Nov 20, 2013

கொலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள்

இந்த வீடியோவை பார்த்தீர்களா? காலையில் எழுந்தவுடன் தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்துவிட்டேன். சில வினாடிகள் உயிரே போய்விட்டது. ஏடிஎம்முக்குள் புகுந்த முரடன் ஒருவன் அந்தப் பெண்மணியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். அது பொம்மைத் துப்பாக்கி போலிருக்கிறது. அந்தப் பெண் தப்பிக்க முயற்சிக்கிறார். அவரை வெளியேறவிடாமல் மறித்தபடியே சாவகாசமாக அரிவாளை எடுத்து அவரை வெட்டிவிட்டு இருப்பதை பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறான். அத்தனையும் பெங்களூரின் ஜே.சி.சாலையில் நடந்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் போது ’ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் நடந்திருக்கிறது’ என்பார்கள். ஆனால் இந்தச் சாலையை  ஒதுக்குப் புறமான இடம் என்றெல்லாம் புறந்தள்ளிவிட முடியாது. மாநகராட்சி அலுவலகம் இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. ஜன சந்தடி மிக்கது. அதுவும் காலை ஐந்து மணிக்கு ஆட்கள் நடமாடத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய இடத்தில் இருக்கும் ஒரு ஏடிஎம்முக்குள்தான் புகுந்து, ஷட்டரை மூடி அவரை வெட்டியிருக்கிறான்.

அந்த நேரத்தில் அங்கு வாட்ச்மேன் இல்லை, அது, இது என்று ஏகப்பட்ட காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னவோ இருக்கட்டும்- ஒருவரை வெட்டுவதற்கு எப்படி இந்த தைரியம் வருகிறது? கேமரா இருக்கும் என்று தெரியும். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்றும் தெரியும். யாராவது வரக் கூடும் என்றும் தெரியும். ஆனாலும் வெட்டியிருக்கிறான். எப்படியும் அவனை போலீஸார் பிடித்துவிடுவார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தப் பெண் பிழைப்பாளா என்று தெரியாது. அவளுக்கு பத்து வயதில் மகனோ அல்லது மகளோ இருக்கக் கூடும். காலையில் அவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு கிளம்பியிருப்பாள்.  ‘அம்மா அலுவலகம் சென்றிருப்பார்’ என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும். 

ஆனால் ஏழு மணிக்கு வெட்டுப்பட்டவளை ரத்த வெள்ளத்தில் இரண்டரை மணி நேரம் கழித்து கண்டுபிடித்திருக்கிறார்கள். நினைவு தப்பிய பிறகு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு செய்தி சென்ற போது எவ்வளவு பதறியிருப்பார்கள்? இந்த வீடியோவை பார்த்தால் எவ்வளவு வேதனையடைவார்கள்? வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. நினைத்துப் பார்த்தால் மனம் பதறுகிறது.

ஒரு மரணமும் கொலையும் கொல்லப்படுபவரோடு நின்றுவிட்டால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் மரணம் எப்பொழுதுமே சங்கிலித் தொடர் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது. இறந்தவரை விடவும் அவரைச் சார்ந்தவர்களுக்குத்தான் அது பெரிய தண்டனை. இறந்தவனின் பிரேதத்தை தகனம் செய்துவிட்டு நகர்ந்துவிடுவோம். ஆனால் அவனது மகனுக்கும் மகளுக்கும் அது ஆயுள் தண்டனை. ஒவ்வொரு கொலையைக் கேள்விப்படும் போதும் கொல்லப்பட்ட தனது தந்தை/தாயின் நினைவு வந்து வதைக்கும். ஒவ்வொரு மரணத்தை பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு இடத்தில் உறுத்திக் கொண்டு நிற்கும்.

இப்படியான கொலைகளும், வெட்டுக்களும் சாதாரணமாக நிகழ்வது போன்ற ஒரு பிரமை. அது பிரமை இல்லை. உண்மைதான். மிக மிகச் சாதாரணமாகிவிட்டது.

சமீபத்தில்தான் இதே போன்றதொரு நிகழ்வு சென்னையில் நடந்தது. சொத்துத் தகராறில் ஒரு மருத்துவரை சென்னையில் வெட்டினார்கள். அதுவும் பகல் நேரத்தில், பெரிய மனிதர்களின் வீடுகள் நிறைந்த சாலையில் வைத்துதான் வெட்டியிருந்தார்கள். மூன்று பேர்கள் வெட்டிய அந்த வீடியோவும் காணக் கிடைக்கிறது. சினிமாவில் பார்ப்பது போல அருவாள்கள் மனிதச் சதையை பதம் பார்க்கின்றன. கொடூரம்.

சமூகத்தில் நிலவும் வன்முறை குறித்தான ஆராய்ச்சிகள், சமூகத்தின் மனநிலை மாற வேண்டும் என்பதெல்லாம் இருக்கட்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுகிறது? தினமும் எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் ஒரு செய்தியாவது கொலை பற்றி இடம் பெற்றுவிடுகிறது. கூலிப்படையினர் என்ற சொல் சாதாரணமாகக் புழக்கத்தில் இருக்கிறது. பிடிக்கப்பட்ட கூலிப்படையினரை என்ன செய்கிறார்கள்? பதினைந்து நாள் ரிமாண்ட். பிறகு ஜாமீன்தானே? எவன் பயப்படுவான்?

இந்த பயமின்மையினால்தானே வரிசையாக கொல்கிறார்கள்? சக உயிரை வெட்டுவதற்கும் வீழ்த்துவதற்கும் எந்தப் பயமும் இல்லாமல் திரிகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் மனித உரிமை ஆர்வலர்கள் வந்துவிடுவார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையளிப்பது மனித உரிமையை மீறும் செயல் என்பார்கள். சரிதான் - ஆனால் இன்னொரு மனிதனை கொலை செய்வது மட்டும் மனித உரிமை மீறல் இல்லையா? எந்தக் கருணையும் இல்லாமல் பென்சில் சீவுவது போல தலைகளைக் கொய்வது உரிமை மீறல் இல்லையா? 

நிலத் தகராறு, பணத் தகராறு, கள்ளக் காதல் பிரச்சினைகள் என்று எதற்கெடுத்தாலும் இங்கு கொலை மட்டும்தான் தீர்வாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருக்கட்டும். ஒருவனை வெட்டுவதற்கு யார் உரிமை கொடுத்திருக்கிறார்கள்? வெட்டுகிறார்கள். வெட்டட்டும். வெட்டியவனைப் பிடித்து கடும் தண்டனை அளிக்க வேண்டியது நீதியின் கடமை இல்லையா என்ன? கொல்லப்படுபவர்களின் குடும்பத்திற்கு இந்தச் சமூகம் என்ன பதில் சொல்கிறது? ஒரு எழவும் இல்லை.

கடும் தண்டனையளிக்கப்பட்ட ஒரு கூலிப்படையினரை நினைவு படுத்திப் பாருங்கள். நினைவு படுத்தவே முடியாது. அப்படி கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால்தானே ஞாபகப்படுத்துவதற்கு. ஒவ்வொரு கொலையாளியும் சாவகாசமாக தப்பிக்கிறார்கள். எப்.ஐ.ஆர் போடும் இடத்திலேயே லஞ்சம் ஆரம்பிக்கிறது. FIR இல் ஒரு வரியை மாற்றி எழுதினால் கூட தப்பித்துவிடலாமாம். இப்படி எப்.ஐ.ஆரிலிருந்து தீர்ப்பு எழுதப்படும் இடம் வரைக்கும் பணம் பாய்கிறது. வெளியே வருகிறார்கள். மீண்டும் கொல்கிறார்கள்.

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் ஆளை முடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்த வீடியோவில் வெட்டுபவன் எடுத்துச் சென்ற பணம் கூட வெறும் பதினைந்தாயிரம்தான். இப்படி பத்துக்கும், பதினைந்துக்கும் உயிர் மலினப்படுத்தப்பட்ட சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைக்கவே பயமாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் கழுத்தில் இறங்கிய அரிவாள் நம் கழுத்திலும், நம்மைச் சார்ந்தவர்களின் கழுத்திலும் இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்பிக் கொண்டிருந்தால் நமது கண்களை மூடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

சமூக மாற்றம் என்பதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அரசும், நீதியமைப்பும் விழித்துக் கொள்ளவில்லையென்றால் இன்னும் சில வருடங்களில் நாம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கொல்வார்கள். அடுத்தவனை தாக்குவதற்கு கடுமையாக பயப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்படியே தாக்கிவிட்டால் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்க வேண்டும். ‘சிக்கினால் சிதைத்துவிடுவார்கள்’ என்ற பயம் உருவாக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய தவறுகளை சற்றேனும் மட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு சூழல் இப்போதைக்கு உருவாகாது போலிருக்கிறது.