Dec 26, 2013

மணி ரத்னத்தை புரிந்து கொள்ளுதல்

அந்த இரண்டு நண்பர்களுக்கும் சினிமாதான் கனவு. இரண்டு பேர் மட்டுமில்லை அவர்களது குழுவில் இதே கனவோடு இன்னும் சிலரும் உண்டு. உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன்னில் அமர்ந்து கையில் வைத்திருக்கும் காசுக்கு ஏற்ப காபி குடித்துக் கொண்டே பேசும் நண்பர்கள் குழாம் அது. காபிதான் அதிகபட்ச மெனு. அதற்கு மேல் பட்ஜெட் இடம் கொடுக்காதாம். அதில் ஒருவர் எம்.பி.ஏ முடித்துவிட்டு மும்பையில் கன்ஸல்டண்டாக இருந்தவர். சினிமாவுக்கு போகலாம் என்று வேலையை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டார். எம்.பி.ஏ படித்தவர் அல்லவா? செம ப்ளானிங். வாய்ப்பு தேடுவதற்காக அடுத்து யாரைச் சந்திப்பது, யாருடன் follow-up, யார் எல்லாம் நிராகரித்தார்கள் என்று பக்காவாக வைத்திருப்பார்.

அவரிடம் ஒரு யெஸ்டி(Yezdi) வண்டி உண்டு. அவரது நண்பருக்கு ஓளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த நண்பரிடம் லாம்ரெட்டா ஸ்கூட்டர் இருந்தது. இரண்டு பேரும் இந்த இரண்டு வண்டிகளில் ஒன்றில் ஏறிக் கொண்டு சென்னை நகரின் முக்கியமான சினிமா நிறுவனங்களை அணுகிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்புத் தேடி போன இடம் அத்தனையுமே அந்தக் காலத்து பெருந்தலைகள். மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, கமலஹாசன் என்று. எதுவும் சரியாக அமையவில்லை. ஆனால் வைத்திருந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். ‘டைரக்டரும் புதுசு; ஒளிப்பதிவாளரும் புதுசுன்னா கொஞ்சம் பயமா இருக்கே’ என்று தயாரிப்பாளர் தயங்க, பாலுமகேந்திராவை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக் கொண்டு முதல் படத்தை இயக்கிவிட்டார். அதுவும் கன்னடத்தில். அந்த இயக்குனர் மணிரத்னம். அவருடன் சுற்றிக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

இதெல்லாம் நடந்தது 1980களில். மணிரத்னத்தின் முதல் கன்னடபடமான பல்லவி அனுபல்லவி வெளிவந்த ஆண்டு 1983. அதன்பிறகுதான் நமக்குத் தெரியுமே- ‘பகல்நிலவு’வில் ஆரம்பித்து ‘கடல்’ வரைக்கும். பகல்நிலவுக்கு முன்பாக ‘உணரு’ என்ற ஒரு மலையாளப்படத்தையும் இயக்கியிருக்கிறார். 

யாரிடமும் அஸிஸ்டெண்ட் டைரக்டராகக் கூட இல்லாமல் சினிமாவில் கொடிகட்டிய நம் காலத்தின் ஜாம்பவான் ஒருவர் ஸ்கூட்டரில் வாய்ப்புத் தேடிய கதையை தெரிந்து கொள்ளும் போது ஒரு சுவாரஸியம் இருக்கிறது அல்லவா? அதுவும் அவரது சொந்த நடையிலேயே. அப்படியொரு புத்தகம் கையில் கிடைத்திருக்கிறது. ‘மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்’ என்று. கிழக்கு பதிப்பகத்தில் கொண்டு வருகிறார்கள். Review copy அனுப்பி வைத்திருந்தார்கள். செம கனமான புத்தகம். ஐந்நூறு பக்கங்கள். 

'Conversation with Maniratnam' என்று ஏற்கனவே ஆங்கிலத்தில் வந்த புத்தகம் இது. அதுதான் இப்பொழுது தமிழில் வருகிறது. ஒரு சினிமா சம்பந்தமுடைய புத்தகத்தை- அதுவும் ஐந்நூறு பக்கங்களால் ஆன புத்தகத்தை ஒரே நாளில் வாசித்து முடிக்க முடியும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. ஆனால் முடித்தாகிவிட்டது. புத்தகம் கையில் கிடைத்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. சுடச்சுட காரியம் முடிந்தது.

நேற்று மதியவாக்கில்தான் வாசிக்க ஆரம்பித்தேன். இரவு முழுவதும் பயணம். ஒரு இரவை நல்லபடியாகக் கொண்டாட வேண்டும் என்றால் புத்தகம் ஒன்றைக் தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறிவிட வேண்டும். நீண்ட தூர வண்டிகளில் ஏறுவதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இருக்கைகள் நிரம்பியவுடன் விளக்கை அணைத்துவிடுவார்கள். ஜன்னலை மூடிக் கொண்டு தூங்கினால் நாம் போக வேண்டிய இடம் வந்த பிறகுதான் முகத்தில் வெளிச்சத்தை பாய்ச்சி எழுப்புவார்கள். 

அதனால் முடிந்தவரை ஒரே பேருந்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுவேன். கோபியிலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து சேலம், சேலத்திலிருந்து தர்மபுரி, தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி அங்கிருந்து பெங்களூர் என்று மாற்றி மாற்றி பேருந்து ஏறும் போது ஒவ்வொரு பேருந்தும் ஒரு உலகத்தை காட்டிவிடும். சிறு தொலைவு பேருந்துகளில் பெரும்பாலும் விளக்கை அணைக்க மாட்டார்கள். இடையிடையே நிறுத்தி ஆட்களை ஏற்றிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் கண்டக்டர்கள் லுங்கி அணிந்து கொண்டு படு கேஷூவலாக இருப்பார்கள். பேருந்திலும் ஷிப்ட் முடித்து வருபவர்கள், மார்கெட் சென்று கொண்டிருப்பவர்கள், வியாபாரத்திற்காக பயணிப்பவர்கள் என்று விதவிதமான முகங்களை பார்த்துக் கொண்டே பயணிப்பது நல்ல அனுபவம். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும். இத்தகைய அனுபவம் எல்லோருக்கும் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பிடித்துவிட்டால் விட முடியாது. எனக்கு பிடித்திருக்கிறது.

இந்தப் வெட்டுப்பட்ட பயணத்தில்தான் மணிரத்னத்தின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். எந்த இடத்திலும் மூடி வைத்துவிட வேண்டும் என்றே தோன்றவில்லை என்பது புத்தகத்தின் முக்கியமான அம்சம். அப்படியே ஓரிரண்டு இடத்தில் போரடித்தால் அந்தக் கேள்வி பதிலைத் தாண்டிச் சென்றுவிடலாம். இரண்டு நண்பர்கள் படு மும்முரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் காது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் ஏதாவது பிடிக்கவில்லையென்றால் நம் கவனத்தை கொஞ்சம் நேரம் திசை மாற்றிவிட்டு மீண்டும் அவர்கள் பேசுவதை கவனிப்போம் அல்லவா? அப்படித்தான். இந்தப் புத்தகத்தின் சில குறைகளை எளிதாக தாண்டிவிட முடிகிறது.

புத்தகம் முழுவதுமே மணிரத்னத்திற்கும், பரத்வாஜ்ரங்கனுக்கும் இடையிலான உரையாடல்கள்தான். மணிரத்னத்தின் ஒவ்வொரு படத்தையும் முன் வைத்து பேசுகிறார்கள். இந்தப் பேச்சு வழியாகவே மணிரத்னத்தின் வாழ்க்கை, அவரது சினிமா அனுபவங்கள், சினிமாப்புள்ளிகளுடனான அவரது பழக்கம் என்று விரிகிறது. உண்மையில் இந்த உரையாடலே ஒரு சினிமா பார்ப்பது போலத்தான் இருக்கிறது. மணிரத்னம் இந்த புத்தகத்திற்கு எத்தனை பலமோ அதே அளவு பலம் பரத்வாஜ் ரங்கனின் கேள்விகளும் சினிமா பற்றிய அவரது புரிதல்களும். அந்த மனிதரிடம் ஏகப்பட்ட சரக்கு இருக்கிறது.

மணிரத்னம் மீது தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எந்த படைப்பாளி மீதுதான் எதிர்மறை விமர்சனம் இல்லை? அத்தனை விமர்சனங்களையும் தாண்டி மணிரத்னத்தின் சினிமா குறித்த பார்வை முழுமையாக புரிந்து கொள்ளப் பட வேண்டியது என நினைக்கிறேன். என்னைப் போன்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஆட்களுக்கு இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ள ஏகப்பட்ட ‘ஐட்டம்’ இருக்கையில் சினிமா பிரியர்களுக்கும், சினிமாவில் இருப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாகிவிடும் என தோன்றுகிறது.

சரி, இந்தக் குறிப்பை இதோடு முடித்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக-

மெளனராகம் வெளிவந்த பிறகு ஒரு ஹிந்திப்படத்தின் வீடியோ கேசட்டை முக்தா சீனிவாசனிடம் கொடுத்து மணிரத்னத்திடம் சேர்ப்பிக்கச் சொன்னாராம் கமல்ஹாசன். அந்த ஹிந்திப்படம் மணிரத்னத்துக்கு பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் ரீமேக் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்று முக்தாவிடம் சொல்லியிருக்கிறார். ‘அதை நீங்களே கமலிடம் சொல்லிவிடுங்கள்’ என்று முக்தா அழைத்துப் போகிறார். ‘சரி ரீமேக் வேண்டாம். வேறு எந்தக் கதையைச் செய்யலாம்?’ என்று கமல் கேட்கிறார். ‘வரதராஜ முதலியார்’ என்று மணிரத்னம் சொல்ல உருவான படம்தான் நாயகன். தனது முதல்படத்தில் கமலோடு சேர முயன்று முடியாமல் நாயகனில் கை கோர்க்கிறார்.

இன்னொரு குட்டித் தகவல். மணிரத்னத்தின் முதல் கன்னடப்படத்திற்கு இளையராஜாதான் இசை. அப்பொழுது தான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். 

இப்படி புத்தகம் முழுவதுமே ஏகப்பட்ட சுவாரஸியமான தகவல்களால் ஜாலியாகவேதான் ஓடியது. 

அதிகாலை ஐந்தரை மணிக்கு பெங்களூரை அடைவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக புத்தகத்தை முடித்துவிட்டேன். கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மானின் முகவுரையை வாசித்தேன். அது மூன்றரை பக்கங்கள்தான். ‘மணிசார் மனிதனாக என்னக் கவர்ந்தது அதிகமா...இயக்குநராக என்னைக் கவர்ந்தது அதிகமா?’ என்ற கேள்வியோடு இந்த முகவுரை முடிகிறது. மணிரத்னம் மனிதராக எப்படிப்பட்டவர் என்ற கேள்வி நமக்கு அவசியமில்லாதது என நினைக்கிறேன். ஆனால் ஒரு இயக்குநராக மணிரத்னத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். அதற்கு இந்தப் புத்தகம் உதவும்.