Dec 5, 2013

சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா?

லாவணி ஆட்டம் பார்த்திருக்கிறீர்களா? மஹாராஷ்டிராவில் இருப்பவர்கள்/இருந்தவர்கள் பார்த்திருக்கக் கூடும். இது மராத்தி நாட்டுப்புற ஆட்டம்தான். லாவண்யா, லாவணி என்பதற்கெல்லாம் ஒரே அர்த்தம்தான்- அழகு. ஆனால் இந்த ஆட்டத்தை அழகு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் செம ‘ஹாட்’ ஆட்டம். 

ஆட்டத்தைப் பற்றி சொல்வதற்கு முன்பாக வேறொன்றை பேசிவிடலாம். 

பெங்களூரில் வடக்கத்திக்காரர்களின் சங்கங்கள் படு ஸ்ட்ராங்காக இருக்கின்றன. ஏதாவது பண்டிகை வந்தால் போதும்- ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். நம் ஆட்களைப் போல தீபாவளி வந்தாலும் பொங்கல் வந்தாலும் காரை எடுத்துக் கொண்டு ஊரில் போய் சிறப்பு பட்டிமன்றம் பார்ப்பதில்லை. இங்கேயே கொண்டாடிச் சலிக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றாலும் கூட ‘சங்கத்தில்’ சொன்னால் ‘எங்க சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா?’ என்று வந்து நிற்பார்கள் என்று கெத்தாகச் சுற்றுகிறார்கள். 

வடக்கத்திக் காரர்கள் மட்டுமில்லை. மலையாளிகளும் சளைத்தவர்களில்லை. செவ்வாய் கிரகத்திலேயே நாயர் டீக்கடை இருக்கிறதாம். பெங்களூர் வீதிகளையா விட்டு வைத்திருப்பார்கள்? பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஓணம் சமயத்தில் பார்த்திருக்க வேண்டும். திரும்பிய பக்கம் எல்லாம் சந்தனக் கலர் பட்டுப்புடவையோடு சுருள் சுருள் ஈரத் தலைமுடியுடன் மலையாள குட்டிகளும் குட்டன்களும் அலைந்து கலக்கினார்கள்.  

எங்கள் ஏரியாவில் ஒரு ரியல் எஸ்டேட் பிதாமகன் இருக்கிறார். மலையாளி. ஆடி, இன்னோவா என்று ஏகப்பட்ட கார்கள் வீட்டில் நிற்கும். இத்தனை கார்கள் நிற்பதென்றால் வீடு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? கிட்டத்தட்ட முக்கால் ஏக்கரில் இருக்கும். ஆனால் மலையாளிகள் எப்பவுமே விவரமானவர்கள்- வேறு ஏதாவது சொன்னால் யாராவது சண்டைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்பதால் விவரமானவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆள்தான் மலையாளியே  தவிர வீட்டின் மேலாக கர்நாடக மாநிலக் கொடி பறக்கும். கர்நாடக மாநிலத்திற்கென்று மஞ்சள், சிவப்பு நிறத்தில் தனிக் கொடி இருக்கிறது. அதை வீட்டில் பறக்கவிட்டுவிட்டால் ‘பிழைக்க வந்தவன்’ என்று யாரும் சொல்லிவிட முடியாது அல்லவா? அதற்குத்தான்.

நமக்கெல்லாம் ஈகோ தடுக்கும். கன்னடக்காரன் கொடியை நான் ஏன் பறக்க விட வேண்டும் என்போம். வட்டாள் நாகராஜோ வேறு எவனோ தடியைத் தூக்கிக் கொண்டு துரத்தினால் சட்டிபானையை எல்லாம் விட்டுவிட்டு ஊருக்கு ஓடினாலும் ஓடுவோமே தவிர கன்னடக் கொடியை தொடக் கூட மாட்டோம். ஆனால் மற்றவர்கள் செய்வார்கள். இந்தப் பஞ்சாயத்து இருக்கட்டும்.

அந்த பச்சோந்திதான் - ஸாரி - அந்த மலையாளிதான் எங்கள் ஏரியாவின் மலையாள ஸ்பான்சர். ஒரு முறை சாலையிலேயே வைத்து ஒரு ஆட்டோ டிரைவரை அடிப்பதை பார்த்திருக்கிறேன். அத்தனை தெனாவெட்டான மனுஷன். பிழைக்க வந்த ஊரில் ஒருவனை கை வைக்கிறான் என்றால் ஒன்று பணம் இருக்க வேண்டும் அல்லது பவர் இருக்க வேண்டும். ஆனால் அவனிடம் இரண்டுமே இருக்கிறது. அந்த ஆளின் பணத்தை வைத்து ஓணத்திற்கு பேனர் கட்டுவார்கள், ரேடியோ கட்டுவார்கள், நோட்டீஸ் அடிப்பார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டதான். ஏரியாவே களை கட்டும். 

நம்மவர்களும் இருக்கிறார்களே! இருக்கிறார்களே என்ன இருக்கிறார்களே? ‘நம்மவர்களும் இருக்கிறோமோ’ என்று சொல்ல வேண்டும். நாற்பது சதவீதத்திற்கு மேல் நம்மவர்கள்தான். இருந்து என்ன பிரயோஜனம்? வேண்டாம் விடுங்கள். வாயைத் திறந்தால் புலம்பலாகத் தெரியும்.

இப்படியான ஊரில் மராத்திகளுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. சமீபத்தில் ஒரு விழா நடத்தினார்கள். ஆண்டுவிழாவோ என்னவோ. மராத்திப் பையன் ஒருவன் என்னையும் அழைத்துச் சென்றிருந்தான். அலுவலக நண்பன்.  ‘சைட் அடிக்கலாம்’ என்று சொல்லித்தான் அழைத்தான். அவன் சொன்னது பொய்க்கவில்லை. மராத்திகளில் இத்தனை அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் வாயடைத்துப் போய்விட்டது. ‘மராத்தி’என்று எழுதும் போது ஏன் குறில் ‘ம’ பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூட நினைப்பு ஓடியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விழாவில் அவர்கள் பேசுவது ஒரு வார்த்தையும் புரியவில்லை. ஆனால் கண்ணுக்கு உணவில்லாத போதுதான் செவிக்கு உணவு தேவைப்படும். கலர்கலராக கண்களுக்குள் என்னனென்னமோ போய் வருகிறது. பிறகு எதற்கு கவலைப்பட வேண்டும்? திறந்த வாய்க்குள் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த மேடையில்தான் லாவணி ஆட்டத்தை ஆடினார்கள். க்ரூப் டான்ஸ் எல்லாம் இல்லை. நான்கு பெண்கள் தனித்தனியாக ஆடினார்கள். ‘லாவணி’ என்ற பெயரை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். ஆனால் இனிமேல் மறக்கவே முடியாது. நான்கு பேர்தான் ஆடினார்கள் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் இன்னும் நான்கைந்து வருடத்திற்கு தேவையான எனர்ஜியை ரத்தத்துக்குள் ஏற்றிவிட்டுவிட்டார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

லாவணியின் வரலாறு படு சுவாரசியமானது. அந்தக் காலத்தில் சோர்ந்து போன ராணுவ வீரர்களை உசுப்பேற்றுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட குத்தாட்டமாம் இது. பெண்ணடிமை ஆணாதிக்கம் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் இது பட்டாசு கிளப்பும் நடனம். erotic மற்றும் sensual என்றார்கள். எனக்கு என்னவோ முதல் வார்த்தை மட்டும்தான் இருப்பதாகத் தெரிந்தது. அத்தனை கிளுகிளுப்பு. நல்ல வேளை- இத்தனைக்கும் ஒன்பது முழ புடவையைக் கட்டிக் கொண்டுதான் ஆடுகிறார்கள். 

அந்தக் காலத்து போர்வீரர்களை நினைத்துப் பார்க்கிறேன். தாறுமாறாக உசுப்பேறியிருப்பார்கள். பாவம். சரி விடுங்கள்.

நம் ஊரிலும் லாவணி இருந்ததாம். மராத்தியர்கள் தஞ்சாவூரை ஆண்ட போது லாவணியை கொண்டு வந்திருக்கிறார்கள். நமது பண்பாட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்திலும் அது உருமாறி இப்பொழுது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. ஆனால் மஹாராஷ்டிராவில் இன்னமும் இருக்கிறது. சினிமா பாடல்களும் லாவணியில் இருக்கின்றன. யூடியூப்பில் லாவணி என்று தேடினால் நல்ல குத்தாட்டங்களை பிடித்துவிடலாம். தேடிப்பாருங்கள்.

இதையெல்லாம் எழுதி நல்ல மனதை கெடுப்பதாக யாரும் கொடிபிடித்துவிட வேண்டாம். ஒரு சமூக சேவைதான். வடக்கத்திய கலையை நம் தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்க்கும் கலைச் சேவை. 

வாழ்க வளமுடன்.