அமத்தா கிட்டத்தட்ட எண்பது வயதைத் தொட்டுவிட்டார். அம்மாவுக்கே அறுபதைத் தொடுகிறது. அவருடைய அம்மா இவர். எண்பதைத் தொட்டிருக்காதா? அந்தக் காலத்தில் பதினைந்து வயதில் திருமணம் ஆகியிருந்தாலும் கூட இப்பொழுது கணக்கு பார்த்தால் எழுபத்தைந்துக்கு குறைவில்லாமல் இருக்கும். சும்மாவே இருக்க மாட்டார். ‘கொஞ்சம் வேடிக்கை பாருங்க மாப்ள’என்று சொல்லிவிட்டு பட்டையைக் கிளப்பும் படையப்பா ரஜினி மாதிரி. மொட்டை வெயிலில் மேட்டாங்காட்டில் இருந்து இரண்டு மூன்று மாடுகளை இழுத்துக் கொண்டு வருவார். ஒரு தார் பழத்தை தட்டுக்கூடையில் நிரப்பி சந்தைக்குத் அலேக்காகத் தூக்கிச் சென்றுவிடுவார். தோட்டத்தில் யாரும் இல்லையென்றால் மட்டையெடுக்கிறேன் என்று அருவாளும் தேங்காயுமாக அமர்ந்துவிடுவார்.
மாமன் இதையெல்லாம் பார்த்தால் பதறிவிடுவார். காலம் போன காலத்தில் கையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் விழுந்து விபரீதம் ஆகிவிட்டால் என்ன ஆகும் என்பது அவரது கவலை. ஊருக்கு போகும் போதெல்லாம் அமத்தாவைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிப்பார். பெரும்பாலும் ‘சொன்ன பேச்சைக் கேட்பதேயில்லை; மூர்க்கமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பெரிய பெரிய வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்கிறார்’ என்கிற ரீதியில்தான் இருக்கும். அமத்தாதான் படையப்பா அல்லவா? ‘யாருக்கு? எனக்கா? வயசா?’ என்கிற பாவனையில் கிணற்று மேட்டுக்குச் சென்று பப்பாளியையோ அல்லது நான்கு தேங்காயையோ பொறுக்கிக் கொண்டு வருவார். மாமனுக்கு பற்களைக் கடித்துக் கொள்வது தவிர வேறு வழி இருக்காது.
சில பெரியவர்களுக்கு வயது ஏறும் போது பயமும் வந்துவிடும்; கூடவே பொறுமையும் சேர்ந்துவிடும். நமக்கு ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிட்டால் அடுத்தவர்களுக்குத்தான் சிரமம் என்று கட்டுப்படுத்திக் கொள்வார்கள். பல பெரியவர்கள் இதற்கு நேர்மாறு. ‘இந்த மாதிரி எத்தனை வேலைகளைச் செஞ்சிருப்பேன். இவன் சொல்லுறான்னு நாஞ் சும்மா இருப்பேனா?’ என்று பரபரத்துக் கொண்டிருப்பார்கள். அமத்தா இரண்டாவது வகை. தானாகவும் அமைதியாக இருக்க மாட்டார். அடுத்தவர்கள் சொன்னாலும் செவிமடுக்க மாட்டார். எப்படித்தான் தடுப்பது? வழியே இல்லை.
அமத்தா வகையறா பெரியவர்களை சமீபமாக நிறைய பார்க்க முடிகிறது. விடிந்தும் விடியாமலும் ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு போய் நாய் மீது அடித்து விழுந்தவர், மரம் வெட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது மரத்துக்கு கீழே நின்று ‘வேலையாட்களுக்கு அட்வைஸ் செய்கிறேன்’ என்று கீழே விழுகிற கிளையை மண்டையில் ஏந்தி விழுப்புண் பெற்றுக் கொண்டவர், ஏதோ ஜூஸ் என்று தெரியாத்தனமாக டாய்லட் க்ளீனரைக் குடித்தவர் என்று செவண்ட்டி+ பெரியவர்களின் அட்டகாசங்களை மிகச் சமீபத்தில் நிறைய பார்த்தாகிவிட்டது. எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் வேண்டுமானால் காமெடியாக இருக்கலாம். ஆனால் நேரில் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும். கிட்டத்தட்ட குழந்தைகளைப் போலத்தான். குழந்தைகள் வீராப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். அடிபட்டு சிராய்த்துவிட்டால் அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது அல்லவா? அப்படித்தான் இந்த பெரியவர்களும். வலியைத் தாங்க முடியாமல் அழுவார்கள். கொடுமை.
அமத்தாவும் அப்படியொரு சேட்டையைச் செய்துவிட்டார்.
சில வாழைக்காய்களை எடுத்துக் கொண்டு போய் உள்ளூரில் விற்றுவிட்டு வந்திருக்கிறார். விற்பனை என்றால் நூற்றுக்கணக்கில் கூட இல்லை. பத்து வாழைப்பழம் ஒரு ரூபாய். உண்மையில் அவருக்கு ரூபாய்க்கான மதிப்பே தெரியாது. அந்தக்காலத்தை போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார். வெறும் ஒற்றை ரூபாயைத் தூக்கிக் கொண்டு போனால் சந்தைச் செலவை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று நம்புகிறார். தோட்டத்தில் வீணாகப் போய்விடக் கூடாது என்பதற்காக கிடைத்த வாழைக்காய்களையும் வாழைப் பழங்களையும் அள்ளிக் கொண்டு போய் மொத்தமாக ஐந்து ரூபாய்க்கு விற்றுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வந்திருக்கிறார். இந்த வியாபாரத்திற்காக இரண்டு மணிநேரமாவது தேவைப்பட்டிருக்கும். சோறும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் ஏறுவெயிலில் அலைந்து வந்தவர் கட்டுத்தறியில் சில வேலைகளைச் செய்துவிட்டு கன்றுக்குட்டிக்கு தண்ணீர் கொடுப்பதற்காக கயிற்றை அவிழ்த்திருக்கிறார். அது தண்ணீருக்காக் துள்ளிய துள்ளலில் சில மணி நேரங்களாகத் தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் இந்தக் கிழவியை டீலில் விட்டுவிட்டது. அதன் இழுப்புக்கு எண்பது வயது தாக்குபிடிக்க முடியவில்லை. அப்படியே நிலத்தில் அமர்ந்தவர் தனது இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றியிருப்பார் போலிருக்கிறது. இரண்டுமே ‘பொடுக்’என்று முறிந்துவிட்டது.
அசைய முடியவில்லை. கதறியிருக்கிறார். யாரையும் அவரைத் தொடவே அனுமதிக்கவில்லையாம். எங்கு தொட்டாலும் வலி. கயிற்றுக்கட்டிலில் தூக்கிப் போட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி கோயமுத்தூருக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வரும் வழியெங்கும் கதறியிருக்கிறார். இடுப்பு முறிந்திருக்கக் கூடும் என்று உடனிருந்தவர்கள் பயப்பட்டிருக்கிறார்கள். எண்பது வயதுக்கு மேல் இடுப்பு முறிந்தால் படுத்த படுக்கைதானே? வந்த உடனேயே ஸ்கேன், எக்ஸ்ரே என்று அத்தனையும் முடித்திருக்கிறார்கள். நல்லவேளையாக இடுப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கெட்டவேளையாக காலிலும் ஒரு முறிவு. ஆக எண்பது வயதில் மொத்தம் மூன்று எலும்பு முறிவுகள்.
இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்து பார்த்த போது கூண்டுக்குள் விரட்டப்பட்டதில் சங்கிக் கிடக்கும் சிட்டுக்குருவியாய்க் கிடந்தார். அழுதழுது கண்கள் வீங்கிக் கிடந்தன. அவரால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. குரலை வைத்துக் கொண்டு நான் என்று கண்டுபிடித்துவிட்டு மீண்டும் அழுதார். அரை மணிநேரத்தில் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அரற்றிக் கொண்டே உள்ளே செல்வதைப் பார்த்தேன். ‘இனிமேல் எதையும் தொடமாட்டேன்’ என்று அழுதது அரைகுறையாக புரிந்தது. அம்மா, சித்தியெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கீழே வந்து டீ குடித்துக் கொண்டிருந்தேன். வாழை அமைப்பின் வழிகாட்டிகள் நிகழ்வில் கலந்து கொள்ள வருவீர்களா என்று யாரோ ஃபோன் செய்து விசாரித்தார்கள் நான் கலந்து கொள்ளப் போவதில்லை. ஆனால் வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
16 எதிர் சப்தங்கள்:
அடடா..... இப்படி ஆகிப்போச்சே:(
அமாத்தா சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
உங்களுக்காவது பாட்டி. எனக்கு எங்க அப்பா அம்மாவே சொல்றதை கேக்காம ஏதாவது செஞ்சி அப்பப்போ அவங்களும் கஷ்டப்பட்டு, நம்மளையும் கஷ்டபடுதிடறாங்க...!!!
Hi..I pray to Almighty speedy recovery of ur grang mother....I hope she is fine now.....
அமாத்தா சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
அமாத்தா விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..
// அமத்தா வகையறா பெரியவர்களை சமீபமாக நிறைய பார்க்க முடிகிறது. //
உண்மைதான்.. அவங்களும் கஷ்டப்பட்டு, மற்றவர்களையும் கஷ்டபடுதிடறாங்க:(
//செவண்ட்டி+ பெரியவர்களின் அட்டகாசங்களை மிகச் சமீபத்தில் நிறைய பார்த்தாகிவிட்டது. //
ஆமால்ல ....! :(
விரைவில் குணம் பெறட்டும்.
வயதானாலும் அவர்கள் மனம் சும்மா இருப்பதில்லை! எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்! விரைவில் உங்கள் பாட்டி குணமடைய வாழ்த்துக்கள்!
எங்க அம்மதாவும் போன வாரம் வழுக்கி விழுந்து காலை முறித்துகொண்டார். என் அக்காவின் மாமியாரும் கீழே விழுந்து கையில் முறிவு
//கிட்டத்தட்ட குழந்தைகளைப் போலத்தான்.//
மணி கிட்டத்தட்ட இல்லங்க , முழுமையான குழந்தைகள் தான் . "கோவம் நல்லது" சொல்வது போல எங்கள் வீட்டிலும் இரண்டு குழந்தைகள் :)
அம்மத்தா விரைவில் குணமடைந்து மீண்டும் பட்டையக் கிளப்பட்டும் .
அமாத்தா சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
அம்மத்தா விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.
இது எங்க வீட்டுலேயும் நடந்திட்டிருக்கு... :)
அம்மத்தா விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்........
‘இந்த மாதிரி எத்தனை வேலைகளைச் செஞ்சிருப்பேன். இவன் சொல்லுறான்னு நாஞ் சும்மா இருப்பேனா?’
எங்க வீட்டுல இது 100 சதவிகிதம் உண்மை. அமத்தா விரைவில் குணமடைய வேண்டுகிறேன்
பி.கு: உங்கள் வலைப்பதிவை பார்த்து அன்று வாழை நிகழ்வில் கலந்து கொண்டேன். வேறு ஒரு நாள் வேறு ஒரு இடத்தில் உங்களை சந்திப்பேன் என எண்ணுகிறேன்.
இயலுமெனில் எனது எண்ணுக்கு அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம்
நிச்சயமாக அழைக்கிறேன்.
Post a Comment