்கணித்துவிடுவார்கள். //

மணி,

கஸ்டமர் கிட்டவும் ஹிந்திலதான் பேசுவார்களா?

Babu said...

நம் நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. வேலை வாய்ப்பு எனும் வினா எழும்போது நாம் தமிழ் அறிந்தால் மட்டும் போதாது. ஏனெனில் நமக்கு வேலை எந்த மாநிலத்தில் கிடைக்கும் என்பதும் தெரிவதில்லை. அதே நேரம் எல்லா மாநில மொழியும் நம்மால் கற்க இயலாது.

மும்மொழி கொள்கையை அணைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். ஆங்கிலமும் ஹிந்தியும் இரண்டாம் மூன்றாம் மொழிகளாகவும் அந்தந்த மாநில மொழி முதன் மொழியாகவும் இருக்க வேண்டும்.
பிள்ளைகள் விருப்பப்பட்டு பிற இந்திய மொழியையும், அயல் மொழியையும் கற்க ஊக்கமளிக்க வேண்டும் அதன் அவசியத்தை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

நம் பிள்ளைகளின் பாவம் நம்மைச் சும்மா விடாது. இது முற்றிலும் உண்மை.

kk said...

Well said. Perfect answer.

Regards
KANNAN

kk said...

Mr. Suresh,

Hindi is not our national language and in fact there is no national language so for.

KANNAN

நாச்சியப்பன் said...

எனக்கும் இதேபோல் நடந்தது. கவுஹாட்டி (அஸ்ஸாம்) ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பதிவு செய்ய போயிருந்தேன். இது நடந்து 25 வருடம் ஆகிவிவிட்டது. என்னுடன் என்னுடைய ஹிந்திக்கார நண்பன் ஒருவனும் கூட இருந்தான். Reservation Form ஒரு பக்கம் ஹிந்தியிலும் மறு பக்கம் அஸாமி மொழியிலும் இருந்தது. Counter கிளெர்க் இடம் ஆங்கிலத்தில் Form கேட்ட போது நீ இருப்பது இந்தியாதானே? இந்திய மொழியில் படிவத்தை நிரப்பாமல் ஆங்கிலத்தில் ஏன் என்று கேட்டான். கூட இருந்த என் நண்பன் அப்ப சரி இவர் இந்திய மொழியான தமிழில் Fill-Up செய்வார். நீ டிக்கெட் தருவியா? என்று கேட்ட பிறகு ஆங்கிலத்தில் Form கொடுத்தான். ஆகவே உங்களின் கணவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் இதுவே பதில்

Murugan said...

/நம் பிள்ளைகளின் பாவம் நம்மைச் சும்மா விடாது./ சாபமெல்லாம் பலமா இருக்கே

Murugan said...

மணிகண்டன், நீங்க ஏன ஹிந்தி கத்துக்காம தெலுங்கு கத்துக்கிட்டீங்க? இப்பவும் ஹிந்தியவிட கன்னடம் ஏன் கத்துக்க விரும்புறீங்க? /அந்தந்த ஊரில் அந்தந்த மொழி தெரிந்திருப்பது வரம் நம்மையும் அறியாமல் தைரியம் வந்துவிடும்./ அப்பறம் எதுக்கு ஹிந்திக்கு கொடி பிடிச்சுட்டிருக்கீங்க.

தேவை வந்தா எவனும் எந்த மொழியையும் கத்துக்குவான்.

Murugan said...

அடக் தோவுடா, அந்த கடைல வேலைபாக்குறவன் வெளி மாநிலத்தில இருந்து பிழைப்புக்காக இங்க வந்திருக்கான். அவனுக்காக இங்க இருக்கவன்லாம் இந்தி படிக்கனுமா?
/(அடையாறு ஆனந்தபவன், நாதன் ஸ்வீட் மற்றும் 'நிறைய கடைகளில் இப்போது ஹிந்திவாலாக்கள்தான்)/

Unknown said...

ஆமை புகுந்த வீடும்;
இந்தி புகுந்த மாநிலமும்
உருப்படுமா?

சேக்காளி said...

//இருபதே நாட்களில் இந்தியை பேச கற்றுக்கொண்டதாக சொன்னான்//
தமிழ்ல சொன்னானா ஹிந்தில சொன்னானா? நம்புறா மாதிரி சொல்லுங்க பாஸ். இருபது நாளில் பேசி விடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கும்.
வேற்று மொழி கற்க வேண்டுமா முதலில் பயத்தினையும் வெட்கத்தினையும் அகற்றுங்கள்.வாய் திறந்து பேசும் வாய்ப்பினை உருவாக்குங்கள். சித்திரமும் கைப்பழக்கம்.செந்தமிழும் நாப்பழக்கம். இதில் "செந்தமிழ்" இருக்கும் இடத்தில் "எம்மொழியும்" என மாற்றிக்கொள்ளுங்கள்.
இந்த பின்னூட்டம் கண்டு என்மீது கோபம் கொள்பவர்கள் எனது வலைப்பூவின் முதல் பதிவை வாசித்து பாருங்கள்.

சேக்காளி said...

http://sekkaali.blogspot.com/2011/01/blog-post.html

சேக்காளி said...

இன்று என்னால் சரளமாக ஹிந்தி பேச முடியும்.

கோவி.கண்ணன் said...

30 நாட்களில் எல்லா மொழியையும் கற்றுக் கொள்ளலாம், பாலாஜி பப்ளிகேசன் வாங்கி படித்து பயிற்சி செய்யவும், :) தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியும், தேவையில்லை என்றால் திணித்தாலும் ஏறாது, எந்த மொழியையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தனிப்பட்ட மனித உரிமை, அதே போன்றும் எந்த மொழியையும் திணிப்பது மொழி வெறி, இந்தியாவில் மட்டும் தான் இந்தி தெரியாததால் பழிக்கும் கேலிக் கூத்து நடக்கிறது, எனக்கு தெரிந்து மாண்ட்ரின் தெரியாத சீனர்களை தெரிந்த சீனர், சீன மொழி தெரியாத நீ சீனனா ? என்று கேட்பதில்லை, தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள் ஐயா.

Revathi said...

No harm in giving students a choice to choose a third language. Ancient languages like Sanskrit or even old tamil need to be learned as well if only for the beauty of the language. Hindi script (devanagari) is very comprehensive ( maximum number of consonants) that helps in learning not only all other indian languages but also indonesian or korean.