Dec 22, 2013

ஐடி அடிமைகளின் உரிமைகள்

நேற்று பெங்களூரில் ஒரு கூட்டம் நடந்தது. ஐடி ஊழியர்களின் உரிமை குறித்தான கலந்துரையாடல் கூட்டம். கலந்துரையாடலின் அஜெண்டாவைக் கேட்டவுடன் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஐடி ஊழியர்களுக்கு உரிமை என்று ஏதாவது இருக்கிறதா? அப்படித்தான் சொன்னார்கள். 

அரங்கில் முப்பது பேர் வரைக்கும் இருந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் ‘காம்ரேட்’ போலவே இருந்தார்கள். மிச்சமிருந்தவர்கள் அப்பிராணிகளாகத் தெரிந்தார்கள். சிறப்புப் பேச்சாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள். முந்தைய தலைமுறை. நரை தட்டியிருந்தது. அரசு நிறுவனங்களின் தொழிற்சங்களில் முக்கியமான பொறுப்பில் இருப்பார்கள் போலிருக்கிறது. கூட்டத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டேன்.

நிகழ்வை இரண்டு வீடியோக் கேமிராக்களில் படம் பிடித்தார்கள். அதில் ஒன்று செய்திச் சேனல். இந்த மாதிரி கூட்டத்திற்கு போகும் போதும் முகத்தில் மரு ஒன்றை ஒட்டிக் கொண்டு மாறுவேஷத்தில் செல்ல வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து அலுவலகத்தில் வேலை செய்பவன் எவனாவது பார்த்துத் தொலைந்தால் கருப்புப் பட்டியலில் நமது பெயரை முதலாவதாக சேர்த்துவிடுவார்கள். கேமரா எனது பக்கம் திரும்பிய போதெல்லாம் படாதபாடு பட வேண்டியிருந்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாகத் தெரியவில்லை. வீடியோவில் மாட்டிக் கொண்டேன்.

வெளிப்படையாகச் சொன்னால் ஐடித் துறையில் ‘எனது உரிமை’ என்பதில் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லை. இன்று வரைக்கும் நான் செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். அவர்கள் லாபத்தில் கொழிக்கிறார்கள். எனக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களாகப் பார்த்து ‘நீ வேண்டாம்’ என்று சொன்னால் கிளம்பிவிட வேண்டும். அப்படியான மனநிலையில்தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட பெரும்பாலான ஐடி அடிமைகளுக்கும் இதுதான் மனநிலையாக இருக்கக் கூடும்.

இது அப்படியே நடுத்தர மக்களின் மனநிலைதான். ‘நாம் உண்டு; நம் வேலை உண்டு’ என்றிருப்பார்கள். பிரச்சினை நமக்கு வராதவரைக்கும் ஒரு சிக்கலும் இல்லை. நமக்கு பக்கத்திலேயே அமர்ந்திருப்பவனை ‘திடுதிப்’என்று வீட்டுக்கு அனுப்பும் போது கூட ‘ஆண்டவா, அடுத்த ஆடு நானாக இருக்கக் கூடாது’ என்று ரகசியமாக பிரார்த்தித்துக் கொள்ளும் பயந்தாங்கொள்ளிகளாக மாறிவிட்ட ஒரு கூட்டம் இது. தைரியம், போராட்டக் குணம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட சிதைந்து போன வர்க்கம் இது. ஆர்பாட்டம், ஊர்வலம் என்றால் ஒதுங்கிச் செல்பவர்கள்தான் இங்கு உண்டு. உரிமை, கலகம் என்றெல்லாம் கொடிபிடித்து வேலையை இழக்க எந்த யுவனும், யுவதியும் தயாராக இல்லை. 

அவ்வளவு ஏன்? இந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பினர் காலாண்டிதழ் ஒன்றை நடத்துகிறார்கள். இருபது பக்கங்கள் இருக்கக் கூடும். ஒரு பக்கத்தில் கூட ஆசிரியர், ஆசிரியர் குழுவின் பெயரோ, இடத்தின் முகவரியோ, தொடர்பு எண்ணோ இல்லை. வெறும் இமெயில் ஐடியும், ஃபேஸ்புக் பக்கம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த பயம்தான் ஐடி நிறுவனங்களின் பலமே.

ஐடி காண்டாமிருகங்களை எதிர்த்து பேசுவது என்பது இருண்டகாலத்தில் புரட்சிக் கூட்டம் போடுவது போலத்தான். முதல் பிரச்சினை- கூட்டம் போடுபவர்களுடன் சேருவதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். இரண்டாவது பிரச்சினை சேரும் சொற்பக் கூட்டத்தையும் கறிவேப்பிலையைக் கிள்ளுவது போல கிள்ளுவதற்கு HR ஆட்களுக்குத் தெரியும்.

எதற்கு வம்பு? அமைதியாக போய்விட வேண்டியதுதான்.

மிகச் சமீபத்தில் கர்நாடகாவில் ‘எஸ்மா’சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பால், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான சட்டம் இது. தமிழகத்தில் அம்மையார் கொண்டு வந்த ‘டெஸ்மா’ சட்டத்தின் இன்னொரு வடிவம்தான். இந்தத் துறை ஊழியர்கள் உரிமை, போராட்டம் என்றெல்லாம் ஸ்ட்ரைக் செய்ய முடியாது. எஸ்மாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட முடியும். அது இருக்கட்டும். அநியாயம் என்னவென்றால் கர்நாடக அரசு ஐடித் துறையை Essential service ஆக கருதப்போவதாக அறிவித்திருக்கிறது. ஐடி நின்று போனால் குழந்தைக்கு பால் கிடைக்காது பாருங்கள்.

எல்லாம் காசு. டாலர்களாகக் கொண்டு வந்து அரசியல்வாதிகளுக்குக் கொட்டுகிறார்கள். நம்மாட்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள். ‘என்ன நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்’ என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவுதான். 

இங்கு ஊழியர்களுக்கு உரிமை கிடையாது. வெளிப்படையான நிர்வாகம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இப்படி எத்தனையோ எதிர்மறையான விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால் இப்பொழுதும் ஐடியில் வேலை பெறுவதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்யவும் மாணவர்களும் பெற்றோர்களும் தயாராக இருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டால் தயவு செய்து ‘சம்பளம்’ என்று சொல்லிவிடாதீர்கள். தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு கிட்டத்தட்ட முப்பத்தைந்தாயிரம் சம்பளம் வருகிறது. மத்திய அரசு ஊழியர்களைப் பற்றி கேட்கவே தேவையில்லை. ஆறாவது சம்பள கமிஷனுக்கு பிறகு லட்சக்கணக்கில் சம்பளம் என்பது சர்வசாதாரணம். இப்பொழுது அவர்களுக்கு ஏழாவது சம்பளக் கமிஷன் வேறு வருகிறது. போராட்டம், ஸ்ட்ரைக் என்று நடத்தி தாறுமாறாக ஊதிய உயர்வை வாங்கிவிடுவார்கள்.

ஐடியில் ஐந்து சதவீத சம்பள உயர்வு கூட கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வருவதில்லை. பதினைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக இருக்கும். இத்தனை குறைகள் இருக்கின்றன. பிறகு எதற்கு இந்தத் துறையில் வேலை தேடுகிறார்கள்? 

வேறு வழி?

மாநிலத்துக்கு மாநிலம் பலநூறு பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியளித்துவிட்டார்கள். பெற்றவர்களின் ஒரே குறிக்கோள் ‘மகனோ, மகளோ பொறியியல் முடிக்க வேண்டும்’.படிக்கிறோம். டிகிரி முடித்து வெளியே வந்தால் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் டையும், ஷூவுமாகத் திரிகிறார்கள். எங்கே போவது? பற்களைக் கடித்துக் கொண்டு கிணற்றுக்குள் எட்டிக் குதிக்கிறார்கள். அது வெளியே அலங்கரிக்கப்பட்ட கிணறுதான். ஆனால் உள்ளே நிலைமை வேறு. இருண்டு கிடக்கும் கிணறு அது. ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் உள்ளே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள்ளேயே இவர்களும் குதிக்கிறார்கள்.

இந்த நிலைமையில் ‘உரிமை, புரட்சி’ என்பதில் எல்லாம் எனக்கு துளி நம்பிக்கை கூட இல்லை. நம்பிக்கை இல்லை என்பதைவிடவும் இவை எல்லாவற்றையும் விட என் குடும்பமும், குழந்தையும், அவனது எதிர்காலமும் முக்கியமானதாகத் தெரிகிறது. அதற்காக எத்தனை கசையடிகளையும் தாங்கிக் கொள்ளும் இன்னொரு மத்திய தர குடும்பஸ்தன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 

சத்தமில்லாமல் பாதியில் எழுந்து வந்துவிட்டேன்.