Dec 4, 2013

ஆட்டுக்கு வால் அளவான சைஸ்தானே?

அலுவலகத்தின் பின்புறம் ஒரு பெருங்கதவு இருக்கிறது- Gate. பெரும்பாலான நேரங்களில் பூட்டி வைத்துவிடுவார்கள். காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் தலா இரண்டு மணி நேரம் வீதம் மொத்தம் ஆறு மணி நேரம்தான் திறந்து வைத்திருப்பார்கள். அந்த பின்புறக் கதவு வழியாக வண்டிகள் போக முடியாது- செக்யூரிட்டிகள் அனுமதிக்க மாட்டார்கள். வேண்டுமானால் நடந்து போய் வரலாம். கதவைத் தாண்டிச் சென்றால் சில கடைகள் இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் இருக்கும் அதே ஃபார்முலாதான்: இரண்டு ஆந்திரா மெஸ்கள். ஒரு பானிபூரிக்கடை. default ஆக ஒரு நாயரின் டீக்கடை. இந்தக் கடைகளை பற்றி எழுதுவது நோக்கமில்லை. 

கதவுக்கு பின்புறமாக ஒரு டீ விற்கும் பையன் இருக்கிறான். அவனைப்பற்றி எழுதுவதும் நோக்கமில்லை. ஆனால் அவனை தவிர்த்துவிட்டு இதை எழுத முடியாது. அவனும் தமிழ்ப்பையன் தான். பதினைந்து வயது இருக்கும்.

அந்தப் பையன் காலையிலேயே வந்துவிடுவான். டீயும் கூடவே சிகரெட்டும் விற்பான். கடையெல்லாம் கிடையாது. ஒரு தகரப்பெட்டியும் ஃப்ளாஸ்க்குமாக கதவுக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். கதவுச் சந்து வழியாக பணத்தை நீட்டிவிட்டு டீ வேண்டுமா அல்லது சிகரெட் வேண்டுமா என்று நாம் சொன்னால் சந்து வழியாகவே கேட்டதைத் தருவான். அவன் முகம் நமக்கும் தெரியாது; நம் முகமும் அவனுக்குத் தெரியாது. கை வழி வியாபாரம்தான். 

மாலை நேரங்களில் டீ அடிக்க விரும்பினால் அந்தப் பையனிடம்தான் போவேன். ஐந்து மணிக்கு மேலாகச் சென்றால் கதவைத் திறந்து வைத்திருப்பார்கள். அருகில் நின்றே வாங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் நவீனும் கூடவே வருவான். நவீன் எங்கள் ஊர்ப்பக்கம். இளம் வயது. சென்ற வருடம்தான் கல்லூரியை முடித்து விட்டு புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். பக்கத்து டீமில் இருக்கிறான். இருபதாயிரத்துச் சொச்சம் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறான். 

புது வேலை, புது இடம், புது ஊர் என்றெல்லாம் வாழ்க்கையில் மாறும் போது நம்மையும் அறியாமல் மனம் ஒப்பிடத் தொடங்கிவிடும் அல்லவா? கூடப் படித்தவன் நம்மை விட சம்பளம் அதிகம் வாங்குகிறான்; இந்த ஊரை விட எங்கள் ஊர்தான் நன்றாக இருக்கும்; இந்த நிறுவனத்தை விட பழைய நிறுவனம் எவ்வளவோ பரவாயில்லை- இப்படியான ஒப்பிடல்கள்.

நவீனுக்கும் இப்படியான ஒப்பீடுகள் உண்டு. 

‘இதெல்லாம் ஒரு ஊராண்ணா? த்தூ...ஊருண்ணா நம்ம ஊருதான்’

‘இங்க கேண்டீன் கேவலமா இருக்குண்ணா...எங்க ஹாஸ்டல் மோர் செமயா இருக்கும்’

‘பிரகாஷ் என்னை விட மட்டமா படிப்பான்ணா...ஆனா இப்போ யு.எஸ் போயிட்டான்...நம்ம ஊர்ல ஒரு சைட் வாங்கிட்டான் தெரியுமா? ஈகிள் டெய்லர் கடைக்கு பின்னாடி’ 

இப்படித்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருப்பான். அவனை பேசவிட்டு கேட்டுக் கொண்டிருந்தால் நமக்கும் பொழுது போகும். ஆனால் அவன் இதோடு நின்றிருந்தால் பிரச்சினையில்லை. தெரியாத்தனமாக டீக்காரப் பையனிடம் வாய் கொடுத்துவிட்டான். அந்தப் பையனாவது அடக்கமாக இருந்திருக்கலாம். ம்ஹூம்.அவன் தனது பிரதாபங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறான்.

அவன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இருநூறு டீ விற்கிறானாம். காலையில் நூறு, மாலையில் நூறு. ஒரு டீ ஐந்து ரூபாய். துளியூண்டு பிளாஸ்டிக் கப்பில் தருவான். கணக்குப் பார்த்தால் ஆயிரம் ரூபாய். டீத்தூள், சர்க்கரை எல்லாம் போக ஒரு நாளைக்கு எந்நூறு ரூபாயாவது நிற்கும். சிகரெட் விற்பனை தனிக்கணக்கு. 

‘டீ மட்டுமே ஆயிரம் ரூவாய்க்கு விக்கிறாண்ணா. என்னைய விட எச்சா சம்பாதிக்குறாம் பாருங்க’ என்றான் நவீன். 

விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நவீன் சீரியஸாக இருந்தான்.  திரும்பத் திரும்ப இதையே அவன் பேசிக் கொண்டிருப்பது டார்ச்சராகிவிட்டது. 

‘அதெல்லாம் இல்ல. சனி, ஞாயிறு எல்லாம் அவனுக்கு வியாபாரம் கிடையாது. மாசத்துல எட்டு நாளை கழிச்சுக்க..இருபத்திரண்டு நாளைக்குத்தான் வியாபாரம்’ என்ற போது ஆசுவாசம் ஆனான் என்று நினைக்கிறேன். சில நாட்களுக்குப் பிறகு ‘ஏண்டா உனக்கு அவன் சரி மனுஷனா? பத்து வருஷம் கழிச்சு நீ லட்சக்கணக்குல வாங்குவ. அவன் வாங்குவானா?’ என்ற போது சற்று ஆறுதல் அடைந்து கொண்டான். 

அதன் பிறகு அவ்வப்போது ஒப்பீடுகள் தொடர்ந்தாலும் பெரிய புலம்பல் இல்லாமல்தான் இருந்தான். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் நவீனுக்கு ஒரு ப்ரோமோஷன் கொடுத்துவிட்டார்கள். நாற்பது சதவீத சம்பள உயர்வு வேறு. ஆளே தலை கீழாக மாறிவிட்டான். மண்டையில் கனம் சேர்ந்துவிட்டது. பெருமையடிக்கத் துவங்கியிருந்தான். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ‘ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைப்பான்’. நவீனுக்கு வால் நீளத் துவங்கியவுடன் அதை கத்தரித்துவிட ஆண்டவனாகப் பார்த்து ஒருவனை அனுப்பி வைத்திருந்தான். வேறு யாருமில்லை- அதே டீப்பையன் தான்.

ஒரு நாள் அதுவும் திருநாளாக அவனிடம் ‘இதே பிஸினஸ் உனக்கு வாழ்க்கை பூரா போதுமா?’ என்ற ரீதியில் நவீன் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. ஏற்கனவே டீக்காரனிடம் அடி வாங்கியிருந்தாலும் புத்தி வேலை செய்யவில்லை பாருங்கள். அவன் மறுபடியும் சிக்ஸர் அடித்திருக்கிறான்.

‘அதெப்படி சார்? இது பத்துமா? இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ரெண்டு லட்சம் வெச்சிருக்கிறேன். பாருங்க அடுத்த வருஷம் கடை போட்டுருவேன். அப்புறம் ஹோட்டல் ஆரம்பிக்கணும்’ என்று இழுத்திருக்கிறான். உப்பிய மொத்த பலூனுக்கும் ஒரே ஒரு ஊசி. நவீன் புஸ்ஸாகிவிட்டான்.

அதே நாளில் பேயறைந்த மாதிரி என்னிடம் பேசினான். ‘இப்பவே அந்த டீக்காரப் பையன் ரெண்டு லட்சம் வெச்சிருக்கான்ணா. என்னனென்னமோ சொல்லுறான்..பாருங்க கோடீஸ்வரன் ஆகிடுவான்..நாமெல்லாம் படிச்சு என்னண்ணா பண்றது? மசுரு’ என்று பழைய புள்ளிக்கே வந்துவிட்டான். இரண்டு மூன்று நாட்களாக இதே பல்லவிதான். இன்றைக்கும் வெளியே போகும் போதும் புலம்பினான். எரிச்சலாக இருந்தது.

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

‘டேய்..கே.ஏ.செங்கோட்டையன் உங்கப்பாவை விட ஜூனியர்தான். ஒரே ஸ்கூல். அவரு எட்டாவது கூட பாஸ் இல்லையாம்...ரெண்டு தடவை மினிஸ்டர் ஆகிட்டாரு..அஞ்சாறு தடவை நம்மூருக்கு எம்மெல்லே ஆகிட்டாரு...உங்கப்பா புலம்பிட்டா இருக்காரு?’ என்றேன். சம்பந்தமே இல்லாமல் இதை எதற்கு கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் நவீன் அமைதியாகிவிட்டான். அதன் பிறகு அவன் பேசவே இல்லை. எங்கேயோ பார்த்துக் கொண்டு ஆளுக்கொரு பஜ்ஜியை விழுங்கிக் கொண்டிருந்தோம்.

சின்னப் பையன். பக்குவம் இல்லாமல் யோசிக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். பணம், பதவியைப் பொறுத்தவரைக்கும் எப்படி ஒப்பீடு செய்தாலும் தவறாகப் போய்விடும். இவை யாருக்கு கிடைக்கும் என்று தெரியாது. நமக்கு ஏன் கிடைக்கவில்லை என்றும் புரியாது. போகிற போக்கில் விட்டுவிட வேண்டும்- தத்துவத்தை யோசித்துக் கொண்டு நானும் அமைதியாக இருந்தேன். 

பஜ்ஜியை முடித்துவிட்டு பின்கதவு வழியாக நுழையும் போது ‘பையன்கிட்ட டீ குடிக்கலாமா?’ என்றேன்.

‘இல்லண்ணா நீங்க வேணும்ன்னா குடிச்சுட்டு வாங்க..நான் போறேன்’ என்று கிளம்பிவிட்டான்.

போனால் போகட்டும். 

டீக்காரப் பையன் சிரித்துக் கொண்டே டீயை நீட்டினான். உறிஞ்சிவிட்டு வந்து இதை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.