Apr 2, 2014

உங்க ஊரில் யார் ஜெயிப்பாங்க?

உங்கள் ஊரில் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது? இங்கு மயான அமைதி. ஆரம்பத்தில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வந்தன. இப்பொழுது அவற்றையும் காணவில்லை. சில இடங்களில் மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் விளக்குமார்களைத் தூக்கிக் கொண்டு வீதி வீதியாகச் செல்கிறார்கள்- அதுவும் கூட அதிகபட்சம் இருபது பேர்கள்தான் தேறுவார்கள். இதைத் தவிர்த்து ராகுல்காந்தியின் பதாகைகள் பிரதான சாலைகளில் இருக்கின்றன. அவ்வளவுதான். மற்றபடி, சுவர்ச்சித்திரங்கள், வீடு வீடாக பிரச்சாரம் செய்வது, துண்டுப்பிரசுரங்கள் என்று எதுவுமே கண்ணில்படவில்லை. 

தேர்தல் என்பது ஒரு திருவிழா என்பதையே சிதைத்துவிட்டார்கள். இருபது வருடங்களுக்கு முன்பாக ஒவ்வொரு தேர்தலும் உள்ளூர் திருவிழாவைப் போலிருந்தது. கொடிகள், தோரணங்கள், சுவர் பிடித்து படம் வரைதல், பிரச்சார ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று கொண்டாடித் தள்ளினார்கள். 

‘ஜெ ஜெ ஜெயலலிதா ஜெயிக்கப் போற ஜெயலலிதா’ என்று சிறுவர் கூட்டம் ஓடினால் அதற்கு போட்டியாக ‘பனைமரத்துல வவ்வாலா கருணாநிதிக்கே சவாலா’ என்று இன்னொரு சிறுவர் கூட்டம் வீதி வீதியாக ஓடும். வேட்பாளர்கள் வருகிறார்களோ இல்லையோ- உள்ளூர் கட்சிக்காரர்கள் ஆட்டோவில் ஒலிவாங்கியைக் கட்டி கதறடித்தார்கள். நோட்டீஸை பொறுக்குவதற்கென்றே சிறுவர் குழாம் ட்ரவுசரை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடும். தேர்தல் என்பதே உற்சாகமான நிகழ்வாக இருந்தது.

இப்பொழுது ஏன் நசுக்கிவிட்டார்கள்?

சுவர்களில் ஓவியம் வரைபவர்கள், வாடகை வண்டிக்காரர்கள், பந்தல்காரர்கள், ஆப்செட் பிரிண்டர்ஸ் என்று தேர்தலினால் நேரடியாக வேலை கிடைத்த லட்சக்கணக்கானவர்களுக்கும்,  மறைமுக பலன் அடைந்த கோடிக்கணக்க்கானவர்களுக்கும் இப்பொழுது தேர்தலினால் எந்தப் பயனும் இல்லை. தேர்தல் வந்தால் போதும்- அச்சுத்தொழில், நெசவுத்தொழில், உணவு விடுதித் தொழில் என்று பல தொழில்கள் செழித்தன. வருடம் முழுவதும் வாடகைக்கான ஓட்டமே இல்லாத மகிழ்வுந்து உரிமையாளர்கள், டெம்போ உரிமையாளர்கள் போன்ற சிறுதொழில்களைச் சார்ந்தவர்களுக்கு கணிசமான வருமானம் கிடைத்தது. அதிகாரவர்க்கத்தினாலும், அரசியல்வாதிகளாலும் பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய்கள் ஏதாவதொரு விதத்தில் சிறு தொழில்துறைக்குள் பாய்ந்தன. அதனாலேயே பலருக்கும் தேர்தல் என்பது திருவிழாவாக இருந்தது.

ஆனால் இப்பொழுது என்ன நடக்கிறது? 

செலவுகளைக்கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் தேர்தலைச் சார்ந்து பிழைத்த அத்தனை தொழில்களையும் பொடனியில் அடித்ததுதான் தேர்தல் ஆணையத்தின் சாதனை. இத்தனை கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையத்தினால் செலவுகளைக் கட்டுப்படுத்திவிட முடிந்துவிட்டதா? 

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பல கோடி ரூபாய்களைக் கொட்டுகிறார்கள். இது எல்லோருக்குமே தெரியும். தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். ஆனால் தடுக்க ஒரு வழியும் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு கண்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் கரங்கள். யாருக்குமே தெரியாமல் காரியத்தைச் சாதித்துவிடுகிறார்கள். ஒரு தெருவுக்கு பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றால் ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் வாக்காளர்களுக்குப் போகிறது. மிச்ச மீதி கட்சிக்காரர்களின் பாக்கெட்டுக்குப் போகிறது. அத்தனையும் கறுப்புப் பணம்.

இரவோடு இரவாக, தெருத்தெருவாக வாக்காளர்களைத் தேடி பணம் கொடுக்கிறார்கள். தலைவர்களின் கூட்டத்திற்கு அழைத்துப் போவதிலிருந்தே இந்த லஞ்சம் ஆரம்பித்துவிடுகிறது. ‘அந்தக் கட்சிக்காரன் ஐந்நூறு கொடுத்தான்; நீ என்ன முந்நூறுதான் கொடுக்கிற?’ என்று வாக்காளர்கள் வெளிப்படையாக கேட்கிறார்கள். ‘ஆயிரம் கொடுத்தால்தான் ஓட்டு’ தயக்கமேயில்லாமல் விற்கிறார்கள். இப்படியாக தேர்தலுக்கான அத்தனை செலவுகளையும் கட்டுப்படுத்தி அதை வாக்குக்கான லஞ்சமாக convert செய்ததுதான் கண்டபலன்.

முன்பெல்லாம் பரப்புரையின் வீச்சை வைத்தே யார் வெல்லக் கூடும் என்று சொல்லிவிடுவார்கள். ‘கன போடு போடுறான்..அவஞ் ஜெயிச்சுடுவானப்பா’ என்பதை சாதாரணமாகக் கேட்கலாம். இன்றைக்கு விசாரித்துப் பாருங்கள்- தொண்ணூறு சதவீதம் பேர் ‘தெரியாது’ என்பார்கள். மீதி பத்து சதவீதம் பேர் தாம் வாக்களிக்கவிருக்கும் கட்சிதான் ஜெயிக்கும் என்பார்கள். ‘ஏன் தெரியாது’ என்றால் ஒரே பதில்தான். ‘எந்தக் கட்சிக்காரன் காசு கொடுக்கிறானோ அவனுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்...யார் அதிகமாகக் கொடுப்பார்கள் என்று கடைசி நேரம் வரைக்கும் தெரியாது’.

ஆனால் எத்தனை எத்தனை கருத்துக் கணிப்புகள்? ஒவ்வொரு சேனல்காரனும் கருத்துக் கணிப்பு வெளியிடுகிறான். ஒவ்வொரு பேப்பர்க்காரனும் கணிக்கிறான். ‘நாங்கள் ஐம்பதாயிரம் பேரிடம் கருத்துக் கேட்டோம்’ என்று ஒருவன் சொன்னால், ‘நாங்கள் எழுபதாயிரம் பேரிடம் கேட்டோம்’ என்று இன்னொருத்தன் சொல்கிறான். இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் நம்மில் யாராவது ஒருவரேனும் கருத்துச் சொல்லியிருக்க வேண்டும் அல்லது நமக்குத் தெரிந்த ஒருவரேனும் கருத்துச் சொல்லியிருக்க வேண்டும். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவதோ கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டதுண்டா? பதில் ‘இல்லை’ என்றுதான் வரும். நம்மையெல்லாம் விட்டுவிட்டு யாரிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள்?

இந்த லட்சணத்தில் இந்தக் கட்சிக்கு 25 ஸீட், அந்தக் கட்சிக்கு 10 ஸீட் என்று டெல்லியில் அமர்ந்து கொண்டு அடித்துவிடுகிறான். இத்தகைய போலியான தேர்தல் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தட்டும். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை கோடிக்கணக்கான ரூபாய்களில் முழுப்பக்க விளம்பரங்கள் செய்த மோடி, காங்கிரஸ், ஜெயலலிதா போன்றவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது பற்றி யோசிக்கட்டும். வாக்குக்கு ஐந்நூறோ ஆயிரமோ வாங்கிக் கொண்டு டாஸ்மாக்குக்கு ஓடும் அப்பாவிகளை பற்றி சிந்திக்கட்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள். கோழி விற்ற காசு, ஆடு விற்ற காசையெல்லாம் ‘கணக்கில் வராத பணம்’ என்று பறிப்பதெல்லாம் பாவப்பட்ட செயல். 

தேர்தலை அமைதியாக நடத்துவதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கான வழிமுறைகள்தான் சரியில்லை. கலவரங்களைத் தடுப்பது, கட்சிகளுக்கிடையேயான கலகங்கள், வேட்பாளர்களுக்கிடையேயான பிரச்சினைகளைக் கண்காணித்தல், தடுத்தல் போன்றவற்றைத் தேர்தல் ஆணையம் செய்வதில் பிரச்சினையில்லை. ஆனால் பதாகைகள், கொடிகள், தோரணங்கள் போன்ற பரப்புரை உத்திகளை முழுமையாகத் தடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அதற்கு பதிலாக சில வழிமுறைகளை உருவாக்கி அவற்றை வேட்பாளர்களும் அரசியல்கட்சிகளும் பின்பற்றச் செய்வதே சரியானதாக இருக்கும்.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு கொண்டாட்டம். ஆனால் அதை சாவு வீடாக மாற்றி வைத்திருப்பதை பார்க்க சகிக்கவில்லை.

5 எதிர் சப்தங்கள்:

Bala said...

எங்களது தொகுதி தென்சென்னை. இங்கும் தேர்தல் உற்சாகம் சிறிதும் இல்லை.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! அனாவசிய கட்டுப்பாடுகள் தேர்தல் உற்சாகத்தை குறைத்துவிட்டன!

நாச்சியப்பன் said...

நான் 1998 -2003 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் / உத்தராஞ்சல் பகுதி தேர்தல்களில் Polling Officer - ஆக பணிபுரிந்தேன். ஒன்று பாராளுமன்ற தேர்தல் மற்றொன்று சட்டமன்ற தேர்தல். முதன்முறை எனக்கு அளிக்கப் பட்ட polling booth சரியான கிராமம். 6-மணி நேரம் பொட்டல் கிரவுண்டில் என் குழுவுடன் (நானும், அதுவரை சந்தித்தே இராத நான்கு வெவ்வேறு துறையை சேர்ந்த ஆசிரியர், கிளார்க், பியூன் ) காத்து கிடந்த பிறகு லாரியில் கொண்டுபோய் தள்ளி விட்டார்கள். மாலை 6 மணி இருக்கும். இறங்கிய இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. பிரித்து பார்த்து அதுதான் நங்கள் மறுநாள் எலெக்ஷன் நடத்த வேண்டிய "தேர்தல் அறை" என அறிந்தோம். சரியென்று ஒரு மணி நேரத்தில் அந்த டெண்டைக் கட்டிய பிறகுதான் எங்களுக்கு பசி வந்தது. சரி எதாவது கடை இருக்கும் என பார்த்தால் அந்த குக்கிராமத்தில் ஒரு டீக்கடை கூட இல்லை. நான் கொண்டு வந்த பிஸ்கட்டை நாங்கள் ஐவரும் பகிர்ந்து உண்டோம். சற்று நேரத்தில் கிராம "முக்யா" (தலையாரி?) அங்கு வந்து எங்களை வரவேற்றார். பிறகு அவர் கூறியது: "இதே பஞ்சாயத்து தேர்தல் ஆகவோ அல்லது சட்டமன்ற தேர்தல் ஆகவோ இருந்தால் இந்த கிராமமே திருவிழா வேடம் பூண்டு உங்களுக்கு நல்ல விருந்தும் வேண்டிய வசதிகளும் செய்து இருப்போம். என்ன செய்வது? எங்கோ டெல்லியில் நடக்கும் ஆட்சியில் எங்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. போகட்டும். இங்கே இரவு கரண்ட் வராது. காலையில் சந்திப்போம்" என்று வாழ்த்தி விட்டு போயே போய் விட்டார். நம்ம ஊரும் மெல்ல மெல்ல வடக்கர்களின் தாக்கம் கொண்டு மாறி வருகிறதோ? நல்லதுதான்.

Unknown said...

Hai sir...

Dinamani has published this on "therdhal thiruvizha" page with your name...

Life said...

அரசியல் வாதிகளின் வேஷங்கள் கலைகப்படுவதால்
கோஷம் போட்டு கொண்டாட மக்கள் திரள்வதில்லை
காந்திக்கு கூடும் கூட்டமே அனைத்தும்.