Oct 19, 2013

எழுத்தாளர்களின் ப்ராண்டிங்

நிர்வாகவியல் சம்பந்தமான பாடங்களை படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். வியாபாரத்தில் Branding என்பது ஒரு கலை. நமது பொருளுக்கு நல்ல பெயரை வைப்பதோ அல்லது அட்டகாசமான லோகோவை வடிவமைப்பது மட்டுமே Branding இல்லை. வெறும் லோகோவினால் மட்டும் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட முடியாது. அப்படியே கவர முடியும் என்றால் அது ஒரு தற்காலிகமான ஈர்ப்பு மட்டும்தான். ‘அர்ஜூன் அம்மா யாரு?’ மாதிரி. அதன் பிறகு சில நாட்களில் மறந்துவிடுவோம். 

உண்மையில் Branding என்பது எமோஷனல் அட்டாச்மெண்ட். ஊருக்குள் புதிது புதிதாக கடைகள் வந்தாலும் நமக்கென்று ஒரு விருப்பமான கடை இருக்கும் அல்லவா? நாம் விரும்பும் அந்தக் கடைக்கு பெயர் பலகை கூட இருக்காது. ஆனாலும் அந்தக் கடைக்கு நாமாக பெயர் வைத்திருப்போம் - ‘நாடார் கடை’ ‘மூக்குத்தியான் கடை’ என்று. அந்தக் கடையில் விலை ஒன்றிரண்டு ரூபாய் அதிகமாக இருக்கக் கூடும். ஆனால் அது ஒன்றும் நம்மை அவ்வளவாக பாதிக்காது. ‘மூக்கான் கடையில் ரெண்டு ரூவா அதிகமாத்தான் இருக்கும். ஆனா சாமானம் நல்லா இருக்கும்’ என்போம். தரம் பற்றிய இந்த புரிதலும், அந்த கடைக்காரர் மீதான நமது விருப்பமும்தான் Branding-ன் அடிப்படை கான்செப்ட்.

இப்பொழுதெல்லாம் பொருட்களுக்கும், வியாபார ஸ்தலங்களுக்கு மட்டுமில்லை- மனிதர்களுக்கும் கூட ப்ராண்டிங் தேவைப்படுகிறது. நிறுவனத்தில் நான்கு பேர் இருக்கும் ஒரு டீமுக்குள் கூட நமக்கான வர்த்தகப்படுத்துதல் தேவைப்படுகிறது. கட்சியில் இருப்பவன் எப்படியாவது தலையை வெளியே நீட்டிக் கொண்டேயிருக்கிறான். ஆட்சியில் இருப்பவன் புரட்டுத் தகவல்களை(Fake data) கொடுத்துக் கொடுத்தே தன்னை நிரந்தர தலைவனாக சித்தரிக்கிறான்.

பணியிடம், பொதுவெளி, இணையம் என எல்லா இடங்களிலும் போட்டிதான். ஒவ்வொரு இடத்திலும் நம்மை நாமே விளம்பரம் செய்கிறோம். ஷாம்பூ விற்பவன், காண்டம் விற்பவன் எல்லாம் வர்த்தகத்தில் ஈடுபடுகிறான் என்றால் அது அவன் பிழைப்பு. ஆனால் எழுத்தாளன் எதற்காக சிரமப்பட வேண்டும் என்றுதான் புரியவில்லை? அதுவும் முக்கினாலும் முந்நூறு பிரதிகளைத் தாண்டாத தமிழ் எழுத்தாளர்கள் மிக மிக பிரயாசைப் படுகிறார்கள். டிசம்பரை நெருங்க நெருங்க இந்தக் காய்ச்சலின் வீச்சு தாறுமாறாகிவிடுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இயலும் போதெல்லாம் சுயபுராணம்தான். ‘இல்லை இல்லை, வரலாற்றை மாற்றி எழுதுகிறோம். இனிமேல் தமிழ் நூல்களும் பல்லாயிரம் பிரதிகள் விற்கும்’ என்ற நம்பிக்கையோடு செய்தால் அதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

எழுத்தைப் பொறுத்தவரைக்கும் ப்ராண்டிங் என்பது என்பது நமது எழுத்தை நாமே திரும்பத் திரும்ப பேசிக் கொள்வது இல்லை. ஆனால் சில எழுத்தாளர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘இதையெல்லாம் எப்பொழுதோ பாம்புக் கதைகளில் தாண்டிவிட்டேன்’ ‘அந்தக் காலத்திலேயே இதை எழுதியாகிவிட்டது’ என்று வாய்க்கும் போதெல்லாம் பேசுவது, ‘எழுத்தாளனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று தனது பிம்பத்தைக் கட்டமைப்பது, ‘திரும்பிய பக்கமெல்லாம் என்னைப் பற்றித்தான் விவாதம்’ என்று மிதப்பில் உளறுவது- இப்படியெல்லாம்.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? கேட்பவனுக்கு அலர்ஜியாகிவிடாதா என்ன? இப்படி ‘பில்ட் அப்’ கொடுத்து நாம் பேசுவதையும் எழுதுவதையும் பத்து பேர் நம்பினால் நாற்பது பேர் கடுப்பாவார்கள். இந்த இடத்தில்  ‘சில எழுத்தாளர்கள்’ மட்டும் குறிப்பிடுவது ஒருவித தப்பித்தல்தான்.  பெயர் சொல்லி எழுதினால் குரல்வளையைக் கடிப்பார்கள். எதற்கு வீண் பொல்லாப்பு? ஆனால் ‘சில எழுத்தாளர்கள்’என்பதை நீக்கிவிட்டு அவரவருக்கு விருப்பமான எந்தப் பெயரையும் எழுதிக் கொள்ளலாம். வா.மணிகண்டன் என்று எழுதினாலும் கூட பொருத்தமாகத்தான் இருக்கும்.

ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் அது வரலாறு ஆகிவிடுமா என்ன? விற்பனை பல்லாயிரங்களைத் தாண்டிவிடுமா? மிஞ்சிப் போனால் நூறு பிரதிகள் அதிகமாக விற்கும். இதில் பாதிப்பேர் நம் பில்ட் அப்பை நம்பித்தான் வாங்கியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒன்று உள்ளே இல்லையென்றால் நமக்கு வசவுதான் மிஞ்சும். நூறு பிரதியோ அல்லது இருநூறு பிரதியோ - அதிகமாக விற்றால் பதிப்பாளருக்கு வேண்டுமானால் சற்று கூடுதல் வருமானம். அவ்வளவுதான். அதற்கு எழுத்தாளன் ஏன் தொண்டைத் தண்ணீர் தீர கத்த வேண்டும்?

ஒரு எழுத்தாளனின் எழுத்தைப் பற்றி வாசகர்கள்தான் பேச வேண்டும். அப்படி பேச வைக்கும் வேலையை மட்டும் எழுத்தாளர்கள் செய்தால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால் வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவ்வளவு சீக்கிரம் எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சர்வசாதாரணமாக யாரையும் தலையில் வைத்துக் கொண்டாடிவிட மாட்டார்கள். அவர்களைத்தான் எழுத்தாளன் ஈர்க்க வேண்டும். இந்த இடத்தில் வாசகர்கள் என்பது, ‘முகம் தெரியாத வாசர்கள்’. மற்றபடி தங்களின் லாபியிங் மூலமாகவோ, தனிப்பட்ட தொடர்புகளின் வழியாகவோ அல்லது தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கி அதன் மூலம் கவரப்படும் குழுவினரை எப்பொழுதும் ‘வாசகர்கள்’ என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

அசோகமித்திரன் என்ன லாபியிங் செய்தார்? லா.ச.ரா தனது எழுத்துக்கு என்ன விளம்பரம் செய்தார்? இவர்களுக்கெல்லாம் இப்பொழுது இலக்கியத்தில் என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்களை ஆதரிப்பதால் நமக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்ன? ஒரு மண்ணும் கிடையாது. ஆனாலும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் வாசகர்கள் பரவலாக இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில் இந்த எழுத்தாளர்கள் விமர்சித்து மூன்று வரி எழுதினால் கூட உலகின் ஏதோவொரு மூலையிலிருந்து ஒரு வாசகன் எதிர்ப்பான். இத்தனைக்கும் அந்த வாசகன் எழுத்தாளனோடு பேசியிருக்கக் கூட மாட்டான்.

எப்படி சம்பாதித்தார்கள் இந்த வாசகர்களை? எழுத்தினாலும், தங்களின் attitudeனாலும் மட்டும்தான். இத்தகைய வாசகன் தனது எழுத்தாளனோடு உணர்வுப்பூர்வமாக இணைகிறான். இந்த emotional attachment தான் ப்ராண்டிங். சி.சு.செல்லப்பாவை எத்தனை பேர் நேரில் பார்த்திருப்போம்? அவரது பேச்சைக் கேட்டிருக்கிறோமா? அதையெல்லாம் விடுங்கள்- அவரது தெளிவான நிழற்படமாவது கண்ணில் பட்டிருக்கிறதா? ஆனால் அவரது ‘வாடிவாசல்’ நாவலை கடந்த பத்து ஆண்டுகளில் பன்னிரெண்டு பதிப்பு போட்டிருக்கிறார்கள். இந்த நாவலுக்கு யார் விளம்பரம் செய்தார்கள்? நீங்களும் நானும்தான். நாவலைப் பற்றி நீங்கள் எனக்குச் சொல்கிறீர்கள், நான் இன்னொருவருக்குச் சொல்கிறேன். இதுதான் Branding. எழுத்தாளன் வாசகனோடு தனது எழுத்தின் மூலமாக மட்டுமே நிகழ்த்தும் Bonding. அது மட்டுமே அவனது எழுத்தை விற்கச் செய்கிறது.

brandingக்கும் promotion க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இங்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வது ப்ரோமோஷன். அது எழுத்துக்குத் தேவையில்லை- ஷாம்பூவுக்கும், காண்டத்துக்கும்தான் தேவை.