Oct 17, 2013

அவ்வளவுதான்...சிம்பிள்

இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

வேலைக்கு சேர்ந்தவுடனே மலேசியா அனுப்பி வைத்தார்கள். அதுதான் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் படு உற்சாகமாக இருந்த பருவம் அது. திருமணம் ஆகியிருக்கவில்லை. உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? மனம் முழுவதும் மசாஜ் பார்லர்களால் நிறைந்திருந்தது. பினாங்கு நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அழகாகத் தெரிந்தது- மலாய் பெண்களைத் தவிர. அவர்கள் அத்தனை அழகாக இருப்பதில்லை. உருளைக்கிழங்குக்கு கண்களும் மூக்கும் வரைந்து வைத்த மாதிரி இருப்பார்கள். ஆனால் சீனப் பெண்களுக்கு கண்களே இல்லையென்றாலும் கூட பரவாயில்லை- ஒருவித அழகுடன் இருந்தார்கள். உலகம் இத்தனை அழகான சீனப் பெண்களால் நிரம்பியிருக்கிறது என்று புரிந்து கொண்ட போது எனக்கு வாயெல்லாம் பற்கள். எப்படியும் ‘சிங்கி’யிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தேன்.

அந்தச் சமயத்தில் எனக்கு மேனேஜராக இருந்தவர் கன்னடக்காரர். வேலை மலேசியாவில் என்றாலும் இந்தியாவில் இருக்கும் அவருக்குத்தான் ரிப்போர்டிங் செய்ய வேண்டும். வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு இருவரும் முதன் முதலாக பினாங்கில்தான் சந்தித்துக் கொண்டோம். அவருக்கு பதினைந்து நாள் பயணம். நான் ஏற்கனவே மாதக் கணக்கில் அங்கேதான் இருந்தேன். அவர் ஐம்பதைத் தொடும் காலத்தில் இருந்தார். கிருதாவெல்லாம் ஏற்கனவே நரைத்திருந்தது. மீசையில் வெள்ளை எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்தது. அப்பாவின் பெயர்தான் அவருக்கும் என்பதால் சற்று நெருக்கமாக உணர்ந்திருந்தேன். அவருக்கும் என்னைப் பிடிக்கத் துவங்கியிருந்தது. அங்கு அவர் இருந்த பதினைந்து நாட்களும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் சாவடித்துவிட்டார். இந்திய உணவு வேண்டும், இந்திய கடைகள் வேண்டும் என்று ஒரே அக்கப்போர். வேறு யாராவதாக இருந்தால் ‘இதெல்லாம்தான் இந்தியாவிலேயெ கிடைக்குதே இங்கு வந்தும் அதையே தேட வேண்டுமா?’ என்று மண்டையிலேயே ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் மேனேஜர் அல்லவா? பல்லிளித்துக் கொண்டே ‘சரிங்க சார்’ போட்டுக் கொண்டிருந்தேன்.

அவரோடு சுற்றிய லிட்டில் இந்தியா, காரைக்குடி ரெஸ்டாரண்ட் என்று சுற்றிய இடமெல்லாம் ஒரே இந்திய வாசம்தான். அதைக் கூட மன்னித்து விட்டுவிடலாம் சைட் அடித்தால் கூட இந்தியப் பெண்களையே பார்க்க வேண்டும் என்றார். அது மட்டுமா? ‘சீனப் பெண்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று பல் மீது நாக்கைப் போட்டு பேசிவிட்டார். இந்த இடத்தில் அவரை முறைத்திருப்பேன் என்றோ அல்லது பழி வாங்கியிருப்பேன் என்றோ நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. இப்பொழுதும் அவர்தானே மேனேஜர் அதனால் அதுக்கும் ‘சரிங்க சார்’தான். வேறு வழியே இல்லை.

அவர் இந்தியாவிற்கு கிளம்பிய பிறகுதான் எனக்கு சிறகு முளைக்கத் துவங்கியது. என்னென்ன செய்தேன் என்று இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு நோ சிங்கி மங்கி டாக்கிங்.

இந்தியா வந்த பிறகு மலேசிய நிறுவனத்தின் விவகாரங்களை மேனேஜர் என்னிடமிருந்துதான் தெரிந்து கொள்வார். அப்படியே பேசிப் பேசி நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் இந்திரா நகரில் ஒரு வீடு வாங்கி இருந்தார். பெங்களூரில் அது நல்ல ஏரியா. காஸ்ட்லி ஏரியாவும் கூட.அந்தப் பகுதியில் அவ்வளவு எளிதில் வீடு வாங்கிவிட முடியாது- வங்கிக் கடன் தான் என்றாலும் பெருங்கடனாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் அவனை விட சிறிய மகளும் இருந்தார்கள். மனைவி வேலைக்கு போகவில்லை. நல்ல வேலை, அளவான குடும்பம், அழகிய வீடு என்று சந்தோஷமான வாழ்க்கை. ஐம்பதை நெருங்கும் போது நமக்கும் இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும் என மற்றவர்களும் விரும்பும்படியான வாழ்க்கை அது.

அந்த சந்தோஷம் அவரது முகத்திலும் தெரியும். நல்ல தேஜஸ். அளவான புன்னகை, மழித்த முகம், காஸ்ட்லி முகக் கண்ணாடி, ப்ராண்டட் சட்டையும் பேண்ட்டும் என்று அவரைப் பார்த்தாலே ஒரு மரியாதை வரும்.

மலேசியாவிலிருந்து பெங்களூர் திரும்பிய பிறகு வேலை அதிகம் இல்லை. மேனேஜருக்கு என் மீது ஒருவித நம்பிக்கை இருந்ததால் பெரிதாக ‘ப்ரஷர்’ கொடுக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அது என்னுடைய மனப்பிராந்தி. அவர் யாருக்குமே ப்ரஷர் கொடுக்காத நல்ல மனுஷன். 

ஐ.டி நிறுவனத்தில் சில மேலாளர்கள் இருக்கிறார்கள்- கண்கொத்திப் பாம்பாக பார்ப்பார்கள். ஒருவன் எத்தனை முறை டாய்லெட் போகிறான் என்பது வரைக்கும் கவனிக்கும் கேடிகள் அவர்கள். டீம் மீட்டிங்கில் மனசாட்சியே இல்லாமல் கத்துவார்கள். இவர்கள்தான் இந்த நிறுவனத்தையே வலது தோளில் தாங்கிப் பிடிக்கிறார்களோ என்று நம்மை எண்ண வைத்துவிடுவார்கள். ஆனால் இந்த மேனேஜர் அப்படியெல்லாம் இல்லை. காலையில் பத்து மணிக்கு வருவார். ஆறு மணிக்கு கிளம்பிவிடுவார். இடையில் ஒரு முறை மொத்த டீமையும் அழைத்து ‘ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்பார். அவ்வளவுதான். 

இரவு நீண்ட நேரம் வேலை செய்வதாகத் தெரிந்தால் அடுத்த நாள் தனியாக அழைத்துப் போய் ‘அதிகமாக stretch செஞ்சுக்க வேண்டாம். வேலை நிறைய இருந்தால் இன்னொரு ஆளை டீமுக்குள் எடுத்துக்கலாம்’ என்று பேசும் எழுபது கிலோ ப்ளாட்டினம் அந்த மனுஷன்.

அது ஆகஸ்ட் மாதம் என்று ஞாபகம். காலையில் பயங்கரமாகத் தூங்கிவிட்டேன். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு பதினொன்று ஆகிவிடும். மேனேஜர் எதுவும் சொல்ல மாட்டார் என்றாலும் அவரை அழைத்துச் சொல்லிவிடுவதுதான் மரியாதை என்று பல் துலக்கிவிட்டு அலைபேசியில் அழைத்தேன். கட் செய்தார். அவசர அவசரமாக குளித்துவிட்டு வந்து மீண்டும் அழைத்த போதும் கட் செய்தார். மீட்டிங்கில் இருக்கக் கூடும். நேரடியாக பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என்று சாப்பிடாமல் வந்து சேர்ந்தேன். மணி பதினொன்று ஆகியிருக்கவில்லை. ஆனால் நெருங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தவும் அவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. அவருடைய மேனேஜரும் கூடவே இருந்தார். ‘சாரி சார் லேட்டாகிடுச்சு அதுக்குத்தான் ஃபோன் செய்தேன்’ என்று சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. ஆனாலும் மெலிதாக சிரித்தார். ‘என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க’ என்றார். அது சிரிப்பு இல்லை- தனது துக்கத்தை மறைக்கும் முகமூடி. அருகில் இருந்த அவருடைய மேனேஜர் என்னை உள்ளே போகும் படி சைகை செய்தார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவரை பார்த்தேன். மீண்டும் அதே சிரிப்பு- அதே கலங்கிய கண்கள்.

அதன் பிறகு இதுவரைக்கும் அவரிடம் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடைய நண்பர்கள் சிலர் அவர் மிகவும் உடைந்து போயிருப்பதாகச் சொன்னார்கள். ஃபோன் செய்து பேசலாம்தான். ஆனால் அவருடைய அனுபவதுக்கும் வயதுக்கும் என்னால் எதைச் சொல்ல முடியும் என்று தயக்கம். அடுத்த ஒரு வருடம் வரைக்கும் அவருக்கு வேலை எதுவும் சரியாக அமையவில்லை என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் ஐ.டி மார்க்கெட்டும் சரியில்லை.

அவ்வப்போது அந்த அழகிய குடும்பம் கண் முன்னால் வந்து போகும். அவரது கடன்களுக்கு என்ன செய்வார்? குழந்தைகளின் படிப்புக்கு என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது. அப்படியே அந்த மேனேஜரை மறந்திருந்தேன். 

நேற்று லின்க்-இன் வழியாக அழைப்பு அனுப்பியிருந்தார். ஜிமெயிலுக்கு notification வந்திருந்தது. லின்க்ட்-இன் தளத்தை நான் சரியாக பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அவர் என்ன வேலையில் இருக்கிறார் என்று பார்க்க விரும்பினேன். பார்த்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது- ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் சீனியர் டைரக்டராக இருக்கிறார். 

மனுஷன் கலக்கியிருக்கிறார். விழுந்தது ஒரு அடிதான். அவ்வளவு சீக்கிரம் எழ முடியாத சமயத்தில் விழுந்த அடி. ஆனால் கை கால்கள் என அத்தனையும் சேர்த்து மொத்த பலத்தையும் திரட்டி உந்தியிருக்கிறார் போலிருக்கிறது. அந்த உந்துதலின் மூலமாக இப்பொழுது மிக உயரத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த நிறுவனத்திலிருந்து வெளியே போன போது வெறும் மேனேஜர். ஆனால் இப்பொழுது சீனியர் டைரக்டர். அதுவும் மிகப் பெரிய நிறுவனத்தில். 

எனக்கு கண்கள் திறந்தது போலிருந்தது. அவ்வளவுதான் வாழ்க்கை. அவருக்கு என்ன உயிரா போய்விட்டது? வெறும் வேலைதான். யோசித்துப் பார்த்தால் உயிரைத் தவிர வேறு எது போனாலும் சரி- வெறும் மயிர் போன மாதிரிதான்!