Aug 31, 2013

கல் என்றால் கல், தெய்வம் என்றால் தெய்வம்

ஒரு காரியத்தைச் செய்யலாமா அல்லது வேண்டாமா என்று படு குழப்பமாக இருக்கும் போது என்ன செய்வீர்கள்? ஊர்ப்பக்கங்களில் சாமியிடம் வரம் கேட்பார்கள். குத்துமதிப்பாக ஜாதகம் பார்ப்பது, கேப்மாரி சாமியாரிடம் வாக்கு கேட்பது என்பதைவிடவும் இது நல்ல ஐடியா. வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பூக்களை சிலை மீது அடுக்கி வைத்து முதலில் சிவப்பு பூ  கீழே விழுந்தால் யோசித்துக் கொண்டிருக்கும் ‘காரியத்தை தவிர்த்துவிடலாம்’, வெள்ளைப் பூ கீழே விழுந்தால் ‘காரியத்தை தொடங்கிவிடலாம்’ என்று மனதுக்குள் நினைத்து வரம் கேட்பார்கள். இந்த டைப் வரம் கொடுப்பதற்கென்றே ஸ்பெலிஷ்ட் சாமிகள் உண்டு. ஸ்பெஷலிஸ்ட் அர்ச்சகர்களும் உண்டு. 

எங்கள் மாமாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்த போது ஜாதகம் எல்லாம் பார்க்கவில்லை. கெஞ்சனூர் மாரியம்மனிடம்தான் வரம் கேட்டார்கள். பூக்களை அடுக்கி வைத்து கண்களை மூடிக் கொண்டு அர்ச்சகர் நின்ற பொழுது வெள்ளைப் பூ பறந்து வந்து விழுந்தது என்பார்கள். திருமணத்தை முடித்துவிட்டார்கள். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் அது. ஆனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. 

சரி இதெல்லாம் எதற்கு இப்பொழுது? 

இதுவரைக்கும் நான் வரம் கேட்டதில்லை. குழப்பமாக இருந்தால் இஷ்டதெய்வத்தின் சிலைக்கு முன்பாக நின்று கண்களையும் உதட்டையும் பார்ப்பேன். சிரிக்கும் படி தெரிந்தால் ‘க்ரீன் சிக்னல்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன். முறைப்பது மாதிரி தெரிந்தால் ‘ரெட் சிக்னல்’. இது பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து தொடரும் வழக்கம். மூட நம்பிக்கையோ, நல்ல நம்பிக்கையோ- கிட்டத்தட்ட சரியாக நடப்பது போலத்தான் தெரிகிறது. இதே கான்செப்டில் ஒரு நாவல் வந்திருப்பது சமீபத்தில்தான் தெரியும்.

‘கல் சிரிக்கிறது’ என்று ஒரு நாவல்- லா.ச.ரா எழுதியது. லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்பதன் Short form லா.ச.ரா. அவரின் எழுத்தை வாசித்தவர்கள் நிச்சயம் சிலாகித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். அது ஒரு மாதிரியான காந்தம். சாம்பிள் பார்க்க விரும்புபவர்கள் அழியாச்சுடர்கள் தளத்தில் லா.ச.ராவின் சிறுகதைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.

இந்த நாவலும் அப்படித்தான்- எழுத்துக் காந்தம். வங்கியில் வேலை செய்துவிட்டு தனது சொந்த ஊரில் வந்து வசிக்கிறார் ஒரு பெரியவர். தனது முந்தைய தலைமுறையினர் உள்ளூர் கோயிலில் அர்ச்சகர்களாக இருந்தவர்கள். அதை இந்தத் தலைமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தனது பெரியப்பாவின் மகனிடம் தனக்கும் அந்தக் கோயிலில் அர்ச்சனை செய்யும் உரிமை இருக்கிறது என்று வாதம் செய்து வாங்கிவிடுகிறார். பெரியப்பாவின் மகனுக்கு இதில் செமக் கடுப்பு. ஆனால் அவருக்கு வேறு வழியில்லை- கொடுத்துதான் ஆக வேண்டும். கொடுத்துவிடுகிறார்.

ஊருக்குள் வந்தவர் ஒரு நாடாரின் வீட்டு மாடியில் குடியிருக்கிறார். நாடாருக்கு பாத்திரக் கடை வியாபாரம். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நாடார் இவரை சாமியாராக இல்லாமல் சாமியாகவே கருதுகிறார்- அவர் ஏன் அப்படிக் கருதுகிறார் என்பதற்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு. இந்த இடத்தை வாசிக்கும் போது உண்மையிலேயே சிலிர்த்தது. அவ்வளவு அட்டகாசமான மொழிநடை. அட்டகாசமான விவரிப்பு. என்னளவில் நாவலின் இந்த இடம் முக்கியமானது. இன்னொரு இடமும் இருக்கிறது. இரண்டு பத்திகள் தாண்டி அதைப் பற்றிச் சொல்கிறேன்.

அர்ச்சகரின் வாழ்க்கை இப்படியாக ஒரு விதத்தில் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கும் போது யதேச்சையாக தனது வங்கியில் தனக்கு ஜூனியராக பணிபுரிந்த பெண்ணைப் பார்க்கிறார். 

நாவலில் இவர்களுக்கு இடையே இருப்பது ‘அப்பா-மகள்’ உறவு என்பது மாதிரியான வாக்கியங்கள் வருகின்றன. ஆனால் வாசிக்கும் போது அவர்களிடையே அதைத் தாண்டியும் ஒரு பந்தம் இருப்பது போலவே தோன்றுகிறது. காமம் என்றெல்லாம் அவசரப்பட்டு நம்மால் முடிவு செய்ய முடிவதில்லை. காதல் என்றும் சொல்லிவிட முடிவதில்லை. பனிமூட்டத்திற்கு பின்னால் மறைந்திருப்பது போன்ற ஒரு உறவு அது. அந்த ஜூனியருக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் உண்டு. 

பெரியவரைச் சந்திக்கும் ஜூனியர் தனது வீட்டுக்கு அழைக்கிறாள். இவரும் போகிறார். அவளை ஒதுங்கச் சொல்லிவிட்டு இரவுச் சமையலை பெரியவரே செய்கிறார். அற்புதமான சமையல் அது. இரவு உணவிற்கு பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தனது கணவன் சரியில்லாதவன் என்பதை சொல்லிவிட்டு உடைந்து போகிறாள். சரியில்லாதவன் என்றால் சூதாடி. சம்பாதிப்பதையெல்லாம் தொலைத்துவிடுகிறான். இவளது நகைகளும் ஒரு மார்வாடியிடம் அடமானத்திற்கு போய்விடுகிறது. இந்த விவகாரங்களைச் சொல்லும் போதும் அவர்களுக்கு இடையே இருக்கும் ‘வைப்ரேஷன்’ இந்த நாவலின் இன்னொரு முக்கியமான இடம். ஏதாவது ‘மேட்டர்’ நடந்துவிடக் கூடும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இருவரும் அப்பா-மகள் மாதிரிதான். ஆனால் அழுக்குப் பிடித்த என் மனம் அப்படி நினைத்து தொலைத்துவிட்டது.

ஜூனியரின் நகை சிக்கியிருக்கும் மார்வாடி தனித்த கட்டை. நோயாளி ஜீவனும் கூட. சமையலுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறான். அங்கு சமையல்க்காரனாக போய்ச் சேர்கிறார் ஐயர்வால் சார். அங்கேயே இரவில் தங்கிக் கொள்கிறார். நாவல் படு வேகம் எடுக்கிறது. அந்த மார்வாடியிடம் எப்படி அந்த நகையை ஆட்டையை போடுகிறார், அதன் பிறகு என்னவாகிறது என்பதுதான் நாவல். 

நாவலை முடித்த பிறகும் மனதுக்குள் மனதுக்குள் ஒரு எண்ணம் சுழன்று கொண்டேயிருக்கிறது- காரியம் வென்றால் ‘தெய்வம் சிரிக்கிறது’. காரியம் தோற்றுப் போனால் ‘கல் சிரிக்கிறது’.

லா.ச.ரா மொத்தமே ஆறு நாவல்கள்தான் எழுதியிருக்கிறார்.  ‘கல் சிரிக்கிறது’ அதில் ஒன்று. இதைப் பற்றி இணையத்தில் எந்தக் கட்டுரையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ் இலக்கியத்தை வாசிக்கும் போது லா.ச.ராவைத் தவிர்த்துவிட்டு நகர முடியாது. லா.ச.ராவை இதுவரை வாசித்திராவதவர்கள் இந்த நாவலிருந்தே கூடத் தொடங்கலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்.