கிட்டத்தட்ட பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது.
டிசம்பர் வந்தால் ‘புத்தகம் வருதா?’ என்று கேள்வி முளைத்துக் கொள்ளும். யாராவது நிச்சயமாகக் கேட்பார்கள். இந்த வருடம் ‘இல்லை’ என்றுதான் நினைத்திருந்தேன். ஒன்றரை மாதங்கள் முன்பு வரைக்கும் புத்தகம் எதுவும் வெளிவரும் என்று நினைக்கவில்லை. கையில் கதைகளும் கட்டுரைகளும் இருந்தன. ஆனால் எந்த பதிப்பகத்தில் கேட்பது என்று குழம்பி விட்டுவிட்டேன். புத்தகம் வரவில்லை என்றால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? வந்தால் மட்டும் யாருக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது?
எதிர்பாராததெல்லாம் நடப்பதுதானே வாடிக்கை?
ஜீப்பில் இடம் இருப்பதாகவும் என்னை ஏற்றிக் கொள்வதாகவும் யாவரும்.காம் நண்பர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் நல்ல டீம்- சில இளைஞர்கள் அணியாகச் செயல்படுகிறார்கள். பதிப்பகம் ஆரம்பிக்கிறார்கள். முதல் புத்தகமாக இந்த சிறுகதைகளை வெளியிட விரும்பினார்கள். அப்படி வடிவம் பெற ஆரம்பித்ததுதான் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’.
இந்த வகைக் கதைகள் இரண்டு மூன்றை எழுதிய பிறகு மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். ‘இன்றைய தினத்தை இந்தக் கதைகள் refresh செய்கின்றன’ என்று சாட்டில் சொல்லி உற்சாகமூட்டினார். தொடர்ந்து எழுதி மொத்தக் கதைகளின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியவுடன் தானே புத்தகமாக வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். இது நடந்து நான்கைந்து வருடங்கள் இருக்கும். நான்கைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம் இல்லையா? அதற்குள் காற்று திசைமாறி அடித்துவிட்டது. கப்பல், யாவரும்.காம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டது.
கதைகளைத் தேர்ந்தெடுப்பது, வரிசைப்படுத்துவது என புத்தக உருவாக்கத்தின் அத்தனை வேலைகளையும் வேல்கண்ணனும், ஜீவ கரிகாலனும் செய்தார்கள் என்றால், பிழை திருத்துவது, புத்தக வடிவமைப்பு என பிற வேலைகளை யாவரும்.காம் குழுவின் முகம் தெரியாத நண்பர்கள் செய்தார்கள். உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது என்பதை விடவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் யாருமே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களோ, கோடிக்கணக்கில் பிஸினஸ் செய்பவர்களோ இல்லை. மிக மிகச் சாதாரணமானவர்கள். எழுத்தும் வாசிப்பும் அவர்களின் Passion. தங்களின் ஆர்வத்துக்காக மாதம் ஒரு இலக்கியக் கூட்டத்தை கைக்காசை செலவழித்து சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது புத்தகம்.
புத்தகம் வெளியிட விரும்புவதாக அவர்கள் சொன்னவுடன் ‘செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்வீர்கள் என்றால் வேண்டாம்’ என்றுதான் எங்களின் பேச்சே ஆரம்பித்தது.
‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லீங்க. வித்துடும்’ என்றார்கள். என்ன நம்பிக்கையில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அனேகமாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விற்றுக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் இலாபம் அடையாவிட்டாலும் கூட பரவாயில்லை. நஷ்டம் அடையாமல் இருந்தால் போதும் என விரும்புகிறேன்.
நஷ்டம் அடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை கடந்த ஓரிரண்டு நாட்களாக வந்திருக்கிறது. அதற்கு காரணம் இருக்கிறது-
டிசம்பர் கச்சேரிக்காக நடக்கும் புத்தக விளம்பரங்களை பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் நக்கலாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். “புத்தகத்தின் முதல் பிரதியை ஏலம் விடுறாங்களாம்..அதுவும் ஆயிரக்கணக்கில்..ம்ம்..நாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை என்றாலும் நமக்குன்னு ஒரு ரேஞ்ச் இருக்குதுல்ல...அந்த ரேஞ்சில்.....சரோஜாதேவியின் சோப்பு டப்பா...ச்சை...லிண்ட்ஸே லோஹன் w/o மாரியப்பன்...முதல் பிரதி அஞ்சே அஞ்சு ரூவா...பிம்பிலிக்கி பியாபி தவிர எவ்வளவு வேணும்ன்னாலும் சொல்லலாம் சார்...அஞ்சே அஞ்சு ரூவா முதல் தரம் சார்...ஆங்...நாமளும் ரெவுடிதான் சார்...அஞ்சே அஞ்சு...” என்று.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. காமெடியாக நினைத்துக் கொண்டுதான் எழுதினேன். ஆனால் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு முதல் பிரதியை ஐந்தாயிரம் ரூபாய்க்கும், இரண்டாயிரம் ரூபாய்க்கும் வாங்கிக் கொள்வதாக நண்பர்கள் செய்தி அனுப்பிய போதுதான் உண்மையிலேயே உறைத்தது- நம்மையும் நம்புகிறார்கள் என்று. இனிமேலாவது போகிற போக்கில் எதையாவது எழுதிவிடக் கூடாது என நினைக்கிறேன்.
பணம் முக்கியமே இல்லை. அது இன்று வரும் நாளை போகும். ஆனால் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை முக்கியம். அந்த நம்பிக்கைக்காக, இவர்கள்தான் இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
அட்டைக்கான நிழற்படம் கார்த்திகேயன் கொடுத்தது. கார்த்தி, முன்பு ஐடியில் வேலையிலிருந்தவர். இந்த வேலையில் டார்ச்சராகி மத்திய அரசுத் தேர்வு ஒன்றை எழுதி இப்பொழுது திருச்சியில் செட்டில் ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமராவைத் தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு படம் எடுக்கிறார். அப்படி எடுத்த படங்களில் ஒன்றுதான் அட்டைப்படம். மாரியப்பன் என்பதே இந்தப் பையன் தான் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாரியப்பனுக்கு லிண்ட்சே லோஹனா என நக்கலாக சிரிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் இந்தப் படத்தில் இருக்கும் நேட்டிவிட்டி முக்கியமான விஷயம் என்று தோன்றியது.
அட்டையை வடிவமைத்தவர் சந்தோஷ். ‘சோமாலிய கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும்’ தொடரை எழுதிக் கொண்டிருக்கும் அதே சந்தோஷ்தான். தனது அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு படத்தை அனுப்பிய ஒரே இரவில் ‘கவர் டிசைன்’ஐ அனுப்பிவிட்டார். இப்படி எதுவுமே எதிர்பார்த்ததைவிடவும் வேகமாகவும் சந்தோஷம் அடையும்படியாகவும் நடக்கிறது.
அட்டை வடிவமைப்பு முடிந்துவிட்டது. ஃப்ரூப் ரீடிங் பாதி முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் அச்சுக்குச் சென்றுவிடும் என நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் சற்று அசால்ட்டாக இருந்தேன். இப்பொழுது சற்று ஆர்வம் கூடியிருக்கிறது.
ஜனவரி 11 ஆம் நாள் சென்னையில் வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த ஒரு நாளை லிண்ட்சே லோஹனுக்காகவோ, மாரியப்பனுக்காகவோ, மணிகண்டனுக்காகவோ, நிசப்தம்.காமுக்காகவோ ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தகம் ஒன்றை உங்களால் வாங்கிக் கொள்ள இயலும் என்றால் இன்னமும் சந்தோஷம் அடைவேன். பதிப்பகத்தினரின் முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவாக இருக்கும். புத்தகத்தை ஆன்லைனில் வாங்க முடியும். (இன்னும் ஓரிரு வாரத்திற்குள் அனுப்பி வைத்துவிடுவார்கள்)
நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பதும், மின்னஞ்சல் அனுப்புவதுமாக இந்தக் கதைகளுக்கும், எனது எழுத்துக்குமான சுடரை அணையாமல் பார்த்துக் கொண்டது நீங்கள்தான். உங்களுக்கு எனது அத்தனை நன்றிகளும். நெகிழ்ச்சியான அன்பும். இது வெறும் ஃபார்மாலிட்டியான சொற்கள் இல்லை என்பதை இந்த வரியை நான் தட்டச்சும் கணத்தில் எனது அருகில் இருந்து பார்த்திருந்தால் உங்களால் உணர்ந்திருக்க முடியும்.
நன்றி.