Apr 7, 2014

நாம் என்ன செய்ய முடியும்?

பவானி ஆற்றில் மூழ்கி இரண்டு பேர் இறந்துவிட்டார்களாம். இரண்டு பேருமே கேரளாவைச் சார்ந்தவர்கள். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இறந்ததற்காகத்தான் அதிர்ச்சியடைந்தேன் என்றால் அது பொய். 

நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான மரணங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்வதில்லை. அதிகபட்சம் ‘ப்ச்..பாவம்’ என்று சொல்லிவிட்டு தாண்டி வந்துவிடுவோம். நேற்று கூட ஊரிலிருந்து வரும் போது சித்தோடுக்கு அருகில் ஒரு சாலை விபத்து. பேருந்துகள் மோதிக் கொண்டன. மோதும் சமயத்தில் அங்குதான் இருந்தோம். பேருந்துக்கு பின்புறமாக முந்நூறு அடியில் எங்கள் வண்டி இருந்தது. அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினேன். ஒரு மரணத்தை அதன் இளஞ்சூட்டோடு பார்த்தேன். நொறுங்கிய பேருந்தின் கம்பிகள் அந்தப் பெண்ணின் முகத்தில் ஏறி துளைகளிட்டிருந்தன. சிரமப்பட்டு பேருந்திலிருந்து இழுத்து வெளியே போட்டார்கள். விரல்கள் சில வினாடிகளுக்கு அதிர்ந்து கொண்டிருந்தன. அவளது மகள் அருகிலேயே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள். மூன்று நான்கு ஆம்புலன்ஸ்கள் வந்து கொண்டிருந்தன. கை முறிந்தவர்கள், கால் உடைந்தவர்களை எல்லாம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஓலம்.

பெங்களூரை அடைவதற்கு இன்னும் இருநூற்றைம்பது கிலோமீட்டராவது வண்டியை ஓட்ட வேண்டும். வெயில் கருக்கிக் கொண்டிருந்தது. பாட்டிலில் இருந்த தண்ணீரில் முகத்தை கழுவி அந்தப் பெண்ணை மறக்க முயற்சித்தேன். கொஞ்ச நேரத்திற்கு அந்த கிழிந்த உதடுகளும், ரத்தம் தோய்ந்த உடைந்த பற்களும் ஞாபத்திலேயே இருந்தன. இதை மறப்பது பெரிய விஷயம் இல்லை. ஒரு சிடியை மாற்றினால் போதும். இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். அவ்வளவுதான். மறந்தாகிவிட்டது. ஒரு நாளில் எத்தனை மரணங்களைத் தாண்டுகிறோம்? மூன்று வயதுச் சிறுமி மதுமிதா. ஆழ்துளைக் கிணறில் விழுந்து இறந்தும் போய்விட்டாள். தினத்தந்தியில் இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருந்த போது கையில் காபி குடுவை இருந்தது. எந்தச் சலனமும் இல்லாமல் காபியை குடித்துவிட்டு பக்கத்தை புரட்டிவிட்டு எழுந்தேன்.

மலையாள பையன்கள் போய்ச் சேர்ந்தது அதிர்ச்சியில்லை. ஆற்றில் அவ்வளவு தண்ணீர் போகிறது என்ற செய்திதான் அதிர்ச்சி. ஆடுமாடு சிறுநீர் கழித்தால் கூட சற்று அதிகமாகத் தண்ணீர் ஓடும். அந்த அளவுக்கு கூட நீர் இல்லாத பவானி ஆற்றில் எப்படி இரண்டு பேர் மூழ்கினார்கள் என்ற அதிர்ச்சிதான். இப்பொழுதெல்லாம் ஆறு முழுவதும் ஆகாயத்தாமரைதான் பரவிக் கிடக்கிறது. அதுவும் முழங்கால் உயரத் தண்ணீர்லில். தெரியாத்தனமாக சேற்றுக்குள் மாட்டினால் தவிர உயிர் போக வாய்ப்பே இல்லை. எப்படியோ சிக்கிவிட்டார்கள். போய்ச் சேர்ந்துவிட்டார்கள். சரி போகட்டும். நாம் என்ன செய்ய முடியும்?

நான்காவது அல்லது ஐந்தாவது படிக்கும் போது முதன்முதலாக பவானி ஆற்றில் வெள்ளத்தை பார்த்தேன். அம்மா தனது மொத்த சர்வீஸிலும் பவானி ஆற்றின் கரைகளில் இருந்த கிராமங்களிலேயே வேலையில் இருந்தார்- கிராம நிர்வாக அலுவலர். மழை வந்தால் போதும் ஆள் வந்துவிடுவார்கள். வெள்ளம் வருகிறது என்று தகவல் வரும். கரையில் இருக்கும் கிராம மக்களை உடனடியாக எச்சரிப்பது வருவாய்த்துறையின் வேலை. அந்த மாதிரி சமயங்களில் அம்மாவும் அப்பாவும் அங்கேயே வெகுநேரம் இருந்துவிடுவார்கள். தண்ணீர் வரத்து குறையும் சமயத்தில்தான் வீட்டுக்கு வருவார்கள். 

வீட்டிற்கு அருகிலேயே முஜி என்றொரு நண்பன் இருந்தான். முஜிபுர்ரஹ்மான். அவர்கள் வீட்டில் ஏகப்பட்ட குழந்தைகள். இவன் தான் கடைசிப்பையன் என்பதால் பயங்கரச் செல்லம். எங்கு சுற்றினாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவன் சரியான தில்லாலங்கடி. ஊரில் ஒரு சந்து பொந்து இல்லாமல் சுற்றுவான். அவன்தான் வாய்க்காலுக்கு கூட்டிச் செல்வான். வாய்க்காலுக்குச் செல்வது பெரிய காரியம் இல்லை. துணியை நனைக்காமல் வர வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஈரத்துணியோடு வீட்டிற்கு வந்தால் ‘மொத்து’ வாங்க வேண்டும் என்பதால் ‘மொத்தத்தையும்’ கழட்டி வைத்துவிட்டுத்தான் குளிக்க வேண்டும். அதுவும் யாருடைய கண்ணும் படாத இடமாக பார்த்து போய்விடுவோம். வெட்கம் எல்லாம் இல்லை. யாராவது வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்ற பயம்தான். நாங்கள் வேறு இத்துனூண்டு இருப்போமா? வாய்க்காலில் குளித்துக் கொண்டிருப்பதை பெரியவர்கள் யார் பார்த்தாலும் திட்டுவார்கள். ‘தண்ணி அடிச்சுட்டு போயிடும்டா’ என்பார்கள். இந்த இம்சைகளுக்கு வேண்டியே முஜி ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான். மற்ற பெரியவர்களாவது பரவாயில்லை- அறிவுரை சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்கள். முஜி அழைத்துப் போன இடத்தில் ஒரு கிழவி இருந்தது. ஆடு மேய்க்கும் கிழவி. கையில் கருக்கு அருவாள் வேறு. கருக்கு அரிவாளில்தான் நெல் அறுப்பார்கள். அந்தக் கிழவி நாங்கள் இரண்டு பேரும் அம்மணமாக குளித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டது.

‘ஏண்டா சுண்டக்காயனுகளா...ஊட்ட ஏமாத்திட்டு வந்து இங்க அம்மணமா குளிக்கிறீங்களா..புடுக்கை அறுத்து காக்காய்க்கு வீசுறேன்...புடிங்கடா அவனுகளை’ என்று ஓடி வந்தது. எங்களுக்கு அது உண்மைதானோ என்று பயம். கிழவியிடம் சிக்கினால் காலாகாலத்துக்கும் சிறுநீர் கழிக்க முடியாது என்று அவசர அவசரமாக வாய்க்காலில் இருந்து மேலே வந்து கையை வைத்து மறைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிட்டோம். எவ்வளவு தூரம் ஓடினோம் என்று தெரியவில்லை. வெகுதூரம் ஓடிய பிறகுதான் ஆசுவாசமடைந்தோம். எப்படியோ முக்கியமான சமாச்சாரத்தை காப்பாற்றிவிட்டோம் என்ற ஆசுவாசம் அது. ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது. துணிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம். வெளியே சொன்னால் வெட்கக் கேடு. திரும்பியும் போக முடியாது. கருக்கு அருவாளுக்கு பயந்து அப்படியேதான் ஊருக்குள் ஓடினோம். நல்லவேளையாக அம்மா வீட்டில் இல்லை. அடுத்த வெகுநாட்களுக்கு ‘அது நல்ல சட்டையாச்சே...எங்கே வெச்சேன்னு தெரியலையே’ என்று தேடிக் கொண்டிருந்தார்.

அந்த ஆயாவுக்கு பயந்துதான் வாய்க்கால் வேண்டாம் என்று முடிவு செய்து ஆற்றுக்குச் செல்லத் துவங்கினோம். ஆற்றுக்குச் செல்வதென்றால் ஐந்தாறு கிலோமீட்டர் நடக்க வேண்டும். அதனால் சென்று வர எப்படியும் நான்கைந்து மணி நேரங்கள் ஆகிவிடும். எங்கள் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் சென்றுவிடுவோம். இந்தக் கதை வெகுநாட்கள் நடந்து கொண்டிருந்தது. அப்படிச் சென்றிருந்த போதுதான் வெள்ளத்தைப் பார்த்தோம். வழக்கம்போல குளித்துக் கொண்டிருக்கும் போது மண் கலந்த தண்ணீர் செந்நிறத்தில் வரத் துவங்கியது. ஆற்றங்கரையோரத்த்தில் விவசாய நிலங்கள் உண்டு. அவர்கள் வேகமாக மோட்டரை எல்லாம் கழற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இருந்தது அந்தக் கரையில். நாங்கள் எங்கள் சுதந்திரக் குளியலைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். எங்களைப் பார்த்துவிட்டு சத்தம் போட்டார்கள். அவர்கள் சொன்னது புரியவில்லை. நாங்கள் கண்டு கொள்ளவில்லை. கற்களை எடுத்து வீசினார்கள். கற்கள் மிக நெருக்கமாக வந்து விழுந்தன. விட்டால் மண்டையை உடைத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்று கற்களுக்கு பயந்து ஆற்றின் மேலே வந்துவிட்டோம். துணியை அணியத் துவங்கிய போது தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருந்தது. ஆறு பிரம்மாண்டமாக மாறிக் கொண்டிருந்தது. முதலில் குச்சிகள், துணிகள், ப்ளாஸ்டிக் பொருட்களாக வந்து கொண்டிருந்தன. பிறகு பெரிய மரங்களையெல்லாம் முரட்டுத்தனமாக புரட்டிக் கொண்டு வந்தது. பிணம் போவதாக திடீரென்று முஜி கத்தினான். என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவனது கதறல் காதுக்குள் அதிர்ந்தது. நீரின் சலசலப்பு பயமூட்டுவதாக இருந்தது. இனி இருந்தால் கரையை மீறி வந்துவிடக் கூடும் என்று பயந்தோம். ஓட்டம் எடுத்தோம். பிரம்மாண்ட வெள்ளத்தை முதன்முதலாக பார்த்த பயம் அது. ஊருக்குள் தகவல் சொல்ல வேண்டும் என்று முஜியும் நானும் ஓடிக் கொண்டிருந்த போது அப்பா டிவிஎஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். அம்மாவின் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார். சிக்கிக் கொண்டேன். ‘எங்கிருந்து வர்றீங்க?’ என்றார். ஏதோதோ உளறினேன். ‘வீட்டுக்கு போங்க’ என்றார். தப்பித்துவிட்டதாக நம்பிக் கொண்டு சென்றுவிட்டேன்.

அந்த இரவு அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வரும் போது நள்ளிரவு ஆகிவிட்டது. நான் தான் கதவைத் திறந்துவிட்டேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. நான் சொன்னதை நம்பிவிட்டார் என்று நிம்மதியாக இருந்தது. அடுத்த நாள் காலையில் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தார். சாப்பிட்டு கை கழுவி முடித்தேன். எங்கிருந்தோ ஒரு பச்சைக் குச்சியை முறித்துக் கொண்டு வந்தார். எங்கள் பழைய வீட்டில் பெரிய அறை ஒன்றிருந்தது. செளகரியமாக ஓடலாம். உள்ளே விட்டு கதவைச் சாத்தினார். துரத்துகிறார். ஓடுகிறேன். கதறுகிறேன். அவ்வப்போது குச்சி ‘சுளீர்’ என்று முத்தமிடுகிறது. தப்பிக்க வாய்ப்பே இல்லை. வெளியே இருந்து ‘அவனை விடுங்க’ என்று அம்மா கத்துவது கேட்கிறது. அம்மாவுக்கு வெளியே என்ன என்ன சத்தம் கேட்டதோ! வெகுநேரத்திற்கு பிறகு கதவைத் திறந்தார்கள். அப்பாவுக்கு அத்தனை வியர்வை. அப்பாவுக்கு அவ்வளவு வியர்வை பெருக்கெடுத்து அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.

5 எதிர் சப்தங்கள்:

இராஜராஜேஸ்வரி said...

அடிச்ச அப்பாவுக்கே அத்தனை வியர்வை என்றால்
அடிவாங்கியவரின் கதி என்ன ஆயிற்று??!!!

செந்தில்குமார் said...

எப்படியோ முக்கியமான சமாச்சாரத்தை காப்பாற்றிவிட்டோம் என்ற ஆசுவாசம் அது. ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது. துணிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

”தளிர் சுரேஷ்” said...

ஆறுகளில் வெள்ளம் காண்பது அரிதாகிவிட்டது. மணலுக்காக தோண்டப்படும் பள்ளங்களில் தேங்கும் நீரில் குளித்து சேற்றில் முழுகி உயிரை விடுகிறார்கள்! விளையாட்டுத்தனம் விபரீதமாகிவிடுகிறது. உங்கள் வெள்ள அனுபவம் கண் முன்னே காட்சியாக உருவெடுக்கிறது! நன்றி!

Aba said...

//அவன் தன் நகங்களை கடித்துக் கொண்டிருந்தான்//
//நாம் என்ன செய்ய முடியும்?//

What a contrast?!

Unknown said...

same story..small change... pond with appreciation in Belt :)