Apr 3, 2014

பூட்டன் பிக்கப் செய்த பூட்டி

துணி மடிப்புக் கலையாமல் அணிவது ஒரு கலை. அது எல்லோருக்கும் ஒத்து வராது. வெள்ளைசுள்ளைக்கு பிரசித்தி பெற்ற அரசியல்வாதிகளிலேயே கூட பலருக்கு அது சரிப்படுவதில்லை. சிலர் மட்டும்தான் வெள்ளை மங்காமல், துளி கசங்காமல் மடமடப்போடு பெருவண்டி-பெருவண்டி என்றால் பஜேரா, ஸ்கார்பியோ மாதிரியான ரதங்களில் ஏறி அப்படியே குடை பிடித்தாற்போல இறங்கி கும்பிடுபோடுவார்கள். மடிப்புக்கலையாமல் துணி அணிவது ஒன்று இன்றைக்கு நேற்று வந்த பழக்கமில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவிருந்தே நம் ஆட்கள் அப்படித்தான் - ஜீன்கள் வழியாக காலங்கள் கடந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் இது. 

ஒரு குட்டி வரலாறு-

சங்ககாலம் என்றால் நமக்குத் தெரியும். இன்றையிலிருந்து குத்துமதிப்பாக இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பான காலம். அந்தக் காலத்தில் நம்மவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ள நம்மிடம் இலக்கியங்கள் இருக்கின்றன. ஒரு நாட்டின் எல்லையிலிருந்து அரசர்கள் பற்றி,  மக்கள் பற்றி, அவர்களின் சேட்டைகள் பற்றி என பெரும்பாலானவற்றை இலக்கியங்கள் வழியாகவே அறிந்து கொள்கிறோம். சேட்டை செய்யாமல் இருந்திருப்பார்களா? கைக்கிளை, பெருந்திணை என்று நாம் படிப்பதெல்லாம் அந்த வகை சேட்டைகள்தானே. அப்படியென்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூகிளிடம் கேட்கலாம். 

சங்க காலத்திற்கு பிறகான காலங்கள் பற்றி அறிந்து கொள்ள ஏகப்பட்ட சான்றுகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள். கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் என்று ஆதாரங்களுக்கு பஞ்சமே ஒல்லை. 

சங்ககாலத்திற்கு முன்பு? அது கொஞ்சம் சிரமம்தான். அதை உலோகக் காலம் என்கிறார்கள். அதுவும் கூட பிற்காலம் என்பது இரும்புக்காலம்-இரும்பினால் ஆன பொருட்களைப் பயன்படுத்தினார்கள்; அதற்கும் முன்பான காலம் வெண்கலக்காலம். 

Stop it. விட்டால் வரலாற்றுக் கட்டுரையாகிவிடும் போலிருக்கிறது. 

பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரேயொரு பத்தி மட்டும் ரம்பம் போட்டுவிட்டு ‘ஜம்ப்’ அடித்துவிடுகிறேன்.

உலோகக்காலத்திற்கு முன்பான காலம்- கற்காலம். நம் பூட்டமார்கள் கற்களினாலேயே ஆயுதங்கள் செய்து வாழ்ந்த காலம். அந்தக் கற்காலத்தை சிலா காலம் என்றும் சொல்கிறார்கள். அதையும் கூட ஆதி சிலாகாலம், மத்திய சிலாகாலம், பிந்தய சிலாகாலம் என்று பிரித்துவிட்டார்கள். வருஷக்கணக்கெல்லாம் சரியாகத் தெரியவில்லை. பல்லாயிரம் வருடங்கள் முன்பாக இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கற்காலத்தில் கிடைத்த ஒரு ஐட்டம் உரைகல். வெண்கண் செங்கல் இருக்கிறது அல்லவா? எங்கள் ஊரில் வெங்கச்ச்சாங்கல் என்போம். அதை பட்டையாக உரைத்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கல்லின் பயனே ‘அயர்னிங்’தான் என்று படித்த போது தூக்கிவாரிப்போட்டது. அந்தக் காலத்திலேயே கூட ஏதோ ஒரு வகை துணிமணியை நம் ஆட்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். கவனியுங்கள்- உலோகமே கண்டுபிடிக்கப்படாத காலம் அது. அப்பொழுதே துணி தயாரித்து அந்தத் துணியை இந்த உரைகல்லை வைத்து ‘அயர்ன்’ செய்து அணிந்து பூட்டன் பூட்டியையும், பூட்டி பூட்டனையும் பிக்கப் செய்து பட்டையைக் கிளப்பியிருப்பார்கள் போலிருக்கிறது.

இதை எதற்கு எழுத வந்தேன் என்றால்- காலங்காலமாக, மடமடப்பாக துணி அணிந்து திரிந்த மனிதர்கள் வாழ்ந்த அதே மண்ணில்தான் அரைத் துண்டுகளும், கோவணங்களும் கட்டிய மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களையும் மகான் என்று மக்கள் கொண்டாடியிருக்கிறார்கள். 

நேற்று ஒடுக்கத்தூர் மகானின் மடத்திற்குச் சென்றிருந்தேன். பெங்களூரில்தான் இருக்கிறது. அவர் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தவர். அவருடைய அப்பா வெள்ளைக்காரன் படையில் வேலையில் இருந்தவர். பையன் ஆரம்பப் பாடசாலையில் கொஞ்சம் படித்தவுடன் ஏதோ ஒரு வேலையில் சேர்த்துவிட்டிருக்கிறார். அதன் பிறகு ஒடுக்கத்தூராரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதன் மீதும் பற்றுதல் இல்லாமல் தன்னந்தனியாகச் சுற்றுவது, தனக்குத்தானே பேசுவது என்று அலைந்திருக்கிறார். பையனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதானே நினைப்பார்கள்? ஒரு பெண்ணைப் பிடித்து கட்டி வைத்துவிட்டால் சரியாகப் போய்விடும் என்று தேடியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு தப்பித்து இவர் ஓடிப் போய்விட்டார்.

அப்படி ஓடிப்போன ஊர்தான் ஒடுக்கத்தூர். வேலூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. இடுப்பில் ஒரு துண்டோடு அங்கு ஒரு ஆற்றங்கரையில் இருந்திருக்கிறார். கானாற்றங்கரை. ஆரம்பத்தில் இவர் சித்தம் கலங்கியவர் என்று நினைத்த மக்கள் துன்புறுத்தியிருக்கிறார்கள். பிறகு, இவரை மகான் என்று நம்பத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் நம் காலத்து சாமியார்களைப் போல பிழைக்கத் தெரியாத சாமி. ஆசி கொடுங்கள் என்று கும்பிடப் போனால் காட்டுக்குள் ஓடிவிடுவார். அப்படியே ஓடாமல் நின்றிருந்தால் ஆசிர்வாதம் வாங்கலாம் என்று வருபவர்கள் பலருக்கும் அடியும் உதையும் குத்தும்தான் சாமியாரிடமிருந்து கிடைக்கும். ஆனாலும் நம் மக்கள் சளைத்துவிடமாட்டார்கள் அல்லவா? இப்படியாவது மகானின் கைபடுகிறதே என்று அந்த அடிக்காக காத்துக் கிடந்திருக்கிறார்கள்.

இப்படியாக ஒடுக்கத்தூரிலும், மதனப்பள்ளியிலும் திரிந்த இந்த மனிதரை பெங்களூரில் இருந்து சென்ற நாகம்மா பாய் என்ற பெண்மணியும் இன்னும் சில பக்தர்களும்- அந்தக் காலத்தில் பெங்களூர் தமிழர்கள் பெரும்பாலும் பிள்ளைகளும், முதலியார்களும், செட்டியார்களும்தான்- பெங்களூருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை. வண்டியில் ஏற்றினால் எட்டிக்குதித்து காட்டுக்குள் ஓடிவிடுவார். கெஞ்சிக் கூத்தாடி ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வண்டியேற்றி கொஞ்ச தூரம் சென்றால் மீண்டும் எட்டிக்குதித்து காட்டுக்குள் ஓடிவிடுவார். இப்படியே வெகுநாட்கள் போராடி இரட்டை மாட்டு வண்டியிலேயே ஒடுக்கத்தூரிலிருந்து பெங்களூர் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

‘சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்’ என்ற புத்தகத்தின் வழியாகத்தான் இந்த மடம் பற்றித் தெரியும். பழைய புத்தகம் அது. அந்த மனிதரின் சேட்டைகளையெல்லாம் படித்தால் பைத்தியம் என்றுதான் தோன்றும். ஆனால் அவர் நிறைய அற்புதங்களைச் செய்ததாக மக்கள் நம்பியிருக்கிறார்கள். நோய்களை குணமாக்கியதாகவும், பஞ்சத்தைப் போக்கியதகாவும் எழுதியிருக்கிறார்கள். அவர் தனது தலையில் சில நிமிடங்கள் அணிந்து திருப்பிக் கொடுத்த தொப்பியை பிரசாதமாக நம்பி வாழ்நாள் முழுவதும் அணிந்த பெரிய மனிதர் இருந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டுத்தான் உணவு உண்பேன் என்று தவமிருந்த காலப் பணக்காரர் இருந்திருக்கிறார். இப்படி ஏகப்பட்ட கதைகளைச் சொல்கிறார்கள்.

அவர் மகானோ இல்லையோ- அல்சூர் ஏரிக்கு அருகில் ஒரு அற்புதமான மடம் இருக்கிறது. இந்த ஊர் தமிழர்கள் கட்டி வைத்துவிட்டார்கள். உள்ளே இருக்கும் அத்தனை பேரும் தமிழர்கள்தான். அறிவிப்புகளைத் தமிழில்தான் எழுதி வைத்திருக்கிறார்கள். இதே மடம் தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒடுக்கத்தூராரின் புகழ் கொடிகட்டியிருக்கும். பெங்களூர் என்பதால் நம்மவர்கள் மறந்துவிட்டார்கள்.

இப்படியான பழைய செய்திகளைக் கேள்விப்படும் போது அதை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். முன்பு ஹைதராபாத்தோடு தமிழர்களுக்கு நிறைய தொடர்புகள் இருந்திருக்கின்றன. இப்பொழுது எதுவும் இல்லை. நம் ஆட்களும் விட்டுவிட்டார்கள். இப்பொழுது அந்த ஊருடனான தமிழர்களின் தொடர்புகளைத் தேடினாலும் கிடைப்பது சிரமம். அந்த நகரம் முழுவதும் தெலுங்கு/உருது மயமாகிவிட்டது. பெங்களூர் அந்த அளவுக்கு மோசமாகிவிடவில்லை. இன்னும் தமிழ் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊருக்கும் தமிழருக்கும் இருக்கும் தொடர்புக்கான சில வரலாறுகள் சிதையாமல் இருக்கின்றன என்றாலும் இப்படியான வரலாறுகளை அவ்வப்போது நம்மால் முடிந்தளவுக்கு தூசிதட்டிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.

ஏதோ ஒருவிதத்தில் பிற்கால தலைமுறைக்கு உதவக் கூடும்.

4 எதிர் சப்தங்கள்:

”தளிர் சுரேஷ்” said...

ஒடுக்கத்தூரார் பற்றி கேள்விப்பட்டது இல்லை! தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்! நன்றி!

balutanjore said...

wow comments enabled super

BalajiS said...

beautiful temple in odukkathur madam.

I go to thai poosam and other festivals.

Also i visit for carnatic concerts there.

sivakumarcoimbatore said...

ஒருவிதத்தில் பிற்கால தலைமுறைக்கு உதவக் கூடும்.